Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

கேட்டை 'நட்சத்திரத்தை 'ஜ்யேஷ்டா’ எனச் சொல்லும் வேதம். அதன் தேவதை இந்திரன். அவன் தேவர்களின் தலைவன். ஆனாலும் நாமும் அவனுக்கு விழா எடுப்பது உண்டு. பண்டைய காலங்களில் இந்திர விழா நடைபெற்றிருக்கிறது. காலத்தில் மழை பொழிந்து, பயிர்வளம் பெற்று செழிப்புடன் வாழ வழிவகுத்து மக்களை மகிழ்விப்பதில் அவனுக்குப் பங்கு உண்டு. எனவே அவனை விழா எடுத்து வாழ்த்தினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேள்வியில் அளிக்கும் உணவு தேவர்களை மகிழ்விப்பதுடன் நில்லாமல், ஆகாசத்தில் நீருண்ட மேகமாக மாறி மழை பொழிந்து, பயிர் வளம் பெருக்கி நமது வாழ்க்கையை செம்மையாக்கும் என்ற தகவல் புராணத்தில் உண்டு (அக்னௌ ப்ராஸ்தாஹுதி: ஸம்யக்... ஜாயதெ விருஷ்டி:...). புகை, ஒளி, நீர், காற்று ஆகியவற்றின் இணைப்பில் மேகம் உருவெடுக்கும் என்பான் காளிதாசன் (தூமஜ்யோதி ஸ்ஸவிலமருதாம் ஸன்னிபாத: க்வ மேக:).

ஜ்யேஷ்டா அதாவது கேட்டை நட்சத்திரத்துடன் இணைந்து ஆகாயத்தில் தென்பட்டு செயல்படுவான் என்பதால், அந்த நட்சத்திரம் பெருமை பெற்றது. முதலில் பிறந்த பிள்ளைக்கு 'ஜ்யேஷ்டன்’ என்ற பெயர் உண்டு. ஆனி மாதத்தை 'ஜ்யேஷ்ட மாதம்’ என்று சொல்லுவது உண்டு. அத்துடன் ஜ்யேஷ்டா நட்சத்திரத்தில் தோன்றியவனுக்கு... அவனின் தந்தை ஜாதகர்மாவில், அவனுடைய காதில் ஜ்யேஷ்டா என்று ஓதுவார். நட்சத்திரப் பெயர் ஜ்யேஷ்டா, பிறந்த மாதம் ஜ்யேஷ்டம் (ஆனி), முதலில் பிறந்தவன் ஜ்யேஷ்டன். இப்படி மூன்று ஜ்யேஷ்டையுடன் இணைந்தவனை 'த்ரிஜ்யேஷ்டம்’ என்கிறது சாஸ்திரம்.

தலைச்சன், கேட்டை நட்சத்திரம், ஆனி மாதம் - மூன்றும் சேர்ந்து இருந்தால் ஆனி மாதத்தில் அவனுக்குத் திருமணம் நடத்துவதைத் தவிர்க்கச் சொல்லும் தர்மசாஸ்திரம். விஷயத்தைச் சரியாக வாங்கிக் கொள்ளாமல், தலைச்சன் - தலைச்சன் திருமணம் கூடாது, கேட்டை - கேட்டை திருமணம் கூடாது, ஆனி மாதமும் கூடாது என்று அதை விரிவுபடுத்தி, பல திருமணங்களைத் தவிர்க்கிறார்கள்!  சிந்தனை வளம் குன்றிய பாமரர்களின் காதுக்கு எட்டிய இந்தத் தகவல் நாளடைவில் நிலைத்துவிட்டது.  தற்போது ஒரு பெண்- ஒரு பையன் என்கிற குடும்பங்கள் பெருகி வருகின்றன. தலைச்சன் என்று ஒதுக்குவது முடியாத ஒன்றாக மாறப் போகிறது. 'கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ - என்ற மூதுரை மூளையில் பதிந்து இருந்தாலும், சான்றில்லாத சொற்றொடரை நம்பும் பாமரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

##~##
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. அவர்கள் இருவரும் அண்ணன்- தம்பி முறை. அசுரன் அண்ணன், தேவன் தம்பி. பல நாட்கள் போர் புரிந்தும் இருவரிலும் வெற்றி நம்பிக்கை முளைக்கவில்லை. சளைக்காமல் போர் தொடர்ந்தது. திடீரென்று ஒரு நாள், போரில் ஓர் அண்ணனைத் தம்பி வீழ்த்தினான். அண்ணன் அசுரன் ஒருவனை தம்பி தேவன் வீழ்த்தியதில் தேவர்களுக்கு நம்பிக்கை முளைத்தது. பல நாட்களுக்குப் பிறகு, அண்ணன் ஒருவனை வீழ்த்திய நாளை பெருமைப்படுத்த அன்றைய நட்சத்திரத்துக்கு (கேட்டைக்கு) அண்ணனை வீழ்த்திய நட்சத்திரம் (
ஜ்யேஷ்டக்னீ
) என்று பெயர் சூட்டி வெற்றியைக் கொண்டாடினார்கள் என்ற தகவல் வேதத்தில் உண்டு (
ஜ்யேஷ்ட மேஷாமவதிஷ்மேதி. தஜ்ஜேயே ஷ்டக்னீ).

'கேட்டை ஜ்யேஷ்டனுக்கு ஆகாது’ என்று... பெண்ணானவள் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தால், அவளைத் திருமணம் செய்யும் கணவனின் அண்ணனை அழித்துவிடும் என திருமணத்தைத் தவிர்ப்பவர்களும் உண்டு. தன் அண்ணனுக்குக் கெடுதல் என்பதை  மாற்றி, கணவனின் அண்ணனுக்கு என்று சொல்வது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று. சாஸ்திரக் கோட்பாடுகளை மீறி கேள்வியறிவு பாமரர்களை ஈர்த்துவிடும். மனநெருடலைத் தவிர்க்க காலப்போக்கில் நாமும் அதைப் பின்பற்றுவோம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தால், அதன் கெடுதல் விலக சாந்தி செய்யச் சொல்லும் சாந்திரத்னாகரம். ஜ்யேஷ்டா நட்சத்திர ஜனன சாந்தி என்கிற தலைப்பில், அதை விரிவுபடுத்தி விளக்கும் சாந்திகுஸுமாகரம்.

குழந்தைப் பருவத்திலேயே சாந்தி செய்வதன் பலனாக முற்றிலும் மறைந்த தோஷம் திருமண வேளையில் தலைதூக்குவதாக எண்ணுவது அறியாமை. எத்தனை நல்ல திருமண இணைப்புகள் இதனால் விலக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணும்போது, வேதனையாக இருக்கிறது. பிற்பாடு வந்த ஜோதிட நூல்களும் தங்கள் பங்குக்கு இந்த வழக்கை ஊர்ஜிதம் செய்வதுதான் விசித்திரம். மேலும் விரிவுபெற்று, ஆணானாலும் பெண்ணானாலும் கேட்டை அண்ணனுக்கு ஆகாது என்று கூசாமல் விளக்குபவர்களும் இருக்கிறார்கள். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இவர்களை நம்மவர்கள் கொண்டாடுவதுதான் இன்னும் விசித்திரம்! திருமணத்தின் 'கரு’ நட்சத்திரத்தில் இருக்காது. இயல்பு, சிந்தனை, பண்பாடு, விவேகம் ஆகியவற்றைச் சார்ந்து நிற்கும் திருமணத்தின் இறுதி முடிவு!

விருச்சிக ராசியில் பரவியிருக்கும் நட்சத்திரம் இது. அம்சகத்தில் 4 பாதங்களில் குரு, சனி தொடர்பு இருக்கும். வாழ்வின் முன்னேற்றத்துக்கு இந்த இருவரும் ஒத்துழைப்பர்.

விருத்ராசுர வதத்தை ஜ்யேஷ்டா நட்சத்திரத் துடன் இணைந்து செய்து முடித்தான் இந்திரன். பசி வந்தால் பற்றும் போகும் என்பார்கள். அப்போது சிந்தனையின் செயல்பாடு தடம்புரண்டு விடும். பசியைப் போக்கி பலமளித்து, அறத்தில் ஆழ்ந்த சிரத்தையை ஊட்ட வேண்டும். அதோடு, அசுரர்களின் இருப்பிடத்தைத் தாக்கி அழித்து நன்மை அருளும் குணமுடைய இந்திரன், பணிவிடை செய்பவனுக்கு பல நல்ல விஷயங்களில் விஜயத்தை அளித்தருள வேண்டும் என்ற வேண்டுகோள் வேதத்தில் உண்டு (இந்திரோ ஜ்யேஷ்டா மனு நட்சத்திர...).

இந்த நட்சத்திரம் உடையவன் முதலில் சந்திப்பது புதன் தசை. ஆயில்யத்துக்கும் ரேவதிக்கும் அது பொருந்தும். 17 வருடங்கள் நீண்டு நிற்கும் தசை. நல்லவனாகவும் பலவானாகவும் இருந்தால், நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவான். மாறானால் பல இன்னல்களைச் சந்திக்க வைப்பான். குறைந்த நண்பர்கள், மகிழ்ச்சியான வாழ்வு, அறவழியில் ஆர்வம், மூக்கு நுனியில் கோபம் - அத்தனையையும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் பார்க்கலாம் என்பார் வராஹமிஹிரர். முதல் பாதத்தில் வாழ்க்கையில் நிம்மதியுண்டு. 2-ல் தம்பிக்கு துயரத்தை அளிப்பான். 3-ல் தகப்பனாருக்கு வழங்க மாட்டான். 4-ல் தனது தரத்தை தாழ்த்திக்கொள்வான் என்று ஜோதிடம் கூறும்.

கேட்டை நட்சத்திரத்தை 10 பகுதிகளாகப் பிரித்து பலன் சொல்லும் ஜாதகபாரிஜாதம். முதல் 6 நாழிகை இடைவெளியில் பிறந்தவன் தாயாருக்கும், தாயாரின் தாயாருக்கும் (பாட்டிக்கும்) கெடுதலை விளைவிப்பான். இரண்டாவதில் தனது தாயின் தந்தைக்கும், 3-ல் மாமனுக்கும், 4-ல் தனது தாய்க்கும், 5-ல் தனக்கும், 6-ல் தனது குழந்தைக்கும், 7-ல் தாய்குலத்துக்கும், 8-ல் தனது குலத்துக்கும், 9-ல் தாரத்தின் தகப்பனுக்கும், 10-ல் தனது சுற்றத்துக்கும் கெடுதலை அளிப்பான் என விளக்குகிறது.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

செவ்வாயுடன் இணைந்த கேட்டையில் பிறந்தால், தன் அண்ணனுக்கு துயரத்தை அளிப்பான். கேட்டையில் முதல் பாதத்தில் அண்ணனுக்கும், 2-ல் தம்பிக்கும், 3-ல் தகப்பனுக்கும், 4-ல் தனக்கும் துயரத்தை ஏற்படுத்துவான் என்கிற விளக்கமும் ஜோதிடத்தில் உண்டு. இங்கெல்லாம் கேட்டையில் பிறந்தவனின் செயல்பாடு பலபேரை துன்பத்தைத் தழுவும்படி செய்துவிடும் என்று பொருள். பிறந்த குழந்தையானது தனது கர்மவினையால் நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில், குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் துயரத்தில் பகிர்ந்துகொள்வர். அதுபோன்று, தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு இழப்பு இல்லாவிட்டாலும் கேட்டையில் பிறந்தவனின் சிந்தனைகள் சுற்றத்தை அச்சுறுத்தும்படி அமைந்துவிடும்.

துயரங்கள் இரண்டு வகையில் நம்மைத் தாக்கும். கர்ம வினையால் துயரத்தில் ஆண்டு துவண்டு போவதுண்டு. பிறரது துயரத்தை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவரது துயரத்தில் தன்னை இணைத்துக்கொள்வதும் உண்டு. நட்சத்திரத்தால் விளையும் துயரம் 2-வது வகையில் அடங்கும். பிறந்த குழந்தை துயரத்துக்குக் காரணமாவது உண்டு. வாழ்நாள் முழுவதும் குழந்தை

படும் துயரத்தை எதிர்கொண்டு துயரத்தை ஏற்கும் பெற்றோர் ஏராளம் இருக்கிறார்கள். பெரும்பாலும், பிறந்தவனின் கர்மவினை தன்னோடு நிற்காமல் தனது குலத்தையும் சுற்றத்தையும் பாதிப் பது உண்டு. இந்த இடங்களை வரையறுத்து, குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவனுக்கு சாந்தி செய்து, கெடுதலை முளையிலேயே கிள்ளியெறிய வழி வகுக்கிறது தர்மசாஸ்திரம். சாந்திரத்னாகரம், சாந்திகுஸுமாகரம், கர்மவிபாகம், வீரசிம்ஹாவலோகனம் போன்ற நூல்கள் குறைகளை நிறைவு செய்ய பரிகாரங்களை விளக்கிக் கூறுகின்றன.  

பரிகாரத்தால் பிறந்தவனின் கர்மவினை கரைந்து போவதால் துயரம் தலைதூக்காமலேயே மறைந்துவிடும். இங்குதான் பரிகாரம் பொருள் படைத்ததாக விளங்கும்.  பரிகாரம் கர்மத்தை அழித்து பிணியைத் தோன்றாமல் தடுக்கும். குறை பிராரப்தமாக மாறுவதற்கு முன்பே பரிகாரத்தில் இறங்க வேண்டும். ஆகையால்தான்,  நட்சத்திர தோஷ பரிகாரத்தை பிறந்தவுடன்- ஜாதகர்மாவுக்கு முன்பே செய்யப் பரிந்துரைக்கும் நிபந்த நூல்கள்.

காலபுருஷனின் மறைவிடம் விருச்சிகம். அந்த உடலுறுப்பின் தரத்துக்கு, அங்கு வீற்றிருக்கும் கிரகம் பொறுப்பாக இருக்கும். கேட்டை முதல் பாதத்தில் அகங்காரம், பேராசை தென்படும் 2-ல் சொல் சுத்தமில்லாதவன், பிடிவாதம், போகத்தில் ஆர்வம், ரோகத்தை ஏற்பான். 3-ல் ஊனமுற்றவனாக மாறுவான், பார்வையில் ஊனம் இருக்கும், சிந்தனை வளம்பெற்று செயலில் வெற்றி  பெறுவான். 4-ல் சண்டை-சச்சரவுகளில் ஈடுபட்டு கொந்தளிப்பு அளிப்பான், குல மரியாதையைக் கெடுப்பான். புத்தி கெட்டு நாட்டை வலம் வருவான் என்கிறது பலசார சமுச்சயம்.

மூன்று தாரைகளை உள்ளடக் கியது இந்த நட்சத்திரம். இது கடினமான நட்சத்திரத்தில் அடங்கும். மந்திரம் ஜபம் பண்ணி சாதனையை நிகழ்த்துவது, பலரது இடையூறுகளைக் களைவதில் முனைவது, தேவதைகளின் போக்கை அனுகூலமாக திருப்பி விட்டு உதவுவது, துஷ்ட தேவதைகளைக் கட்டிப்போட்டு அடக்குவது போன்றவற்றில் இதன் சேர்க்கை பலனளிக்கும். போருக்குப் புறப்படுதல், எதிரிகளை வீழ்த்துதல், எதிர்ப்புகளைத் தடுத்தல், எதிரிகளிடமிருந்து மீட்டல், ஆபத்தான வேலைகளில் செயல் பட்டு உதவுதல், போர் தளவாடங்கள், இரும்பு உருக்கு போன்ற உலோகங்களைக் கையாளுவது போன்ற கடினமான வேலைகளில் வெற்றிபெற இதன் இணைப்பு உதவும்.

'இம் இந்திராய நம:’ என்று சொல்லி 16 உபசாரங்களைச் செய்யவும். 'இந்திரம் வோ விச்வதஸ்பரி’ என்ற மந்திரத்தைச் சொல்லியும் வழிபடலாம். அல்லது 'அக்னிர்மே வாசி ச்ரித:’ - என்கிற லகுன்யாஸத்தைப் பயன்படுத்தலாம். மந்திரம் தெரியா தவர்கள்... 'ச்ரியம்தேஹி பலம்தேஹி ஸர்வகாமாம் ச தேஹிமே. இந்திரியாணாம் ச ஸாமர்த்யம் ப்ரயச்சேந்த்ர நமோஸ்துதே’ என்ற செய்யுளைச் சொல்லி, 16 தடவை நமஸ்காரம் பண்ணி வணங்கலாம். மற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட்டு மனதில் இந்திரனை நினைத்து, 'இம் இந்திராய நம:’ என்று அசைபோட்டால் விரும்பிய பலன் கிடைத்துவிடும்.

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism