Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

Published:Updated:
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்தி பெரிதா, சிவன் பெரிதா? - காலம் காலமாகக் கேட்கப்பட்டு, பதில் தெரியாமலேயே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. மரத்தில் இருந்து விதை வந்ததா? விதையில் இருந்து மரம் தோன்றியதா? இந்தக் கேள்விக்குப் பதில் கூற முடியுமா? அதுபோலத்தான் சக்தியும் சிவனும்!

சில புராணங்கள், ஆதிபராசக்தியே சிவனைப் படைத்தாள் என்கின்றன. சிவபுராணமோ, சிவனே உலகனைத்தையும் படைத்து, சக்தியையும் படைத்தார் என்கிறது. 'சிவனால் சக்தி தோன்றினாளா, அல்லது சக்தியால் சிவன் தோன்றினாரா?’ என்பது ஆராய்ந்து அறியவேண்டிய விஷயம்தான். எப்படியானாலும், புண்ணிய பாரதத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடின்றி மொழி, இனம், எல்லைகளைக் கடந்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 'எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற வாக்கை மெய்ப்பித்துக் கொண்டு, சக்தி வழிபாடு நடந்து வருகிறது.

பாரதத்தில் 108 முக்கிய சக்தி ஸ்தலங்கள் அல்லது சக்தி பீடங்கள் உள்ளன. ஹரித்துவார் எனப்படும் புனித ஸ்தலமும் அவற்றில் ஒன்று. சக்தியின் அம்சமான சதிதேவியின் ஆலயம், ஹரித்துவாரில் உள்ள கங்கட் என்ற இடத்தில் உள்ளது. அந்த ஸ்தல புராணத்தின் அடிப்படையிலும், பிரம்ம வைவர்த்த புராணம், சக்தி புராணம் போன்றவற்றின் ஆதாரத்திலும், சிவனால் உருவாக்கப்பட்ட சக்தி வடிவங்கள் உலகில் வியாபித்து, அருள்பாலிக்க வகை செய்த புராணக் கதையை இங்கே தெரிந்து கொள்வோம்.

##~##
'சதி’, 'பதி’ என்ற சொற்கள் மனைவி, கணவன் இருவரையும் குறிக்கும். சதி என்ற சொல்லுக்கு பதிவிரதா தர்மம் தவறாத பவித்ரமான மனைவி என்பதும், பதி என்ற சொல்லுக்கு மனைவியின் மனம் கோணாமல், அவளிடத்தில் உண்மையான பிரேமையுடன் அவளைப் பாதுகாக்கும் கணவன் என்பதும் விளக்கமான பொருள். சதிபதிக்கு தெய்விக வடிவங்கள் உமையும் ஈஸ்வரனும்தான்!

சதியும் பதியும் சமமான சக்தி பெற்றவர்கள் என்பதை விளக்கும் வடிவம்தான், அர்த்தநாரீஸ்வரர் ரூபம். உண்மையான பதிவிரதையின் உயரிய குணாதிசயங்களை உலகுக்கு உணர்த்த, உமாதேவியே ஒருமுறை பூமியில் அவதாரம் செய்தாள். அப்போது அவள் பெயர் சதி. அவள் வாழ்ந்து காட்டிய விதத்தாலேயே உலகில் பதிவிரதையான  பெண்களுக்கு இன்றும் சதி என்ற பொதுப் பெயர் நிலைத்துள்ளது.

ஒருமுறை, கயிலாயத்தில் ஈஸ்வரன் தியானத்தில் இருந்தபோது, உமாதேவி விளையாட்டாக அவரது கண்களைப் பொத்தினாள். அந்த விநாடியில் புவனம் முழுதும் இருளில் மூழ்கின. செயல்கள் யாவும் ஸ்தம்பித்து நின்றன. ஈசன் தன் நெற்றிக்கண்ணின் அக்னியால் உலகில் புதிய ஒளியை அருளினார். இருப்பினும், அந்த விநாடி நேர இருளுக்குள் உலகில் எத்தனையோ தீமையும் சேதமும் நேர்ந்தன. இதை உணர்ந்த உமாதேவியார் மிகவும் மனம் வருந்தினாள்.

அவள் சர்வமும் உணர்ந்த சக்திதேவி. நிகழவிருப்பதை அறியும் வல்லமை இருந்தும் அதைப் பற்றிய கவனமில்லாமல் இறைவனின் கண்களைப் பொத்தி தீமைகள் நிகழச் செய்த காரணத்தால், அதற்குப் பிராயச்சித்தமாக பூவுலகில் பிறந்து, இறைவனைத் தீவிர பக்தியுடன் வழிபட்டு, அவரை மீண்டும் பதியாக அடையும் நிலை ஏற்பட்டது.

பிரம்மதேவனின் மானஸ புத்திரர்களில் ஒருவன், தட்சன் என்று அழைக்கப்பட்ட தட்சப் பிரஜாதிபதி. இவன் பிரம்மனின் கட்டை விரலில் தோன்றியவன் என்கின்றன புராணங் கள். இவனுடைய மனைவிகள்- வேதவல்லி, அசிக்னி ஆகியோர்.

இரண்யன், ராவணன் ஆகியோரைப் போன்ற ஒரு வீரன், தீரன், பண்டிதன்தான் இந்த தட்சன். ஆரம்பத்தில் இவன் சிவ பக்தனாக இருந்தான். உமாதேவியின் அம்ச மாகத் தனக்கு ஒரு மகள் பிறக்க வேண்டும் எனக் கடும் தவம் புரிந்தான். அந்த தெய்விக மகளைத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்து, மீண்டும் சிவனாருக்கே மணம் முடித்துத் தந்து, அவரையே தனது மருமகனாக்கிக் கொள்ளவேண்டும் என்பது அவன் விருப்பம். எனவே, ஐம்புலன்களையும் அடக்கி, அன்ன ஆகாரம் துறந்து, சிவசக்தி குறித்துக் கடுந்தவம் புரிந்தான் தட்சன். அவன் தவம் பலித்தது. அன்னை உமாதேவி, தட்சன் மகளாகப் பிறந்தாள். பூவுலகில் உமாதேவி அவதரிக்க வேண்டுமென ஏற்பட்ட விதிப் பயனும் இதனால் பூர்த்தியானது. தனது மகளுக்கு 'சதிதேவி’ எனப் பெயரிட்டான். தட்சன் மகள் என்பதால் 'தாட்சாயினி’ என்றும் அவள் அழைக்கப்பட்டாள்.

பிறந்தது முதலே சிவனாரை வணங்குவதிலும் உபாசிப்பதிலுமே சதிதேவி தன் நாட்களைக் கழித்தாள். அவளுக்குத் தகுந்த பிராயம் வந்த போது, பிரம்மதேவனின் ஆசியுடன் சிவனாருக்கே சதிதேவியைக் கன்னிகாதானம் செய்து வைத்தான் தட்சன். சதிதேவி, பசுபதி யான சிவனை மீண்டும் அடைந்தாள்.

ஈசனை, தன் மருமகனாக்கிக் கொண்டதால் தேவர்கள் தன்னை சிவனிலும் மேலாகப் போற்றிப் பணிவார்கள் என நினைத்தான் தட்சன். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மெள்ள மெள்ள அவன் மனதில் ஈசன் மீது துவேஷம் ஏற்பட்டது. இதைத் தூண்டும் விதமாக சம்பவம் ஒன்றும் நடந்தது.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களும் தட்சனின் குமாரிகள். விண்வெளியிலே சுழன்று வரும் சந்திரனின் பாதையிலே அமைந்துள்ள இந்த 27 நட்சத்திர தேவியரும் சந்திரனின் மனைவியர் ஆவர். இவர்களில் ரோகிணி தவிர மற்றவர்களிடம் சந்திரன் நேசம் காட்டவில்லை என்ற காரணத்தால், சந்திரன் நாளுக்கு நாள் தேய்ந்து அழியக் கடவது எனச் சாபமிட்டான் தட்சன். அதன்படியே சந்திரனும் நாளுக்கு நாள் தேய ஆரம்பித்தான். இதனால் கலங்கிய சந்திரன் சிவனாரைச் சரணடைய, அவர் முற்றிலும் தேய்ந்த சந்திரனைத் தமது சடையில் தரித்து, மீண்டும் வளரும்படி அவனுக்கு வரம் தந்தருளினார். தட்சனின் சாபப்படி 14 நாட்கள் தேய்வதும், சிவனின் அனுக்ரஹப்படி 14 நாட்கள் வளர்வதுமாக சந்திரனின் வாழ்க்கை தேய்பிறை, வளர்பிறையாக அமைந்தது.

தான் கொடுத்த சாபத்தை மாற்றித் தன்னை சிவபெருமான் அவமதித்ததாகக் கருதி, அவர் மீது பகையும் வெறுப்பும் கொண்டான் தட்சன். நாட்டில் எல்லா இடங்களிலும் சிவ பூஜையை நிறுத்தினான். ஈசனை உயர்வாகப் புகழக்கூடாது எனத் தேவர்களுக்குக் கட்டளையிட்டான். தொடர்ந்து சிவநிந்தனை செய்தான். சிவனாரை அவமதிக்கும் விதமாக, மாபெரும் யாகத்துக்கு ஏற்பாடு செய்து, தேவர்களுக்கு அழைப்பு விடுத்தான். ஸ்ரீபிரம்மன், ஸ்ரீநாராயணன் மற்றும் தேவர்களும் தேவியரும் யாகத்துக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், தன் மருமகன் ஈசனுக்கு மட்டும் வேண்டுமென்றே அழைப்பு அனுப்பவில்லை தட்சன். அத்துடன் 'யாகத்தில் சிவனுக்கு அவிர் பாகம் கொடுக்கக்கூடாது’ என்றும் கட்டளையிட்டான்.

தன் தந்தையின் செயலால் சதிதேவி துடித்தாள். உடனே தட்சனிடம் சென்று, அவனது தவற்றைக் கண்டித்து அவனைத் திருத்த எண்ணினாள். அதற் காகச் சிவனாரிடம் அனுமதி கேட்டாள்.

''தட்சனுக்கு என்ன அறிவுரை கூறினாலும், அவன் கேளான். நீ அவமானப்படுவாய்'' என்று சொல்லித் தடுத்தார் சிவனார். ஆனாலும், தாட்சாயினியால் பொறுக்க முடியவில்லை. தந்தைக்குப் பாடம் புகட்டியே ஆக வேண்டும் என உறுதி கொண்டாள் தாட்சாயினி.

அநீதி இழைக்கப்படும்போதும், தர்மத்துக்குக் கேடு விளையும் போதும் அதைத் தடுத்து, நியாயம் பிறக்க வழிசெய்வதே யுகதர்மம் என்ற தத்துவ அடிப்படையில் சதிதேவி செயல்பட விரும்பினாள். சிவனாரிடம் யாகத்துக்குச் செல்ல அனுமதி வேண்டினாள். அது மனைவியின் கடமை. அவளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது கணவனின் கடமை என்பதால், 'சதிதேவியே, போ! உன் அனுபவமாவது தட்சனுக்கு நல்வழி காட்டட்டும்!’ என்று கூறினார் ஈஸ்வரன்.

பிரம்மாண்ட யாகசாலை. மகரிஷிகள் மந்திர கோஷம் செய்ய, தேவர்களும் தேவியரும் வீற்றிருக்க, பிரம்மதேவனே முன்னின்று தட்சனின் யாகத்தைத் தொடங்கினார். அங்கு வந்த சதிதேவியை 'இங்கு ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய்?’ என்று சொல்லி மகள் என்றும்  பாராமல் அவமானப் படுத்தினான் தட்சன். கூடியிருந்த எல்லோரது முன்னிலையிலும் ஈஸ்வரனை பிக்ஷ£ண்டி என்றும், பித்தன் என்றும், பேய் என்றும், சுடலை காப்பவன் என்றும், தேவர் சபையில் இருக்கத் தகுதியற்றவன் என்றும் நிந்தித்தான் தட்சன்.

இதைக் கேட்டு ஆவேசமானாள் சதிதேவி. 'சிவனை நிந்தித்ததால், நீ செய்ய நினைத்த காரியம் நிறைவேறாமல் போகட்டும். தர்மம் தவறிய உன் யாகம் பாதியில் நிற்கட்டும். இந்த யாகசாலை அழியட்டும். சிவநிந்தனைக்குத் துணை நின்றவர்கள் அனைவரும் துன்பத்தை அனுபவிக்கட்டும்’ என்று சாபமிட்டாள். அத்துடன் ''நீங்கள் அவிர் பாகம் தரமறுத்த என் சிவனுக்கு, என் உடலையும் ஆவியையும் இதே யாக சாலையில் நானே அவிர் பாகமாக அர்ப்பணித்து விடுகிறேன்'' என்று கூறி பிராணத் தியாகம் செய்து, உயிரற்ற உடலாக யாகசாலையில் வீழ்ந்தாள் சதி எனும் தாட்சயாயினி.

