Published:Updated:

நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்...

மூவேழு தலைமுறை தோஷங்கள் நீங்கும்!

பிரீமியம் ஸ்டோரி
நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்...
##~##
மு
ற்காலத்தில் 24 பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு இருந்ததாம் கொங்கு தேசம். அவற்றில் நொய்யல் ஆற்றுக்கு வடக்கே, பவானி ஆற்றுக்கு தெற்கே பரந்து விரிந்து கிடந்த பகுதியை, வடபரிசார நாடு என்பர். இந்தப் பகுதியின் புகழ்பெற்ற தலமாகத் திகழ்ந்தது திருமுருகன்பூண்டி.

திருமுருகநாதர் எனும் திருநாமத்துடன் சிவனார் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலம், தொழில் நகரமாம் திருப்பூரின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுந்தரத் தமிழில்... தோழன் சுந்தரரின் தேமதுரப்  பாடல்களைக் கேட்கும் பேராவலுடன், சர்வேஸ்வரன் வேடுபறி திருவிளையாடல் நிகழ்த்திய புண்ணிய க்ஷேத்திரம் இது.

அதென்ன முருகநாதர்?! சிவமைந்தன் வழி பட்டதால் சிவனாருக்கு இப்படியரு திருப்பெயர் (அம்பாளின் திருநாமம் - ஸ்ரீமுயங்குபூண்முலை வல்லி). சூரனை வதைத்ததால் வீரஹத்தி தோஷத்துக்கு ஆளானார் முருகன். 'முல்லைவனம் வந்து எம்மை வழிபட்டால் தோஷம் நீங்கும்’ என்று ஈசன் திருவருள் புரிய, அவ்வாறே முல்லைவனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்துக்கு வந்த முருகன், தனது வேலையும் மயிலையும் ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்த ஓடையின் கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம் நீங்கப் பெற்றாராம்.

நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்...
நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்...

அதுமட்டுமா? ''இங்கு வந்து என்னைத் தரிசிக்கும் பக்தர்களுக்கும் வீரஹத்தி, பிரம்மஹத்தி, புத்திர தோஷம் முதலாக மூவேழு (21) தலைமுறைக்குமான தோஷங்கள் நீங்க வேண்டும். அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களும் விலக வேண்டும்'' என்று தந்தையிடம் பிரார்த்தித்தார் முருகன். சிவனாரும் 'அப்படியே ஆகுக’ என வரம் தந்தார். இன்றும் அந்த வரம் பலித்துக் கொண்டிருக்கிறது; இங்கு வந்து முருகனைத் தரிசிக்கும் பக்தர்களின் தோஷங்களும் பாவங்களும் காணாமல் போகின்றன. நவக்கிரகங்களில் கேது தோஷம் நீக்கும் தலம் இது; ஸ்தல விருட்சம் குருக்கத்தி. இங்கே தந்தை ஸ்ரீமுருகநாதர் மேற்கு நோக்கி அருள்கிறார். சிவச் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்திருப்பது விசேஷ அம்சம். தனயன் முருகனோ தெற்கு நோக்கி அருள்கிறார். தோஷத்துடன் திகழ்ந்ததால், எந்தத் திசையென்று அறியாமல் முருகன் தெற்கு நோக்கி வழிபட்டதாக ஐதீகம். முருகன் சந்நிதியில் தனியே மயில் வாகனம் கிடையாது. இந்தப் பெருமானுக்கு ஷண்முகர் என்று திருநாமம். தேவியர் இருவருடன் ஓராறு முகமும் ஈராறு கரங்களுமாகத் திகழும் இந்த வேலவனின் விக்கிரகத்திலேயே தேவரூப மயில் உண்டு. இவருக்குச் சந்தனக்காப்பு அலங்காரம் விசேஷம்!

தொடர்ந்து 12 செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து முருகனுக்கு செவ்வரளி பூமாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட, கல்யாணத் தடைகள் நீங்கும். புத்திரதோஷம் உள்ளவர்களும் இவரை வழிபட்டு பலன் பெறலாம். இங்கு நடைபெறும் சண்முகார்ச்சனையைத் தரிசிக்க சகல நலன்களும் கைகூடும். கந்த சஷ்டி, முதலான கந்தனுக்கான வைபவங்கள் இங்கே விசேஷம்; வைகாசி விசாகத் தரிசனம் கூடுதல் பலன் தரும்.

  - கட்டுரை, படங்கள்: ரா.அண்ணாமலை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு