நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

பித்ரூக்களை ஆராதித்தால்... பிள்ளைக்கு ஒரு குறையுமில்லை!

தை அமாவாசை வழிபாடு

பித்ரூக்களை ஆராதித்தால்... பிள்ளைக்கு ஒரு குறையுமில்லை!
பித்ரூக்களை ஆராதித்தால்... பிள்ளைக்கு ஒரு குறையுமில்லை!
பித்ரூக்களை ஆராதித்தால்... பிள்ளைக்கு ஒரு குறையுமில்லை!

''மாதங்கள் பன்னிரண்டு; ஒவ்வொரு மாதத்துக்கும் தனித் தனிச் சிறப்புகள் உண்டு. ஆனாலும் 'நம்பிக்கையே வாழ்க்கை’ எனும் தத்துவத்தின்படி வாழ்கிற உலகில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி வைத்தார்கள், முன்னோர்! ஏனெனில், இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மிக உன்னதமான நாள். பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களை ஆராதிப்பதற்கு உகந்த புண்ணிய நாள்.

இறந்தவர்களுக்கான காரியங்களைச் செய்தால் நற்கதி கிடைப்பது ஒருபக்கம் இருக்கட்டும்; அந்தக் காரியங்களை, கடமைகளைச் செவ்வனே செய்கிறவர்களின் எதிர்காலம் சீரும் சிறப்புமாக விளங்கும். இதனை அறிந்து உணர்ந்த பெரியவர்களும் சான்றோர்களும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சூசகமாகச் சொல்லி வைத்தனர்'' என்கிறார் லால்குடி விஸ்வநாத சாஸ்திரிகள்.

தை மாத அமாவாசையை, பித்ருக்களுக்குச் செய்யப்படும் காரியங்களை காரணங்களுடன் விளக்கினார் சாஸ்திரிகள்.  

''பித்ருக்கள் என்றால் நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம்முடைய மூதாதையர்கள். பித்ரு என்பது வடமொழி; பித்ரு என்றால் தந்தையைக் குறிக்கும். பிதாமகர் என்பது, தாத்தாவையும் முப்பாட்டனையும் குறிக்கும்! ஆக, வாழையடி வாழையாக வளருகிற இந்தப் பரம்பரை குறையின்றிச் சிறக்கவேண்டுமெனில், சந்தோஷமாக வாழ வேண்டுமெனில், பித்ருக்களுக்கு உரிய ஆராதனையைச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். ஏக்கர் முழுவதும் நெல்மணிகள் வளர்ந்திருந் தாலும், அந்த விதை நெல்லை கடவுளுக்குச் சமமாக நினைத்து வழிபட்டுத்தானே விதைக்கவே செய்கி றோம்! அப்போதுதானே, அந்தப் பயிர் அமோக விளைச்சலைத் தரும்! முன்னோர் என்பவர்கள், விதைக்குச் சமமானவர்கள். விழுதுகளாகிய நாம் விதைகளை மறக்காமல் வணங்கினால்தான்,  விழுதுகள் விதைகளாகும்; விருட்சங்களாகப் பல்கிப் பெருகும்!'' என்கிறார் விஸ்வநாத சாஸ்திரிகள்.

##~##
''பித்ருக்களுக்குச் செய்யப்படும் திதி மற்றும் தர்ப்பணங்களை அறிவதற்கு முன், அவர்கள் இறந்ததுமுதல் செய்கிற சடங்குகளை முதலில் அறிவது அவசியம். இந்து தர்ம சாஸ்திரப்படி, இறந்தவரை தகனம் செய்வதுதான் வழக்கம். இந்த மண்ணில் நாம் பிறந்ததும் நமக்குக் கிடைக்கிற முதல் உணவு, பால்தான்! எனவேதான், தகனம் செய்த பிறகு, அவர்களது சாம்பலாகாத எலும்புகளை எடுத்துப் புனிதமான பாலில் கழுவி, புண்ணிய நதிகளில் விடுகிறோம்.  

இன்னொரு விஷயம்... ஒருவருக்கு மரணம் எப்போது நிகழும்? மரணத்துக்குப் பிறகு என்ன நடைபெறும்? இந்தக் கேள்விகளுக்கு நம்மில் பலருக்கு விடை தெரியாது. அதுமட்டுமல்ல... இந்தப் பதில்களை அறிவதற்கு நாம் ஆர்வம் காட்டுவதே இல்லை. இதுகுறித்துத் தெரிந்து கொண்டால், ஒவ்வொரு குடும்பமும், பித்ரு காரியங்களைத் தவறாமல் செய்யும்!  

ஒரு குழந்தையானது, தாயின் கருவறை யில் இருக்கிற பத்து மாதங்களில் ஒவ்வொரு அங்கமாக உருவாகி வளர்கிறது அல்லவா?! அதேபோல் இறந்தவர்களும் அந்தப் பத்தாம் நாளில், ஒவ்வொரு அங்கமாகத் திரும்பப் பெறுகின்றனர். குழந்தைக்கு தண் ணீர் தந்து உயிர் காப்பது போல, இந்த நாளிலும் தண்ணீர் தந்து இறந்தவருக்குச் சூட்சும ரூபமான உயிரைத் தருகிறோம் என விளக்குகிறது சாஸ்திரம்.  

அடுத்ததாக, உணவு. இறந்தவர்களுக்கும் பசி உண்டு; தாகம் எடுக்கும்! அவருக்குப் பிடித்தமான சகல பதார்த்தங்களையும் சாப்பிடுவதற்குத் தருகிறோம். அதுவும் எப்படி? உப்பில்லாத உணவாகக் கொடுக் கிறோம். பத்து நாட்களாக பிசாசமாக இருப்பவர்களுக்கு அகோரப் பசி இருக்கும். அவர்களின் பசியை உடனே போக்குவதற்கு, உப்பில்லாமல் உணவளிப்பது ஒன்றே வழி! அவர்களை அடக்கிச் சமன்படுத்தும் திறனும் சக்தியும் ஒருவருக்கு மட்டுமே உண்டு. அவர்தான்... சிவபெருமான்!

பித்ரூக்களை ஆராதித்தால்... பிள்ளைக்கு ஒரு குறையுமில்லை!

11-ஆம் நாள்... ஈசனின் வாகனமான ரிஷபத்தை அருகில் வைத்து ஹோமம் செய்வார்கள். இந்த பூஜையில் நெகிழ்ந்த சிவனார் இறந்தவரை அடக்கி, அமைதிப் படுத்தி, அவர்களுக்கு நிறைவைத் தருகிறார். இதற்கு 'ஆவர்த்த மாசீகம்’ என்று பெயர். அப்போது, 32 ஆக்ருதிகள் சொல்லப்பட்டு, இறந்தவர்களின் முன்னோர்களையும் அழைத்து, அவர்க ளுடன் இறந்தவரைச் சேர்த்துவிடுகிறோம். ஸ்கூல் முடிந்து வெளியே வந்ததும், அம்மாவைத் தேடி தாவி ஓடுகிறதல்லவா குழந்தை... அதேபோல், இறந்தவரும் முன்னோர்களுடன் சேர்ந்துகொள்கிறார்.

திருமணம் போன்ற வைபவங்களின்போது, 'பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக் கங்க’ என்று மணமக்களிடம் சொல்வார்கள். உடனே, பெரிய கூட்டமே தடதடவென வந்து நிற்கும். மணமக்கள் நமஸ்கரிக்க, அவர்களும் ஆசீர்வதிப்பார்கள். அப்படித்தான், பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள் ஒன்றுகூடியிருக்க, நம்மை ஆசீர்வதிக்காமல் போய்விடுவார்களா, என்ன?!  

சடங்கு- சாங்கியங்களும், காரியக் கடமை களும் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதையடுத்து, முன்னோர்களின் நினைவாக, அவர்களின் பெயரால் நாம் செய்கிற ஒவ்வொரு தானமும், இறந்தவர்களுக்குப் பலனைத் தரும்; அந்தப் பலன், நமக்கும் நம் வாரிசுகளுக்கும் பெரும் பலமாகத் திரும்பி வரும்! இதனால்தான், இறந்தவரின் பெயரால் அன்னதானம் செய்வதும், நிழற் குடை, தண் ணீர்ப் பந்தல், சுமைதாங்கிக் கல் என வைக்கும் வழக்கமும் வந்தது இங்கே!'' என விவரித்த விஸ்வநாத சாஸ்திரிகள், அமாவாசையின் புனிதத்தைத் தெரிவித்தார்...

''மாதத்தில் ஒருநாளேனும் முன்னோரை நினைத்து, அவர்களை வணங்கவேண்டும் என்பதற்காக உருவானதுதான், அமாவாசை விரதம்! அந்த நாளில் முன்னோர்களை ஆராதிக்கத் தவறினால், பித்ருக்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும். இதைத்தான் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்றெல்லாம் சொல்கிறோம். இந்தத் தோஷமும் பாபமும் நம்மை மட்டுமின்றி, நம் சந்ததியினரையும் பாதிக்கும். நம் சந்ததியினருக்குக் காசு-பணம், வீடு-பங்களா எனச் சேர்த்து வைக்கா விட்டாலும் பரவாயில்லை. பாவ- சாபங்கள் ஏதும் அடையாமல், புண்ணியங்களைச் சேகரித்து வைப்பதுதானே நம் கடமை?!

பித்ரூக்களை ஆராதித்தால்... பிள்ளைக்கு ஒரு குறையுமில்லை!

வசதிகளுக்குக் குறைவிருக்காது; ஆனால், வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பார்கள் சிலர். இன்னும் சிலருக்குக் கல்யாணம் தடைப்படும். ஒரு சிலருக்கு, கல்யாணம் நடந்தாலும் தம்பதிக்குள் கருத்து வேற்றுமை ஆட்டிப்படைக்கும். அப்படியே கல்யாணமாகி, அன்பும் அரவணைப்புமாகத் தம்பதி வாழ்ந்தாலும், கொஞ்சி விளையாடப் பிள்ளை பாக்கியம் இருக்காது. குழந்தைகள் என்பவர்கள், அடுத்த தலைமுறை; அதாவது நம் வம்சத்தின் அடுத்த ஆதார வித்து! பிள்ளை பாக்கியம் இல்லாத நிலையைக் குல நாசம், வம்ச நாசம் என்கிறது வேதம். ஆகவே, அமாவாசை நாளில் முன்னோரை வழிபடுவது மிகவும் அவசியம்'' என்று வலியுறுத்திய சாஸ்திரிகள் தொடர்ந்தார்.  

''மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், தை அமா வாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசியில் வருகிற மகாளய அமாவாசை ஆகிய தினங்கள் அற்புதமான நாட்கள். இவற்றில், தை அமாவாசை நன்னாளில் தர்ப்பணம் செய்து வழிபட்டால், நம் முன்னோர் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து, திருப்தியுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள். இந்த ஒருநாளில் நமக்குக் கிடைக்கிற ஆசீர்வாதம், நம்மையும் நம் வம்சத்தினரையும் வழிநடத்தும்; வாழ்வை மலரச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.    

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியன புண்ணிய நதிகளாக இருந்தாலும், அவை வருடத்துக்கு ஒருமுறை காவிரிக்கு வந்து, தங்களை இன்னும் புனிதப்படுத்திக் கொள்வதாகச் சொல்கிறது வேதம். ஆகவே, பொன்னி நதியாம் காவிரிக் கரையில் தர்ப்பணம் செய்வது, இத்தனை நதிகளிலும் நீராடிய பலனையும் புண்ணியத்தையும் தரும் என்பது ஐதீகம்!'' எனத் தெரிவித்தார் விஸ்வநாத சாஸ்திரிகள்.  

நதியில் நீராடி, நம் முன்னோர்களைக் குறையின்றி ஆராதிப்போம்; நம் வம்சத்துக்கு இனி ஒரு குறையும் இருக்காது!

- க.ராஜீவ்காந்தி
படங்கள் ப்ரீத்தி கார்த்திக்

பித்ரு தோஜ நிவர்த்தி ஸ்தலங்கள்!

பித்ரூக்களை ஆராதித்தால்... பிள்ளைக்கு ஒரு குறையுமில்லை!

பித்ரு தோஷத்தைத் தீர்க்கும் தலங்கள், நம் தமிழகத்தில் நிறையவே உள்ளன. திருச்சி காவிரிக்கரை, திருவையாறு காவிரிக்கரை, பவானி கூடுதுறை, கொடுமுடிப்பாண்டி, நாமக்கல்- மோகனூர் ஸ்ரீஅசலதீபேஸ்வரர் கோயில் மற்றும் காவிரிக்கரை, ராமேஸ்வரம் கடற்கரை, தூத்துக்குடி மாவட்ட சங்குமுகத் தீர்த்தம், நெல்லை தாமிரபரணி நதிக்கரை, அகரம் தசாவதாரக் கட்டம் ஆகிய புண்ணியத் தலங்களில் முன்னோர்களுக்கு ஆராதனைகள் மேற்கொண்டால், பித்ரு தோஷம் விலகும்; தில ஹோமம் செய்வது விசேஷம். முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள்.

எவருக்கும் கொடுக்கலாம் திதி!

றைந்த பெற்றோருக்குத் திதி தரவேண்டும் என்பது மிகவும் அவசியம்; கடமையும்கூட! தவிர, உறவினர்கள், குருவெனப் போற்றி வணங்கியவர்கள், நண்பர்கள் ஆகியோர் இறந்துவிட்டால், அவர்களது ஆன்ம சாந்திக் காகத் திதி கொடுக்கலாம் என்கிறது சாஸ்திரம். பித்ருக்கள் அல்லாதவர்களை 'ஞானாக்யாதர்கள்’ என்பார்கள். அவர் களுக்குத் திதி கொடுத்த பலனும் நம்மைக் காக்கும்.

தானம் செய்யுங்கள்!

சு உடம்பில், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்வதாக ஐதீகம். எனவே, பசுவுக்குத் தேவையான உணவைத் தானமாகத் தருவது புண்ணியம் என்கிறது சாஸ்திரம். அப்படித் தானம் செய்ய... அதில் மகிழ்ந்து போவார்களாம் தேவர்கள். அதேபோல், தெருவோரத்தில் குளிரில் அல்லாடுவோருக்குக் கம்பளிப் போர்வை அல்லது சால்வை வழங்குவதும், உணவு வழங்குவதும் மகா புண்ணியம் என்பார்கள்.  

நதிகளில் தீபமேற்றி விடுவதை தீப தானம் என்பார்கள். அதாவது, புண்ணிய நதிகளுக்கே நாம் பாதை காட்டுவதாக ஐதீகம். தீப தானம் செய்தால், நம் வாழ்க்கைப் பாதையும் சிறக்கும்; தடையின்றிப் பயணம் செய்யலாம் என்கின்றனர் பெரியோர்.