ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீநாகநாதரை தரிசிக்க... ராகு - கேது தோஷம் விலகும்!

மகாவிஷ்னு வழிபட்ட ஆலயம்!

ஸ்ரீநாகநாதரை தரிசிக்க... ராகு - கேது தோஷம் விலகும்!
##~##
நா
கை மாவட்டம், தரங்கம்பாடியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்களாச்சேரி. குரா மரங்கள் நிறைந்த அந்த வனப்பகுதியில் அமைந்துள்ள தலம் என்பதால், திருக்குராச்சேரி என்றானது. பிறகு மருவி, திருக்களாச்சேரி என்றானதாகச் சொல்கின்றனர் பக்தர்கள்.

இந்தத் தலத்து இறைவனின் திருநாமம்- ஸ்ரீநாகநாதர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசிவகாமசுந்தரி. ஒருமுறை, தனக்கு ஏற்பட்ட தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற, மகாவிஷ்ணு இந்தத் தலத்துக்கு வந்து, சிவபெருமானை நினைத்துக் கடும் தவம் மேற்கொண்டாராம். இதில் மகிழ்ந்த சிவனார், அவருக்குத் திருக்காட்சி தந்ததுடன், தோஷம் முழுவதையும் அகற்றி அருளினார். அன்று முதல், ஸ்ரீநாகநாதர் எனும் திருநாமத்துடன் இங்கே குடியிருக்கும் சிவபெருமான், தன்னை நாடி வரும் அன்பர்களின் தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருள்பாலிக்கிறார் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீநாகநாதர் கோயிலில் இருந்து மேற்குத் திசையில் தனிக்கோயிலில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள். மிகுந்த வரப்பிரசாதியாம் இவர். இங்கேயுள்ள ஸ்ரீநாகநாதரை ராகு காலம் மற்றும் அனைத்து வேளைகளில் வழிபட்டால், நாக தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்! அதேபோல், பிரதோஷ நாளில், இங்கு வந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறுமாம்.

ஸ்ரீநாகநாதரை தரிசிக்க... ராகு - கேது தோஷம் விலகும்!

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மா, நவக்கிரகங்கள், ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீபைரவர், ஸ்ரீதுர்கை ஆகியோருக்குத் தனிச்சந்நிதிகள் உள்ளன. மாசி மாத மகா சிவராத்திரி நாளில், இங்கு வந்து வழிபடுவது, இந்த ஜென்மத்துப் பிறவிப் பயனைத் தரும் என்பது ஐதீகம்!

ராகு- கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி பத்ரம் (இலை) ஆகியவை சார்த்தி, ஸ்தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு- கேது தோஷம் யாவும் விலகும்.

திருக்களாச்சேரி வந்தால்... ஸ்ரீநாகநாதரையும் சிவனருள் பெற்று தனிக்கோயிலில் அருளாட்சி செய்து வரும் ஸ்ரீவரதராஜ பெருமாளையும் தரிசியுங்கள். உங்கள் துயரங்கள் யாவும் தீரும்.

           - மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா