Published:Updated:

ஞானப் பொக்கிஷம்! - 4

ஞானப் பொக்கிஷம்! - 4

ஞானப் பொக்கிஷம்! - 4

ஞானப் பொக்கிஷம்! - 4

Published:Updated:
ஞானப் பொக்கிஷம்! - 4
ஞானப் பொக்கிஷம்! - 4
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'க
டவுள் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை!'' என்கிறார்கள், ஆன்மிகவாதிகள்.

''எங்கும் இருக்கிறார் அல்லவா உங்கள் கடவுள்? இருந்தால் அவரைக் காட்டு!'' என்கிறார்கள், நாத்திகர்கள்.

இந்த இருவரும் ஒத்துப்போவது 'கோபத்தில்’தான்! ஆம்... ஆத்திகர்- நாத்திகர் இருவரையுமே கோபம் எந்த விதப் பாகுபாடும் இல்லாமல் ஆட்டிப் படைக்கிறது. கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பதாகச் சொன்னாலும், நாம் அவரைக் கோயிலில்தான் வைத்திருக்கிறோம். ஆனால், கோபத்தையோ எல்லா இடங்களிலுமே வைத்திருக்கிறோம்.காமத்தை வென்றவர்களால்கூட, கோபத்தை வெல்ல முடிவதில்லை.

இதை, இதிகாச- புராணங்கள் அழகாகச் சொல்கின்றன. அற்புதமான அந்தத் தகவல்கள் தெருக்கூத்துகளாகவும் நடைபெற்று மக்களுக்கு அறிவூட்டின. விசித்திரமான அந்தத் தகவல்களில் ஒன்று:

கலியுகம் பிறந்துவிட்டது. கட்டியங்காரன் (அறிவிப்பவன்) இரண்டு பேருடன் வந்து, அவர்களின் பெருமைகளை எல்லாம் அங்கிருந்தோர் மத்தியில் சொல்லத் தொடங்கினான்...

''இதோ இங்கே நிற்கும் இந்த இரண்டு பேரில் ஒருவன் பெயர் காமன்; அடுத்தவன் பெயர் குரோதன் (கோபன்). முதலில், காமனின் பெருமைகளைச் சொல்கிறேன். காமனாகிய இவன் போகாத இடமே கிடையாது. இவன் எல்லோரையும் ஆட்டிப் படைப்பான். முனிவர்கள்கூட, இவனிடம் மண்டியிட்டு விடுவார்கள். விசுவாமித்திரரை இவன் ஆட்டிப் படைத்தது உங்களுக்கே தெரியுமே...' என்று கட்டியங்காரன், காமனின் பெருமைகளை நீட்டி முழக்கிக்கொண்டிருக்கும்போதே ஒரு கேலிச்சிரிப்பு, பலமாகக் கேட்டது.

''யாரடா அவன், நான் பேசிக்கொண்டிருக்கும் போது இடையூறு செய்கிறவன்?'' என்று கர்ஜித்தவாறு திரும்பிப் பார்த்தான், கட்டியங்காரன்.

அங்கே, அவன் பக்கத்தில் நின்றிருந்த குரோதன்தான் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் தனது கேலிச் சிரிப்பை நிறுத்தாமல், காமன் பற்றி கட்டியங்காரன் சொன்னதை மறுத்துப் பேசினான்.

''கட்டியங்காரா! என்ன பேசுகிறாய் நீ? காமனுக்குப் போய், கொடி கட்டி ஊர்வலம் நடத்துகிறாயே! காமனைவிடப் பெரியவன் நான்தான். இது, தெரியாதா உனக்கு? துர்வாசரிடம் காமனின் ஜம்பம் எடுபடவில்லை; ஆனால், அந்தத் துர்வாசரையே கோபத்தால் கொதிக்க வைத்தவன் நான். அதனால், நான்தான் பெரியவன்.

இன்னும் சொல்கிறேன் கேள்; காமத்துக்கு வயது உண்டு. ஐந்து வயதுக் குழந்தையிடம் போய், காமன் தன் பலத்தைக் காட்ட முடியுமா? ஆனால், அதே ஐந்து வயதுக் குழந்தையிடம் நான் என் பலத்தைக் காட்டுவேன். குழந்தையிடம் மட்டுமல்ல, நூறு வயதுக் கிழவர்களிடமும் என் பலத்தைக் காட்டுவேன். அப்படி இருக்கும்போது, அர்த்தமில் லாமல் காமனைப் போய்ப் புகழ்ந்து கொண்டிருக் கிறாயே!'' என்றான், குரோதன் (கோபன்).

ஞானப் பொக்கிஷம்! - 4

அவன் சொன்னது உண்மைதானே? ஐந்து வயதுக் குழந்தைக்கு காமத்தைப் பற்றி என்ன தெரியும்? ஆனால், அதே குழந்தைக்குக் கோபம் வந்துவிட்டால், அதன் கையில் கிடைத்தது எல்லாம் பறக்கிறது. வீடே, சுனாமியால் தாக்கப்பட்டது மாதிரி ஆகிவிடுகிறது.

தள்ளாத வயதில் மூலையோடு மூலையாக முடங்கிக் கிடக்கும் முதியவருக்குக் கூட, மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடுகிறதே!

வாழ்க்கை வசதிகள், படிப்பு, குடும்ப ஒற்றுமை என எல்லாவற்றையும் அழித்து, கும்மி அடித்துவிடுகிறது கோபம். ஒரு பைசாவுக்கும் பிரயோ ஜனம் இல்லாத கோபத்தால், பண்புள்ள குடும்பம் கூடப் பாழாய்ப் போய்விடுகிறதே!

அதனால், வேண்டாம் இந்தக் கோபம் என்று சொல்கிறது 'அறநெறிச் சாரம்’ என்னும் நூல். அதையும் அதிகாரமாகச் சொல்லவில்லை; கடுமை யாகச் சொல்லவில்லை; குழைவாகச்சொல்கிறது; கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறது.

இதோ, அதிலிருந்து ஒரு பாடல்...

'உழந்து உழந்து கொண்ட உடம்பினைக் கூற்று உண்ண
இழந்து இழந்து எங்கணும் தோன்ற சுழன்று உழன்று
சுற்றத்தார் அல்லாதார் இல்லையேல் - நல் நெஞ்சே!
செற்றத்தால் செய்வது உரை'

(பாடல் எண்: 103)

கருத்து: 'நல்ல நெஞ்சே! மிகவும் அரிதாக முயன்று பெற்ற இந்த மனித உடலை யமன் உண்டு (அழித்து) விடுகின்றான். அதனால், பல பிறப்புகள் பிறந்து இறக்கின்றோம். பல பிறவிகள் எடுத்து, அலைந்து திரிந்து தடுமாறிய மக்களில், நமக்கு உறவினர் அல்லாதார் யாரும் இல்லை. ஆகையால், அடுத்தவர்களிடம் நீ கொள்ளும் கோபத்தினால் சாதிக்கக் கூடியது என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை! ஆகவே, நல்ல நெஞ்சே! கோபம் வேண்டாம்!''

என்ன அணுகுமுறை! என்ன அணுகுமுறை! கோபம் வேண்டாம் என்று சொல்லும் இந்தப் பாடல், அது உருவாகும் மனத்தை 'நல்ல நெஞ்சே!’ என்று அழைக்கிறது. 'எத்தனையோ பிறவிகள்... அவற்றில் எத்தனையோ உறவுகள்! யார் யார், யார் யாருக்கு என்னென்ன உறவாக இருந்தோம் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது, ஏன் கோபம்? அந்தக் கோபத்தால் சாதித்தது என்னவென்று சொல்?’ என்று, எவ்வளவு மென்மையாகக் கேட்கிறது, பாருங்கள்..!

இதைவிட என்ன 'நல் எண்ணம்’ (positive thinking) வேண்டும்?

சீரழிவதைச் சொல்லி, அதை மேலும் சிக்கல் ஆக்காமல் மென்மையாகச் சொல்லி வழிகாட்டும் இந்தப் பாடல் 'அறநெறிச்சாரம்’ என்ற நூலில் உள்ளது.

கல்வியின் பெருமை, பகுத்து உண்டு வாழ்தல், பிறந்தது ஏன், தர்மம் செய்ய வேண்டிய காலம், ஆசிரியர்கள் யார், மூடர்கள் யார் என, பலவிதமான அறங்களை 226 பாடல்களில் இந்த நூல் விவரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், தாயையும் திருடனையும் ஒரே பாட்டில் இணைத்த புதுமையையும் இந்த நூல் செய்திருக்கிறது.

இதன் ஆசிரியர் திருமுனைப்பாடியார் என்பவர். 13-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல், 'அருங்கலச் செப்பு’ என்னும் அறநூலின் அமைப்பைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது.

இக்காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் திருக்கோவலூர் பகுதி, ஒருகாலத்தில் 'மலையமான் நாடு’ என்றும், 'திரு முனைப்பாடி நாடு’ என்றும் அழைக்கப்பட்டது.

அந்த நாட்டைச் சேர்ந்தவர்தான் திருமுனைப் பாடியார். அவர் எழுதிய பாடல்களில் இருந்து ஒரு மென்மையான பாட்டை இங்கே பார்த்தோம்.

கோபத்தால் ஆவது என்ன என்று கேட்டு, தீர்ப்பை நம்மிடமே விட்டுவிடும் பாடல் இது. நீங்கள் என்ன தீர்ப்பு எழுதப் போகிறீர்கள்?

(இன்னும் அள்ளுவோம்...)