தன் உடலில் ஒரு பாகமான- உமையின் அம்சமான சதிதேவியின் உடல் மண்ணில் வீழ்ந்ததுமே சிவனின் உடலில் அனல் பரந்தது. கோபாக்னி ஜொலித்தது. சிவனின் ருத்ராம்ஸங்களில் ஒன்று அகோர வீரபத்ரராக உருவெடுத்து தட்சனின் யாக சாலையில் தோன்றியது. அங்கே, அகோர வீரபத்ரரின் கோரத் தாண்டவம் நிகழ்ந்தது. யாகசாலை அழிந்தது. தட்சனின் சிரம் கொய்யப்பட்டது. தேவர்கள் பயத்தால் சிதறி ஓடினர்.

மறுவிநாடி, சிவபெருமான் விஸ்வரூப ருத்ரனாக யாகசாலையில் தோன்றினார். சதிதேவியின் உடலைத் தூக்கிக்கொண்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். கடல்கள் கொந்தளித்தன. பூமி அதிர்ந்தது. தேவலோகம் கிடுகிடுவென நடுங்கியது. பிரம்மனும் நாராயணனும் அவர்களின் தேவியரும் சிரம் வணங்கி சிவனை ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தனர். தேவர்கள், தேவியர்கள் அனைவரும் ஆதிபராசக்தியை மனமுருகப் பிரார்த்தித்தனர்.

சதிதேவியின் உடல் மெள்ள சக்தி ஸ்வரூபத் துளிகளாகச் சிதற ஆரம்பித்தது. சிவபெருமானின் ருத்ரதாண்டவ அசைவு ஒவ்வொன்றிலும் சதியின் உடலின் ஒவ்வொரு அணுவும் ஒரு சக்தி வடிவமாக மாறி பூமியெங்கும் சிதற ஆரம்பித்தது.

அவை விழுந்த இடங்கள் எல்லாம் சக்தியின் ஆதார ஸ்தானங்களாக மாறின. (அவை புண்ணிய பாரதத்திலும், சில அண்டை நாடுகளிலும் பூமியில் விழுந்த இடங்கள்தான் 108 சக்தி ஸ்தலங்களாக உருவாகின. இமயம் முதல் குமரி வரை நாம் ஜ்வாலாமுகி, வைஷ்ணவி, வாராகி, விசாலாட்சி, காளி, பகுளா, சிவானி, குமாரி, காயத்ரி, லலிதா, மகாமாயா, நாராயணி என்றெல்லாம் வழிபடும் சக்தி ஆலயங்கள் அனைத்தும் அன்று சிவபெருமான் அருளிய மஹாசக்தி ஸ்தலங்கள். இவற்றில் 51 சக்தி பீடங்கள் சிறப்பு மிக்கவை). தொடர்ந்து, தேவர்களின் பிரார்த்தனையால் ஊர்த்துவ தாண்டவ ருத்ரன், அமைதியே உருவான சிவனாக மாறினார். சக்தி உமை, அவரது உடலில் ஒரு பாகமாக ஒளிவீசலானாள். 'ஹர ஹர மகாதேவா நமஹ. பார்வதி பதயே!'' என்ற சத்தம் வானைப் பிளந்தது.

சிவனின் கருணையால் இறந்தவர்கள் பலர் உயிர் பிழைத்தனர். தன் தந்தை தட்சனுக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டுமென அன்னை உமை கேட்க, தலை கனத்துத் தவறுகள் புரிந்த தட்சனுக்குப் புதிய தலையைக் கொடுத்து உயிர் தந்தார் சிவபெருமான். இப்போது தட்சனின் தலை ஆட்டுக்கடாவின் தலையாக இருந்தது.

மகரிஷிகளின் ருத்ர ஜபத்துடன் மீண்டும் யாகம் தொடங்கியது. ஆட்டுத்தலை பெற்ற தட்சன், யாகத்தில் சிவனுக்கு முதல் அவிர் பாகம் தந்து, அவரது பாதங்களை வணங்கி பூதகணங்களில் ஒருவனாகத் தன்னையும் ஏற்று அருள்புரியும்படி வரம் கேட்டான். சிவனும் அவ்வாறே வரம் தந்தருளினார்.

சதிதேவியின் நியாய உணர்வாலும் தியாகத்தாலும் சக்திபீடங்கள் தோன்றியதா? சிவனாரின் ஊர்த்துவ தாண்டவத்தால் சதியின் உடலில் தோன்றிய சக்தித் துளிகள் சிந்தி, அதனால் சக்தி பீடங்கள் உருவானதா?

சக்தி பீடங்களை தரிசித்து, அன்னையின்  அருள்பெற்றால் இதற்கு விடை தெரியலாம்!

- இன்னும் சொல்வேன்...