நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசை தினங்களில் சிராத்தம் செய்ய இயலாதவர்கள், அன்னதானம் செய்யலாமா?

- எம்.முருகேசன், திருச்சி-21

தெய்வாதீனமான தடங்கல், எதிர்பாராத தடங்கல், விபத்தில் சிக்குதல், உடல் நலம் குன்றுதல் ஆகிய சூழல்களில் உள்ளவர்கள், 'செய்ய இயலாதவர்’ பட்டியலில் அடங்குவார்கள். மற்ற காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

சிராத்த காரியங்களில் சிரத்தை... அதாவது ஈடுபாடு முக்கியமாக இருப்பதால், மற்ற அலுவல்களைத் தள்ளிப்போட்டுவிட்டு இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்து விடுகிறது.

நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்தவர்கள்... 'நம்மால் செயல்பட இயலவில்லையே’ என்று மனமார எண்ணினாலே போதும், குறிப்பிட்ட அந்தப் புனித நாட்களில் முன்னோருக்கு சிராத்தம் செய்த பலன் கிடைத்துவிடும்.

##~##
வேறு காரணங்களுக்காக, சிராத்த விஷயங்களைத்  தன்னிச்சையாக தவறவிட்டுவிட்டு, அன்னதானத்தால் சரிக்கட்ட இயலாது. அன்னதானம் என்பது பொது அறம். இல்லாத எளியவர்களை அடையாளம் கண்டு அன்னதானம் அளித்தால் மட்டுமே, அது பொருள் படைத்ததாக ஆகும். மற்றபடி ஓர் இழப்பை ஈடுகட்ட அன்னதானத்தைப் பயன்படுத்தக்கூடாது.

சிராத்தத்தில், சிரத்தைக்கு முதல் உரிமை. அன்னதானம் என்கிற கோணத்தில் அதை எண்ணக்கூடாது. சுதந்திர தினம், குடியரசு தினம், அண்ணல் காந்தியின் பிறந்த தினம் ஆகியவற்றைத் தள்ளிப் போடுவதில்லை. இந்தச் சிறப்பு நாட்களையட்டி மற்ற விஷயங்களை தள்ளிப் போடுவோம். எனவே, மனமாற்றம் தேவை. தேவையற்ற காரணங்களைக் கருதி கடமையைத் தவறவிட்டு, மாற்று வழியைத் தேடக்கூடாது!

மந்திர ஜபம் செய்யும் போது குறிப்பிட்ட தியான ஸ்லோகத்தை மனதில் நினைக்க வேண்டுமா? அல்லது,  ஸ்லோகத்துக்கான தேவதா சொரூபத்தை மனதில் நினைத்து ஜபிக்க வேண்டுமா?

- கே.ஆதிநாராயணன், சென்னை-33

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஜபத்துக்குப் பயன்படும் எழுத்துக்களின் கோவையை மனம் அசைபோட வேண்டும். ஸ்லோகமும் தேவதா ஸ்வரூபமும் எழுத்துகளில் அடங்கிய தத்துவத்தின் வெளிப்பாடு. உதாரணமாக, 'நம:சிவாய’ என்கிற பஞ்சாட்சர ஜபம் செய்யும்போது, அதில் மனம் ஊன்றியிருக்க வேண்டும். ஸ்லோகத்தையோ, தேவதா ஸ்வரூபத்தையோ தியானிக்க முனைந்தால், ஜபத்தின் தொடர்ச்சி விடுபட வாய்ப்பு உண்டு.

'நம:சிவாய’ என்ற எழுத்துக்களின் கோவையில், ஸ்லோகம், ஸ்வரூபம் இரண்டும் அடங்கிவிட்டது. வேறு வேறாகப் பார்க்கும் எண்ணம் முளைத்தால், ஜபம் செய்யும் பக்குவத்தை மனம் அடையவில்லை என்று பொருள். முழு ஈடுபாட்டுடன் மனம் ஜபத்தில் லயித்தால், மற்ற விஷயங்களை மறந்துவிடும்.

சூட்சுமமான தத்துவம் பீஜாக்ஷரம்; ஸ்தூலமான வடிவம் ஸ்லோகம். அதன் ஸ்வரூபம், சூட்சுமத்தை எட்டிய பிறகு, ஸ்தூலத்துக்குத் திரும்புவது அறியாமை.

வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சாந்தி ஹோமங்களைச் செய்துகொள்ளலாமா?

ராமசந்திரன், திருவண்ணாமலை

அறுபது வயது நிரம்பியவர், ஆயிரம் பிறைகளைக் கண்டவர் அத்தனைபேரும் ஆண்-பெண் பேதமின்றி, அந்த இரண்டு சடங்குகளையும் நடைமுறைப்படுத்தலாம். வயதின் அளவை வைத்து நிகழ்த்தப்படுவதால், குறிப்பிட்ட அந்த வயதுகளை எட்டியவர்களின் பிறப்புரிமை அது.

திருமணம் ஆகாதவரும் அந்த வயதை எட்டுவார். ஆகையால், அவருக்கும் உண்டு. தம்பதிகளில் இழப்பு என்பது நிகழக்கூடிய ஒன்று. இழந்தவர்களும் வயதை எட்டுவார்கள். இருவரும் இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்தலாம் என்று சொல்லமுடியாது. அது, தாம்பத்தியத்தின் அடிப்படையில் ஏற்பட்ட சடங்கு அல்ல. குறிப்பிட்ட அந்த வயதை எட்டியவரின் உரிமை. இறந்தவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் உண்டு. வெள்ளி விழா, தங்கவிழா, வைரவிழா... என்று அமரத்துவம் அடைந்தவர்களுக்காகவும் அனுஷ்டிப்பது உண்டு. ஆக, இழப்பைக் காரணம் காட்டி, உரிமையை மறுப்பது சரியில்லை. பண்டைய நாட்களில் இழப்பைச் சந்தித்தவர்கள், கொண்டாட்டத்தைத் தவிர்த்தார்கள்; தனி மனிதனின் விருப்பு, வெறுப்பு செயல்பட்டது. ஆனால், சாஸ்திரம் மறுக்கவில்லை!

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் முன் சீமந்தம்- வளைகாப்பு நடத்தாதவர்கள், 2-வது குழந்தை பெற்றெடுக்கும் வேளையில் வளைகாப்பு நடத்துவது சரியா?

- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்

இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் வேளையில் வளைகாப்பு, சீமந்தம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. சீமந்தம் என்பது முதல் குழந்தைக்காக மட்டுமே நடத்தப்படுவதில்லை. பிற்பாடு உதரத்தில் உருவாகும் அத்தனை குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான் சீமந்தம் நடைபெறுகிறது. குழந்தை உருவாகும் இடத்தின் தூய்மையை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது சீமந்தம்.

ஒருவேளை, சீமந்தம் நடைபெறாமலேயே முதல் குழந்தை பிறந்தாலும், பிறந்த குழந்தையை மடியில் வைத்து சீமந்தத்தை நடைமுறைப்படுத்திய பிறகே, அந்தக் குழந்தைக்கு ஜாதகர்மம் நடக்கும். அப்படியரு நிபந்தனையை சாஸ்திரம் வகுத்திருக்கிறது. முதல் குழந்தைக்கு... பிறந்த பிறகும் சீமந்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், 2-வது குழந்தைக்கு 'சீமந்தம்’ என்ற கேள்வியே எழும்பாது. வளைகாப்பு ஒரு சம்பிரதாயம். அதை, முதல் குழந்தைக்கு மட்டும் கடைப்பிடித்தால் போதும். அதன் பலன், பிறக்கப்போகும் அத்தனை குழந்தைகளுக்கும் கிடைத்துவிடும்.

சபரி ஸ்ரீஐயப்பன், பழநி முருகன் ஆகிய தெய்வங்களைத் தரிசிக்க, மாலைபோடும் அன்பர்கள், தரிசித்து வந்ததும் மாலையைக் கழற்றுவது வழக்கம். ஆனால் நண்பர் ஒருவர், மாலைகளில் ஒன்றை மட்டும் தொடர்ந்து அணிந்திருக்கிறார். இது சரியா?

- வேலாயுதம், சென்னை-21

எப்போதும் மாலை அணிந்திருக்கும் வழக்கம் இல்லாத ஒருவர், தரிசனத்தின்பொருட்டு மாலை அணிகிறார் எனில், அந்தத் தரிசனம் முடிந்ததும், மாலை கழற்றுவது பொருந்தும்.

அதேநேரம், ஒவ்வொருவரும் ருத்ராட்சமோ அல்லது துளசியோ... ஒரு மாலையை எப்போதும் கழுத்தில் அணிந்திருப்பது சிறப்பு. பெருமாளைப் பற்றிக் கொண்டவர் துளசிமாலையை ஏற்பார். ஈசனை வணங்குபவரின் கழுத்தில் ருத்ராட்சம் இருக்கும். வீரசைவர்களின் கழுத்தில் லிங்க வடிவில் ஈசன் இருப்பார். கடவுள் நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையை வலுப்படுத்த மாலை அணிவது நல்லது.

உறவினர் ஒருவரது வீட்டுக்குப் பின்புறம் நிலத்தைத் தோண்டும்போது, (முழுமையில்லாத) விநாயகர் விக்கிரகம் கிடைத்தது. அதை, வீட்டுக்கு முன்பாக வைத்து வழிபட்டு வந்தவர், வேறு இடத்துக்குக் குடி பெயரும்போது, என்னிடம் கொடுத்தார். அந்த விநாயகரை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா? பூஜிக்கலாம் எனில், வழிபாட்டு நெறிகளை விளக்குங்களேன்!

- என்.ராமசுந்தரம், சென்னை-17

தங்களிடம் வந்த விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாம். 'கம் கணபதயே நம:’ என்கிற மந்திரத்தைச் சொல்லி, அபிஷேகம் முதற்கொண்டு 16 உபசாரத்தையும் செய்து வழிபடலாம். அப்படி அவரை வழிபடும்போது, 'என்னையும் என் குடும்பத்தையும் மகிழ்ச்சியோடு வாழ வைக்க வேண்டும்’ என்று வேண்டுங்கள்; தண்டனிட்டு வணங்குங்கள்; வளமான வாழ்வு கிடைக்கும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

உலக நன்மை அல்லது குடும்ப க்ஷேமத்துக்காக காயத்ரி ஹோமம் செய்யலாமா? மற்ற ஹோமங்களைப் போன்று காயத்ரி ஹோமம் அதிகம் நடைமுறையில் இல்லையே?!

- ஏ.எஸ்.தீக்ஷிதர், திருச்சி-5

வேதம் கற்கும் தகுதி பெற காயத்ரியை ஏற்கிறான். தனது தகுதியை நிலைநிறுத்த, தினமும் அதை ஓதுகிறான். சாஸ்திரம் குறிப்பிட்ட வேளையில், அதை ஹோமத்துக்குப் பயன்படுத்து கிறான். எதிர்பாராதவிதமாக தனது தகுதியை இழக்க நேரிட்டால், அந்தத் தகுதியைத் திரும்பப் பெற, காயத்ரியைப் பல தடவை அசை போட்டு ஜபத்தை நடைமுறைப்படுத்து கிறான். ஆச்சாரியனிடமிருந்து முறையாகப் பெற்ற காயத்ரியை வேதத்துக்கு உடன்படாத விஷயங் களில் செயல்படுத்தக்கூடாது. குடும்ப க்ஷேமம், உலக நன்மை ஆகியவற்றை நிறைவு செய்ய, வேறு ஏராளமான வழிகள் உள்ள போது, காயத்ரியைப் பயன்படுத்துவது வீண். அதன் தரத்தைக் காப்பாற்ற, விருப்பப்படி  செயல்படாமல் விழித்திருப்பது சிறப்பு.

- பதில்கள் தொடரும்...
படம்: ப்ரீத்தி கார்த்திக்