Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Published:Updated:
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

அருகரும்புத் தரும் வியப்ப அவனியடு
கோட்டு நுனி அமைத்துத் தீயோர்
திருகரும்புக் கிடங்கொடாச் செங்கண் வரா
கமும் மகிழத் தேவே என்று
வரு கரும்புள் குலமுழக்கு மலர் கேழல்
புனற்கோட்(டு) ஓர் வணிகன்பாங்கர்
ஒரு கரும்புக்(கு) ஆயிரம் கொண்டுறு கரும்பாயிரக்
களிற்றை உளம் கொள்வாமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- திருக்குடந்தைப் புராணம்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

பொருள்: வராக அவதாரம் எடுத்து மூக்குக் கொம்பு ஒன்றின் நுனியினால் உலகத்தை கிண்டிக் கிளறிய செங்கண்மாலால் வழிபடப் பெற்ற பெருமையுடையவரும், வராக தீர்த்தக்கரையில் ஒரு வணிகனுடைய கரும்பு ஒன்றுக் காக ஆயிரம் கரும்பைக் கொண்டுபோய்க் கொடுத்த, கரிய சரீரத்தைப் பெற்றவருமான விநாயகரை உள்ளத்தில் போற்றுவோம்!

ருமுறை, பிரம்ம புத்திரர்களான முனிவர்கள் திருமாலைத் தரிசிக்க வைகுந்தம் சென்றனர். வாயிற்காவலர்களாக இருந்த ஜயன், விஜயன் இருவரும் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. முனிவர்கள் செய்வதறியாது நின்றனர். இதனை அறிந்த திருமகள் அங்கே வந்தாள். வாயிற்காவலர்கள் மீது கோபம் கொண்டாள்.

''வானவர்களோ அல்லது பூலோகத்தவரோ... யார் வந்தாலும் உடனே அறிவிக்க வேண்டும்; அவர்களைக் காத்திருக்க வைக்கக்கூடாது என்று சொல்லியிருந்ததற்கு மாறாக, முனிவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்தது தவறாகும். எனவே நீங்கள் இருவரும் பூமியில் அசுரர்களாகப் பிறக்கக் கடவீர்கள்!'' என்று சபித்தாள், தேவி.

##~##
அதன்படி ஜயன், விஜயன் இருவரும் பூமியில் இரண்யாட்சன், இரணிய கசிபு என்ற பெயர்களுடன் அசுரர்களாகப் பிறந்து, பெரும்தவம் செய்து அநேக வரங்களைப் பெற்றனர். வரம் பெற்ற மமதையால் மூவுலகத்தையும் வருத்தத் தொடங்கினர். தேவர்கள் மிகவும் வருந்தி, திருமாலிடம் முறையிட்டனர். அதேநேரம், இரண்யாட்சன் அவனது அசுர பலத்தால் உலகைப் பாயாகச் சுருட்டிப் பாதாளத்தில் அழுத்தினான். தேவர்களின் துயரைப் போக்க, திருமால் வராக ரூபம் எடுத்துப் பாதாளத்தினுள் சென்று, தமது ஒரு கொம்பினால் அந்த இரண்யாட்சனை வதம் செய்தார். மற்றொரு கொம்பினால் பூமியை எடுத்து மேலெழுந்து நிலை நிறுத்தினார்.

இப்படி, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்துப் பாதாளத்தில் இருந்து வெளிப்பட்ட துவாரம் உள்ள இடம்... இன்றைய குடந்தை (கும்பகோணம்) மாநகரில் உள்ள வராக தீர்த்தம் (வராகர் குளம்)!  இதன் கீழ்க்கரையிலேயே வராகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீவராகர், மாசி மாத பௌர்ணமி

அன்று வராக தீர்த்தத்தில் நீராடி, விநாயகரை ஸ்தாபித்து பூஜித்ததாக குடந்தைத் தல புராணம் குறிப்பிடுகிறது. இந்த விநாயகர் ஒற்றைக் கொம்பும், இரட்டைச் செவியும், முக்கண்ணும், நான்கு வாயும், ஐந்து கரமும், ஆறெனப் பெருகி எழும் மததாரையும், எண் குணமும் கொண்டவர். இந்த வராகப் பிள்ளையார் மூவுலகும் தொழுதேத்த, வராக தீர்த்தக்கரையில் அருள்பாலிக்கின்றார்.

ஒருமுறை, மாசி மகம் அன்று முனிவர்கள் பலர் கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராட வந்தனர். அப்போது, அங்குள்ள கோயில்களில் மக உத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரும்பு வியாபாரி ஒருவர் பெரிய வண்டியில் ஆயிரம் கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்து வராக தீர்த்தக்கரையில் தங்கி கரும்பு வியாபாரம் செய்ய முற்பட்டார். அதை, அங்கே இருந்த வராகப் பிள்ளையாரும் கவனித்துவிட்டார். உடனே அவருக்கு ஒரு திருவிளையாடல் செய்தால் என்ன என்று தோன்றியது.

அக்கணமே ஒரு சிறுவனைப் போன்று உருமாறி கரும்பு வியாபாரி அருகில் வந்தார். ''ஐயா! கரும்பு வியாபாரியே! உமக்கு எம் நல்வாழ்த்துக்கள்!'' என்றார்.பதிலுக்கு, எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார் வியாபாரி. ''ஏன் ஐயா! நான் சொன்னது உம் காதில் விழவில்லையோ? பதிலேதும் கூறவில்லையே..?'' என்று சீண்டினார் விநாயகர்.

''காலையில் இருந்து இதுவரை ஒரு கரும்புகூட வியாபாரம் ஆகவில்லை. உனது வாழ்த்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? முடிந்தால், கரும்பை விலைக்கு வாங்கு. காரியம் இல்லாமல் உன்னிடம் என்னால் பேச இயலாது!'' என்றார் வியாபாரி.

விநாயகரும் வியாபாரியை விடுவ தாக இல்லை. ''ஐயா! நானோ சிறு பிள்ளை; என்னிடம் காசு எதுவும் இல்லை; கரும்பைக் கண்டவுடன் வாய் ஊறுகிறது. ஒன்று கொடுத்தால் போதும். உமக்கும் வியாபாரம் நன்றாக நடக்கும்'' என்றார்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

''கரும்பை விற்று நாலு காசு பார்க்கத்தான் இங்கே வந்தேன். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு அல்ல. முதலில் இங்கிருந்து ஓடிவிடு!'' என்று விரட்டினார் கரும்பு வியாபாரி. விநாயகர் விட்டுவிடுவரா என்ன? ''உம்மிடத்தில் கரும்பு வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்'' என்றார், தீர்மானமாக. வியாபாரியும் தனது நிலையில் உறுதியாக இருந்தார். ''காசு என் கைக்கு வந்தால்தான் கரும்பு உன் கைக்கு வரும்; என்ன புரிந்ததா?'' என்றார்.

வியாபாரி இப்படிச் சொன்னதும் பலமாகச் சிரித்தார், சிறுவனாக வந்த விநாயகர். 'ஒரு கரும்புகூட தர மறுக்கிறாய் அல்லவா? நீ இங்கே வைத்துள்ள ஆயிரம் கரும்புகளையும் அப்படியே கொண்டு போகிறேன்... பார்!’ என்று எண்ணியபடி அவ்வாறு சிரித்தார்.

''என்னடா சிரிக்கிறாய்? இதற்கு மேலும் இங்கே நின்றால் உன்னை நையப் புடைத்து விடுவேன்'' என்றார் வியாபாரி. அப்போது விநாயகர் ஒரு கரும்பைத் தொட்டார். கோபம் கொண்ட வியாபாரி, விநாயகரைப் பிடிப்பதற்காக விரட்ட... அவர் அங்கே இங்கே என்று ஓடி, கடைசியில் தனது கோயிலுக்குள் புகுந்துவிட்டார். அதே வேகத்தில், வியாபாரி விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரம் கரும்புகளின் சாரத்தையும் உறிஞ்சி விட்டார். பின்னர், வியாபாரியிடம் கரும்பு வாங்கிச் சென்றவர்கள், அவை வெறும் சக்கையாக இருப்பதைக் கண்டு அவரைத் திட்டினார்கள். கொடுத்த காசைத் திருப்பிக் கேட்டார்கள். கலங்கிப் போனார் வியாபாரி. நேராக விநாயகர் கோயிலுக்குச் சென்றவர், 'ஒரேயரு கரும்பு தா என்று கேட்ட சிறுவனை விரட்டினேனே! இப்போது ஆயிரம் கரும்பும் வாங்குவார் இல்லாமல் சக்கையாகிவிட்டதே!’ என்று விநாயகர் சந்நிதி முன்பு வீழ்ந்து அழுது புரண்டார்.

பக்தன் கதறினால் சும்மா இருப்பாரா விநாயகர்? அக்கணமே வியாபாரி விற்பனைக் காக கொண்டு வந்த அத்தனைக் கரும்புகளின் சாரத்தையும் மீண்டும் அளித்தார்.

விநாயகரிடம் முறையிடப்போய்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்த வியாபாரி, கணபதிக்குப் பிடித்த பலவகைப் பணியாரங்களைக் கொண்டு போய் நிவேதனம் செய்து மகிழ்ந்தார். அன்று முதல் அந்த விநாயகருக்குக் 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்’ என்ற பெயர் உண்டாயிற்று.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வடக்கே திருமஞ்சன வீதி செல்லும் வழியில், வராகர் கோயிலுக்கு மேற்கில் கரும்பாயிரம் கொண்ட கணபதி அருட்காட்சி வழங்குகிறார். அருமையாகத் திருப்பணி செய்யப்பெற்று அழகாகக் காட்சியளிக்கும் இக்கோயிலில் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் மக்கள் கூட்டம் மிகுந்திருக்கும்.

கரும்பு வியாபாரியுடன் திருவிளையாடல் புரிந்த இந்தக் கணபதிக்கு, மாசி மாதம் வரும் சதுர்த்தி நாளில் கரும்புச்சாற்றினால் அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து அன்பர்களுக்கு வழங்குவது மிகவும் விசேஷம்.

கரும்பைப் போன்று வாழ்க்கையை இனிக்கச் செய்யும் வரத்தை அருள்பவர் இந்தக் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?!

- பிள்ளையார் வருவார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism