Published:Updated:

குறமகள் தழுவிய குமரன்!

குறமகள் தழுவிய குமரன்!

குறமகள் தழுவிய குமரன்!

குறமகளாக அவதரித்த வள்ளியை மணந்துகொண்டு, திருமணக்கோலத்தில் திருத்தணி நோக்கி மயில் வாகனத்தில் சென்ற முருகப்பெருமானை ஓர் இடம் மிகவும் கவர்ந்தது. அங்கே சற்று இளைப்பாற ஆசைப்பட்டவர், வள்ளியுடன் அங்கிருந்த வெப்பாலை மர நிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

இத்தகைய சிறப்புமிக்க திருத்தலம், ஞானமலை. தேடி வந்து வழிபட்டால் ஞானம் அருளும் மலை என்பதால் இந்தப் பெயர்.

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 14-வது கி.மீ. தொலைவில் உள்ள மங்கலம் என்கிற கிராமத்தை அடுத்துள்ள கோவிந்தசேரியில் அமைந்துள்ளது ஞானமலை.

##~##
பிரம்மசாஸ்தா திருக்கோலத்தில்... அதாவது, பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் தள்ளி, பிரம்மாவின் சிருஷ்டி தொழிலை தானே மேற்கொண்டார் அல்லவா முருகன்? அதே கோலத்தில்- நின்றநிலையில்  வள்ளி-தெய்வானை தேவியருடன் அருள்கிறார்! முருகனின் பின் இரு கைகளில் பிரம்மாவின் கமண்டலம் மற்றும் ஜபமாலை; முன் இரு கைகளில் ஒன்று அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று இடுப்பில் வைத்தபடியும் திகழ்கிறது. இங்கு முருகனின் திருநாமம் ஸ்ரீஞான பண்டித ஸ்வாமி.

இந்தத் தலத்து முருகனைப் பாடும் அருணகிரியார், 'உலகத்தார் என்னை வெறுத்து ஒதுக்கியபோது உயிர்விடத் துணிந்தேன். அப்போது உனது திருவடி காட்டி ஆட்கொண்டாயே. அந்த திருவடிக் காட்சியை மீண்டும் இங்கே எனக்கு காட்டு...’ என்று வேண்டுகிறார். அதன்படி அவருக்கு திருவடி தரிசனம் தந்தார் தமிழ்க் கடவுள்! அவரது பாதச் சுவடுகளை நாமும் அங்கே தரிசிக்கலாம். அந்த இடம் தற்போது 'திருவடிப் பூங்கோயில்’

என்று அழைக்கப்படுகிறது. ஞானமலை கோயிலில், விசேஷ தரிசனத்துக்கு உரியவர் ஸ்ரீகுறமகள் தழுவிய குமரன். இவரின் உத்ஸவ மூர்த்தம் மலை அடிவாரத்தில் ஞானாஸ்ரமத்தில் உள்ளது. அழகும் சாந்நித்தியமுமான மூர்த்தி இவர்!

ஞானமலையில் வெப்பாலை மரங்கள் விசேஷம். இந்த மரத்தின் இலைக்கு தோல் நோய்களை குணமாக்கும் சக்தி உண்டு. வெப்பாலை மர இலைகளில் பட்டுவரும் காற்றை சுவாசித்தால் தாம்பத்ய உறவு வலுப்படும்.

ஸ்ரீஞானபண்டித ஸ்வாமி கல்வி-ஞானம் அருள்பவர். பள்ளி, கல்லூரி அட்மிஷனுக்காக காத்திருப்போர் இவரை வழிபட, அவர்கள் விரும்பியபடியே அட்மிஷன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், வள்ளியை மணந்துகொண்டு திருத்தணி செல்லும் வழியில் முருகப்பெருமான் முதன்முதலாக தங்கி இளைப்பாறிய இடம் இது என்பதால், திருமணப் பாக்கியம் அருளும் தலமாகவும் திகழ்கிறது ஞானமலை. மட்டுமின்றி இந்தத் திருத்தலத்தில் ஞானவெளி சித்தர் என்ற மகானின் சமாதியையும் தரிசிக்கலாம்.

தொகுப்பு: குபேர ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு