Published:Updated:

பிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்!

பிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்!

பிரீமியம் ஸ்டோரி
பிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்!
பிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்!
##~##
கோ
யில் நகரம், ஸத்யவிரத க்ஷேத்திரம், அயோத்தி முதலான ஏழு மோட்சபுரிகளில் ஒன்று... இப்படி காஞ்சி மாநகருக்குப் பெருமைகள் நிறைய உண்டு. 'பெருமாள் கோயில்’ என வாஞ்சையுடன் வைணவப் பெரியோர்கள் போற்றும் திருவிடம் இது. ஆழ்வார்களால் பாடப்பட்டதால் திவ்யதேசமாகவும், ஆசார்யர்களின் அபிமானத்துக்கு உரியது ஆதலால் அபிமான ஸ்தலமாகவும், புராணங்கள் பலவும் போற்றுவதால் புராண க்ஷேத்திரமாகவும் திகழும் ஊர் இது.

அது மட்டுமா? உலகம் அனைத்துக்கும் நாயகனாய், தேவர்களுக்குத் தலைவனாய், அடியார் மனக் குறிப்பறிந்து வரம் தருவதிலே வல்லவனாய் காட்சி தரும் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கொண்டிருப்பதும் இங்குதான்.

முன்னொரு காலத்தில் மூவுலகுக்கும் நாயகனான நாராயணனை தரிசிக்கும் பேராவலுடன், நைமிசாரண்யம் எனும் திருவிடத்தில் மாபெரும் வேள்வி நடத்தினார் நான்முகன். அப்போது எழுந்த அசரீரி, தென்னகத்தில் காஞ்சிக்கு சென்று வேள்வி இயற்றுமாறு பிரம்மதேவனுக்குக் கட்டளையிட்டது.

பிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்!

பிரம்மனும் தேவ தச்சனைக் கொண்டு ஸத்யவிரத க்ஷேத் திரத்தை (காஞ்சிபுரத்தை) நன்கு செப்பனிட்டு, தேவையானப் பொருட்களையும் சேமித்துக்கொண்டு பெரும் வேள்விக்குத் தயாரானார். அந்த நேரத்தில் பிரம்மனுக்கும் அவரின் மனைவி சரஸ்வதிதேவிக்கும் சிறு ஊடல்; மனப் பிணக்கு. எனவே அவள் தனித்து வசித்திருந்தாள். இல்லாள் இல்லாமல் யாகம் முதலானவற்றை செய்தல் கூடாது என்பது சாஸ்திரம். அப்படிச் செய்தால் நாம் எதிர்பார்க்கும் நற்பலன்கள் கைகூடாது.

பிரம்மதேவன், தன்னுடைய மற்ற மனைவியரான சாவித்திரி மற்றும் காயத்ரீதேவியரை உடன் இறுத்தி வேள்வியை ஆரம்பித்தார். இந்த யாகத்தைச் செவ்வனே செய்து முடித்துவிட்டால், தான் அவருக்குக் காட்சியளிப்பதாக பரமாத்மா வாக்குறுதி அளித்திருந்தார். இதனால் கூடுதல் உற்சாகத்தோடு வேள்வியை நடத்திக் கொண்டிருந்தார் பிரம்மன். அப்போது எவரும் எதிர்பாராத அந்தச் செயல் நிகழ்ந்தது!

'ச்ரேயாம்ஸி பஹு விக்நாநி பவந்தி’ என்று சொல்வர். அதாவது, நாம் ஏதேனும் நற்காரியம் செய்ய முயன்றால், கட்டாயம் அதற்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டே தீருமாம்; அதேநேரம்,  தீய காரியங்களைச் செய்ய ஆசைப்பட்டால், எவ்விதத் தடையுமின்றி அது நிறைவேறிவிடுமாம். ஆகவே, நாம் ஒரு செயலைச் செய்கிற நேரத்தில் தடைகள் ஏற்பட்டால், நாம் நல்லதே செய்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பிரம்மனின் யாகத்துக்கும் தடை ஏற்பட்டது. தன்னைப் புறக்கணித்து பிரம்மா யாகம் செய்கிறாரே என்று சரஸ்வதிதேவிக்கு கோபம். எனவே, வேகவதி என்கிற பெரிய நதியாக உருமாறி, வேள்வியை உருக்குலைக்கும் எண்ணத்தோடு பெருக்கெடுத்து ஓடிவந்தாள்!

'மஹத்யாபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி:’ என்ற சாத்திர மொழிக்கேற்ப... பெரிய துன்பம் எதிர்ப்பட்டால், உடனே ஸ்ரீஹரியை நினைக்கவேண்டும் என்பதை அறிந்தவர் ஆகையால், அந்தப் பரம்பொருளைச் சரணடைந்தார் பிரம்மன். பரம்பொருளும் யாகத்தை ரட்சிக்கும் பொருட்டு, வேகவதி பெருகி வரும் வழியில், 3 இடங்களில் ஓர் அணை போன்று படுத்துக்கொண்டாராம். இன்றும் அந்த மூன்று தலங்களில் சயனித்த கோலத்தில் பெருமாள் அருள்கிறார். முதலாவது- வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா. 2-வது, காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்பாற்கடல். 3-வது, காஞ்சி புரத்திலேயே அருளும் ஸ்ரீசொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோக்தகாரீ பெருமாள்) கோயில்.

பெருமாளின் திருவருளால் வேகமும் கோபமும் தணியப் பெற்ற சரஸ்வதிதேவி, மெள்ள இறைவனது திருவடிகளை வருடியபடி அமர்ந்தாள். இன்றும் யதோக்தகாரீ பெருமாளது திருவடிகளில் சரஸ்வதி வீற்றிருப்பதை நாம் காணலாம்.

பிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்!

அங்கே பிரம்மனின் யாகமும் மிகச் சிறப்பாக நிறைவுற்றது. உலகேத்தும் ஆழியனாய், அத்தியூர னாய்... வேள்விக் குண்டத்தில் தோன்றி காட்சி தந்தார் பரம்பொருள் (சித்திரை- அஸ்தத்தில்). பிரம்மனுக்கு மட்டுமின்றி, இன்றைக்கும் அன்பர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்குவதால், ஸ்ரீவரதராஜன் எனும் திருநாமம் கொண்டார்.

யாக அக்னியில் இருந்து வெளிப்பட்ட படியால், திருமுக மண்டலம் முழுவதும் தழும்புகளோடு... பிரம்மனுக்குத்தான் அருள் புரிந்தது உண்மை என்பதை இன்றும் நமக்கும் உணர்த்துகிறான் அந்த வரதன். 'க:’ என்று பிரம்மனுக்குப் பெயர் உண்டு. எந்த இடத்தில் பிரம்மனால் ஹரி நன்கு பூசிக்கப் பட்டாரோ அந்த இடத்துக்கு காச்சீ (காஞ்சி) என்று பெயர். ஒவ்வொரு யுகத்திலும் பிரம்மன், ஆதிசேஷன், சுகர், கஜேந்திரன் போன்றோரால் துதிக்கப் படுகிறான் ஸ்ரீவரதன்.

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத் தாழ்வார் போன்ற ஆழ்வார்களாலும், ஆளவந் தார், பகவத் ராமானுஜர், கூரத்தாழ்வான், வேதாந்த தேசிகர், ஸ்ரீமந்மணவாள மாமுனிகள், தொட்டையாசார்யர் போன்ற மஹனீயர் களாலும் கொண்டாடப் பட்டவர் ஸ்ரீவரதர்.

'பொன்னாசை மண்ணாசை போகத்திருளாசை
சிந்தித்திராதே அருளாளன்- கச்சித் திருப்பதியாம்
அத்தியூர்க் கண்ணன் தாள்
இச்சித்திருப்பது யாமென்று’

- என்று காஞ்சி ஸ்ரீவரதராஜரைப் பாடுகிறார், திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். நாமும் இவ்வுலக இன்பங்களில் கண் வைக்காமல் காஞ்சி வரதனிடம் நெஞ்சை செலுத்தினால், வாழும் காலத்தில் இவ்வுலக இன்பங்களும், மறைந்த பின் பெருவீடான வைகுந்தமும் நம் வசமாகும்!

ஸ்ரீவரதராஜர் ஆலயத்தில் வைகாசி பிரம்மோத்ஸவம் வெகுவிசேஷம். இந்த விழாவின் கருடசேவையின் போது,  அதிகாலையில் கோபுர வாயிலில் கருட வாகனத்தில்- இரட்டைக் குடைகளின் கீழ் சேவைசாதிப்பார் ஸ்ரீகாஞ்சி வரதர். அப்போது சில நிமிட நேரம்... குடைகளால் ஸ்ரீவரதரை மறைத்து விடுவர்.இதுவே தோட்டாசார்யர் சேவை எனப்படும்.

சோளிங்கபுரத்தில் வாழ்ந்த தோட்டாச்சார்யர், ஆண்டுதோறும் வைகாசி கருடசேவையைக் காண காஞ்சிக்கு வருவது வழக்கம். ஒருமுறை அவரால் வர இயலவில்லை. சோளிங்கபுரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் நின்றவாறே வரதனின் கருட சேவையை நினைத்து நெக்குருகினார். அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர். இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதாவது பெருமாள் இங்கு மறைந்து அங்கு தோன்றுவதாக ஐதீகம்! நாமும் விழாவுக்குச் சென்று வரம் வாங்கி வருவோம்.

படங்கள்:  'ப்ரீத்தி’ கார்த்திக்,
எம்.என். ஸ்ரீநிவாஸன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு