பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
'ஒ
ருவருக்கு ஆணவம் மட்டும் இருந்துவிட்டால், வேறு எதுவும் அவருக்கு அழிவைத் தேடித் தர வேண்டியதில்லை’ என்பார்கள். ஸ்ரீபிரம்மாவுக்கு, படைப்புத் தொழில் செய்வதால் கர்வம் தலைக்கேறியது. செருக்குடன் இருந்த பிரம்மா, பல இன்னல்களுக்கு ஆளானார். பின்னர், கர்வம் தொலைந்தால்தான் படைப்புத் தொழிலைக் குறையறச் செய்ய முடியும் என உணர்ந்தவர், சிவனாரிடம் மனமுருகிப் பிரார்த்தித்தார்.

'காவிரியின் தென்கரையில் கரவிந்த வனம் உள்ளது. அங்கே சென்று, லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா’ என அருளினார் சிவபெருமான்.

அதன்படி கரவிந்த வனத்துக்கு வந்தார் பிரம்மதேவன். கரவிந்தம் என்றால், களா மரம் என்று அர்த்தம். அது, களா மரங்கள் சூழ்ந்த வனப் பகுதி என்பதால் களா வனம் என்றும், கரவிந்த வனம் என்றும் அழைக்கப்பட்டது. அந்த வனத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, கடும் தவத்தில் ஈடுபட்டார் ஸ்ரீபிரம்மா. அவரின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு அருளினார்.

ஆலயம் தேடுவோம்!

மலையத்துவஜன் எனும் மன்னன், தன் குருநாதரால் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக திருக்களாவுடையாரை வந்து வணங்கித் தொழுதான்; சாபம் நீங்கப் பெற்றான். களாமரங்கள் சூழ்ந்த வனத்தில் இருந்ததால் இங்கேயுள்ள சிவனாருக்கு, திருக்களாவுடையார் எனும் திருநாமம் அமையப் பெற்றது. பிறகு, அந்தப் பகுதியும் உடையார்கோவில் என வழங்கப்பட்டது.

உலக மக்கள் செய்கிற பாவத்தின் பாரம் தாங்காமல் நொந்து போன பூமாதேவி, இங்கு வந்து சிவனாரை வணங்கி, வரமும் பலமும் பெற்றதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

சுவரதன் எனும் மன்னனுக்கு, தேவசர்மன் எனும் அந்தணர் சாபம் கொடுத்தாராம். அந்தச் சாபம் நீங்குவதற்காக, மன்னன் சுவரதன் வழிபட்ட தலமும் இதுதான்! வீரசோழன் எனும் மன்னன், பசுவைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக இங்கு வந்து வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றதுடன், அந்த சந்தோஷத்தின் அடையாளமாக இங்கு மிகப்பெரிய திருவிழா எடுத்தான்.

ஆலயம் தேடுவோம்!

கௌதம முனிவரால் இந்திரனுக்கு சாபம் ஏற்பட... இங்கு வந்து தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவ வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றான் இந்திரன்.

இத்தனை பெருமைகள் கொண்ட திருத்தலம், உடையார்கோவில். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான தலங்களில் இதுவும் ஒன்று!

தஞ்சாவூரில் இருந்து நீடாமங்கலம் செல்லும் வழியில், சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது உடையார்கோவில். மெயின் சாலையில், இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையில், அலங்கார வளைவு அமைந்துள்ளது. அப்படியெனில் இந்தக் கோயில் ஒரு காலத்தில் எத்தனைச் சிறப்புகள் கொண்டதாகவும் கொண்டாட்டங்கள் நிறைந்ததாகவும் இருந்திருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்.

களாச் செடியை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோயில். எனவே இந்தத் தலத்தின் நாயகனாம் சிவபெருமானுக்கு, தமிழில் திருக்களாவுடையார் என்றும், வடமொழியில் கரவந்தீஸ்வரர் என்றும் திருநாமங்கள் அமைந்தன.

ஆலயம் தேடுவோம்!

கோயிலைச் சுற்றிலும் நான்கு திருக் குளங்கள் அமைந்துள்ளன. இதனை திரிபுவன மாதவிப் பேரேரி என்பார்கள். வேத புஷ்கரணி, வேத தீர்த்தம் என்றும் பெயர்கள் உள்ளன. அதாவது, நான்கு வேதங்களும் நான்கு தீர்த்தங்களாக அமைந்துள்ளதாகச் சொல்வர்.

கோயிலுக்கு முன்னே உள்ளது ரிக்வேத தீர்த்தம். பங்குனி மாதப் பௌர்ணமி நாளில் இதில் நீராடினால், மங்காத புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்! கோயிலுக்குத் தெற்கே உள்ள யஜுர்வேத தீர்த்தத்தில், ஆனி மாத வளர்பிறை அஷ்டமி மற்றும் சூரிய - சந்திர கிரகண நாளில் வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பர்.

ஆலயம் தேடுவோம்!

மேற்குப் பகுதியில் உள்ள சாம தீர்த்தத்தில் திருவாதிரை, பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் நீராடினால், ஞானத்தை அடையலாம். வடக்கில் உள்ள அதர்வண வேத தீர்த்தத்தில், அமாவாசை முதலான புனித நாட்களில் நீராடினால் சகல சம்பத்துகளும் பெறலாம்; சந்ததிகள் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்!

ஆக... தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகிய பெருமைகள் கொண்ட அருமையான சிவாலயம் இது! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீதர்மாம்பாள். எங்கெல்லாம் நீதி மறுக்கப்படுகிறதோ, அநீதி தலைவிரித்தாடுகிறதோ... இவளை நினைத்து மனமுருகிப் பிரார்த்தித்தால் போதும்... தர்மத்தை நிலைநாட்டித் தருவாள், இந்த ஒப்பற்ற தேவி!

முதலாம் ராஜேந்திரன் சோழன் காலத்துக் கல்வெட்டுகள் இங்கு காணக் கிடைக்கின்றன. குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், குலசேகர பாண்டிய மன்னன் ஆகியோர் இந்தத் தலத்தின் பெருமையை உணர்ந்து, வழிபட்டுள்ளனர். ஏராளமான நிலங்களை தானமாகத் தந்துள்ளனர். பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கியிருக்கின்றனர்.

இத்தனை சாந்நித்தியம் மிக்க கோயிலில், 12.12.59 அன்று கும்பாபிஷேகம் நடந்ததுடன் சரி! அதன்பின், கிட்டத்தட்ட 52 வருடங்களாக கும்பாபிஷேகமும் நடைபெறாமல், திருப்பணி களும் செய்யப்படாமல் களையிழந்து காணப் படுகிறது ஆலயம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகன்னிமூலை கணபதி, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீவேதபுரீஸ்வரர், ஸ்ரீஆனந்தபுரீஸ்வரர், ஸ்ரீசதுர்வேதபுரீஸ்வரர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீபைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கேயுள்ள ஸ்ரீசரஸ்வதி தேவியை மாதந்தோறும் புனர்பூச நட்சத்திர நாளில், நவமி திதி மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் வழிபடுவது சிறப்பு. முழுத்தாமரைப் பூ அல்லது 28 வாழைப்பூ மடல்கள் கொண்டு மாலை அணிவித்து வழிபடுவது கல்வியில் உன்னத நிலையைத் தரும் என்பது ஐதீகம்!

சதய நட்சத்திரக்காரர் களுக்கு உரிய திருத்தலம் என்று இந்தக் கோயிலைச் சொல்கிறார்கள். மற்ற நட்சத்திரக்காரர்களும் வந்து வணங்கினால், சகல பாபங்களும் நீங்கி, ஐஸ்வரிய பலத்துடன் வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனாலும் என்ன... பொலிவை இழந்து புனருத்தாரணத்துக்காகக் காத்திருக்கிறது திருக்கோயில்.  

நம்மைக் கைதூக்கி உயர்த்திவிடும் ஸ்ரீகரவந்தீஸ்வரரின் ஆலயம் களையிழந்து இருக்கலாமா? ஸ்ரீகரவந்தீஸ்வரர் கோயில் திருப்பணிக்கு கை கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா?

தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்டும் ஸ்ரீதர்மாம்பாள் குடிகொண்டிருக்கிற ஆலயம் சிதிலமுற்று, வழிபாடுகள் குறைந்து இருப்பது நீதியாகுமா? தர்மம் தழைக்கவும் தேசம் சிறக்கவும் நம்மால் இயன்ற உதவியைச் செய்வதுதானே, தர்மமாகும்?!

ஆயிரம் வருடங்கள் பழைமை கொண்ட கோயிலுக்கு அறப்பணிகள் செய்து, ஸ்ரீகரவந் தீஸ்வரரின் பேரருளுக்குப் பாத்திரமாவோம். நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் ஸ்ரீகரவந்தீஸ்வரர்!

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு