Published:Updated:

அழகு முருகனுக்கும் அன்னாபிஷேகம்!

சுயம்புவாக தோன்றிய சுப்ரமணியர்!

பிரீமியம் ஸ்டோரி
அழகு முருகனுக்கும் அன்னாபிஷேகம்!
##~##
தி
ருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில்.

சில நூறு வருடங்களுக்கு முன்பு, இந்த இடத்தில் வன்னி மரம் ஒன்று இருந்தது. திடீரென ஒருநாள், அந்த மரத்தின் கீழே சிறியதொரு கல் வடிவில் சுயம்பு மூர்த்தம் தோன்றியதாம்! ஆரம்பத்தில் அந்தக் கல்லையே கடவுளாகப் பாவித்து, சிறிதான ஓலைக்குடிசை அமைத்து வழிபடத் துவங்கினர் ஊர்மக்கள். பிறகு ஊர்ப் பெரியவர்கள், 'இது முருகப்பெருமான்தான். எனவே அவருக்கு விக்கிரகம் அமைத்து வழிபடுவோம். இந்தச் சுயம்புக்கும் சந்நிதி வைப்போம்’ என்று சொல்ல... அழகே உருவெனக் கொண்டு முருகப்பெருமானின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  

முன்னதாக, விக்கிரகம் அமைக்கலாமா அல்லது சாமி குத்தம் ஏதும் நிகழுமா என்று அருகில் உள்ள பழநி முருகப்பெருமானிடம் உத்தரவு கேட்கப்பட்டதாம். அசரீரியாக அனுமதி கிடைத்ததும், பழநியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இங்கே ஆலயம் எழுப்பி, வழிபடத் துவங்கினார்கள் மக்கள். வன்னி மரத்தடியில் சுயம்புவாகத் தோன்றிய கல்லை சுமார் 60 அடி ஆழத்தில் அமர்த்தி, அதில் பஞ்சலோகத்தால் ஆன கம்பி ஒன்றை வைத்து, அந்தக் குழியை நவதானியங்களாலும் மூலிகைகளாலும் நிரப்பி யந்திரப் பிரதிஷ்டை செய்து, அதன் மேல் முருகப்பெருமானுக்கு சந்நிதி அமைக்கப் பட்டுள்ளது. அன்று முதல் இன்றளவும் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்து மக்களைக் காத்தருள்கிறார் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி!

அழகு முருகனுக்கும் அன்னாபிஷேகம்!

இந்தத் தலத்தில், மாசி மாதத்தில் மகா அன்னாபிஷேகம் சிறப்புறக் கொண்டாடப் படுகிறது. பொதுவாக, அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனிக்குச் செய்வார்கள். ஆனால், இங்கே முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள். அந்த நாளில், ஊர்மக்கள் தங்கள் வீட்டில் இருந்து அரிசி, நெல், பருப்பு என ஏதேனும் தானியங்களை எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த அன்னாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல், முருகப்பெருமானுக்கு கனிகள் மற்றும் பட்சணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வதும் காணக் கிடைக்காத தரிசனம் எனப் போற்றப்படுகிறது.

பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும் தீராத நோயால் அவதிப்படுவோரும் இந்த நாளில் விரதமிருந்து, அபிஷேகம் செய்த அன்னத்தைச் சாப்பிட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்; நோய்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்!

வைகாசி விசாக நாளில், இங்கு நடைபெறும் சத்ரு சம்ஹார சடாக்ஷர ஹோமத்தில் கலந்துகொண்டு, கந்தக் கடவுளைத் தரிசித்தால், தீய சக்தி அண்டாது; எதிரிகள் தொல்லை ஒழியும். அன்று நடைபெறும் லட்சார்ச்சனையில் கலந்துகொண்டு தரிசித்தால், வியாபாரம் விருத்தியாகும்; திருமணத் தடை அகலும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!  

ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன் உத்ஸவர் காட்சி தரும் அழகே அழகு! ஸ்ரீஅமுதகரேஸ்வரர், ஸ்ரீசனீஸ்வரர் (தனிச் சந்நிதியில்), தேவியருடன் நவக்கிரக மூர்த்திகள் ஆகியோரும் அருள்புரிகின்றனர். செவ்வாய்க்கிழமையன்று, தங்கள் ஜாதகத்தை முருகக் கடவுளின் திருவடியில் வைத்து, செவ்வரளிப் பூ சார்த்தி, இரண்டு நெய் தீபமேற்றி வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கட்டுரை, படங்கள்: ரா.அண்ணாமலை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு