Published:Updated:

வரம் கிடைக்கும்... வாழ்க்கை செழிக்கும்!

அறுமுகனுடன் அங்காரகன்!

பிரீமியம் ஸ்டோரி
வரம் கிடைக்கும்... வாழ்க்கை செழிக்கும்!
##~##
டபழநி, கந்தகோட்டம், பெசன்ட்நகர் அறுபடைவீடு, குமரன் குன்றம், குன்றத்தூர்... தருமமிகு சென்னையின் மகிமைமிகு முருகன் திருக்கோயில்கள் வரிசையில் மற்றுமொரு கோயிலும் உண்டு. அது அமைந்திருப்பது, சென்னை- மேற்கு சைதாப்பேட்டையில்!

இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசிவசுப்ர மணிய ஸ்வாமியின் மகிமையைப் பற்றி கதை கதையாய்ச் சொல்கிறார்கள் பக்தர்கள். ''சுமார் நூறு வருடங்களுக்கு முன், ஒருநாள் நள்ளிரவில் கோயிலுக்குள் திருடன் ஒருவன் நுழைந்துவிட்டான். முருகப்பெருமானின் நகைகளைத் திருடும் நோக்கில், ஸ்வாமியின் திருமேனியில் கை வைத்தானோ இல்லையோ... அவனது பார்வை பறிபோனது. அந்தத் திருடன் கதறினான். அதற்குள், விஷயம் அறிந்து பொதுமக்களும் பக்தர்களும் அங்கே கூடிவிட்டார்கள். திருடனை என்ன செய்யலாம் என யோசித்தபோது, 'முருகனே அவனைத் தண்டித்து விட்டார்; நாம் ஒன்றும் செய்யவேண்டாம்’ என்று எல்லோரும் ஏகமனதாகத் தீர்மானித்து அவனை விட்டுவிட்டார்கள். அதன் பிறகு, எங்கள் தெய்வத்தின் மகிமை இன்னும் அதிகமாகப் பரவியது.'' என்கிறார்கள் பரவசத்துடன்!

வரம் கிடைக்கும்... வாழ்க்கை செழிக்கும்!

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் செங்குந்தர் சமூகத்தவரால் அமைக்கப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள். அன்று தொட்டு இன்று வரை அவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருவதால், இந்தப் பகுதிக்கு செங்குந்தர் தோட்டம் என்று பெயர் வந்ததாம். துவக்கத்தில் முருகப்பெருமான் சந்நிதியுடன் மட்டுமே திகழ்ந்த ஆலயம், பிற்காலத்தில் பெரிய ஆலயமாக பரிணமித்தது.

தினமும் நான்கு கால பூஜை. விழாக்கள் இங்கே விசேஷம். மாசி பிரம்மோத்ஸவம் 15 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளும் கந்தனைக் காண கண்ணிரண்டு போதாது. இந்த விழாவின் முக்கிய அம்சம் கந்தனின் திருக்கல்யாணம். இந்த வைபவத்தைத் தரிசிக்க, கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், சித்திரை வருடப்பிறப்பு, திருக்கார்த்திகை, ஆடி மற்றும் தை கிருத்திகை தினங்களிலும் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளுமாக கோயில் களைகட்டும். ஆடிப்பூரத்தில் 108 திருவிளக்கு பூஜை சிறப்புற நடைபெறுகிறது.

ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீபைரவர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். அங்காரகனாகிய செவ்வாய் தனிச்சந்நிதியில் அருள்வது சிறப்பு. இவரை வழிபட வீடு- நிலப் பிரச்னைகளும், சகோதர பகையும் நீங்கும்; வாழ்வில் சந்தோஷம் பெருகும். நெய் தீபம் ஏற்றி வைத்தும், சிவப்பு நிற வஸ்திரம் சார்த்தியும் அங்காரகனை வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். ஸ்ரீபைரவரை வேண்டிக் கொண்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

இங்கு வந்து முருகனைப் பிரார்த்திக்கும் பக்தர்கள், தங்களது பிரார்த்தனை நிறைவேறி யதும் உப்பும் மிளகும் கொண்டு வந்து காணிக்கை செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வெள்ளி- செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கிறார்கள்.

நீங்களும், வைகாசி விசாகத்தில் இந்தக் கோயிலுக்குச் சென்று மனமுருகி சிவசுப்ரமணியரை வழிபட்டு, சிந்தை மகிழ வரம் வாங்கி வாருங்கள்.

       - சா.வடிவரசு
படங்கள்: க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு