Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

Published:Updated:
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவான் ஸ்ரீமந் நாராயணன் கிருஷ்ணாவதாரத்தில் பங்கேற்று நிகழ்த்திய பல சம்பவங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தன என்பதும், அவற்றைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள பகவானின் பரம பக்தனும் சேவகனுமான உத்தவர் பல கேள்விகள் கேட்டுப் பதில்கள் பெற்றார் என்பதும் ஏற்கெனவே நாம் அறிந்த விஷயங்கள்தான். அதன் தொடர்ச்சியாக, உத்தவர் கேட்ட ஒரு கேள்விக்குக் கண்ணன் தந்த தெளிவான விளக்கம் அடங்கிய மற்றொரு சம்பவம்... தருமன் நடத்திய ராஜசூய யாகம்!

பாண்டவர்களில் மூத்தவனான தருமராஜன் தங்களுக்கென ஒரு சிறிய ராஜ்ஜியத்தை அமைத்துக்கொண்டு, மயனால் சிருஷ்டிக்கப் பட்ட இந்திரப்பிரஸ்தம் என்ற நகரைத் தலைநகராக்கி, ராஜ்ய பரிபாலனம் செய்யத் தொடங்கினான். சகோதரர்களான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனுக்கு உறுதுணையாக நின்றனர்.

இந்த நிலையில், பஞ்சபாண்டவர்களது ஆத்ம நண்பனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ஆணைப்படி 'ராஜசூயம்’ எனும் மிகப் பெரிய யாகத்தை நடத்த ஏற்பாடு செய்தான் தருமராஜன். ராஜசூயம் என்பது, அஸ்வமேத யாகத்துக்கு ஒப்பான ஒரு பெரிய யாகம். அப்போது, எல்லா நாட்டு அரசர்களையும் அழைக்கும் சம்பந்தப்பட்ட மன்னன், எல்லோரது ஒப்புதல்களுடனும் தன்னை ராஜாதிராஜனாக பிரகடனம் செய்துகொள்வது வழக்கம்.

அந்த அடிப்படையில் தருமன் ராஜசூய யாகத்துக்கு ஏற்பாடு செய்தான். எல்லா தேச மன்னர்களையும் அழைத்தான். தேவ சிற்பி மயனைக் கொண்டு மன்னர்கள் தங்குவதற்கான மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், உப்பரிகைகள், அந்தப்புரங்கள் போன்றவற்றை அமைத்து, இந்திரப்பிரஸ்தத்தைத் தேவலோகம் போல ஆக்கினான்.

தங்களின் தாயாதி சகோதரர்களான துரியோதனன் முதலான கௌரவர்களையும் யாகத்துக்கு அழைத்திருந்தனர் பாண்டவர்கள். அவர்களும் வந்தனர். தருமனின் செல்வச் செழிப்பையும் பெயரையும் புகழையும் கண்டு உள்ளம் குமுறியபடியே ராஜசூய யாகத்தில் பங்கேற்றனர், கௌரவர்கள். எப்படியாவது குழப்பம் விளைவித்து, அந்த யாகத்தை அழிக்க நினைத்தனர். அவர்களுக்கு உறுதுணையாக சேதி நாட்டு மன்னன் சிசுபாலனும் வந்திருந்தான்.

சிசுபாலன், கண்ணனின் தாயாதி; நெருங்கிய உறவினன். என்றாலும், கண்ணனிடம் தீராப்பகை கொண்டவன். கண்ணனை வெறுத்தவன். அவன் விரும்பிய ருக்மிணிதேவி, கண்ணனை விரும்பித் திருமணம் செய்துகொண்டது அவன் பகையை மேலும் தீவிரமாக்கியது. அதனாலேயே ராஜசூய யாகத்தில் கண்ணனை எப்படியாவது அவமானப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் அங்கே வந்திருந்தான்.

ராஜசூய யாகம் ஆரம்பமானது. வேதவிற்பன்னர்களும், முனிவர்களும் முன் நின்று நடத்த... யாகம் முறைப்படி நடந்தது. முடிவில், 'முதல் தாம்பூலத்தை யாருக்கு அளிப்பது?’ என்ற கேள்வி எழுந்தது. அப்போது, சபையில் மூத்தவரான பீஷ்மாச்சாரியார் ஆணைப்படி, முதல் தாம்பூலத்தை ஸ்ரீகிருஷ்ணனுக்குக் கொடுக்கத் தீர்மானித்தனர் பாண்டவர்கள்.

மன மகிழ்ச்சியோடு ஸ்ரீகிருஷ்ணனைக் கொலு மண்டபத்து சிம்மாசனத்தில் அமர்த்தி, தாம்பூலம் தரும் நேரத்தில்... சபையே அதிரும்படி குரலை எழுப்பி, அதை ஆட்சேபித்தான் சிசுபாலன். கௌரவர்கள் அவனுக்குப் பக்க பலமாக நின்றனர்.

சிசுபாலன், கண்ணனைக் கேவலமாகத் திட்டினான். பாண்டவர்கள் தடுத்தும் அவன் கேட்கவில்லை. கண்ணனை இடையன் என்றும், மடையன் என்றும், பேடி என்றும், கோழை என்றும் ஏளனமாகப் பேசினான். கண்ணன் பொறுமையோடு அதைக் கேட்டான். நூற்றெட்டு முறை தனக்குத் தீங்கிழைப்பதை தான் பொறுத்துக் கொள்வதாக சிசுபாலனின் தாய்க்குக் கண்ணன் ஏற்கெனவே வாக்களித்திருந்தான். அதன்படி அவனது கடுஞ்சொற்களைப் பொறுத்தான் கண்ணன்.

இறுதியில் சிசுபாலன் எல்லை கடந்து, இழிசொற்கள் பேச ஆரம்பித்தான். கண்ணன் கண்களில் கோபத் தீ உருவானது. அவன் கரங்களில் சுதர்சனச் சக்கரம் சுழன்றது. அது சூறாவளியாகச் சுழன்று சென்று, சிசுபாலனின் சிரத்தை அறுத்தெறிந்தது. தருமர் திகைத்தார். கண்ணீர் வடித்தார்.

'ராஜசூய யாக சாலையில் இப்படியரு ரணகளம் ஏன் தோன்ற வேண்டும்? யாகம் முடிந்ததுமே ஏன் ஒரு நரபலி ஏற்பட வேண்டும்? கண்ணன் ஏன் யாக பூமியை யுத்த பூமியாக்க வேண்டும்?’ என்று சிலர் மனம் குமுறிக் கேட்டனர்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

நல்லவர்கள், சிசுபாலனை வதம் செய்த கண்ணனை வாழ்த்தினர். தீயவர்கள் அதனைக் கண்டித்து சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். ஆனாலும், ராஜசூய யாகம் தொடர்ந்து நடந்து முடிந்தது. கண்ணன் முதல் தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டான். தருமனை ராஜாதிராஜனாகப் பிரகடனம் செய்தான் ஸ்ரீகிருஷ்ணன்.

நல்லதொரு யாகத்தில் சிசுபாலனுக்கு அப்படியரு நிலைமை ஏன் ஏற்பட வேண்டும்? ஜோதிட சாஸ்திர வல்லவனான சகாதேவன்தானே யாகத்துக்கு நாள் குறித்தான்? இப்படியரு உயிர்ப்பலி

நிகழக் காரணமான கெட்ட நாளில், கெட்ட வேளையில் அவன் ஏன் நாள் குறிக்க வேண்டும்? அதே நேரம், சிசுபாலன்தான் முறை தவறி நடந்தான் என்றாலும், தர்மபூமியான யாகசாலையை கண்ணன் ஏன் யுத்த பூமியாக்கி ரத்தம் சிந்த வைக்க வேண்டும்? சிசுபாலனைக் கொல்ல அதுவா இடம்? அதுவா தருணம்? இது தர்மமா?

இப்படியெல்லாம் பல கேள்விகள், தருமன் நடத்திய ராஜசூய யாகம் முடிந்ததுமே எழுந்தன. ஆனால், கண்ணன் அந்தக் கேள்விகளுக்கு அப்போது பதிலளிக்கவில்லை. அதே கேள்விகளைத்தான் ராஜசூயம் நடந்து, பல வருடங்கள் கழித்து உத்தவர் கேட்டார். அப்போது கண்ணன் தெளிவான பதில் தந்தான்.

சிசுபாலன் பிறப்பால் உயர்ந்தவன். வாழ்க்கை அமைப்பாலும், தீய ஒழுக்கங்களாலும் பண்பிழந்தவன். அவன் தாய் நல்லவள். கண்ணனிடம் நன்மதிப்பும் பக்தியும் கொண்டவள். தன் மகன் எப்படியாவது திருந்தி நற்கதி பெற வேண்டும் எனத் தவம் செய்தாள். 'அவன் தவறாக நடந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனை தர வேண்டாம்'' எனக் கண்ணனிடம் கேட்டுக் கொண்டாள். 'அவன் நூற்றெட்டு முறை தவறு செய்வதைப் பொறுப்பேன். அதற்கு மேலும் தவறிழைத்தால் தண்டனை தப்பாது' என்று கண்ணன் சிசுபாலனின் தாயிடம் கூறியிருந்தான்.

'அப்படியே என் மகன் சிசுபாலன் தண்டனை பெற்றாலும், அவனை மன்னித்து மோட்ச சாம்ராஜ்யம் நல்க வேண்டும்'' என்று அடுத்ததாக வரம் கேட்டாள் சிசுபாலனின் தாய். விசித்திரமான வரமானாலும், அந்த வரத்தைத் தந்து வாக்களித்தான் கண்ணன்.

இதை நிறைவேற்றுவது எளிதல்ல. தீமைக்குத் தண்டனையும், நன்மைக்கு உயர்வும் நல்குவதே தர்ம நெறி! சிசுபாலனோ நன்மை எதுவுமே செய்யாதவன். அவனுக்கு மோட்சம் கிட்டுவது எப்படி? இதுதான் பிரச்னை.

கண்ணன் ஒருவனால்தான் இந்தப் பிரச்னைக்கு முடிவு காண முடியும். ராஜசூயம் எனும் சிறப்பான யாகத்தில் சிசுபாலன் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றான். முனிவர்கள் ஓதிய மந்திர பலத்தாலும், தூவிய அட்சதையாலும், வழங்கிய ஆசீர்வாதத்தாலும், தெளித்த புனித நீராலும், ஓரளவு புனிதப்பட்டிருந்தான் சிசுபாலன். யாக அக்னியில் தோன்றிய தேவதைகளின் அனுக்கிரகம், அவன் மீதும் விழுந்திருந்தது. சேர்த்த புண்ணியங்களை அவன் கரைத்துவிடும் முன்பே, அவனைக் கரையேற்ற விரும்பினான் கண்ணன். அப்போதுதான் சிசுபாலன் கண்ணனைத் திட்ட ஆரம்பித்தான். அவன் திட்டிய வார்த்தைகளை, தன்னை பூஜித்த மந்திரமாக, - நூற்றெட்டு அர்ச்சனைகளாக ஏற்றுக் கொண்டான் கண்ணன்.

இதன்மூலம் நிந்தனையையே ஸ்துதியாக ஏற்றுக்கொண்டு, அந்தப் புண்ணியமும் சிசுபாலனைச் சேர வழி செய்தான் கண்ணன். காலம் கடந்தால் அவன் மேலும் பாவம் செய்துவிடுவான்; அதோடு, அவன் மோட்சம் செல்லும் தகுதி பெற புனிதமான இடத்தில் உயிர் நீக்க வேண்டும். புனிதமான ஆயுதத்தால் மடிய வேண்டும். மகா சுதர்சனம் அவன் சிரத்தை அறுக்க, அவன் உடல் ராஜசூயமான பூமியில் விழ, அந்தப் புண்ணிய பலனால், அவன் ஆன்மா மோட்சமடைந்தது. தீமைக்கும் நன்மை செய்யவே யாக பூமியை யுத்த பூமியாக்கினான் கண்ணன். உத்தவர் கேட்ட மற்ற கேள்விக்கும் கண்ணன் பதில் தந்தான்.

'ராஜசூயத்துக்கு நாள் பார்த்தவன் சகாதேவனில்லை; கண்ணனேதான்!’ - இதுதான் அந்தப் பதில்.

சகாதேவனுக்கு தன் சாஸ்திரக் கணக்கைவிட கண்ணனின் சங்கல்பக் கணக்கில் நம்பிக்கை இருந்தது. அதனால் கண்ணன் குறித்த நாளையே ராஜசூயத்துக்கு ஏற்பாடு செய்தான்.

'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், கண்ணன் சொல்வதும் செய்வதுமே மெய்’ என்ற உண்மையை ஏற்கெனவே உணர்ந்திருந்த உத்தவர், அதனை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டார்.

- இன்னும் சொல்வேன்...