Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!

'குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு வியாக்ரபாதர்தான் குரு. அவருடைய பேரருள் எனக்குக் கிடைச்சுட்டதா, என் உள்ளுணர்வு சொல்லுது. மனசுல சின்னதா ஒரு சலனமோ சஞ்சலமோ ஏற்பட்டா உடனே நான் திருப்பட்டூருக்கு ஓடிவர்றதுக்குக் காரணம் அதுதான்!'' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார் தீபா ஹரி. சேலத்தைச் சேர்ந்தவர்.

''வாழ்க்கைல பணம்- காசு சேரணும்னா, இன்னும் கூடுதலா சம்பாதிக்கலாம். அல்லது, சிக்கனமா இருந்து சேமிக்கலாம். அதேபோல நல்ல விதமா, வாய்க்கு ருசியா சாப்பாடு வேணும்னா, அததுக்குன்னு ஸ்பெஷலா இருக்கிற ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிடலாம். அல்லது, நாமே வீட்டுல அதைப் பண்ணியும் சாப்பிடலாம். ஆனால், மனசுல நிம்மதியும் பரிபூரணமான நிறைவும் கிடைக்கணும்னா, அதுக்கு ஒரே வழிதான் உண்டு. 'நீயே கதி’ன்னு கடவுளைச் சரணடையறதுதான் அது. அப்படி நான் சரணடைஞ்ச தலம்தான் திருப்பட்டூர்'' என்று சொல்லும் தீபாவுக்கு வயது 55.

''தேடல் இருந்தால்தான் தெளிவு பிறக்கும்னு சொல்லுவாங்க. திருப்பட்டூர் எங்கே இருக்குன்னு தேடித் தேடிப் போகும்போதே... அந்தக் கோயிலை அடையும்போதே, உள்ளே ஏதோ ஒரு தெளிவு கிடைச்சுட்ட மாதிரி உணர்வு. ஊருக்குள்ளேயே இருக்கிற ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரைப் பாக்கறதுக்கு முன்னாடி, அங்கிருந்து 1 கி.மீ. தொலைவுல இருக்கிற ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலுக்குப் போனோம். சின்னதா ஒரு குளம்; அந்தக் குளத்து அளவுக்கு ஒரு கோயில்னு அழகா, ரம்மியமா இருந்துச்சு அந்த இடம்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

உள்ளே நுழைஞ்சதுமே, வியாக்ரபாதரோட திருச்சமாதி. சக்திவிகடன்ல இந்தக் கோயில் பத்தி எழுதத் துவங்கிய காலகட்டம் அது. அப்ப ஏழெட்டு பேர், சமாதிக்குப் பக்கத்துல உட்கார்ந்து தியானம் பண்ணிட்டிருந்தாங்க. அதுவரைக்கும் தியானம், மெடிட்டேஷன்லெல்லாம் ஈடுபடாதவ நான். காஞ்சி மகா பெரியவாளைக் குருவாகக் கொண்ட குடும்பம் எங்களுது. உள்ளே, மகா பெரியவா மாதிரி வயசான ஒருத்தர் ஏதோ என்னை தள்ளிவிடுற மாதிரி, உட்காரச் சொல்ற மாதிரி ஒரு நினைப்பு.

வியாக்ரபாதர் சமாதிக்கு எதிர்ல, கண் மூடி கொஞ்ச நேரம் உட்காரணும்னு தோணுச்சு. உட்கார்ந்தேன். 'ஞான முனியே... உன்னையே குருவாக நினைத்துக் கேட்கிறேன். உன்னருள் இருந்தால்தான் சிவனருள் கிடைக்கும். சிவனருள் கிடைத்தால்தான், அவன் திருவடியை அடைய முடியும். திருக்கயிலாயத்தில் இடம் கிடைக்கும். என் குருவே... எனக்கு அருளக்கூடாதா?’ன்னு உள்ளே பிரார்த்தனை ஓடுது. காரணமே தெரியாம, கண்ணுலேருந்து ஜலம் வந்துட்டே இருக்கு. கொஞ்ச நேரத்துல அழுகையும் நின்னுருச்சு; பிரார்த்தனையும் முடிஞ்சிருச்சு. ஆனா, எழுந்திருக்க மனசில்லாம, அப்படியே கிடக்கிறேன். அப்புறம் மெள்ளக் கண் திறந்து பார்த்தா... அர்ச்சகர் திருச்சமாதிக்குத் தீபாராதனை காட்டிட்டிருந்தார். உள்ளுக்குள்ளேயும் அப்படியரு சுடர் எரிஞ்சுக்கிட்டே இருந்துச்சு'' என்று சொல்லும்போது, முகம் முழுவதும் பிரகாசமாகிறது தீபாவுக்கு.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

உண்மைதான். திருப்பட்டூர் சென்றிருக்கிறீர்களா? அங்கே, ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீவியாக்ர பாதர் திருச்சமாதியிலும் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியிலும் மனம் குவித்து உட்கார்ந்திருக்கிறீர்களா? அந்த ஞானகுருக்கள் இருவரும் சூட்சும வடிவாக நம்மைக் கவனிப்பதை, நம் கண்ணீரைத் துடைப்பதை,  உள்ளளி ஏற்றுவதை, ஆசீர்வதிப்பதை உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, வியாழன் - ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஒரு நாற்பது ஐம்பது பக்தர்கள் வருகை தந்தார்களாம். இன்றைக்குத் திருப்பட்டூரின் மகிமை மெள்ள மெள்ளப் பரவி, தென்மாவட்டங்களில் இருந்தும் கோவை, ஈரோடு, சேலம் முதலான ஊர்களில் இருந்தும், சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவதாகச் சொல்லி வியக்கிறார்கள், திருப்பட்டூர் மக்கள்.

ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோர் இறை வடிவ குருமார்கள். ஸ்ரீவியாக்ரபாதர், ஸ்ரீபதஞ்சலி - மனித வடிவ குருமார்கள். ஆக, குருவின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும், நம் தலையெழுத்தையே பிரம்மன் மாற்றியருள வேண்டும் என்கிற பிரார்த்தனையோடும் எதிர்பார்ப்புகளுடனும் வருகின்றனர் பக்தர்கள். அப்படியரு எதிர்பார்ப்புதான் தீபா ஹரிக்கும்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''இந்த முறை குடும்பத்துடன் திருப்பட்டூர் போயிருந்தப்ப என்ன நடந்துச்சு தெரியுமா? எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு திருப்பட்டூர் கோயில்ல பிரம்மோத்ஸவம் சமீபத்துல நடந்தது தெரியும்தானே?! அதிகாலைல சேலத்துலேருந்து கார்ல கிளம்பி, திருப்பட்டூருக்கு வந்தோம். பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குள் நுழைஞ்சா... அப்பத்தான் விழாவுக்கான கொடியேற்றம் துவங்குது. கொடியேத்தின உடனேயே, 'யாரெல்லாம் எண்ணெய், பூவெல்லாம் கொண்டு வந்திருக்கீங்க... கொடுங்க’ன்னு சிவாச்சார்யர்கள் கேட்டாங்க. நான் வீட்லேருந்து கொண்டு வந்த எண்ணெய், திரி, ஊதுவத்தி, முப்பது முழக் கதம்பம்னு எல்லாத்தையும் அப்படியே கொடுத்தேன். உடனே, கொடிக்கம்பத்துக்கு தீபாராதனை நடந்துச்சு. அதுல நாங்க கொண்டு வந்த பொருட்களும் கலந்திருக்குன்னு நினைச்சு, நெகிழ்ந்து போயிட்டோம். திருப்பட்டூர், எங்களுக்கு இப்படியரு புண்ணியத்தைக் கொடுத் திருக்குன்னுதான் சொல்லணும்'' என்று பரவசம் மாறாமல் சொல்கிறார் தீபா ஹரி.

''இந்தத் திருப்பட்டூரை உலக மக்களுக்குப் பரவலா அறிமுகப்படுத்தினது சக்திவிகடன்னா, எனக்கு அறிமுகப்படுத்தினது என் மனைவிதான். ஒருநாளைக்கு நாலு முறையாவது திருப்பட்டூர், திருப்பட்டூர்னு ஏதாவது ஒரு தகவலைச் சொல்லிட்டே இருப்பாங்க. கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டு வந்ததிலேருந்து, ஒரு நிறைவும் நிதானமும் வந்திருக்குங்கறது எனக்குமான உணர்வுதான். அந்தக் கோயிலுக்கு எண்ணெய்யோ திரியோ, அபிஷேகமோ நைவேத்தியமோ... ஏதாவது செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்கு'' என்று ஆமோதித்தபடி சொல்கிறார் ஹரி.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இப்படி... தீபாவைப் போன்றவர்களும், ஹரியின் சிந்தனையில் இருப்பவர்களும் அதிகரித்தபடியே இருக்கிறார்கள்.

ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீபிரம்மன் தன் சாபம் நீங்கவும், இழந்த பதவியைப் பெறவும் 12 சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டார் என்பதை முன்பே பார்த்தோமே... நினைவிருக் கிறதா? அவை, பன்னிரண்டு தலங்களில் உள்ள மூர்த்தங்கள். ஆகவே, இங்கு வந்து தரிசித்தால், 12 தலங்களுக்குச் சென்று வழிபட்ட புண்ணியமும் கிடைக்கப் பெறுவோம் என்பது ஐதீகம்! அந்த சிவ மூர்த்தங்களும் தனித் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். அந்தப் பகுதி மட்டும் இருள் படர்ந்து, புல்வெளியாக இருக்கும்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இந்தக் கோயிலின் சாந்நித்தியத்தை அறிந்த பெங்களூரு அன்பர் ஒருவர் இங்கே வந்து, 12 சிவலிங்க சந்நிதிகளையும் தரிசித்துவிட்டு வருகிறபோது, 'இந்தப் பகுதியில் கிரானைட் கற்கள் பதிக்கவும், மின்விளக்குகள் பொருத்தவும் ஆகும் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவரே அடுத்த முறை வந்து, பல லட்சக்கணக்கான செலவுத் தொகையையும் வழங்குவதற்கு உறுதி சொல்லிச் சென்றிருக்கிறாராம். கூடவே, தன் பெயரை எக்காரணம் கொண்டும் எவரிடமேனும் தெரிவிக்கவோ, கல்வெட்டில் பொறிக்கவோ கூடாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளாராம் அவர்.

ஆன்மிக உணர்வில் தோய்ந்தவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அந்த 12 சிவலிங்கங்கள் கொண்ட சந்நிதிகள் அமைந்துள்ள

பகுதி, சீக்கிரமே கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு, மின்விளக்குகளில் ஜொலிக்கப்போவதைக் கற்பனை செய்து பார்த்தால்... நெஞ்சமே நிறைந்து போகிறது!  திருப்பதிக்கு நிகரானதாகப் புகழப்படும் தலமாக திருப்பட்டூர் அமையப் போகிறது என்று சொன்ன அந்த ஓலைச்சுவடி வாசகம் தான் நினைவுக்கு வந்தது.

சிவ கடாட்சம், சிவ கடாட்சம், சிவ கடாட்சம்!

- பரவசம் தொடரும்
படங்கள்: க.தனசேகரன், 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு