Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

பிரீமியம் ஸ்டோரி
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

பண்ணியம் ஏந்தும் கரம் தனக்காக்கி
பால் நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி, அரதன கலசம்
வியன்கரம் தந்தை தாய்க் காக்கிக்
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித் தடக்கிக்
கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர்
ஆபற் சகாயனை அகந்தழீஇக் களிப்பாம்

- தணிகை புராணம்

##~##
ங்கரன்- ஐந்து திருக்கரங்களை கொண்டவர் என்பதால்,  விநாயகப்பெருமானுக்கு இப்படியரு சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக கடவுளர் யாவருக்கும் நான்கு கரங்கள் இருக்கும். இந்த நான்கு கரங்களோடு துதிக்கையாகிய நீண்டதொரு ஐந்தாவது கரத்தையும் கொண்டவர் விநாயகர்.

இவ்வாறு ஐந்து கைகள் கொண்டிருப்பது விநாயகரின் சிறப்பியல்பை உணர்த்தும். அவரது கைகளில் ஒன்றில் தமக்காக மோதகம் என்னும் சுவையான உணவை வைத்திருக்கிறார். மற்றொரு கையில், தேவர்களைக் காப்பதற்காக படைக்கலம் போலத் தந்தம் ஏந்தியிருக்கிறார். இன்னொரு கையில், தமது தாய்- தந்தையராகிய உமையையும் சிவபிரானையும் வழிபடுவதற்காக நீர்க்கலசம் தாங்கியிருக்கிறார்.

உயிர்களாகிய நம்மை ஆணவ மலமானது பற்றி நலிவுறுத்தாது இருக்குமாறு செய்வதற்காக, பின்னிரு கரங்களில் பாசமும் அங்குசமும் வைத்துக் கொண்டிருக்கிறார். தமக்கும் தேவர்களுக்கும் தாய்- தந்தையருக்கும் ஒவ்வொரு கையையே பயன்படுத்தும் விநாயகர், தம்மை வழிபடும் அடியவர்களுக்கு தீமை அகற்றி நலம் அளிக்கும் குறிக்கோளுடன் இரண்டு கைகளைக் கொண்டிருப்பது அடியவர்களின்பால் அவருக்குள்ள பெரும் கருணைத் திறத்தினைப் புலப்படுத்துகின்றது.

அந்த வகையில்,. திருத்தணிகை மலையில் அருள்பாலிக்கும் ஆபத்சகாய விநாயகரின் திருவடிகளை இங்கே நாம் வணங்கி மகிழ்வோம்.

எப்படி வந்தார் இந்த ஆபத்சகாய விநாயகர்?

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

ஒருமுறை திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லி, சுந்தரவல்லி இருவரும் திருமுருகனை மணம்புரிய வேண்டி, கயிலை மலையில் சரவணப் பொய்கை யின் கரையில் தவம் இயற்றினர். முருகப்பெருமான் அவர்களுக்குக் காட்சியளித் தார். அமிர்தவல்லியை தேவேந்திரன் மகளாக வும், சுந்தரவல்லியை சிவ முனிவரின் புதல்வி யாகவும் பிறந்து வளர்ந்து வருமாறும், தாம் உரிய காலத்தில் வந்து மணம்புரிந்து கொள்வதாகவும் வரமளித்தார்.

அவ்வாறே அமிர்தவல்லி, தேவேந்திரன் புதல்வியாகத் தோன்றி 'தேவசேனா’ என்றும், வெள்ளை யானையால் வளர்க்கப் பெற்றதால் 'தெய்வயானை’ என்றும் அழைக்கப் பெற்றாள். சூரசம்ஹாரத்துக்குப் பிறகு தெய்வயானையை திருப்பரங்குன்றத்தில் வைத்து முருகப்பெருமானுக்குக் கல்யாணம் செய்து வைத்தான் தேவேந்திரன்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

சரி, வள்ளியின் அவதாரம் எப்படி நிகழ்ந்தது?

கண்வ முனிவரது சாபத்தால் பூலோகத்தில் சிவ முனிவராகத் திருமால் அவதரிக்க... மகாலட்சுமி பெண் மானாகவும், உபேந்திரன் வேடர் குல அரசனாகவும் தோன்றினர். 'மேற்பாடி’ என்ற ஊருக்கு அருகில் உள்ள வனத்தில் சிவ முனிவர் தவம் செய்து கொண்டிருக்கும் ஆஸ்ரமத்தின் அருகில் பெண் மானாக அவதரித்த திருமகள் வலம் வந்தாள். அந்த அழகிய பெண் மானைக் கண்ட முனிவர், அதன் மீது மோகம் கொண்டார். அதன் விளைவாக அந்த மான் ஒரு பெண் குழந்தையை ஈன்றது.

மானுக்குப் பதிலாக மனிதக் குழந்தையைக் கண்ட அந்தப் பெண் மான் அந்தக் குழந்தையை அங்குள்ள வள்ளிக் கிழங்கு தோண்டியெடுக்கப்பட்ட குழியில் விட்டு விட்டுப் போய்விட்டது. வேநம்பி என்ற வேடர் குலத் தலைவன் வேட்டையாட அந்தப் பகுதிக்கு வந்தபோது, குழந்தையின் அழுகுரல் கேட்டவன், அதனை மகிழ்ச்சியுடன் எடுத்துச் சென்று, தன் மனைவியிடம் அளித்தான். பெண் குழந்தையில்லாத குறையைத் தீர்த்து வைத்த தங்கள் குலதெய்வமான முருகனை மனமார வழிபட்டு நன்றி தெரிவித்தனர் அந்த வேடர் தம்பதியர். வள்ளிக்கிழங்கு எடுத்த குழியில் கிடைத்ததால் 'வள்ளி’ என்று பெயர் சூட்டினர்.

வள்ளி வளர்ந்து வரும் நாளில், அந்த வனத்தில் தினைப்புனத்தைக் காவல் காக்கச் சென்றாள். பறவைகள் தினைப் பயிர்களைக் கொத்திச் செல்லாமல் இருக்க, பரண் மீது ஏறி கையில் கவண் கொண்டு ஆயல் ஓட்டிப் பாடுவது அவளது வழக்கம்.

ஒருநாள் அந்த வழியில் நாரத முனிவர் வந்தபோது, வள்ளியின் குரலையும், அவளது அழகையும் கண்டு ஆச்சரியமுற்றார். உடனே, தணிகை மலைக்குச் சென்றார்.

அந்தநேரத்தில், சூரனை சம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமானிடம் இருக்கும் ஞானசக்தி என்ற வேலாயுதத்தைப் பெறுவதற்காக, கயிலை மலையில் இருக்கும் சிவகங்கையை ஒரு சுனை உருவமாக தணிகை மலைக்கு வரவழைத்தார் முருகப் பெருமான். தொடர்ந்து, தணிகை கோயிலுக்கு வடக்கு திசையில் அற்புத மான சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அபிஷேக அலங்காரம் செய்து, பூஜை செய்தார். முன்னதாக, தமக்குத் தேவையான காலத்தில் வந்து உதவும் தமது மூத்த சகோதரர் விநாயகரை 'ஆபத்சகாய’ என்ற பெயரில் அமைத்து வழிபாடு புரிந்தார். சகல உபசாரங்களுடன் முருகன் பூஜித்த அந்தச் சிவலிங்கத்திற்கு 'குமாரேச்வரர்’ என்று பெயர்.

இதற்கிடையில், முருகப்பெருமானைத் தேடி வந்த நாரதர், தாம் தினைப்புனத்தில் கண்ட வள்ளியின் பேரழகு பற்றி அவரிடம் வர்ணித்தார். உடனே, அவளைத் திருமணம் செய்துகொள்ள எண்ணம் கொண்டார் கந்தவேள்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

அதையடுத்து, அந்தத் தணிகை முருகன் முறைப்படி குமாரேச்வரரை பூஜித்து, நாரத முனிவர் சொன்ன கன்னிகையை மணம்புரிய அனுமதி பெற்றார். பிறகு, வள்ளி வசிக்கும் வனப்பகுதிக்குச் சென்றார்.

வள்ளியை மணம்புரிந்து கொள்ள வந்த முருகன் முதலில் வேடனாக வந்து வள்ளியுடன் அன்பாகப் பேசினார். பிறகு வேங்கை மரமாக நின்றார். பிறகு, விருத்தனாகி (கிழவனாகி) காட்சியளித்தார். அப்போது, வள்ளி ஆசையாகத் தந்த தினை மாவை உண்ட அவருக்கு தாகவிடாய் ஏற்பட.... அவரை தண்ணீர் சுனைக்குக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள் வள்ளி. அப்போது, தமது மோகவிடாயையும் தீர்க்க வேண்டும் என்று கிழவனாக வந்த முருகன் குறும்புடன் சொல்ல... வள்ளி கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டாள்.

உடனே, கிழவனாக வந்த குமரன், தனது மனத்தில் விநாயகனை தியானித்தார். தம்பி அழைத்தால், அண்ணன் வராமல் இருப்பாரா என்ன?

உடனே, ஆனைமுகன் ஒரு பெரிய யானை வடிவம் கொண்டு, எட்டுத் திசையும் அதிரும்படியாக வீறிட்டு, எதிரில் கண்ட மரங்களை தும்பிக்கையால்  வேருடன் பறித்து வீழ்த்தியபடி ஆரவாரத்துடன் வள்ளியை நோக்கி வர... அவள் அந்த யானையைக் கண்டு பயந்து நடுங்கி, கிழவனாக வந்த முருகப் பெருமானை நோக்கி ஓடி வந்தாள்.

முற்பிறப்பில் சரவணப் பொய்கையில் அவள் எதற்காகத் தவம் செய்தாளோ, அதனைப் பெறுபவ ளாக, முருகனாகிய கிழவரின் பின்புறம் சேர்த்துக் கட்டிக்கொண்டு, ''தாத்தா! உமது இஷ்டப்படி எல்லாம் நடக்கிறேன்! இந்த மத யானை என்னை ஒன்றும் செய்யாதபடி காப்பாற்றுவீராக!' எனக் கதறி அழுதாள்.

குமரப் பெருமான், ''பெண்ணே! அஞ்சாதே!' என்று தேற்றி விநாயகரை மறைந்துபோகும்படி தியானிக்க, அவரும் அங்கிருந்து மறைந்தார். முருகப் பெருமான் கிழ வடிவில் இருந்து மீண்டு, தமது ஆறுமுகமும் பன்னிரு கரங்களோடும் மயில் வாகனத்தில் காட்சியளித்தார். இவ்வாறு, தமது தம்பி முருகன் வள்ளியை மணக்க யானை வடிவம் கொண்டு வந்த கணபதி 'ஆபத்சகாய விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.

''வள்ளியின்பால் கொண்ட காதலாகிய அத்துயரத்தொடு, உமது தம்பி சுப்பிரமணியர் நடந்த அந்த காட்டில் யானையாகத் தோன்றி, அந்தக் குறமகளாம் வள்ளியுடன் முருகன் அப்போதே மணம்புரிய உதவிய பெருமான்'' என்று அவரைப் பற்றி தமது திருப்புகழில் பாடுவார் அருணகிரியார்.

''அத்துயரது கொடு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே

(கைத்தல நிறை...)

திருத்தணிகை மலை மேல் உள்ள முருகன் கோயிலில் 2-வது பிராகாரத்தின் வட கிழக்கில் ஆபத்சகாய விநாயகர் அருள்பாலிக்கிறார். அடியார்களுக்கு எந்த இடையூறு ஏற்பட்டாலும், உடனே அவர்களைக் காத்து உதவிபுரிய அவர் தயாராக இருக்கிறார். நீங்களும் அவரைத் தேடி வந்தால், நிச்சயம் உங்களுக்கும் உதவுவார்!

- பிள்ளையார் வருவார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு