மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்! - 5

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

ஞானப் பொக்கிஷம்! - 5

ஞானப் பொக்கிஷம்! - 5
ஞானப் பொக்கிஷம்! - 5

ல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது, பசி! ஆண்- பெண், பணக்காரர்- ஏழை, முதியவர்- குழந்தை, படித்தவன்- பாமரன், வெளிநாட்டுக்காரர்- உள் நாட்டுக்காரர் என்ற வேறுபாடு எல்லாம் அதற்குக் கிடையாது. உணவு இல்லாமல் எந்த ஜீவராசியும் வாழ முடியாது.

பசியின் கொடுமையை உணர்ந்தே நம் இந்து மதத்தில் விரதம், பூஜை என்று எதுவாக இருந்தாலும், நான்கு பேருக்காவது சாப்பாடு போட்டுவிட்டு அதை நிறைவு செய்வதுதான் வழக்கம். அப்போதுதான், நாம் செய்யும் விரதமோ- பூஜையோ பலன் கொடுக்கும் என்பது நம்பிக்கை. அன்னதானத்தை விசேஷமாகச் சொல்வதும், பசிக் கொடுமையை உணர்ந்ததால்தான்!

##~##
நீ....ட்டி முழக்கிக்கொண்டு போவானேன்! பசி, சாதாரண பாமர மக்களை மட்டுமல்ல; சர்வ வேதங்களிலும் கரை கண்ட மாமுனிவர்களையும் ஆட்டிப் படைத்திருக்கிறது. 'திரிசங்கு சொர்க்கம்’ என்று தனியாக ஒரு சொர்க்கத்தையே படைக்கக் கூடிய சக்தி படைத்த விஸ்வாமித்திர முனிவரையே, பசி ஆட்டிப் படைத்திருக்கிறதே! அந்தப் பசியின் கொடுமை தாங்காமல் விஸ்வாமித்திரர் ஒருமுறை நாயின் மாமிசத்தைத் திருடி உண்டிருக்கிறார் எனும்போது, நாமெல்லாம் எந்த மூலை?

அதனால்தான் 'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்று நம் பழந்தமிழ் நூல் ஒன்று உரத்துச் சொல்கிறது. எந்த நூல்? சொன்னவர் யார்? அதைப் பிறகு பார்ப்போம். பசி வந்தால் பறந்து (வேகமாக) போகக்கூடிய, அதாவது விலகக்கூடிய அந்தப் 'பத்து’ என்ன என்பதை முதலில் இங்கே பார்க்கலாம்.

1.மானம்சுயமரியாதை: 'எதுக்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டேன் நான்... தெரியுமில்ல!’ அந்த 'மானம்’ நம்மை விட்டு நீங்கிப் போய்விடும்.

2.குலம்: 'நான் என்ன பரம்பரைல வந்தவன் தெரியுமா? என் அந்தஸ்து தெரியுமா? ராயல் ஃபேமிலியாக்கும்!’ என்றெல்லாம் பெருமை பேசுவோம். பசி வந்துவிட்டால், அந்தப் பெருமையையும் இழக்கத் துணிவோம்.

3.கல்வி: என்ன படித்திருந்தாலும் சரி; பசியைத் தணிக்கப் படிப்பால் முடியாது. கடும் பசி ஏற்படும்போது, 'பசியே! என்னிடம் உன் வாலை ஆட்டாதே! நான் லண்டன், அமெரிக்கா முதலான நாடுகளுக்கெல்லாம் போய்ப் படித்துவிட்டு வந்திருக்கிறேன். என் பெயருக்குப் பின்னால் பட்டங்களாக ஆங்கிலத்தில் உள்ள அத்தனை எழுத்துக்களும் உள்ளன. தெரியாதா உனக்கு?’ என்றால்... 'தம்பி! உன் படிப்பை எல்லாம் நீயே வெச்சுக்க. இப்ப ரெண்டு இட்டிலியையாவது வயித்துக்குள்ள போடு!’ என்று பசி அலட்டாமல் சொல்லும். பசி வந்துவிட்டால் படிப்பாவது ஒன்றாவது!

4.தருமம்: பொதுவாகவே இந்தக் காலத்தில் பலரும் தருமத்தைப் பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. இதில், பசி வேறு வந்துவிட்டால், கொஞ்ச நஞ்சமுள்ள பரோபகார எண்ணமும் பறந்து போய்விடும்.

