Published:Updated:

ஆறு மலர்கள்... ஆறு நைவேத்தியங்கள்!

முருகா... முத்துக்குமரா..!

பிரீமியம் ஸ்டோரி
ஆறு மலர்கள்... ஆறு நைவேத்தியங்கள்!
##~##
டலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவிலும் கடலூரில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவிலும் உள்ளது பரங்கிப்பேட்டை. மகா அவதார் பாபாஜிக்கு திருக்கோயில் அமைந்துள்ள அதே பரங்கிப்பேட்டைதான்!

இங்கேயுள்ள ஸ்ரீமுத்துகுமார ஸ்வாமி கோயில், புராணச் சிறப்புகள் கொண்டது. இந்திரன் வழிபட்டு வரம் பெற்ற அற்புதத் திருவிடம். புராதனச் சிறப்பு கொண்ட ஆலயமும் கூட!  பாபாஜியின் தந்தையார் சுவேதநாதய்யர் பூஜித்து வணங்கிய கோயில் இது!

அழகிய ஆலயம். உள்ளே கருவறையில் அழகே உருவெனக் கொண்டு, ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராக காட்சி தந்தருள்கிறார் ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமி. ஆறுமுகங்களுடன் அற்புதமாகத் தரிசனம் தரும் முருகக் கடவுள், தன்னை நாடி வருவோரின் பாவங்களையெல்லாம் போக்கி அருள்கிறார்!

ஆறுமுகனைத் தரிசிக்க ஆறுபடிகளைக் கடக்கவேண்டும் என்பது இந்தத் தலத்தின் சிறப்பு. கந்தக்கடவுளே பிரதான தெய்வம் என்றாலும் ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவிஸ்வநாதரும் இங்கு தரிசனம் தருகின்றனர். ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி அம்பாள், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீபிரம்மா, சிவ சண்டிகேசர் மற்றும் குக சண்டிகேசர், ஸ்ரீமகாலக்ஷ்மி, அஷ்டபுஜ துர்கை, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீபைரவர், முருகப்பெருமானின் நவவீரர்கள் ஆகியோரையும் இங்கு தரிசிக்கலாம்!

இந்தத் தலத்தில், நவக்கிரகங்களில் சுக்கிரன் பக்தர்களைப்போல் தரிசனம் தருவது விசேஷ அம்சம் என்பர். செவ்வாய்க்கிழமைகளில், சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை, வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீவிசாலாட்சி அம்பாளுக்கு ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, மாதக் கார்த்திகையில் ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெறும்.

ஆறு மலர்கள்... ஆறு நைவேத்தியங்கள்!

இங்கேயுள்ள ஸ்ரீபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், அரளிப் பூமாலை சார்த்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, தொடர்ந்து ஏழு வாரங்கள் நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்கள் யாவும் ஈடேறும்! அதேபோல், வளர்பிறை அஷ்டமி நாளில், ராகுகால வேளையில், அஷ்டபுஜ துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகம் ஆகியவை இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. இந்த நாளில், பரங்கிப்பேட்டை, முட்லூர், சிதம்பரம், புவனகிரி முதலான சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வார்கள். மாசி மக நன்னாளில், இந்தத் தலத்து தீர்த்தக் குளத்தில் நீராடி பித்ருக்களை வணங்குவது சிறப்பு சேர்க்கும் என்பது நம்பிக்கை!  

வைகாசி  விசாக நாளில், சத்ரு சம்ஹார திரிசதி யாகம் மற்றும் அர்ச்சனை விமரிசையாக நடைபெறும். அப்போது வேலுக்கு தேனபிஷேகம் செய்த பிறகு முருகக் கடவுளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுமாம். முருகப் பெருமானுக்கு ஆறு மலர்களால் அர்ச்சனையும் ஆறு வித நைவேத்தியங்களும்  செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும்! பக்தர்களுக்கு பால் மற்றும் பானகம் கலந்த பிரசாதமும் வழங்கப்படும்!

எதிரிகள் தொல்லை, ஜாதக தோஷம், திருமணத் தடை ஆகியவற்றை அகற்றி, நமக்கெல்லாம் ஞானத்தைத் தந்தருளும் ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமியை வணங்கித் தொழுவோம்; வரங்கள் பெறுவோம்!

- மா.நந்தினி
படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு