நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - பத்ராசல ராமதாஸர்

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - பத்ராசல ராமதாஸர்

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - பத்ராசல ராமதாஸர்
புனித பூமியில் மனித தெய்வங்கள்! - பத்ராசல ராமதாஸர்

கோல்கொண்டா கோட்டையில், கொடுஞ் சிறையில் அடைபட் டிருந்தார் அவர். கண்கள் மூடிய நிலை யிலும்கூட, ஸ்ரீராமனின் அழகிய திரு வுருவை அவரால் தரிசிக்க முடிந்தது. மனம் முழுக்கப் புருஷோத்தமனே நிறைந்திருந்தான். உதடுகள் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருந்தன. நாட்கள் மாதங்களாயின; மாதங்கள் வருடங்களைக் கடந்தன.

சிறைக் கொடுமையில் தவித்தவர், தன்னைக் காத்தருளும்படி, கவிதைகளால் ஸ்ரீராமனைப் பிரார்த்தித்தார். 'ஸ்ரீராமா, உனக்கொரு ஆலயம் அமைத்து, அதில் உன்னை எழுந்தருளச் செய்து, வைரங்கள் இழைத்த மணிமகுடம் அணிவித்தேனே... என்னிடம் ஏனிந்தப் பாராமுகம்?’ எனப் பாடிப் புலம்பினார். பிறகு சீதையிடம், 'பளபளக்கும் பச்சை மணிஹாரம் அணிந்து, அலங்காரமாகக் காட்சி தரும் தாயே! அந்த அணிகலன் உன்னுடைய தந்தை ஜனக மகாராஜா செய்ததா? இல்லை, தசரத மகாராஜா தந்தாரா? அது ஆயிரம் பல்லாயிரம் வராகன் செல விட்டு, இந்த எளியவனால் அணிவிக்கப் பட்டது என்பதை மறந்துவிடாதே! உன்  அருமைநாயகனிடம், என் மீது கருணைக் காட்டச் சொல்'' எனக் கதறிக் கண்ணீர் விட்டார். தொடர்ந்து, ''கொடுமை தாங் காமல் கதறிவிட்டேன். என்னை மன்னி யுங்கள்'' என மன்றாடினார்.  

யார் இவர்? அவருக்கு ஏனிந்தச் சிறைத் தண்டனை?

கி.பி. 1620. ஆந்திரத்தின் நெலகொண்டபள்ளி  எனும் கிராமத்தில், லிங்கண்ண மூர்த்தி- காமாம்பா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. கஞ்செர்ல கோபராஜு எனப் பெயரிட்டு வளர்த்தனர் பெற்றோர்; கோபண்ணா என்று செல்லமாக அழைத்தனர். தாய்மொழியாம் தெலுங்கிலும் சம்ஸ்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றிருந்த கோபண்ணா, இறைநாமத்தைச் சொல்லும் அற்புதக் கவிதைகளை இயற்றினான். இல்லறமே நல்லறம் எனப் பெற்றோர் உபதேசிக்க, நற்குணவதி ஒருத்தியை மனைவியாகப் பெற்றான்.

மகான் கபீர்தாசர், ஒருமுறை கோபண்ணாவின் கனவில் தோன்றி, ராமநாம உபதேசத்தை அருளினார். அன்று, கோபண்ணாவின் வாழ்க்கை திசை திரும்பியது. எந்நேரமும் ராமநாமத்தை உச்சரித்து வந்தார்; ராம பக்தியில் மூழ்கிப்போனார். ஸ்ரீராமனது அடியவர் களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யும் புண்ணிய காரியமே வாழ்க்கை எனக் கொண்டு வாழ்ந்தார்.

##~##
ஏற்கெனவே வறுமை சூழ்ந்த நிலை. இதில் அன்னதானமும் செய்ய மிகுந்த சிரமப்பட்டார் கோபண்ணா. அவரின் தாய்மாமன் அக்கண்ணா என்பவர், ஹைதராபாத் தேசத்தை ஆட்சி செய்த இஸ்லாமிய அரசன் தானேஷாவிடம் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் மூலம், வரி வசூலிக்கும் தாசில்தார் வேலை கிடைத்தது கோபண்ணாவுக்கு! அந்த வேலையைச் செவ்வனே செய்து வந்தார் கோபண்ணா. அன்பு, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தவர், நியாயமான முறையில் வரி வசூலித்து, அரசு கஜானாவுக்கு வழங்கினார்.

பத்ராசலம் எனும் கிராமத்தில், கோதாவரி நதிக்கரையில், வன வாசத்தின்போது  குன்றின்மீது பர்ணசாலை அமைத்து, சீதையுடனும் லட்சுமணனுடனும் ஸ்ரீராமர் தங்கியிருந்தாகச் சொல்கிறது புராணம். அங்கே, ஸ்ரீராமருக்குக் கோயில் அமைந்துள்ளது. வேலைநிமித்தமாக அங்கே சென்ற கோபண்ணா, ஸ்ரீராமனை மனமுருகி வழிபட்டார்.

அந்த ஆலயம், மிகவும் சிதிலமடைந்திருந்தது. மதிலும் மண்டபங்களும் இடிந்து, சுற்றிலும் புல்பூண்டு மண்டிக் கிடந்தது. இதைக் கண்டு வருந்திய கோபண்ணா, அந்தக் கோயிலைச் சீரமைக்கவேண்டும் என உறுதிபூண்டார். அந்த ஊர்மக்கள் தங்களால் இயன்ற பொருள் உதவியைத் தர, தன்னிடம் இருந்த கொஞ்சநஞ்ச சொத்துக்களையும் விற்றுத் திருப்பணிக்குச் செலவிட்டார். ஆனாலும், இன்னும் அதிக பணம் தேவைப்பட்டது. என்ன செய்வது எனும் சிந்தனையில் இருந்தவருக்கு, வரிவசூல் செய்து, கஜானாவில் சேர்ப்பதற்காகத் தன்னிடமிருந்த பணம் நினைவுக்கு வந்தது. 'அந்தப் பணத்தைக் கோயிலுக்குச் செலவு செய்துவிட்டு, அறுவடை முடிந்ததும் அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, கஜானாவில் சேர்த்துவிடுவோம்’ என எண்ணம் கொண்டவர், மக்களின் ஆதரவுடன் சுமார் 6 லட்சம் ரூபாயைக் கோயில் திருப்பணிக்கு வழங்கினார்.

பிறகென்ன?! 1652-ஆம் வருடத்தில், அந்தப் பகுதியில் உளிகளின் ஓசையும் பாறை பிளக்கும் சப்தமும் கேட்கத் துவங்கின. கொடிமரம், பிராகாரங்கள், மண்டபங்கள், கருவறை என, அங்கே ஸ்ரீராமருக்கு அழகிய ஆலயம் உருவானது. கோயிலின் அழகைக் கண்டு நெகிழ்ந்த மக்கள், கோபண்ணாவை ராமதாஸர் எனப் போற்றினர்.  

இந்த நிலையில், வரிப் பணத்தைக் கொண்டு கோயில் கட்டிய சேதி தெரிந்து கொதித்துப் போனான் தானேஷா. ராமதாஸரைக் கைது செய்து, ஹைதராபாத்தில் இருந்த கோல்கொண்டா கோட்டைச் சிறையில் அடைத்து, வரி வசூல் செய்த பணத்தை உடனே திருப்பித் தரும்படி கொடுமைப்படுத்தினான். சுமார் 12 வருடங்களைச் சிறையிலேயே கழித்தார் ராமதாஸர். அப்போதுதான், ஸ்ரீராமரிடமும் ஸ்ரீசீதையிடமும் தன்னைக் காத்தருளும்படி பாடி வேண்டினார் ராமதாஸர். 'ஓ ராம நீ நாம ஏமி ருசிரா’, 'ராமசந்த்ருலு நாபாய்’, 'நனுப்ரோவமனி செப்பவே சீதம்ம தல்லி’ போன்ற, தெலுங்கு கீர்த்தனங்கள் மூலம், ஸ்ரீராமனின் திருவடிகளைச் சரணடைந்தார்.

இறைவனின் திருவுளம் கனிந்தது. ஒரு நள்ளிரவில், கம்பீரத் தோற்றமும் கொண்ட இரண்டு இளைஞர்கள், அரண்மனையில் தூங்கிக் கொண்டிருந்த மன்னன் தானேஷாவை எழுப்பினர். கண்களைத் திறந்தவன், சர்வ ஒளியுடன் திகழும் இளைஞர்களைக் கண்டு அதிர்ந்தான். 'நாங்கள் ராம்ஜீ, லக்ஷ்மண்ஜீ. கோபண்ணாவின் பணியாட்கள். அவர் செலுத்தவேண்டிய பணத் தைக் கொடுக்க வந்துள்ளோம்’ என்று சொல்லி, பையிலிருந்த தங்க நாணயங்களை அரசனுக்கு எதிரே கொட்டினார்கள்.  ஸ்ரீராம முத்திரை பதித்த அந்த நாணயங்களின் பேரொளியில், மன்னனின் கண்கள் கூசின; ஆச்சரியமும் அதிர்ச்சியும் மேலிட நின்றவனிடம், பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீது தரும்படி கேட்டனர். மன்னன் தந்த ரசீதை, சிறைச்சாலை அதிகாரியிடம் தந்துவிட்டு மறைந்தனர்.

திகைப்பும் வியப்புமாக சிறைச்சாலைக்கு ஓடோடி வந்தான் மன்னன்; ராமதாஸரின் பாதம் பணிந்தான். தான் பெற்ற தங்க நாணயங்களை அவரது காலடியில் சமர்ப்பித்து, மன்னிப்புக் கேட்டான்; விடுதலையும் செய்தான்.

பணத்தைச் செலுத்தியது ஸ்ரீராமனே என அறிந்து நெக்குருகிப் போனார் ராமதாஸர். பிறகு பத்ராசலம் சென்றவர், அங்கேயே தங்கி, இறைவ னுக்கும் ஏழைகளுக்கும் தொண்டு செய்தார்; 1688-ஆம் வருடம் ஸ்ரீராமனின் திருவடியில் கலந்தார்.

'ராமச்சந்திர மூர்த்தியின் பரம பக்தனாக விளங் கும் ராமதாஸரைப் போற்றி வணங்குகிறேன்’ என மகான் தியாகராஜர், தன்னுடைய கீர்த்தனையில் புகழ்ந்ததுபோல, ராம பக்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த பத்ராசல ராமதாஸரின் ராமபக்திக்கு ஈடேது; இணையேது!

(தரிசிப்போம்)