5.அறிவு: மழுங்கிப் போகும். 'பசி ஆளைக் கொல்லுது. மூளையே வேலை செய்ய மாட்டேங்குது’ என்று புலம்புவோம்.

6.தானம்: கொடுப்பதாக ஒப்புக்கொண்ட தானத்தைப் பற்றி நினைவே வராது. அப்படி ஞாபகமூட்டினாலும், ''அட போப்பா! எப்பவோ சொன்னேன். இப்ப என்ன அதுக்கு? பார்க்கலாம், பார்க்கலாம்...!'' என்போம்.

7.தவம்: நோன்புகளும் விரதங்களும் சாதாரண நாட்களில் சமர்த்தாக இருக்கும். நாம் அபூர்வமாக என்றாவது ஒருநாள் விரதம் இருந்தால், அப்போது பசி படுத்தும்பாடு இருக்கிறதே... அப்பப்பா! 'ரொம்பப் பசிக்குது. சிறுகுடலை பெருங்குடல் திங்குது. உன் பூஜைக்கு உண்டான நைவேத்தியத்தைத் தனியா செஞ்சுக்கோ. முதல்ல, ஒரு உப்புமாவக் கிண்டிக் கொண்டா. அதனால உனக்கு விரத பங்கம் எதுவும் வராது'' என்று கத்தி, உப்புமா வயிற்றுக்குள் இறங்கிய பிறகுதான், நமக்கு ஒரு தெளிவே வரும்.

8.உயர்ச்சி: கல்வி, அழகு, நடவடிக்கைகள், பதவி முதலானவற்றில் 'நான்தான் உயர்ந்தவன்’ என்கிற எண்ணம் தொலையும். நம்மைவிடத் தாழ்ந்தவன் என்று யாரை நினைத்திருந்தோமோ, அவன் முன்னாலேயே போய் வெட்கமின்றி மண்டியிட்டு நிற்போம். பசியின் கொடுமை இது.

9.தாளாண்மை: 'இன்னும் முன்னேற வேண்டும்’ என்கிற ஆர்வத் துடிப்பில் நாம் கடும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம் அல்லவா? அந்த முயற்சிகள் அனைத்தும் பசியின் கொடுமையால் அப்படியே பறந்து போய்விடும்.

10.காமம்: அழகான மனைவி; அன்பான மனைவி; இனிக்க இனிக்கப் பேசுவாள்; அன்பாக அரவணைப்பாள். அப்படிப்பட்டவளிடம்கூட, புத்தி போகாது. அவள் மீது எரிந்து விழுவோம். பசியின் கொடுமையால் காமமும் அடிபட்டுப் போய்விடும்.

பசியின் கொடுமையால் விளையும் இந்தப் பத்து விஷயங்களைச் சொல்வதுதான், 'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்கிற வாக்கு!

இது இடம் பெற்ற நூல் 'நல்வழி’. எழுதியவர் ஒளவையார். 'பாலும் தெளிதேனும்...’ என்று நமக்கெல்லாம் பழக்கப்பட்ட பாடலுடன் தொடங்குகிறது நூல்.

உடம்பு, காலம், ஊழ்வினை, சுகம், வயிறு, தொழில், காவல், வியப்பு, அமைதி, பொய்சாட்சி, ஆடம்பரம், சஞ்சலம், ஒழுக்கம் ஆகியவை பற்றி 40 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எளிமையான தமிழ் வார்த்தைகளில் அரும்பெரும் தகவல்கள் அடங்கிய பாடல்கள் அவை. பசியைப் பற்றியே இதில் பலப்பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. காரணம், பசியின் கொடுமை அவ்வளவு பெரியது!

'உணவை உற்பத்தி செய்! உணவை வீணாக்காதே!’ என்று வேதம் சொல்கிறது. நம்மால் உணவை உற்பத்தி செய்ய முடிகிறதோ, இல்லையோ- அதை வீணாக்காமல் இருந்தாலே போதும்; அதுவே நாம் வேதத்திற்குக் காட்டும் மரியாதை; உழைத்து, அந்த உணவை நமக்கு அளித்த உழவர்களுக்கு நாம் காட்டும் மரியாதை; பழந்தமிழ்ப் பாட்டி ஒளவையாருக்கு நாம் காட்டும் மரியாதை! 'நல்வழி’ காட்டும் நல்வழிப் பாடல் இதோ...

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்

- நல்வழி 26-ஆம் பாடல்

(இன்னும் அள்ளுவோம்...)