Published:Updated:

சரவண பவநிதி அறுமுக குருபுர...

சரவண பவநிதி அறுமுக குருபுர...

பிரீமியம் ஸ்டோரி
சரவண பவநிதி அறுமுக குருபுர...
சரவண பவநிதி அறுமுக குருபுர...
##~##
'ஞாலம் ஏற்றி வழிபடும் ஆறுபேர்க்கு மகவென
நாணல் பூத்த படுகையில் வருவோனே!’

- என சந்தத் திருப்புகழால் கந்தப்பெருமானை கொஞ்சி மகிழ்கிறார் அருணகிரிநாதர்.

ஆறுமுகன் 'சரவணம்’ என்று சிறப்பிக்கப்படும் தர்ப்பை வனத்தில்- நாணற்காட்டில் சரவணப்பொய்கையில் அவதாரம் செய்த அற்புதமான நன்னாளே வைகாசி விசாகம். விசாகத்தில் விளங்கிய வேலவனை கார்த்திகை மாதர்கள் ஆறுபேர் கரங்களில் எடுத்து வளர்த்தனர். ஆறு குழந்தைகளாக முருகன் ஆடல் புரிந்தான்!

ஆடஓர் உருவம் செங்கை அறைய ஓர் உருவம்
பாட ஓர் உருவம் நாடிப் பார்க்க ஓர் உருவம்
ஓட ஓர் உருவம் ஓர் பால் ஒளிக்க ஓர் உருவம்

- என்று கச்சியப்பர் கந்தபுராணத்தில் பாடுகிறார்!

சரவண பவநிதி அறுமுக குருபுர...

இப்படி, கார்த்திகைப் பெண்கள் அறுவரிடம் வளர்ந்த ஆறுமுகக் கடவுளுக்கு படைவீடுகள் ஆறு. அவனை வழிபட உகந்த நாளும் ஆறாவது திதிநாளான சஷ்டி. அழகு முருகனின் மூல மந்திரமும் சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரமே!

அதுமட்டுமா? சரணடையும் பக்தர்களின் சங்கடங்களை எல்லாம் தீர்த்து வைக்கும் ஷண்முகப் பெருமான், ஆறு சமயங்களுக்கும் பொதுவான தெய்வம் என்று சிலாகிப்பார்கள் பெரியோர்கள்.

'சமய நாயக’ என்றும்,  'அறு சமய சாத்திரப் பொருளோனே’ என்றும் பாடி மகிழும் அருணகிரிநாதர்... கணபதியின் தம்பதியே, சிவ குருநாதரே, பார்வதி பாலனே, திருமால் மருகரே, சூரிய ஒளியாய்ச் சுடர்பவனே என்று பல பாடல்களில் முருகனை விதவிதமாக விளித்து போற்றுகிறார்.

'வாக்குக்கு அருணகிரி’ எனச் சிறப்பிக்கப்படும் அவரே... ஒரே பாடலில் ஆறு சமயக் கடவுளரையும் சேர்த்தே பாடியிருக்கிறார். முத்திரைப் பதிக்கும் அந்தத் திருப்புகழ் பாடல், அனைவரும் அனுதினமும் பாடவேண்டிய அறுசமயத் திருப்புகழாகத் திகழ்கிறது!

இந்தத் திருப்புகழ் பாடல், சரவணபவ எனும் மந்திரத்தில் துவங்கி, 'ஹர ஹர சிவ சிவ’ எனும் மந்திரத்தில் நிறைவு பெறுகிறது. ஸ்ரீஆதிசங்கரர் வகுத்த ஷண்மதங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.

வருகரி திருமுகர் என காணாபத்யத்தையும்
திரிபுரம் எரிசெயும் இறையவர் என சைவத்தையும்
தினகரன் என வரு என சௌரத்தையும்
நரஹரி நெடியவர் என வைணவத்தையும்
அமலி, விமலி, பரை என சாக்தத்தையும்

பாடல் முழுமையாக கௌமாரத்தையும் குறிப்பிடுகிறது.

'சரவணபவ’ என்று சரவணத்தில் உதித்த முருகனைக் கூப்பிடும் இந்தத் திருப்புகழை, ஆறுமுகன் அவதரித்த வைகாசி விசாகத் திருநாளில் இருந்து ஓதுவோம். ஷண்முகன் முதலாக ஷண்மதக் கடவுளரின் திருவருளையும் தடையின்றி பெற்று மகிழ்வோம்.

ஜண்மத தெய்வங்களையும் போற்றும்
ஜண்முகன் திருப்புகழ்

சரவண பவநிதி அறுமுக குருபர
சரவண பவநிதி அறுமுக குருபர
சரவண பவநிதி அறுமுக குருபர என ஓதும்

தமிழினில் உருகிய அடியவர் இடம்உறு
ஜனன மரணமதை ஒழிவுற சிவம்உற
தருபிணி துளவர எமது உயிர் சுகம்உற அருள்வாயே!

கருணைய விழிபொழி ஒரு தனி முதல் என
வருகரி திருமுகர் துணை கொளும் இளையவ
கவிதை அமுதமொழி தருபவர் உயிர்பெற அருள் நேயா!

கடல்உல கினில் வரும் உயிர் படும் அவதிகள்
கலகம் இணையதுள கழியவும் நிலைபெற
கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே!

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
குமர சமரபுரி தணிகையும் மிகும்உயர்
சிவகிரி யிலும் வடமலையிலும் உலவிய வடிவேலா!

தினமும் உனது துதி பரவிய அடியவர்
மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ
திமிர மலம் ஏழிய தினகரன் என வரு பெருவாழ்வே!

அரவுஅணை மிசைதுயில் நரஹரி நெடியவர்
மருகன் எனவரு அதிசயம் உடையவ
அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே!

அதல விதல முதல் கிடுகிடு கிடு என
வருமயில் இனிதுஒளிர் ஷடுமையில் நடுவுற
அழகின் உடன் அமர் ஹரஹர சிவசிவ பெருமாளே!

திரும்பிய 'பரங்குன்றம்’!

சரவண பவநிதி அறுமுக குருபுர...

மிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல் படைவீடு, திருப்பரங்குன்றம்! இது, மதுரைக்கு தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பெரியப் பாறைக்குன்றை குடைந்து உருவாக்கப்பட்ட குடவறைக்கோயில் இது. ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்தில் இருந்த தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி, முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். அதன் காரணமாக 'திருப்பியபரங்குன்றம்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் நாளடைவில் திருப்பரங்குன்றம் என்று மருவியது.

அருணகிரிநாதர்கூட தனது திருப்புகழில், 'தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே...’ என்றுதான் பாடியிருக்கிறார்.

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்து தேவர்களைக் காத்த முருகப்பெருமானுக்கு, இந்த திருத்தலத்தில் வைத்துதான் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொடுத்தான் தேவேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

- மதுவர்ஷா, சென்னை-100

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு