சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
'ஆ
லமரத்தின் அடிவேரில் பூ பூக்குமா என்ன? இதென்ன அதிசயம்... இந்த விருட்சத்தின் அடிவேரில் இரண்டு தாமரைகள்?!’

- விநோதம் கண்ட வியப்புடன், அந்த அதிகாலை வேளையில் சிறகடித்து கூவின குயில்கள். அந்தப் பட்சிகளின் வியப்புக்கும் சந்தோஷ சத்தத்துக்கும் காரணம் இருந்தது!

சரயுநதிக் கரையில் இருந்த அந்த ஆலமரத்தின் வேர்ப் பகுதியில் தலைவைத்துப் படுத்திருந்தார்கள், விஸ்வாமித்திரரின் யாகம் காக்க வந்த ஸ்ரீராமனும் லட்சுமணனும்! அவர்களின் மலர் முகத்தையே தாமரையாய் எண்ணிக் கூவின போலும் கருங்குயில்கள்!

பட்சிகளை விடுங்கள்... ராஜரிஷியான விஸ்வாமித்திரர் மட்டும் என்னவாம்? ஸ்ரீராமனை துயிலெழுப்ப வந்தவர்... பூமகளையே பாம்பணையாகக் கொண்டு அவன் தூங்கும் அழகில் தன்னையே மறந்து சிலையென அல்லவா நின்றுவிட்டார்!

வாருங்கள்... அந்த பிரம்மரிஷியின் மனதுக்குள் புகுந்து அவரின் சிந்தனையை வாசிப்போம்!

'ஆஹா... இந்தப் புத்திர ரத்தினத்தைப் பெற கௌசல்யை என்ன பாக்கியம் செய்தாளோ? அவள் மட்டுமா? சூரியகுலமே பெரும் பாக்கியம் செய்திருக்கிறது ராமச்சந்திரா! மனிதனாகி வந்து... வித்யை கற்றுத் தாருங்கள்... மந்திரோபதேசம் செய்யுங்கள்... என்று கேட்டு, எங்களையும் அல்லவா உனது அருளாடலில் ஒரு பாத்திரமாய் சேர்த்துக்கொண்டாய். அற்புதம்... வெகு அற்புதம்! நேற்று தசரதன், உன்னை என்னுடன் அனுப்ப மறுத்ததில் வியப்பேதும் இல்லைதான். உன்னைப் பிரிந்திருக்க யாருக்குத்தான் மனம் வரும்...’

சரிதான்! இப்போதைக்கு சகஜ நிலைக்கு வரப் போவதில்லை இந்த தவசீலர். நமக்கு சில விஷயங்கள் தெரிந்தாக வேண்டும். ஸ்ரீராம சகோதரர்களை இவர் அழைத்து வந்தது ஏன்?

ஸ்ரீராமனை இவருடன் அனுப்ப தசரதர் ஏன் மறுத்தார்? பிறகெப்படி மனம் இசைந்தார் என்பதையெல்லாம் அறிந்து வருவோம். அதற்குள்ளாக விஸ்வாமித்திரர் தானும் உணர்வு விழித்து, ஸ்ரீராமனையும் துயிலெழுப்பி விடுவார்!

முன்தினம்தான் அயோத்திக்கு விஜயம் செய்திருந்தார் விஸ்வாமித்திரர். பெரும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று உபசரித்த சக்கரவர்த்தியிடம், ஒரு வேண்டுகோள் விடுத்தார் ராஜரிஷி விஸ்வாமித்திரர்.  ''எமது யாகத்துக்கு தீங்கு விளைவிக்கும் அசுரக்கூட்டத்தை அழிக்க வேண்டும். அது, உன் மகன் ராமனால் மட்டுமே சாத்தியம். அவனை என்னுடன் அனுப்ப வேண்டும்'' என்றார்.

அவ்வளவுதான்... துடிதுடித்துப் போனார் தசரதர். ''என் உயிரை வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன். ஸ்ரீராமனைப் பிரிய இயலாது'' என்றார் வேதனையுடன்.

விஸ்வாமித்திரருக்கு கோபம் எழுந்தது. இதைக் கவனித்துவிட்ட வசிஷ்ட மகரிஷி அவரை ஆறுதல்படுத்தினார். ஸ்ரீராமனை அனுப்பி வைக்கும்படி தசரதருக்கு அறிவுரை வழங்கினார். குருதேவரின் வார்த்தைகள் தசரதரிடம் நம்பிக்கையை விதைத்தன. ஸ்ரீராமனை அனுப்ப இசைந்தார். மட்டுமின்றி, அவனுக்கு உற்ற துணையாக லட்சுமணனையும் வழியனுப்பத் தீர்மானித்தார்.

ஸ்ரீராமனின் அவதார காரியத்துக்கான முதல் பயணம் ஆரம்பமானது. அதுமட்டுமா? பிரம்மரிஷியின் மூலம் பலை, அதிபலை என்ற வித்யைகளை ஸ்ரீராமன் பெற்றதும் இந்தச் சந்தர்ப்பத்தில்தான். தொடர்ந்து பயணித்த மூவரும் சரயு நதிக்கரையை அடைந்தார்கள். ஓரிரவு அங்கே தங்கவும் செய்தார்கள்.

அதோ... ராஜரிஷி விஸ்வாமித்திரர் கௌசல்யை மைந்தனை எழுப்பிக் கொண்டிருக் கிறார்... வாருங்கள், நாமும் அவருடன் சேர்ந்து ஸ்ரீராமனை பள்ளியெழுப்புவோம்.

''ஸ்ரீராமா எழுந்திரு. அதோ பார் கீழ்வானம் சிவக்கிறது. சூரியன் உதித்தால் மயங்கிப் போவான்; மண்ணில் ஒரு ஆதவன் இருக்க, விண்ணில் நாமெதற்கு என்று உதிர்ந்து போவான். அஞ்ஞான இருள் கிழித்து, மெய்ஞ்ஞான ஒளியுடன் உலகம் வைகறையைச் சந்திக்கட்டும்... எழுந்திரு!''

ஸ்ரீராமன் கண்ணலர்ந்தான். அந்த அதிகாலைப் பொழுதும் அற்புதமாக விடிந்தது! இனி, வையகத்தில் விடியல் மட்டுமே!

தசாவதாரம் திருத்தலங்கள்!

ஆமாம்... அவர்களின் பயணம் இன்னும் தொடரும். விஸ்வாமித் திரரின் வேள்விசாலையில் ஸ்ரீராமச் சந்திரனின் பணி ஆரம்பமாகப் போகிறது; அவனது கோதண்டத் துக்கும் வேலை வரப் போகிறது!

கோதண்டம் என்றதும்தான் ஞாபகம் வருகிறது! ஸ்ரீராமனும் அவன் இளவலும் இங்கே யாகம் காத்து நிற்கட்டும். அதற்குள் நாம், ஸ்ரீகோதண்டபாணியாய் அவன் அருளும் ஓர் ஆலயத்தைத் தரிசித்து திரும்புவோம்!

திருவாரூர் மாவட்டம், தஞ்சை- மன்னார்குடி சாலையில், சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது வடுவூர். இந்த ஊரின் நடுவே மிக அற்புதமாக கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகோதண்டராமர். இந்தக் கோயிலில் உற்ஸவ மூர்த்தம் - ஸ்ரீராமரே உருவாக்கிய ஸ்ரீராமரின் திருவுருவம் என்பது விசேஷம்!

வனவாச காலத்தில் முனிவர்கள் சிலரோடு தங்கியிருந்தார் ஸ்ரீராமன். சிலநாட்கள் கழித்து அவர் புறப்பட ஆயத்தமானபோது, ஸ்ரீராமனைப் பிரிய மனமில்லாமல் முனிவர்கள் கலங்கினர். அவர்களுக்காக தன் திருவுருவை சிலையாக்கித் தந்தாராம் ஸ்வாமி. அதுவே, இங்குள்ள உத்ஸவ விக்கிரகம் என்கிறார்கள்.

முன்னொரு காலத்தில், திருவாரூர் அருகில் உள்ள திருக்கண்ணபுரம் அருள்மிகு சௌரிராஜ பெருமாள் திருக்கோயிலில்தான் இந்த உத்ஸவ மூர்த்தம் இருந்ததாம். பின்னர், புயல் மழை போன்று மிகப் பெரிய பிரளயம் ஏற்பட, வேதாரண்யம் அருகில் உள்ள தலைஞாயிறு பகுதியில் உத்ஸவ விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதாம்!

இந்த நிலையில், தஞ்சையை ஆட்சி செய்த மன்னரின் கனவில் தோன்றிய ஸ்ரீராமர், தான் இருக்கும் இடத்தைக் காட்டி அருளினாராம். அதன்படி மன்னர் ஓடி வந்து, உத்ஸவ விக்கிரகத்தை வடுவூர் தலத்தில் வைத்துப் பூஜித்ததுடன், மக்களின் தரிசனத்துக்கும் வழிவகைகள் செய்தார்; வடுவூரும் செழித்தது என்கிறார்கள்.  

தை, மாசி மாதங்களில் தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. கோயிலின் தீர்த்தம் - சரயு புஷ்கரணி. அருகில் மிகப்பெரிய ஏரியும் உண்டு. பங்குனி பிரம்மோத்ஸவமும் விசேஷம்!

இங்கே, ஸ்ரீகோதண்டராமரை மனம் உருகி வேண்டிக் கொள்ள விரைவில் காரியம் கைகூடுமாம். பிரார்த்தனை நிறைவேறியதும் அங்கப்பிரதட்சணம், முடி காணிக்கை ஆகிய நேர்த்திக்கடன்களைச் செலுத்துகின்றனர். இன்னொரு விசேஷம்... ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் செய்து வழிபட்டால் பதவி உயர்வு, தொழில் விருத்தி, திருமண பாக்கியம் ஆகியன கைகூடும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் புனர்பூச நாளில் மூலவருக்கு திருமஞ்சனம் செய்வது சிறப்பு! ஆடி வளர்பிறை ஏகாதசி துவங்கி ஆவணி பூரட்டாதி வரை உற்ஸவரின் திருமேனியில் உள்ள கவசங்கள் அகற்றப்பட்டிருக்குமாம். அப்போது உற்ஸவருக்கு திருமஞ்சனம் நடைபெறும் காட்சியை தரிசிப்பது மிகுந்த பலனைத் தருமாம்!

அதேபோன்று, ஸ்ரீசீதா கல்யாணம் செய்துவைத்துப் பிரார்த்தித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; நற்குணம் வாய்ந்த கணவன் கிடைப்பான்; இல்லறம் செழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்!

- அவதாரம் தொடரும்...