Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

பிரீமியம் ஸ்டோரி
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'எல்லாரும் நல்லாப் பாத்துக்குங்க; சூரியன் கிழக்கே உதிக்கப்போகுது' என்று அந்த கைடு சத்தம் போட்டுச் சொன்னவுடன், நாங்கள் அனைவரும் கிழக்குப் பக்கம் பார்க்கத் தொடங்கினோம். பொழுது புதிதாய் புலர்ந்துகொண்டிருந்த அந்த இடம்... கன்னியாகுமரி கடற்கரை.

நெருப்புக் கோளம் நீருக்குள் இருந்து எழுவதுபோல கிழக்கிலே சூரியன் உதித்த காட்சி அற்புதம்!

'சூரியன் கிழக்கே உதிக்கிறதை இன்னிக்குதாங்க நேர்ல பார்த்தேன். இந்தக் காட்சியை எப்படி வர்ணிக்கிறதுன்னே தெரியலையே...' - பரவசம் பொங்கச் சொன்னார் பரமசாமி.

'ரொம்பவும் பொங்காதீங்க; திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர்,

 'உலகம் உவப்ப வலனேபு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு’

- என்று எப்போதோ பாடிவிட்டார்' என்று நான் சொன்னவுடன், 'நீங்க சொன்னது அருமையா இருக்குங்க. ஆனா, ஒரு அட்சரம்கூடப் புரியலை' என்றார் பரமசாமி.

##~##
'அதாவது, 'உலகம் மகிழுமாறு இருளைப் போக்கி கடல் மீது சூரியன் தோன்றுவதைப்போல, பக்தர்களின் மன இருளைப் போக்க முருகப்பெருமான் மயில் மீது தோன்றுகிறார்’ என்பதே அந்தப் பாடலுக்கான விளக்கம்' என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அங்கே விற்றுக்கொண்டிருந்த சுக்குக் காபியை எங்கள் இருவருக்கும் வாங்கினார் பரமு. இருவரும் பருகினோம்.

'சுக்குக் காபி எப்படி ருசியா இருக்குன்னு பாத்தீங்களா? இதத்தான் நம்ம பெரியவங்க, 'சுக்குக்கு மிஞ்சின வைத்தியமும் இல்லை; சுப்பிரமணியனை மிஞ்சின கடவுளும் இல்லை’ன்னு சொல்லியிருக்காங்க. நீங்க சுப்பிரமணியன் பத்திச் சொன்னீங்க. நான் சுக்குக் காபி வாங்கிட்டேன்' என்று சொல்லி சிரித்தார் பரமு.

காலை உணவுக்குப் பிறகு, விவேகானந்தர் பாறைக்குச் சென்றோம். 'விவேகானந்தர் இங்கே வந்து தவம் பண்ணுறதுக்கு முன்னால இந்தப் பாறைக்கு என்ன பேர் இருந்துது?' என்று பரமசாமி கேட்டதும், எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

'எப்படிப் பரமசாமி உங்களுக்கு மட்டும் இப்படியெல் லாம் கேட்கத் தோணுது? 'நம்மூருக்கு ரயில் வர்றதுக்கு முன்னாடி அதுக்கு என்ன பேர் இருந்திருக்கும்?’ அப்படின்னு எங்கிட்ட கேட்டான் ஒரு பையன். அந்த மாதிரி இருக்குது, நீங்க கேட்குற கேள்வி' என்று சொல்லிவிட்டு, அவருக்கு விளக்கம் கொடுத்தேன்.

'இந்தியா முழுவதும் நடைப்பயணமாக வந்த சுவாமி விவேகானந்தர், 1892 டிசம்பர் மாதம் இங்கு வந்தார். அப்போது, கடலுக்கு நடுவே இருக்கும் இந்தப் பாறைக்கு வந்து தவம் செய்தார். அதனால இதை விவேகானந்தர் பாறைன்னு சொல்றோம். அதற்கு முன்பு, இந்த பாறைக்கு 'ஸ்ரீபாத பாறை’ன்னு பெயர். இங்குள்ள குமரி அம்மன், இறைவனான சிவபெருமானைக் கணவனாக அடையவும், தன்னை விரும்பிய பாணாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காகவும் ஒற்றைக் காலில் நின்றபடி தவம் இருந்ததால் அந்தப் பெயர்' என்று விளக்கம் கொடுத்தேன்.

'இன்றைக்கும் நின்றபடி இங்கே தவம் இருக்கும் இந்தத் தெய்வத்தை நம் மகாகவி பாரதி எப்படிப் பாடியிருக்கிறார் தெரியுமா?' என்று நான் கேட்டதுதான் தாமதம்...

'நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய் குமரி எல்லை; வடமாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’ என்று கணீரெனப் பாடியபடியே, ஓர் ஆண்டிப் பண்டாரம் எங்களைக் கடந்து சென்றார். நாங்கள் இருவரும் அவர் சென்ற திசை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு