நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.

-  திருமங்கையாழ்வார்

##~##
கா
விரியின் பாய்ச்சலால் வளம் கொழிக்கும் சோழ தேசத்தின் அந்தப் பகுதிக்கு ஆலி நாடு என்று பெயர். அங்கே பூஞ்சோலை ஒன்றில், முகவாட்டத்துடன் அமர்ந்திருந்தாள் பெண்ணொருத்தி.

நறுமணம் கமழ இதழ் விரித்திருந்த ஒரு பூவை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த மலரில், துணையுடன் வந்து அமர்ந்து மகிழ்ச்சியாக தேன் உறிஞ்சும் வண்டைக் கண்டவளுக்கு, தன் காதலன் அருகில் இல்லையே என்ற ஏக்கமும் வருத்தமும் அதிகமானது!

வண்டை அருகில் அழைத்தாள். ''என் தலைவனைப் பிரிந்து ஊணும் உறக்கமும் இல்லாமல் நான் தவித்துக் கிடக்கிறேன். நீயோ, உன் காரியமே கண்ணாக தேன் உறிஞ்சிக் கிடப்பது சரியா?'' என்று உரிமையோடு கோபித்துக் கொண்டாள்.

அதுமட்டுமா?

''போ... என் நெஞ்சம் நிறைந்த நாயகனாம் வயலாலி மணவாளனிடம் போய்... அவரை என்னிடம் அழைத்து வரவேண்டும் என்றில்லை... 'உன்னவள் இப்படித் தவித்துக் கிடக்கிறாள்’ என்று என் நிலைமையை அவர் காதில் போட்டு வா'' என்று அந்த வண்டையே தூது போகச் சொல்லி வேண்டிக்கொண்டாள்.

அதுசரி, யார் அந்தப் பெண்? வயலாலி மணவாளன் என்று அந்தப் பெண்ணின் நல்லாள் குறிப்பிடும் காதலன்தான் யார்?

ஆலிநாடு என்ற பெயரைக் கேட்டதுமே உங்களுக்குத் தெரிந்திருக்குமே... இதில் சம்பந்தப் பட்டிருப்பது நம் திருமங்கை ஆழ்வார்தான் என்று!

ஆமாம் அவரேதான்! தன்னையே காதலியாக்கி, தன்னுடைய தலைவனாம் திருவாலிதிருநகர் உறையும் பெருமாளிடம்... தனது பக்தியை, ஆலி நாயகனின் மீதான தனது காதலை எடுத்துச்சொல்ல, வண்டை தூதனுப்புகிறார் தனது பாசுரத்தில்!

திருவாலிதிருநகர்- சோழநாட்டு திவ்விய தேசங்களில் ஒன்றான இந்தத் தலம், திருவாலி என்றும் திருநகரி என்றும் இரண்டாகத் திகழ்கிறது. இதில், பரந்தாமக் கடவுள், ஸ்ரீலட்சுமிநரசிம்மமாக அருள்வது திருவாலி கோயிலில்!

இடியாய் ஒலித்த நரசிம்மத்தின் கர்ஜனையைக் கேட்டுக் கதிகலங்கிப் போனார்கள் அமரர்கள். அசுரனை அழித்த பின்பும் ஆக்ரோஷம் அடங்காத ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியைப் பார்க்கவும் பயம் அவர்களுக்கு. ஸ்வாமியின் சீற்றம் நீடித்தால், அது இந்த உலகுக்கு நல்லதல்லவே! என்ன செய்யலாம்?!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தந்தையின் கோபத்துக்கு அஞ்சும் குழந்தை என்ன செய்யும்? தாயிடம் ஓடிச்சென்று, அவள் மடியில் அடைக்கலம் புகுந்துகொள்ளும். அப்படித்தானே?

தேவர்களும், ரிஷிகளும் அன்னையைத் தேடி ஓடினார்கள்; அலைமகளிடம் சரண் புகுந்தார்கள். தந்தையின் சீற்றம் தணித்து, தரணி செழிக்க திருவருளைப் பெற்றுத் தரும்படி திருமகளை வேண்டிக்கொண்டார்கள்.

தாயாரும் வந்தார். 'போதும் உங்கள் கோபம்; சினம் தணிந்து நம் குழந்தைகளுக்கு திருவருள் புரியுங்கள்’ என்று கண்களாலேயே வேண்டிக் கொண்டார். தேவியின் கருணை முகத்தைக் கண்டதும் ஸ்வாமியின் கோபம் காணாமல் போனது. அலைமகளை அருகில் அழைத்து, அணைத்துக்கொண்டார்; தன் நாயகியை வலது தொடையில் அமர்த்தி, அருட்கடாட்சம் புரிந்தார். இவ்வாறு, தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து அருள்புரிந்த தலம் என்பதால், இந்த ஊருக்கு திருஆலிங்கனம் என்று பெயராம் (ஆலிங்கனம்- அணைத்தல்). அதுவே, திருவாலி என்றானது என்கிறார்கள். லட்சுமிதேவியுடன், நரசிம்ம கோலத்தில் பெருமாள் வீற்றிருப்பதால், 'லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்’ என்றும் சிறப்பிக்கிறார்கள் இந்தத் தலத்தை.

திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள் பாலிக்க வேண்டும் என பெருமாளை இடை விடாது பிரார்த்தித்தாளாம் லட்சுமிதேவி. மாலவனும் இசைந்தார். அவரின் அறிவுரைப்படி, திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாகப் பிறந்து வளர்ந்தாளாம் திருமகள்.

தக்க தருணத்தில் பெருமாளும் பூலோகம் வந்து அவளை மணந்துகொண்டார். இந்த புதுமணத் தம்பதிதான், திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்துக்கு வரும்போது திருமங்கை மன்னனிடம் மாட்டிக் கொண்டார்கள்.

அப்புறம் நடந்ததுதான் தெரியுமே... கொள்ளை கொள்ள வந்த, ஆலிநாடனாம் திருமங்கை மன்னனின் மனதை, தான் கொள்ளை கொண்டதுடன், எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தும் அருள்புரிந்தார் பெருமாள்.

இப்படி திருமங்கை ஆழ்வாரின் பொருட்டு, திருமகள் பூமியில் பிறக்க, தானும் பூலோகம் வந்து அவளை மணந்து ஆலிங்கனம் செய்தருளியதால் இந்தத் தலத்துக்கு திருவாலி என்று பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்.

பங்குனி உத்திரப் பெருவிழாவையட்டி இங்கு நடைபெறும் வேடுபறி உற்ஸவம் (இந்த வருடம் மார்ச் 18-ஆம் நாளன்று இந்த வைபவம் நடைபெறுகிறது) பிரசித்தம். அப்போது, பெருமாள்- பிராட்டியின் மணக்கோலத்தையும், திருமங்கை மன்னனுக்கு பெருமாள் மந்திரோபதேசம் செய்யும் வைபவத்தையும் காணக் கண்கோடி வேண்டும்!

நாகை மாவட்டம், சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருநகரி. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாலி திருக்கோயில். ஆழ்வார் பாசுரங்களில் சொல்லப்பட்ட வயலாலி மணவாளன் திருவாலியில் இல்லாமல் திருநகரியில் இருப்பதால், இரண்டும் ஒரே திவ்வியதேசமாகக் கருதப்படுகிறது.

புராதனமான திருவாலி ஆலயத்தில், அஷ்டாட்சர விமானத்தின் கீழ், மேற்கே திருமுக மண்டலமாக அருள் தரிசனம் தருகிறார் ஸ்ரீலட்சுமி நரசிம்மர். வலது தொடையில் தாயாரை அமர்த்தி அணைத்தவாறு சேவை சாதிக்கிறார்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

இக்கோயில் தாயாரின் திருநாமம்- அமிர்தகடவல்லி. உற்ஸவர் ஸ்ரீதிருவாலி நகராளன் எனும் திருப்பெயர் கொண்டு திகழ்கிறார். பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது திருவாலி.

ஆமாம்... திருமங்கையாழ்வார் ஆராதித்த ஐந்து நரசிம்ம மூர்த்திகளில்... திருவாலியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில்கொண்டிருக்க, திருநகரி அருள்மிகு வேதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீஹிரண்ய நரசிம்மரும், ஸ்ரீயோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீஉக்ரநரசிம்மரை அருகிலிருக்கும் திருக்குறையலூரிலும், ஸ்ரீவீரநரசிம்மரை மங்கைமடத்திலும் தரிசிக்கலாம்.

திருவாலி வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் இந்த ஐந்து நரசிம்மர்களையும் மனமுருக வழிபட்டுச் செல்கிறார்கள். ஒருவரைத் தரிசிப்பதே உன்னதம் எனில், ஐந்து நரசிம்மர்களைத் தரிசிப்பது என்பது எவ்வளவு பெரும் பாக்கியம்?!

திருவாலி: இல்லத்தில் லட்சுமிகடாட்சம் பெருகவும் வறுமைகள் நீங்கவும், தடைநீங்கி திருமணம் கைகூடவும் திருவாலியில் உறையும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுகிறார்கள்.

திருநகரி: திருவாலியின் அருகிலேயே உள்ள தலம் இது. மூலவர்- ஸ்ரீவேதராஜ பெருமாள். இங்கு, திருமங்கையாழ்வாருக்கு கல்யாண கோலம் காட்டியவர் என்பதால், ஸ்ரீகல்யாண ரங்கநாதராக அருள்புரிகிறார் உற்ஸவர். இவரும் கல்யாண வரம் தருவதில் வள்ளலாம்.  

திருமங்கை ஆழ்வாருக்கும் தனிச்சந்நிதி உண்டு. கார்த்திகை நட்சத்திர நாளில் ஆழ்வாரை வழிபட, தெய்வ பலம் கூடும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது  நம்பிக்கை.

இங்கு அருளும் ஸ்ரீயோகநரசிம்மர் சாந்நித்தியமானவர். பூமி தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டியும், இழந்ததை மீட்கவும், செல்வ கடாட்சம் நிலைத்திருக்கவும் சகல சௌபாக்கியங்கள் பெற வேண்டியும் இவரை வழிபடுவது சிறப்பு.  சத்ரு பயம் நீங்கவும், தீவினைகள் அண்டாமல் இருக்கவும் ஸ்ரீஹிரண்ய நரசிம்மரை வழிபடுகின்றனர் பக்தர்கள்.

திருக்குறையலூர்: திருவாலி தலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். எதிலும் குறையில்லாத பூரணமான தலம் என்பதால் இப்படியரு திருப்பெயராம் இந்த ஊருக்கு. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஉக்கிர நரசிம்மர், பக்தர்கள் வேண்டுதலை ஏற்று, சடுதியில் அருள்பாலிக்கும் நாயகராம். நவக்கிரக தோஷம், நீங்கவும் தீவினைகள் நெருங்காமல் இருக்கவும் இவரை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இவருக்கு பானக நைவேத்தியம் செய்து 3 முறை வலம் வந்து வழிபட பித்ரு தோஷங்கள் விலகுமாம்.

திருமங்கை மடம்: இந்தத் தலம், திருக்குறையலூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு அருளும் ஸ்ரீவீரநரசிம்மரை வழிபட, பகைவர்களால் ஏற்படும் பகை அகலும்; வாழ்க்கை சுபிட்சம் அடையும் என்கிறார்கள் பக்தர்கள்.

பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் மாலை வேளையில் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங் களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம்.

ஞானமும் செல்வமும் வாரி வழங்கும் திருவாலிதிருநகரி உறையும் எம்பெருமானின் மீது காதலாகி கசிந்துருகினார் திருமங்கை ஆழ்வார்! குலசேகர ஆழ்வாரோ, அந்த அருளாளனை பிள்ளையாக பாவித்து...  'ஆலிநகர்க்கதிபதியே அயோத்திமனே தாலேலோ’ என்று தாலாட்டுப் பாடி சிறப்பிக்கிறார்! இந்த அடியவர்களின் வழியற்றி, நாமும் திருவாலி திருநகரி தலங்கள் உட்பட பஞ்ச நரசிம்ம தலங்களையும் தரிசித்து வழிபட்டு, வரம் பெற்று வருவோம்!

- அவதாரம் தொடரும்...