நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

'குழந்தை விடிய விடியப் படிக்கிறான்... சும்மா சொல் லக்கூடாது, பாவம்!'' என்கிறாள் தாய்.

''நல்ல பசி போலிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது பாவம், குழந்தை எட்டு இட்லி சாப்பிட்டான்!'' என்கிறாள் அதன் பாட்டி. குழந்தை எத்தனை இட்லிகளை விழுங்கினான் என்ற விவரத்தை இப்படி நைஸாக மற்றவர்களுக்குச் சொல்லிவிடும் பாட்டி, கூடவே அவன் பசியாக இருந்ததால்தான் அப்படிச் சாப்பிட்டான் என்ப தையும் குறிப்பிடுகிறாள்.

'சும்மா சொல்லக்கூடாது, பாவம்!’ என்கிற சொல்லடையை ஒரு தடவை உபயோகித்தால், குறைந்தபட்சம் நூறு கிராம் பொறாமையாவது குறையும் என்று பலர் நம்புகிறார்கள்.

''சும்மா சொல்லக்கூடாது பாவம், வர்ற மாசம் அவருக்கு ஆறு கச்சேரி! அது ஆனதும், கிளீவ்லாண்டில் மார்க்கண்டேய மகோத் ஸவம். சும்மா சொல்லக்கூடாது, பாவம்... என்னையும் கூட்டிண்டு போறேன்னு சொல்லியிருக்கார்'' என்று சங்கீத வித்வானின் பார்யாள் சொல்லும்போது, கேட்பவர் மனசில் பொறாமையே ஏற்படாது என்பது அவளின் நம்பிக்கை! பாவம், எவ்வளவு கஷ்டப் பட்டு விமானத்தில் ஏறிப் பறந்து, அவ்வளவு தூரம் போய் வியர்க்க விறுவிறுக்கக் கச்சேரி செய்துவிட்டு வருகிறார் என்று தான் கேட்கிறவர்களுக்கு நினைக்கத் தோன்றுமாம். பொறாமை என்பது கிஞ்சித்தும் ஏற்படவே படாதாம்!

அயல்நாட்டில் தன் பிள்ளை சம்பாதித்துக் கொழிப்பதை பிறத்தியாரிடம் சொல்லவேண்டும்; அதே நேரம், அவர்களின் வயிறு எரியாமல் நாசூக் காகவும் சொல்லவேண்டும். எப்படி? ஒரு மாமி இப்ப டிச் சொல்கிறாள்... ''எம் புள்ள ஆம்ஸர்டாமில்தான் ஏழெட்டு வருஷமா இருக்கான். சும்மா சொல்லக்கூடாது பாவம், மாசம் ஐம்பதாயிரம் டாலர் சம்பளம் வாங்கறான். அங்கேயே ஆபீசில் ஒரு வெள்ளைக்காரியை... சும்மா சொல்லக்கூடாது பாவம், ரொம்ப நல்ல பொண்ணாம். அவனுக்கு செக்ரெட்டரியாம். போன வாரம் அவளைக் கல்யாணம் பண்ணிண்டுட்டதாக போனில் தகவல் சொன்னான். சும்மா சொல்லக்கூடாது பாவம், அவளும் முப்பதாயிரம் டாலர் சம்பளம் வாங்கறாளாம்..!''

அந்தப் பெண்மணியிடம் ஒருமுறை, ''எதுக்காக மாமி இப்படி நீங்க வாய்க்கு வாய் 'சும்மா சொல்லக்கூடாது பாவம்’னு நீட்டி முழக்கிட்டிருக்கீங்க?'' என்று பளிச்சென்று கேட்டுவிட்டாள் ஒரு துடுக்குப் பெண்.

அதற்கு அந்த அம்மாள், ''நம்ம விஷயத்தில் பிறத்தியாருக்குப் பொறாமை ஏற்பட்டு, அந்தப் பொறாமை அவர்களுக்கே தீமையாக முடிந்துவிடக்கூடாதே என்கிற நல்ல எண் ணத்தினால்தான்!'' என்றாள்.

இதென்ன புதுக்கதை? பொறாமையால் பொறாமைப் படுகிறவர்களுக்கே தீங்கு நேருமா என்ன?

நேரும். பொறாமைக்காரனுக்குக் கேடு விளைவிக்க பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஆளைத் தேடவேண் டிய அவசியமில்லை; அவனுக்குக் கேடு விளைவிக்க அவனே போதும்! இதைத்தான் திருவள்ளுவர்,

'அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன்பது’

- என்று அழகாகச் சொன்னார்.

பொறாமைப்படாதிருப்பது கஷ்டமான காரியம்தான் என்றாலும், பொறாமைப்படாதிருக்க ஒரு சுருக்கு வழி உண்டு. தேவையானதெல்லாம் ஒரு புதுக் கண்ணோட்டம்தான்.

தாயுமானவரின் இரண்டு வரிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்...

'எங்கெங்கு பார்த்தாலும் எவ்வுயிர்க்கும்        அவ்வுயிராய்
அங்கங்கு இருப்பது நீயன்றோ பராபரமே’

இங்கே இருக்கும் உயிர்தான் அங்கேயும் இருக் கிறது; அதற்கு ஒரு நல்லது கிடைத்தால், இதற்கும் கிடைத்தது போலத்தானே! பின்னே, பொறாமை எதற்கு?