Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிரீமியம் ஸ்டோரி
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஷோடசோபசார பூஜை என்றால் என்ன? அதன் விரிவாக்கம் விளங்கவில்லை. பூஜை செய்ய ஆசையுண்டு. தெரிந்துகொள்ள ஆர்வம். விளக்கம் அளித்தால் மகிழ்வேன்.

- வெ.மீனாட்சிசுந்தரம், தேனி

##~##
'ஷோடசம்’ - என்றால் பதினாறு. உபசாரம் என்றால் பணிவிடை. பணிவிடையின் அட்டவணையில் 16 இனங்கள் உண்டு. பணிவிடை பலவாறாக இருந்தாலும், 16 உபசாரங்களில் முழுமையான பணிவிடையை முடித்துத் தந்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

இறைவனின் அழகு வடிவை மனதில் இருத்த வேண்டும் (த்யானம்). இறையுருவத்தில் இறைவன் ஸாந்நித்தியத்தை வரவழைக்க வேண்டும் (ஆவாஹனம்). இருக்கை அளித்து அமரச்செய்ய வேண்டும் (ஆசனம்). அவரது பாதங்களை சுத்த நீரால் தூய்மைப்படுத்த வேண்டும் (பாத்யம்). அவருடைய கைகளில் நீர் அளித்து வரவேற்க வேண்டும் (அர்க்யம்). புறச் சுத்தம் முடிந்த பிறகு, அகத் தூய்மைக்கு ஆசமனீயம் அளிக்க வேண்டும் (ஆசமனீயம்). இன்சுவை அளித்து மனம் மகிழ வைக்க வேண்டும் (மதுபர்க்கம்). வாய் மந்திரம் ஓத, கைகள் தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும் (ஸ்னானம் - ஆசமனீயம்). உடுக்க உடை அளிக்க வேண்டும் (வஸ்திரம், உத்தரீயம்). நெற்றித் திலகம் அளிக்க வேண்டும் (சந்தனம், குங்குமம்). அழிவில்லாதவனுக்கு அட்சதை அளித்து வழிபட வேண்டும் (அஷதான்). அவருடைய அங்கங்களுக்கு ஆபரணம் அளிக்க வேண்டும் (ஆபரணான). இரண்டு கைகளாலும் புஷ்பத்தை அள்ளி அளிக்க வேண்டும் (புஷ்பாணி).  

நறுமணத்துக்கு தூபம் அளிக்க வேண்டும் (தூபம்). கண்களுக்கு தீப ஒளியைக் காட்ட வேண்டும் (தீபம்). அறுசுவை உணவை அளிக்க வேண்டும் (நைவேத்தியம்). தாம்பூலம் அளிக்க வேண்டும். அலங்கார தீபம், பஞ்சமுக தீபம் போன்றவற்றைக் காட்டி மகிழ்விக்க வேண்டும். உபசாரத்தில் மகிழ்ந்த முகத்தைப் பார்க்க கற்பூரத்தைக் காட்ட வேண்டும் (கற்பூரநீராஜனம்). இறை வடிவத்தின் உள்ளே ஒளி வடிவாக உறைந்திருக்கும் இறைவனை நினைவுகூரும் எண்ணத்துடன் ஜோதி வடிவில் கற்பூரத்தைக் காட்ட வேண்டும். ஜோதியில் கை வைத்து அதன் வெப்பத்தை ஏற்று, நமது உடம்பிலும் இறைவனை இணைத்துக் கொள்ள வேண்டும்.

மந்திரம் ஓதி புஷ்பத்தை அளிக்க வேண்டும் (மந்திர புஷ்பம்). மங்கலப் பொருளான தங்கத்தை அளிக்க வேண்டும் (சுவர்ண புஷ்பம்). அவரது பெருமைகளைச் சொல்லி புஷ்பத்தை அளிக்க வேண்டும் (அர்ச்சனை). அவனை வலம் வந்து வணங்க வேண்டும் (பிரார்த்தனை). அவருடைய பாத நீரைப் பெற்றுக் கொண்டு, அவரின் பாதத்தில் இருக்கும் புஷ்பத்தையும் நம் சிரஸ்ஸில் அணிய வேண்டும் (தீர்த்தம், ப்ரசாதம்). இது, முழு பணிவிடையாக அமைந்துவிடும்.

இத்துடன் நிற்காமல் சிறப்பு உபசாரங்களையும் அளிக்கலாம். வெண்கொற்றக் குடையை அவனுக்கு அளிக்கவேண்டும் (சத்ரம்). இருபுறமும் வெண்சாமரம் வீச வேண்டும். நாட்டியம் ஆடி மகிழ்விக்க வேண்டும் (நாட்யம்). தாளத்துக்கு ஒப்பான நிருத்யத்தை அளிக்க வேண்டும் (நிருத்தம்). பொன்னூஞ்சலில் அமரச் செய்து ஆனந்தத்தை ஊட்ட வேண்டும் (ஆந்தோளிகாம்). தேரில் அமரச் செய்து மகிழ வேண்டும். குதிரையிலும், யானையிலும் பவனி வரச் செய்ய வேண்டும். (அச்வான், கஜான்). அரசனுக்கு உகந்த உபசாரம், தேவர்கள் மகிழும் உபசாரம், வேதம் உரைக்கும் உபசாரம்... எதெல்லாம் உபசாரமாகத் திகழுமோ அத்தனையையும் அளிக்க வேண்டும்.

உடலுக்கும், உள்ளத்துக்கும், புலன்களுக்கும் எவையெல்லாம் மகிழ்ச்சி அளிப்பதாக நாம் உணரு கிறோமோ... நாம் பெற்ற இன்பம் அத்தனையும் இறைவனுக்கும் தரும் நல்லெண்ணமே உபசாரமாக மலர்கிறது. நிறைவை அடைந்தவன், ஆனந்த வடிவினன் என்பதை உபசாரம் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். உருவமற்றவனுக்கான உபசாரங்களை உருவம் வாயிலாக நிறைவேற்றுகிறோம். நம்மிடம் இருக்கும் அத்தனைப் பொருட்களும் அவனது படைப்பு; அவனுக்குச் சொந்தம். அவனுக்கான பணிவிடையில் மலரும் பக்தியே நமக்குச் சொந்தம். பக்தியை வெளிக்காட்ட 16 உபசாரங்கள் அவசியம். தினம் தினம் பணிவிடையில் கவனம் செலுத்தினால் இறைவன்  தேவைப்படும்போது நம்மை கவனிப்பான்.

சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய பொருளை அவனுக்கு அளிப்பது உபசாரம் ஆகுமா? நாம் வெளிப்படுத்தும் பக்தியை ஏற்க உபசாரம் வாயிலாக விண்ணப்பிக்கிறோம். 16 உபசாரங்களை முறையோடு செயல்படுத்துங்கள்; பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வீர்கள்.

பராசர முனிவருக்கு மத்ஸ்யகந்தியின் மூலம் படகு ஒன்றில் வியாசர் உருவானதாகச் சொல்கிறார்கள். அது சாத்தியமா? சிந்தனைக்குப் பொருந்தவில்லையே! தங்களின் விளக்கத்தை அறிய ஆவல்.

- தி.ஆறுமுகம், கோவில்பட்டி

நமது சிந்தனைக்கு ஒத்து வருவதை மட்டுமே ஏற்க இயலும் என்கிற சிந்தனை தவறானது.

நமது அனுபவம், கேள்வியறிவு, நூலறிவு- அத்தனையும் குறுகிய சிறிய வட்டத்தில் அடங்கி விடும். வட்டத்துக்குள் நுழையாத தகவல்கள் ஏராளம். அவை சிந்தனையில் கலக்காத வரையிலும், நமது முடிவு அரைகுறைதான்.

இறைவன், உயிரினங்களைத் தோற்றுவிக்க விரும்பினார்; படைப்பு ஆரம்பமானது என்கிறது புராணம் (இச்சாமாத்ரம் ப்ரபோ:ஸ்ருஷ்டி:). இறைவன் தன்னைப் பல உயிரினங்களாக விரிவுபடுத்த எண்ணினார். உயிரினங்களைப் படைத்தார். அதில் நுழைந்து அதை இயக்குகிறார் என்று உபநிடதம் கூறும் (ஸோகாமயத பஹீஸ்யாம் ப்ரஜாயேய... தத்ஸ்குஷ்ட்வா ததேவானுப்ராவிசத்).

ஜராயுஜம், அண்டஜம், உத்பிஜம், ஸ்வேதஜம் - இப்படி படைப்பில் பல விசித்திரங்கள் உண்டு. கர்ப்பப் பையில் உருவானது, முட்டையில் தோன்றுவது, பூமியில் இருந்து வெளி வருவது, வெப்பத்தில் உருப்பெறுவது என்று பலவகை இனங்கள் உண்டு. உடலுறவு ஏற்பட்டு கருவறையில் வளர்ந்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு குழந்தை வெளிவருவது என்கிற நடைமுறை எல்லா இடங்களிலும் இல்லை. 'ரிஷிகள் கர்ப்பம் ஓர் இரவில் குழந்தையை ஈன்றுவிடும்’ என்பார்கள்; 'ரிஷி கர்ப்பம் ராத்தங்காது’ என்று வழக்கு உண்டு!

நீரிலிருந்து உயிரினங்கள் உருவாகி படிப்படியாக பல வடிவங்களைக் கடந்து மனிதனாக உருப்பெற லட்சக்கணக்கான வருடங்கள் தேவைப்பட்டதாக விகாசவாதம் (டார்வின் தியரி) சொல்லும். ஆனால், கருவறையில் நீரில் விழுந்த விந்து 10 மாதத்தில், அதாவது குறுகிய காலத்தில் மனித இனத்தை எட்டி விட்டது என்பது உண்மை. கர்ப்பப்பை வாசம் ஏற்காத படைப்புகளும் உண்டு. பறவை இனங்கள், ஈசல்கள், செடி- கொடிகளுக்கு கர்ப்பவாசம் இருப்பதில்லை. முட்டையில் இருந்து கருடன் தோன்றினான். பாயசத்தில் இருந்து ஸ்ரீராமர் வெளிவந்தார். கும்பஜலத்தில் அகஸ்தியர் தோன்றினார். பார்வையில் சுகர் தோன்றினார். அம்பாள் பிடித்துவைத்த மண்ணில் இருந்து பிள்ளையார் உருப்பெற்றார். ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து முருகன் உருப்பெற்றார். சூரியனை நினைத்து மந்திரம் ஓத, கர்ணன் பிறந்தான். பஞ்சபாண்டவர்கள் மந்திரம் வாயிலாக தோன்றியவர்கள்.

மனம் எண்ணி, பார்வை வாயிலாக சக்தி வெளிப்பட்டு ஊடுருவி படைப்பை நிகழ்த்தும் திறமை பெற்றவர்கள் உண்டு. ரிமோட் கண்ட்ரோலில் சக்தி பாய்ந்து செயல் படுவதை ஏற்கும் மனம், இங்கு மட்டும் ஏன் சுணக்கமுறுகிறது?! நீருண்ட மேகங்கள் சூழ்ந்த வேளையில், அதன் அடியில் பறக்கும் பலாகைகள் கர்ப்பம் தரிப்பதுண்டு என்று காளிதாஸன் கூறுவான் (பாதள ஷணபரிசயாத்நூனமாபந்தமாலா:). பார்வையில் அடைகாத்து முட்டையை விரியவைக்கும் (குஞ்சு பொறிக்கும்) திறன் ஆமைக்கு உண்டு. முனிவர்களது சாபம் உருவத்தை மாற்றி அமைப்பதுண்டு. முனி சாபத்துக்கு இலக்கான குளத்துத் தண்ணீரில் மூழ்கிய நாரதர் பெண்ணாக மாறினார் என்கிறது புராணம். இந்திராணியின் சாபத்தால் அர்ஜுனன் பெண்ணாக மாறிய கதையும் உண்டு. வாமனராக வந்த ஸ்ரீமந் நாராயணன் அடுத்த நொடியில் த்ரி விக்ரமனாகத் தோன்றியதும் உண்டு. மந்திரம் ஓதிய நீரைப் பருகி கரு தரித்தவர்களும் உண்டு புராணத்தில்.

நேரடியான உடலுறவுடன் இணைந்த சுக்ல சோணிதக் கலவையே கர்ப்பத்துக்குக் காரணம் என்கிற கட்டாயம் இல்லை. இந்த எண்ணத்தில் பராசரரின் செயல்பாட்டை கொச்சைப்படுத்தும் துணிவு, சிந்தனை வளம் குன்றியதன் வெளிப்பாடு. விந்து வங்கியில் இருந்து கடனாகப் பெற்ற சுக்லத்தை கொண்டு, வாடகைத் தாயை வைத்து குழந்தையை உருவாக்கும் திறனை விஞ்ஞானம் தந்திருக்கிறது. உடலுறவு இல்லாமலே குழந்தை செல்வம் பெற இயலும் என்பதை விஞ்ஞானம் விளக்குகிறது.

ஒரு மகான் தோன்ற வேண்டிய வேளையை உணர்ந்தார் பராசரர். அந்த மகான் தோன்றுவதற்கு, அந்த வேளையில் மத்ஸ்யகந்தியை ஆதாரம் ஆக்கினார்.

அவர் வேலை முடிந்து விட்டது. நம்மைப்போன்று சிற்றின்பத்தில் மூழ்குபவர் அல்ல பராசரர். பிறந்த வியாசர் அன்னையிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார். மத்ஸ்யகந்தி சந்தனுவுடன் இணைந்தாள். பராசரர் கடமையை முடித்து நிம்மதி பெற்றார். இந்த நிகழ்வுக்குப் பிறகு இந்த மூவரும் நம்மைப் போன்று குடும்பம் நடத்தவில்லை. சொந்தம் கொண்டாடவில்லை. எதிலும் பற்றில்லாமல் கடமைக்கு முதலிடம் அளித்தவர்கள். சாதாரண மனிதனில் தென்படும் ஆசாபாசம் இந்த நிகழ்வுக்குக் காரணமல்ல!

உலகை உய்யவைக்க உதயமாகும் மகானுக்கு அவதாரம் பண்ண இடமளித்தார் பராசரர். தசரதனின் மனைவிகள் ஸ்ரீமந் நாராயணருக்கு அவதாரம் செய்ய இடமளித்தவர்கள். பாயசத்தில் தோன்றிய தகவல் அதை உறுதி செய்யும். காராக்ருஹத்தில் துயரத்தில் ஆழ்ந்த வசுதேவர் தம்பதிக்கு சிருங்காரம் எப்படி முளைக்கும்? அடுக்கடுக்காக குழந்தைகள் எப்படிப் பிறந்தன? கிருஷ்ணன் அங்கு தோன்றினான். தோன்றிய குழந்தை விஸ்வரூபம் எடுத்தது. மாற்றந்தாய் யசோதையிடம் வளர்ந்தது. தாய்ப்பால் குடிக்க தேவகியிடம் வளரவில்லை. அவர்களும் சிற்றின்பச் சுவையில் இணை சேர்ந்து செயல்படவில்லை.

பிறக்கும்போது மனதில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனை கலந்த சிந்தனை, உள்ளதை உள்ளபடி அறியாமல் தாமாகவே ஒரு முடிவை எட்டிக் கேள்வி கேட்பது உண்டு. படைப்பின் ரகசியத்தைப் புரிந்துகொள்ள நமது சிந்தனை போதாது. விஞ்ஞானமும் துணை வராது. மெய்ஞ்ஞானம் பெற்ற பிறகு சந்தேகங்கள் விலகும். அதுவரை காத்திருங்கள்!

அன்பர் ஒருவரின் தாயார் இறந்து விட்டார். அந்த அன்பர்தான் கர்மா செய்ய வேண்டும். தாயார் இறந்து 3-வது மாதத்தில் அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை முன்னமே... அதாவது அவரின் தாயார் இறக்கும் முன்னரே செய்துவிட்டார். கர்மா செய்த 3-வது மாதத்தில் சஷ்டியப்த பூர்த்தி செய்துகொள்ளலாமா?

- ராகவன், சென்னை-4

ஒரு வருடம் தள்ளி 'ஆப்திகம்’ முடிந்த பிறகு நடைமுறைப்படுத்த வேண்டும். மாத்ரு தீஷை தொடர்வதால், அதற்கு இடையில் அவருக்கு செய்யவேண்டிய தேவகர்மாவைச் செய்ய இயலாது. உண்மையில் ஸபிண்டீகரணம் வருட முடிவில் செய்ய வேண்டும். தர்மசாஸ்திரம் அதை 12-வது நாளில் செய்யச் சொல்லும். ஒருவேளை, கர்மா செய்பவனுக்கு அந்த ஒரு வருடத்துக்குள் ஏதேனும் நேரிட்டால் என்ன செய்வது எனும் முன்னெச்சரிக்கையுடன், 12-வது நாளில் செய்யச் சொல்கிறது. அதன் பிறகு விரிவாக மாஸிகஸோத கும்பங்களைச் செய்து, ஆப்திகம் செய்யப் பரிந்துரைத்தது.

ஆபத்து கால நிலையில் செய்யப்படும் கர்மா மூலம்... மற்ற விஷயங்களுக்கும் கர்மா முற்றுபெற்றதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தர்மசாஸ்திரம் சொல்லும் ஸம்ஸ்காரங்களை மட்டும்தான் தீஷையில் செய்யலாம். கொண்டாட்டங்களுடன் இணைந்த கர்மாவைத் தவிர்க்க வேண்டும்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு