Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

ஒளவையார்... தமிழ் திரைப்பட வரலாற்றில், மக்கள் வருடக் கணக்கில் பார்த்து ரசித்த படம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடக்கப் பள்ளி தமிழ்ப் பாடப் புத்தகங்களில் ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை போன்ற அருமையான நீதி நூல்களைக் காண முடிந்தது. ஆனால், இன்று..? ஆங்கில மோகத்தில் மறக்கடிக்கப்பட்ட அந்த நீதி நூல்களை இனி வரும் தலைமுறையினர் எந்தப் பிறவியில் படிப்பார்களோ?

'அறம் செய விரும்பு...’, 'ஊக்கமது கைவிடேல்...’, 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று...’ - இப்படி எளிமையான நீதிகளை - வாழ்வியல் நெறிகளை நம் தாய் மொழியாம் தமிழில் தந்தவர்... ஒளவை எனும் தெய்வத்தமிழ் மூதாட்டி.

ஒளவையார் என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், அவரது பிறப்பு பற்றிய சரியான தகவல்களும் உறுதியாகக் கிடைக்கவில்லை; எனினும், அவரது வரலாறு பின்வருமாறு கூறப்படுகிறது.

சோழநாட்டில் உறந்தை என்ற ஊரில் வாழ்ந்த ஆதி- பகவன் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகான அந்தக் குழந்தையை அப்படியே விட்டுவிட்டுத் தன்னுடன் புறப்பட்டு வருமாறு பகவன் கூறியதும்... குழந்தையைத் தனிமையில் விட்டுவிட்டு, ''முருகப்பெருமானே! என் குழந்தையைக் காப்பாற்று!'' என்று வேண்டி, கணவனுடன் சென்றாள் ஆதி. அந்தக் குழந்தையை பாணர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் எடுத்து வளர்த்தான். சிறு வயதிலேயே அறிவாற்றலும் கவிதை பாடும் திறமையும் பெற்றிருந்த அந்தக் குழந்தையை - அந்தப் பெண்ணை 'ஒளவை’ என்றே அனைவரும் அழைத்தனர்.

சரஸ்வதிதேவியின் அவதாரமோ என்று வியக்கும் வண்ணம் சிறு வயதிலேயே மிக்க புலமை பெற்றவராக விளங்கினார் ஒளவை. குழந்தைகளுக்கான 'ஆத்திசூடி’யை இயற்றினார். முருகன் அருள் கொண்டு நீதி நூலான கொன்றைவேந்தன், வாழ்வியல் ஒழுக்கங்களைக் கூறும் 'நல்வழி’ ஆகியவற்றையும் இயற்றினார். 'மூதுரை’ என்னும் அவருடைய நூல் பெண்கள் பெருமை, முக்திப்பேறு, தெய்வ பக்தி போன்றவற்றை விளக்குகிறது.

பாணரது இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஒளவை, ஒவ்வொரு ஊராகச் சென்று அங்கு முருகன் உறையும் ஆலயங்களைத் தரிசித்துக்கொண்டே திருக்கோவலூர் என்ற ஸ்தலத்தை அடைந்தார். ஒளவையின் புலமையையும் புகழையும் அறிந்த அந்த நகரத்து அரசன், தமது மனைவியோடு எதிர்கொண்டு, ஒளவையின் பாதம் பணிந்து வரவேற்றான். அவரைத் தமது நாட்டிலேயே இருக்குமாறு வேண்டினான். அந்த மன்னனின் நாட்டில் உள்ள அனைத்துத் திருக்கோயில்களையும் தரிசித்துத் திரும்பி வரும்போது அங்கே வருவதாக கூறிப் புறப்பட்ட ஒளவை, அடுத்ததாகப் பாண்டிய நாட்டைச் சென்றடைந்தார். அங்கிருந்து சேர நாட்டில் உள்ள கொடுங்களூர் என்ற ஊரில் 'அதியமான் நெடுமான் அஞ்சி’ என்ற அரசனைச் சந்தித்தார்.

வள்ளல்தன்மை மிக்க அதியமான், ஒளவையாரை வரவேற்று, அவரது திருவடிகளைத் தொழுது தமது அரண்மனையில் விருந்தளித்தான். அதோடு, ஒளவையின் தமிழ்த்தொண்டு இன்னும் பல்லாண்டுகள் உலகுக்குப் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், பன்னெடுங் காலம் இனிது வாழும் சக்தி தரும் ஓர் அற்புதமான கருநெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் அவருக்கு உண்ணக் கொடுத்தான். அதியமானின் அன்பையும் பண்பையும் கண்ட ஒளவை, அவனை வாழ்த்திப் பலப் பாடல்கள் பாடினார்.

பிறகு, குன்றுதோறாடும் குமரனின் பல தலங்களை கொங்குநாடு, புனல்நாடு ஆகிய பகுதிகளுக்குச் சென்று தரிசித்த ஒளவை, அதனைத் தொடர்ந்து தாம் பிறந்த ஊரான உறந்தை நகரை வந்தடைந்தார். அங்கே, சோழ மன்னன் அவரை வரவேற்று விருந்தளித்தான். அங்கு வாழ்ந்து வந்த நாளில், 'அசதிக் கோவை’ என்ற நூலை இயற்றினார் ஒளவை. மனித வாழ்வியல் நெறிகளை விளக்கும் மகத்தான அரிய நூல் அது.

தொடர்ந்து, தொண்டை மண்டலத்தில் உள்ள முருகன் ஸ்தலங்களை வழிபட்டு, பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு குடிசையில் வாழ்ந்த பாரி என்ற வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் சந்தித்தார். அவர்களை அழைத்துக்கொண்டு திருக்கோவலூர் சென்றவர், அங்கே தெய்வீகன் என்ற மன்னனுக்கு பாரியின் மகள்கள் இருவரையும் திருமணம் செய்து வைத்து ஆசி கூறி, அங்கிருந்து புறப்பட்டார்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

காடுகளும் மலைகளும் அடர்ந்த ஒரு தனி வழியில் சென்று கொண்டிருந்தார் ஒளவையார். வயது முதிர்ச்சியினாலும் பசியினாலும் களைப்படைந்து, அங்குள்ள ஒரு நாவல் மரத்தின் கீழே சற்று இளைப்பாறினார். மரத்தை நிமிர்ந்து பார்த்தார். அங்கே மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவனை நோக்கி, ''தம்பி... எனக்கு பசியும் களைப்புமாக இருக்கிறது. கொஞ்சம் நாவற் பழங்களைப் பறித்துப் போடுகிறாயா?'' என்று கேட்டார்.

''பாட்டி... நான் பழங்கள் தருகிறேன். ஆனால், உங்களுக்குச் சுடுகிற பழங்கள் வேண் டுமா? சுடாத பழங்கள் வேண்டுமா?'' என்று கேட்டான் சிறுவன். ஒளவை வியந்தார். 'நாவற் பழத்தில் சுடுகிற பழம் என்று ஒன்று உண்டா?’ என யோசித்தவர், ''சரி... எனக்குச் சுடாத பழங்களையே பறித்துப் போடு!'' என்றார்.  

சிறுவன் நாவல் மரக் கிளையை நன்கு உலுக்கினான். பழங்கள் உதிர்ந்தன. பழங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து, அதில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணை ஊதிப் போக்கிவிட்டு, தம் வாயில் போட்டுக் கொண்டார் ஒளவை. ''என்ன பாட்டி... சுடாத பழம் வேண்டும் என்று கேட்டுவிட்டுச் சுடுகிற பழமாக எடுத்து ஊதி ஊதிச் சாப்பிடறீங்களே?'' என்று சொல்லி, கலகல வெனச் சிரித்தான் சிறுவன்.

ஒளவை ஒருகணம் திகைத்தார். சிறுவனின் குறும்புத் தனமான கேள்வியிலும், அவனது புத்திசாலித்தனமான பதிலிலும் தாம் தோற்றதாக நினைத்தார். ''தம்பி... நான் உன்னிடம் தோற்றேன்! நீ நன்றாக வாழ்வாயாக!'' என வாழ்த்தி, ஒரு பாடலைப் பாடினார்.

''கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
கார் எருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
ஈரிரவும் துஞ்சா(து) என் கண்.''

'உறுதிமிக்க கருங்காலிக் கட்டையைப் பிளப்பதற்கு ஒரு கோடரி போதும். ஆனால், அதைக் கொண்டு நல்ல வாழைத்தண்டைப் பிளக்க முடியாது. அங்கே அது தோற்றுப் போகும். அதுபோல, இந்தப் பெரிய காட்டில் எருமை மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடம் நான் தோற்றுவிட்டேன். இதை நினைக்கும்போது எனக்கு இன்னும் இரண்டு இரவுகளுக்குத் தூக்கம் வராது’ என்பது அப்பாடலின் பொருள்.

தமது தோல்வியை மட்டும் ஒளவையாரால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை; மறக்க முடியவில்லை; ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை.

அப்போது மரத்தில் இருந்த மாடு மேய்க்கும் சிறுவன் மயில் வாகனனாக - அழகன் முருகனாக ஒளவைக்கு எதிரில் காட்சியளித்தான். ஒளவைக்கு இன்ப அதிர்ச்சி, அது பாடலாக வெளிப்பட்டது.

''செந்தமிழின் திருஉருவே! செல்வ மகமேரே!
  தித்திக்கும் செந்தேனே! தெவிட்டாத கரும்பே!
பைந்தமிழின் நறுங்களியே! பழம்கனிந்த ரசமே!
  பதம்பரவும் அடியார்தம் பவம்களையும் மருந்தே!
அந்த மிலா முழுமுதலே! வேல் மயில் என்று அறைவோர்
  அகத்திலுறு திருவிளக்கே! ஆறெழுத்தின் பயனே!
எந்தமையோர் பொருட் படுத்தி எழுந்த திருத் துரையே!
  இனி உனது திருவடியை இமைப்பொழுதும்மறவேன்!''

