ரதசப்தமி... திருப்பதியில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டு புதிய சாதனை! #Tirupati

ரதசப்தமியில் குவிந்த பக்தர்களின் எண்ணிக்கை, திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் , நீர்மோர், தண்ணீர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
தை மாதம் உத்தராயனப் புண்ணிய காலத்தில் வரும் சப்தமி திதி, ரதசப்தமியாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருப்பதியில் ஒரு நாள் பிரம்மோற்சவ வைபவம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ரத சப்தமி பிரம்மோற்சவம், கடந்த சனிக்கிழமை திருமலை திருப்பதியில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவையொட்டி சின்னசேஷ வாகனம், சூரிய வாகனம், கற்பகவிருட்ச வாகனம், கருட வாகனம் மற்றும் சந்திர பிரபை முதலிய வாகனங்களில் வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
புரட்டாசி மாத பிரம்மோற்சவ நிகழ்ச்ச்யைக் காணத்தவறியவர்கள், இந்த பிரம்மோற்சவத்தைக் கண்டுகளிப்பர். ஒரே நாளில் பெருமாளை அனைத்து வாகனங்களிலும் தரிசிப்பது மிகவும் புண்ணியமாகக் கருதப்படும். திருப்பதியின் நான்கு மாட வீதிகளும் சுவாமி ஊர்வலத்துக்காக மிகப்பெரிய அளவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்ததுபோல் பக்தர்கள் பெருமளவில் திருமலைக்குக் குவிந்தனர். கிட்டதட்ட
2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இது, திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கு அன்னதானம் , நீர்மோர், தண்ணீர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தபோதிலும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்தனர்.