ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கோபம் கொண்ட ஈசனை குளிர்வித்த அம்பிகை!

உமையவள் வழிபட்ட தலம்!

கோபம் கொண்ட ஈசனை குளிர்வித்த அம்பிகை!
##~##
தி
ருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் அமைந்துள்ளது ஸ்ரீஉத்தமலிங்கேஸ்வரர் திருக்கோயில். திருப்பூரில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்துக்கு வந்தால், மனதில் இருந்த குழப்பங்களும் கோபங்களும் நீங்கி, நிம்மதியாக வாழலாம் என்பது ஐதீகம்!

ஒருகாலத்தில், மக்களும் மன்னனும் வழிபாடுகளில் இருந்து விலகி, கொடும் செயல்களில் ஈடுபடத் துவங்கினார்கள். நாட்டில் எங்கு பார்த்தாலும் அட்டூழியங்கள் அதிகரித்தபடி இருந்தன. இதில் கோபம் கொண்ட சிவனார், மக்களுக்குப் பாடம் புகட்டும் நோக்கில், மண் மாரி பொழியச் செய்தார். இதில் நிலைகுலைந்து போனார்கள் மக்கள். சிவனாரின் கோபத்துக்கு ஆளாகிவிட்டோம் எனப் புரிந்து உணர்ந்தவர்கள் உமையவளிடம் முறையிட்டு, 'எங்களை நீதாம்மா காப்பாத்தணும்’ என வேண்டினார்கள்.

கோபம் கொண்ட ஈசனை குளிர்வித்த அம்பிகை!

கருணையுள்ளம் கொண்ட தேவி சிவனாரிடம் சென்று, 'அவர்களை மன்னித்தருளுங்கள்’ என வேண்டினாள். ஆனால், சிவனாரின் கோபம் தணியவில்லை. உடனே, உமையவள் பூமிக்கு வந்து, பெரும்பழனம் எனும் தலத்தை அடைந்து, அங்கே சிவனாரை எண்ணிக் கடும் தவமிருந்தாள்.

இதில் சிவனாரின் கோபம் தணிந்தது. அம்பிகைக்குக் காட்சி தந்த இறைவன், அந்த தேசத்து மக்களுக்கு பாப விமோசனமும் அளித்து அருளினார். தற்போது அந்தத் திருவிடம் பெருமாநல்லூர் என மருவி அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீகால பைரவர், ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

கோபம் கொண்ட ஈசனை குளிர்வித்த அம்பிகை!

சித்ரா பௌர்ணமியன்று, தேர்த் திருவிழா பெரும் விமரிசையாக நடைபெறுகிறது. அம்பிகையை உளமாரப் பிரார்த்தனை செய்தால் திருமணப் பாக்கியம், குழந்தைப்பேறு, கல்வி ஞானம் ஆகியன கிடைக்கப்பெறலாம் என்பர்.

இந்தத் தலத்து இறைவன் ஸ்ரீஉத்தமலிங்கேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீகோவர்த்தனாம்பிகை. மேற்குப் பார்த்த ஆலயம் இது. இங்கே அம்பிகை, தவம் புரியும் கோலத்தில் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறாள். அதேபோல் சிவனாரும் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். இந்தத் தலத்துக்கு வந்து இறைவனையும் இறைவியையும் வணங்கினால், நம் தீய எண்ணங்களையெல்லாம் விலக்கி, நல் வாழ்க்கை வாழச் செய்வார்கள் என்பது உறுதி எனப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.

சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலில், அம்பிகை தவமிருந்து வரம் பெற்ற இந்தத் திருவிடத்தில் வந்து, சந்நிதியில் மனமுருகிப் பிரார்த்தித்தாலே வாழ்வில் மங்கலங்கள் பெருகும் என்பது ஐதீகம்!

  கட்டுரை, படங்கள்: மு.கார்த்திகேயன்