மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
##~##
ந்த உலகில், மிக அதிக விஷமங்கள் செய்யக் கூடியவன் கண்ணபிரான்தான்! விஷமம் என்றால் சாதாரண குறும்பு அல்ல; வெறும் சேட்டைத்தனம் மட்டுமே அல்ல!

அவன் வெண்ணெயைத் திருடிச் செல்வான் என்று நினைத்திருக்கும்போது, தாழியையே எடுத்துச் சென்றிருப்பான். மண்ணை எடுத்துத் தின்பான் என்று பார்த்தால், தன் வாயில் இருந்து ஏழு லோகங்களையும் காட்டி அதிசயிக்கச் செய்வான்!

எளியவனாகவும் இருப்பான் கண்ணன். சரி, எளியவன்தானே என்றிருந்தால், பெரியவனாகவும் மாறி, நம்மை மிரட்டுவான். 'உன்னைப் போல் என்னிடம் ஒரே விதமான பக்தியை எவர் கொண்டிருக்கிறாரோ, அவரை எப்போதும் நான் கைவிடமாட்டேன்’ என்று அர்ஜுனனிடம் உபதேசித்திருக்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். ஆனாலும், விஷம குணங்களைக் கொண்டவன் அவன்!

பசுக்கள் மீது பிரியம் கொண்டு, அவற்றை அழகாக மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வான் கண்ணபிரான். அதேநேரம், பசுவில் இருந்து கிடைக்கும் நெய்யின் மீதும் அவனுக்கு அலாதி விருப்பம் உண்டு. குன்றிருக்கும் இடத்தையே பெயர்த்துத் தூக்கி வருவான் கண்ணன்; அதே வேளையில், ஒரு கல்லாக அகலிகை இருந்தாலும், அந்தக் கல்லுக்கு உயிர் தந்து, விமோசனம் தருவான் பகவான்!

இதனால்தான் இறைவனுக்கு 'விஷமஹ’ எனும் திருநாமம் அமைந்தது. இத்தனை விஷமங்களைக் கொண்டிருந்தாலும், விகல்பம் இல்லாதவன் கண்ணன்! வேறுபாடுகள் பார்க்காமல் அனைவருக்கும் அருள்பாலிப்பவன். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து, அவர் இவர் என்றில்லாதபடி எல்லோரையும் அரவணைத்து அருள் புரியும் வள்ளல் அவன்!

அடுத்து, 'சூன்யஹ’ எனும் திருநாமமும் ஸ்ரீகண்ணபிரானுக்கு உண்டு.

'சூன்யஹ’ என்றால் 'எந்தக் குற்றமும் இல்லாதவன்’ என்று அர்த்தம். 'ஹிரண்யகசிபுவின் நெஞ்சைப் பிளந்தவன்தான் பரமாத்மா என்றாலும், அவனைப் போல் புனிதன் வேறு எவருமில்லை! எல்லோரும் பயப்படும்படியாக கடும் உக்கிரத்துடன் சிம்ம முகத்துடன் தோன்றினாலும், அவனைப் போல் கருணாமூர்த்தி எவரும் இல்லை.

விஷமமும் சூன்யம் அற்ற நிலையும் கொண்ட பரமாத்மாவின் விந்தையான செயல்பாடுகள் கொஞ்சமா நஞ்சமா?

ராவணன் ராட்சசன்; அவனை அழித்த ஸ்ரீராமர், விபீஷணனை மட்டும் விட்டுவிட்டார். குரங்கினத்தைச் சேர்ந்த வாலியை வதம் செய்த பரப்பிரும்மம், அதே குரங்கினத்தைச் சேர்ந்த சுக்ரீவனை ரட்சித்து, மன்னித்தது. ஹிரண்யகசிபுவின் நெஞ்சைப் பிளந்து, கொடூரமாகக் கொன்றாலும்கூட, பிரகலாதனை ஆட்கொண்டு அருளினார்.

அசுரர்கள், ராட்சசர்களை அழித்திருந்தாலும், பகவானுக்கு எந்தக் குற்றமும் இல்லை; எந்தப் பாபமும் கிடையாது! அதனால்தான் 'சூன்யஹ’ என்கிற திருநாமம் பகவானுக்கு வந்தது. புனிதமானவனை எதுவும் தீண்டாது என்பதை நமக்கு இங்கே சொல்லாமல் உணர்த்துகிறார் பகவான்!

இறைவன், புனிதமானவனாகத்தான் இருப்பான். நாம் புனிதனாக வேண்டாமா? நமக்குள் இருக்கிற தீய எண்ணங்களும் துர்குணங்களும் அகல வேண்டாமா? சக உயிர்களிடமும் மனிதர்களிடமும் அன்பு பரிமாறிக்கொள்ள வேண்டாமா? தீய சக்தி அழிந்து இறைச் சக்தியானது நம்முள் இரண்டறக் கலக்க வேண்டாமா? வேண்டும்தானே!

அதற்காகத்தான், பகவான் இன்னொரு காரியத்தையும் செய்கிறான். அதாவது 'என் குணங்களை இந்த உலகம் முழுவதற்குமாகத் தெளித்துத் தெளித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்’ என்கிறான்.

தன்னுள் இருக்கிற ஆனந்தத்தை, பரிபூரணத்தை, உலகம் முழுக்க உள்ள மக்களுக்குத் தெளித்தபடி தந்தருள்கிற ஸ்ரீகண்ண பரமாத்மா, எத்தனை கருணையுள்ளவன் பாருங்கள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

பூமி மொத்தத்துக்கும் ஆனந்தம் தருகிற அந்த வள்ளலை, 'க்ருதாஸிஹி’ என்று திருநாமம் சொல்லிப் போற்றுகின்றனர், பெரியோர். 'க்ருத’ என்றால் பூமி. அதாவது, பூமியை ஆனந்தப்படுத்திக் கொண்டிருப்பவன் என்று அர்த்தம்.

யாதவ குலத்தைச் சேர்ந்த கண்ணபிரான், உலகுக்கே ஆனந்தம் தருவதை எப்படிச் சொல்லிப் பூரிக்கிறார்கள் தெரியுமா? 'தன் வீட்டு நெய் மீது மட்டும் பிரியம் வைத்திருக்காமல், அடுத்தவர் வீட்டு நெய்யின் மீதும் விருப்பம் உள்ளவனாகத் திகழ்கிறான் ஸ்ரீகண்ணன்’ என்கிறார்கள்.

நமக்குத்தான் விருப்பு- வெறுப்பு என்பதெல்லாம் உண்டு. அவனுக்கு விருப்பு மட்டுமே உண்டு; வெறுப்பு என்பதே எவரிடமும் எதன் பொருட்டும் இல்லை.

'அசலன்- சலன்’ என்பார்கள். எக்காரணம் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும் எவ்விதச் சலனமும் இன்றி இருப்பவனே அசலன்! அசைவற்றிருப்பவன் அசலன். மலை என்பது எவ்வளவு பிரமாண்டம். அந்த பிரமாண்ட மலையானது அசையுமா என்ன? ஸ்ரீகண்ணபிரான், அசைவே இல்லாதிருக்கும் மலையைப் போன்றவன் என்று திருநாமம் சொல்லிப் போற்றுகிறார்கள் வைணவ ஆச்சார்யர்கள்.

துரியோதன சபையில் முக்கியமானவர்கள் அனைவரையும் அழைத்தானாம் திருதராஷ்டிரன். எல்லோரும் காரணம் தெரியாமல் குழம்பியபடி அங்கே வந்து அமர்ந்திருக்க, திருதராஷ்டிரன்...

''பஞ்சபாண்டவர்களின் பக்கம் இருக்கிற கண்ணபிரான், நாளை இங்கு வருகிறான். அவன் வரும்போது, ஏராளமான கிராமங்களையும் செல்வங்களையும் அவனுக்குத் தந்துவிடலாம். அதில் மகிழ்ந்து போகும் ஸ்ரீகிருஷ்ணன், பஞ்சபாண்டவர்களை 'அம்போ’ என விட்டுவிட்டுச் சென்று விடுவான்'' என்று சொன்னான்.

உடனே அங்கிருந்த சஞ்சயன், ''பூரண கும்ப மரியாதைக்கே மயங்காதவன் ஸ்ரீகண்ணன். அவனா, நீங்கள் தருகிற சொத்து - பத்துகளுக்கு மயங்கிவிடப் போகிறான்?! அவன் இதற்கெல்லாம் அசையவே மாட்டான். அன்புக்கும் சத்தியத்துக்கும் கட்டுப்பட்டவன் கண்ணபிரான்!'' என விளக்கினான்.

உண்மைதான். சலம் என்றால் மலை. இங்கே, சென்னை- வேலூர் சாலையில், சோளிங்கர் எனும் அற்புதமான தலம் உள்ளது. இதனை கடிகாசலம் என்பார்கள். கடிகை என்றால் ஒரு நாழிகை என்று அர்த்தம். அதாவது, இந்த இப்பிறவியில் ஒரேயரு நாழிகை, இந்த மலையின் மீது அமர்ந்து இறைவனை நினைத்தால் போதும்... நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்!

''சரி... எதற்கும் அசையாது, மலையென உறுதியுடன் இருக்கும் கண்ணபிரானுக்கு கிராமங் களையும் ஆபரணங்களையும் தருவதாகச் சொன்னீர்களே... ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பதிலாக, பஞ்சபாண்டவர்களுக்கு அந்த நிலங்களைத் தந்துவிட்டால், இந்தச் சண்டைக்கும் யுத்தத்துக்குமே வேலை இருக்காதே!'' என்று கேட்டானாம்

சஞ்சயன். கூடவே, திருதராஷ்டிரனைப் பார்த்து, ''உனக்கு ஊனக்கண்தான் இல்லையென்று நினைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது, உனக்கு ஞானக்கண்ணும் இல்லையென்று!'' என்று சொல்லிச் சிரித்தானாம்.

இந்த திருதராஷ்டிர புத்தி, பல தருணங்களில் நமக்கும் இருக்கத்தான் செய்கிறது. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுந்துவிட்டால், சண்டை சச்சரவுக்கு வேலையே இல்லைதானே?!

- இன்னும் கேட்போம்...