
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிவத்தொண்டே தன் வாழ்வின் லட்சியமெனக் கொண்டு, சிவனாரையே அனுதினமும் சிந்தித்த மாணிக்கவாசகர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஊர் திருவாதவூர்.
மதுரையில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர். மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர். பாண்டியநாட்டின் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றெனத் திகழும் திருமறைநாதர் ஆலயம் இங்குதான் உள்ளது. ராஜசேகர பாண்டிய மன்னன் கட்டிய கோயில் இது.
கிழக்குப் பார்த்த கோயில். ஸ்ரீவேதபுரீஸ்வரர் எனப்படும் திருமறைநாதரும் லிங்க வடிவில் கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். ஸ்வாமிக்கு வலது புறத்தில் அழகு ததும்ப, கருணை பொங்கும் கண்களுடன் தரிசனம் தருகிறாள் ஸ்ரீவேதவல்லி அம்பாள்.
அசுரர்களை அழித்ததால் உண்டான தோஷம் நீங்குவதற்காக ஸ்ரீமகாவிஷ்ணு இந்தத் தலத்துக்கு வந்து, தவமிருந்து வேண்டினார். இதில் தாமரை மலரின் நடுவில், வேதத்தின் வடிவாகத் தோன்றி காட்சி தந்தருளினார் சிவபெருமான்.

உமையவள் மட்டும் என்ன... ஸ்ரீபிரம்மாவின் ஆரணகேத யாகம் சிறப்புற நடப்பதற்கு அருள் புரிந்து ஆசீர்வதித்தாள் அம்பிகை. எனவே, இந்தத் தலத்து நாயகிக்கு 'ஆரணவல்லி அம்பாள்’ எனும் திருநாமமும் உண்டு.
ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசனி பகவான், ஸ்ரீசூரிய பகவான் ஆகியோரும் இங்கு தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.
வாதம் முதலான நோயில் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து சிவனாரை வழிபட்டு, ஸ்ரீசனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வேண்டிக் கொண்டால், சகல நோய்களும் விரைவில் நீங்கும் என்பது ஐதீகம்! இதனால் இந்த ஊருக்கு 'வாதவூர்’ எனும் பெயர் அமைந்ததாகவும் சொல்வர்.
வாகனங்களைத் தொலைத்தவர்கள், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இங்கேயுள்ள ஸ்ரீபைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வாகனங்கள் திரும்பக் கிடைக்கும்; எதிரிகள் தொல்லை ஒழியும் என்கின்றனர் பக்தர்கள். வேதத்தின் வடிவாக சிவனார் காட்சி அளிப்பதால், இங்கே பைரவர் நாய் வாகனமின்றிக் காட்சி தருகிறார்.
திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் ஆகியவற்றைத் தந்தருளும் இந்தத் தலத்தில் ஞானமும் யோகமும் அருளும் மாணிக்கவாசகர் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

ஞானநெறியை எடுத்துரைத்த மாணிக்க வாசகர் அவதரித்த தலம் இது. ஊருக்குள் நுழையும்போதே, கோயிலுக்கு முன்னதாக அவர் வாழ்ந்த இடம் நினைவிடமாக தற்போது அமைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மாணிக்கவாசகரின் திருநட்சத்திர நாளன்று இங்கு பூஜைகள், வழிபாடுகள், திருவீதியுலா ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன.
ஆவணி மாதத்தில் மதுரையில் நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த விழாவின்போது, இங்கிருந்து மாணிக்க வாசகரும் அமைச்சர் ஸ்தானத்தில் இருந்தபடி ஊர்வலமாகச் செல்வார்.
மாணிக்கவாசகரின் திருநட்சத்திர நாளில், திருமறைநாதர் ஆலயத்திலும் அவர் வாழ்ந்த இடத்திலும் திருவாசகம் முற்றோதுதல் நடைபெறும். ஏராளமான சிவனடியார்கள் இதில் கலந்துகொண்டு, திருவாசகம் பாடுவதைக் கேட்கக் கேட்க... பரவசம் பொங்கும்!
அதேபோல், கார்த்திகையில் மாணிக்கவாசகர் சந்நிதிக்கு அருகில் சிவனாருக்கு சங்காபிஷேகமும், மார்கழி திருவாதிரையில் ஸ்ரீநடராஜபெருமானுடன் மாணிக்கவாசகருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

நவராத்திரி விழாவின் விஜயதசமி நாளில், ஊர் சிறக்கவும் செழிக்கவும் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த நாளில் மாணிக்கவாசகரே திருவீதியுலா வந்து, அம்பு போடுவார்!
சிவ தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், பைரவ தீர்த்தம், கபில தீர்த்தம், வாயு தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் கொண்ட திருத்தலம் எனும் பெருமையும் இந்த ஆலயத்துக்கு உண்டு.
ஆலயத்தில் சிலம்போசை மண்டபம் ரொம்பவே விசேஷம்! இந்தத் திருவிடத்தில் ஸ்ரீநடராஜ பெருமான் அருவமாய் இருந்து திருநடனம் புரிய, ஆடல்வல்லானின் சிலம்பொலி மாணிக்கவாசகருக்கு மட்டும் கேட்டதாகச் சொல்வர்.
மாணிக்கவாசகர் திருநட்சத்திர நாளில், அவர் வாழ்ந்த திருவாதவூருக்கு வாருங்கள்; ஞானம் முதலான சகல யோகங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்!
- சஞ்சீவ்குமார்
படங்கள்: பா.காளிமுத்து