- ஒளவை இப்படிப் பாடி முடித்ததும், கந்தவேள் அவரது அருகில் வந்து ஒளவையின் கரங்களைப் பற்றி, ''தமிழ் மூதாட்டியே! யாம் உம்மோடு விளையாடவே வந்தோம்! உம்மை இகழும் நோக்கம் அன்று! உம்மிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம், பதில் கூறுங்கள்'' என்றார். ஒளவையும் சரி என்றார். முருகன் கேட்க ஆரம்பித்தார்.

##~##
''உலகில் கொடியது எது?''

''வாழ விரும்புகிறவன் மனிதன். அவன் வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் அவனிடத்தில் நிரம்பி இருக்க வேண்டும். அதுவன்றி, அவனிடத்தில் வறுமை வந்துவிட்டால், அது மிகவும் கொடியது. ஆனால், அன்பிலாத மனைவி அளிக்கும் உணவு அதைவிடக் கொடியது'' என்றார் தமிழ் மூதாட்டி.

''உலகில் இனியது எது?''

''இன்ப- துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்து வருவதே உலக வாழ்க்கை. இவற்றைத் தருவன புலன் இச்சை. ஆனால், புலன்களை ஒடுக்கித் தனிமையாக இருந்து, மனத்தை நல்ல நெறியிலே செலுத்துவதுதான் இன்பம். ஆனால், அறிவுடையாரை கனவிலும் நனவிலும் கண்டு இன்புறுவது அதனிலும் மிகவும் இன்பம் தருவதாகும்''

''உலகில் பெரியது எது?''

''இறைவன் அடியார்கள் உள்ளத்தில் வசிக்கிறான். எனவே தொண்டர்களது பெருமைதான் உலகத்தில் மிகப் பெரியது' என்றார்.

''நிறைவாக ஒரு கேள்வி... உலகில் அரியது எது?'' என்று கேட்டார் கந்தவேள்.

''மனிதராய்ப் பிறப்பது அரிது. அப்படிப் பிறந்தாலும் ஊமை, செவிடு, குருடு போன்ற குறைகள் நீங்கிப் பிறப்பது அரிது. அப்படி நன்றாகப் பிறந்தாலும், ஞானமும் கல்வியும் நம்மை வந்தடைவது அரிதாகும். அவற்றை மேற்கொண்டால்தான் சுவர்க்கம் செல்வதற்கான வழி கிடைக்கும்'' என்றார் அருந்தவ மூதாட்டி.

இந்த அற்புதமான உலகியல் நீதிகளை ஒளவையின் வாயால் நமக்காக எடுத்துரைக்க வைத்தான் தன் தமிழின் மிகுநேயனான ஆறுமுகச் செல்வன்.

(ஒளவைக்கு நாவற்கனி அளித்த நாவல் மரம் பற்றி ஒரு செய்தி உண்டு. மதுரை அருகேயுள்ள பழமுதிர் சோலையில் ஒரு நாவல் மரம் உள்ளது. அது மற்ற நாவல் மரம் போன்று அதற்குரிய பருவத்தில் காய்க்காமல், ஐப்பசி மாதத்தில் மட்டுமே காய்த்துப் பழுக்கும் தன்மை உடையது என்கிறார்கள். அந்த மரத்தில்தான், முருகன் மாடு மேய்க்கும் சிறுவனாக இருந்து ஒளவையிடம் சுட்டபழம் வேண்டுமா என்று கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.)

வாழ்வியல் நீதிகளை நமக்கு வாரி வழங்கிய ஒளவையாம் அருந்தமிழ் மூதாட்டி பாடியருளிய 'தரிசனப்பத்து’ என்ற நூல், கந்தனது காட்சியின்பத்தில் பாடிய அற்புதப் பதிகமாகும். இது அதிகம் அச்சில் வராத ஒன்று. அதில் இருந்து சில வரிகள்...

''குருமுகமாய் வாலையாய் குமாரனாகி
  குறைவில்லா(து) அறுமுகமும் வடிவுமாகி
அறுமுகமாம் ஆங்கார அகாரமாகி
  ஆறெழுத்து மூலமந்திர முமாகி
மறுமுகமா மாணிக்க ஒளியாய் நின்ற
  வண்ணியா மலர்க்கமல நடுவேநின்று
திருமுகமும் பன்னிரண்டு கையும் வேலும்
  திருவடியும் அடியார்க்கு தெரிசிப்பாயே'

(தரிசனப்பத்து)

தமிழ் இருக்கும்வரை ஒளவையாரின் புகழும் இப்புவியில் நிலைத்திருக்கும்!

- அடியார் வருவார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு