Published:Updated:

வினைகள் தீர்க்கும் விஸ்வரூப தரிசனம்!

கதித்தமலை கந்தன்!

பிரீமியம் ஸ்டோரி
வினைகள் தீர்க்கும் விஸ்வரூப தரிசனம்!
##~##
வை
காசி விசாக நாளில், கதித்தமலை முருகக் கடவுளைத் தரிசித்தால், வியாபாரம் விருத்தியாகும்; விவசாயம் தழைக்கும் என்கின்றனர் திருப்பூர் பகுதி மக்கள்!

மலைகளிலும் வனங்களிலும் தவம் செய்யும் அகத்திய மாமுனி, முருகக் கடவுள் கோயில் கொண்டிருக்கும் மலைகளுக்கு வந்து தரிசித்தார். வனங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து தவமிருந்து வழிபட்டார்.

அப்படியாக அகத்திய முனிவர், கதித்தமலை எனும் பகுதிக்கு வந்தார். மலையில்...  இறைத் திருமேனிக்கு தினமும் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்து வந்தார். ஒருநாள், அபிஷேகத்துக்கு நீரின்றித் தவித்தார். 'என்ன செய்வது’ எனக் கலங்கிய வேளையில்... 'முருகா... பூஜை நடக்க நீதாம்பா உதவணும்’ என்று மனதுள் சிவமைந்தனைப் பிரார்த்தித்தார்.

அப்போது அகத்தியருக்கு திருக்காட்சி தந்த முருகக் கடவுள், தன் கரத்தில் உள்ள வேலால், தரையில் ஊன்றினார். அவ்வளவுதான்... வேல் தரையில் பட்ட இடத்தில் இருந்து ஊற்றெனப் பீறிட்டு வந்தது தண்ணீர்! பிறகு அதில் இருந்து தண்ணீர் எடுத்து, இறை விக்கிரகத்தை நீராட்டினார். இதனால் அந்த ஊருக்கு 'ஊற்றுக்குளி’ எனும் பெயர் அமைந்தது. பிறகு 'ஊத்துக்குளி’ என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!  

வினைகள் தீர்க்கும் விஸ்வரூப தரிசனம்!

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்குளி. இங்கேயுள்ளது கதித்தமலை. இந்தப் பகுதி மக்கள், 'கதித்தமலைக்கு எதிர்த்த மலை இல்லை’ என்பார்கள். அந்த அளவுக்கு சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவராகத் திகழ்கிறார் முருகக் கடவுள்.

இந்தத் தலத்து நாயகனின் திருநாமம் ஸ்ரீதண்டபாணி. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுறத் திகழ்கிறது ஆலயம். ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராகவும் காட்சி தருகிறார் உத்ஸவ மூர்த்தி.

வினைகள் தீர்க்கும் விஸ்வரூப தரிசனம்!

அமாவாசை, சஷ்டி, கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமைகள் என மாதத்தின் பல நாட்களும் இங்கு மக்கள் பெருங்கூட்டமாக வந்து தரிசித்துச் செல்கின்றனர். காலையில் நடைபெறும் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டால், தோஷங்கள் விலகி விரைவில் கல்யாண வரம் கைகூடி வரும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!

தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் திருவிழா போல் பக்தர் கூட்டம் களைகட்டி இருக்குமாம்!

திருத்தணி திருத்தலத்தைப் போலவே இங்கேயும் படித்திருவிழா வெகு பிரசித்தம். ஆடி மாத சஷ்டி நாளில், ஒவ்வொரு படிக்கும் தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனை படி பூஜை, அடியவர் பூஜை என்றெல்லாம் சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர் பெருமக்கள்!

கொங்கு தேசத்தில், மலை மீது தேரோட்டம் நடைபெறும் முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்று. கொடியேற்றத்துடன் துவங்குகிற கந்த சஷ்டி விழாவில் தினமும் சத்ரு சம்ஹார ஹோமம், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகியவை சிறப்புற நடைபெறும். முருகக் கடவுளின் படைவீரர்கள் ஒன்பது பேரும், இங்கே சந்நிதிக் கொண்டிருக்கின்றனர்.

வைகாசி விசாக நன்னாளில், ஸ்ரீதண்டபாணித் தெய்வத்துக்குப் பாலபிஷேகம் செய்து பிரார்த்தியுங்கள். அந்தப் பாலைப் போலவே வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் பொங்கித் ததும்பும் என்பது ஐதீகம்!

கட்டுரை, படங்கள்: ரா.அண்ணாமலை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு