தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
மி
க அற்புதமான இடத்தையே தேர்வு செய்திருக்கிறார் விஸ்வாமித்திரர். உலகை ரட்சிக்கும் பொருட்டு, லோகநாயகனான ஸ்ரீமகாவிஷ்ணு, யுகம் யுகமாக தவம் செய்த திருவிடம் இது.

வாமன அவதாரம் எடுத்த ஸ்ரீமந்நாராயணர்  தவம் செய்து ஸித்தி அடைந்ததால், இந்த இடத்துக்கு ஸித்தாசிரமம் என்று பெயர்.

இப்போது, ஸ்ரீராமனின் வருகையாலும் அவனது பாதுகாவலுடன் வெகுசிறப்பாக நடந்தேறிய விஸ்வாமித்திரரின் யாகத்தாலும் மேலும் புனிதம் பெற்றுவிட்டது ஸித்தாசிரமம்!

வரும் வழியிலேயே தாடகாவனத்தில் ஆயிரம் யானை பலம் கொண்ட தாடகையை வதைத்து தனது பணியை துவக்கிய ஸ்ரீராமனின் கோதண்டம், ஸித்தாசிரமத்திலும் துஷ்ட நிக்கிரகத்தைச் செவ்வனே செய்துமுடித்தது. மானவாஸ்திரத்தால் மாரீசனை கடலில் தள்ளி, ஆக்னேய அஸ்திரத்தால் ஸுபாஹுவை வதைத்து, வாயவ்ய அஸ்திரத்தால் மற்ற ராட்சசர்களையும் கொன்று, ஸ்ரீராமனின் காவல் பணிக்கு உற்ற துணை புரிந்தது, அந்த தனுசு.

சாதாரண காவலா அது? கண்ணை இமை காப்பது போல விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காத்தார்களாம் தசரத குமாரர்கள். அதுவும் எப்படி?  கீழிமையாய் ஸ்ரீராமனும் மேல் இமையாய் லட்சுமணனும் செயல்பட்டார்களாம்.

ஆமாம்... வேள்வி சாலையின் வாயிற்புறத்தில் ஆடாது அசையாது காத்து நின்ற ஸ்ரீராமனை கீழ் இமையாகவும், நாலாபுறமும் சுற்றிச் சுழன்று காவல் செய்த இளவல் லட்சுமணனை மேல் இமையாகவும் உருவகப்படுத்தி சிலாகிக்கின்றன ஞானநூல்கள்.

விஸ்வாமித்திரரின் வேள்வியை மட்டுமா? இன்ப-துன்பங்கள் நிறைந்த நமது வாழ்க்கை வேள்விக்கும் ஸ்ரீராமனின் செவ்விய திருவடிதானே காப்பு? மகாபலிச் சக்ரவர்த்தி ஆணவம் அழிந்து அருள் பெற்றதும், ரிஷிபத்தினி அகல்யை சாப விமோசனம் பெற்றதும்... பகவானின் பாதக் கமலங்களின் ஸ்பரிசத்தால் அல்லவா?!

அகல்யை- மகரிஷி கௌதமரின் மனைவி.

இந்த ரிஷிபத்தினியின் மோகம் கொண்டான் இந்திரன். ஒருநாள் மகரிஷி இல்லாத தருணத்தில், அவரைப் போலவே உருவம் ஏற்று ஆசிரமம் அடைந்த தேவேந்திரன் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

நடந்தது அறிந்த மகரிஷி கடும் கோபம் கொண்டார். 'உடம்பெல்லாம் கண்ணாகக் கடவது’ என்று தேவேந்திரனைச் சபித்தார். மனைவியைக் கல்லாகும்படி சபித்தார். மனம் வருந்தினாள் அகல்யை; சாபத்துக்கு விமோசனம் வேண்டும் என கணவரைப் பிரார்த்தித்தாள்.

மகரிஷியும் மனம் கனிந்தார். 'இஷ்வாகு வம்சத்தினனான ஸ்ரீராமன் இந்த வனத்துக்கு வருவார். அப்போது அவரின் திருவடி உன் மீது படும்; நீ விமோசனம் பெறுவாய்’ என்று அருளினார். அகலிகை கல்லாய் சமைந்தாள்; காகுத்தனின் வரவுக்காகக் காத்திருந்தாள்.

அகல்யை பெற்ற சாபம் குறித்து வால்மீகி ராமாயணம் வேறுவிதமாய் விவரிக்கிறது.

'காற்றைத் தவிர ஆகாரமின்றி சாம்பலில் படுத்துக்கொண்டு, எவருடைய கண்ணுக்கும் புலப்படாமல் இருக்கக் கடவது’ என கௌதம மகரிஷி சபித்ததாகவும், 'பலகாலம் கழித்து, அவள் இருக்கும் வனத்துக்கு வரும் தசரத குமாரன் ஸ்ரீராமனுக்கு அதிதி பூஜை செய்து, அவரருளால் விமோசனம் பெறுவாய்’ என்று அருளியதாகவும் விவரிக்கிறார் வால்மீகி.

எது எப்படியோ... அகல்யை சாபவிமோசனம் பெறும் காலம் நெருங்கியது.

ஸித்தாசிரமத்தில் இருந்து விஸ்வா மித்திரருடன் மிதிலை நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீராமன், அவர் மூலம் பல்வேறு புண்ணியக் கதைகளை அறிந்தவாறு பயணப்பட்டான். வரும் வழியில், அவனது திருவருளால் அகலிகை விமோசனம் பெற்றாள். விஸ்வாமித்திரரின் வேண்டுகோளை ஏற்று அகல்யையை மீண்டும் ஏற்றுக் கொண்டார் கௌதமர். ஸ்ரீராமனின் பயணம் தொடர்ந்தது!

அகல்யைக்கு விமோசனம் கிடைத்து விட்டது சரி... நமக்கும் ஸ்ரீராமனின் திருவடி தரிசனம் கிடைக்க வேண்டாமா? அவனது திருவருளால், ஒட்டு மொத்த பாவங் களும் தொலைந்து நமக்கு விமோசனம்  கிடைக்க வேண்டாமா?

தசாவதாரம் திருத்தலங்கள்!

வாருங்கள்... அவர்கள் மூவரும் மிதிலையை அடைவதற்குள், நாம் புன்னைநல்லூர் கோதண்ட பாணியைத் தரிசித்து திரும்பி, பிறகு அவர்களோடு இணைந்துகொள்வோம்.

புன்னை நல்லூர்- தஞ்சாவூருக்கு அருகில் உள்ள புண்ணிய க்ஷேத்திரம். இங்கு புகழ்பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீகோதண்டராமர் ஆலயம். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட ஆலயம் இது.

இங்கே, சௌந்தர்ய விமானத்தின் கீழே, சாளக்ராம மூர்த்தமாக... நின்ற கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீகோதண்டராமர். அருகில் ஸ்ரீலட்சுமணன், ஸ்ரீசீதாதேவி ஆகியோருடன் ஸ்ரீசுக்ரீவன் தரிசனம் தருவது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பு.

முற்காலத்தில் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசி மாடத்தையும் சாளக்ராமத்தையும் தருவதை பெண் வீட்டார் கௌரவமாகவும் பெருமையாகவும் கருதினராம். அவ்வாறே நேபாள மன்னன் ஒருவரால், அவரின் மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு சீர்வரிசையாக மிகப்பெரிய சாளக்ராமம் வழங்கப்பட்டதாம்.

பிற்காலத்தில், தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாபசிங்கின் வசப்பட்டது. மிகப்பெரிதான சாளக்ராமத்தைக் கண்டு பரவசம் அடைந்த மன்னர், அதில் அழகிய தெய்வத் திருமேனியை உருவாக்கி, திருக்கோயிலும் அமைத்ததாகச் சொல்கிறார்கள்.

அதுமட்டுமா? கண்டகி நதியில், முக்திநாத் தலத்துக்கு அருகில் இருந்து எடுத்து வந்த சாளக்ராமத்தைக் கொண்டு ஸ்ரீராமரை உருவாக்கி ஸ்தாபித்திருப் பதால், முக்தி தரும் தலம் இதுவென பக்தர்கள் போற்றுகின்றனர்.  ஸ்ரீராம நவமி வைபவம் இங்கே விசேஷம்.

இந்தக் கோயிலில்... கையில் அபய ஹஸ்தம் மற்றும் தாமரையுடன் அருள்கிறார் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர். இவரின் சந்நிதிக்கு முன்னேயுள்ள மண்டப - விதானத்தில் 12 ராசிகளுக்கு உரிய சின்னங்களும் அதற்கு நேர்கீழே தரைப் பகுதியில் கட்டங்களும் உள்ளன. அந்தந்த ராசிக்கு உரிய கட்டங்களில் நின்றபடி, ஜெயவீர ஆஞ்சநேயரை பிரார்த்தித்தால், கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை!

இலங்கையில் சீதாதேவியைப் பார்த்துவிட்டு திரும்பிய அனுமன்... மகழ்ச்சியின் அறிகுறியாக தாமரையை ஏந்தி வந்ததாகச் சொல்வர். ஆக, தாமரையுடன் திகழும் இந்த வாயுமைந்தனைத் தரிசிக்க மகிழ்ச்சி பெருகும், திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அருளும்

ஸ்ரீஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபட, கல்வியில் சிறக்கலாம்!

- அவதாரம் தொடரும்...