Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ழூல நட்சத்திரத்தின் தேவதை பிரஜாபதி (ப்ரஜாபதயெ ஸ்வாஹா மூலாய ஸ்வாஹா) 'விச்ருதௌ’ என்று  மூலத்தைச் சொல்லும் வேதம்(விச்ருதௌ நாமதாரகே). இந்த நட்சத்திரத்தின் முதல் பாதத்துக்கு விச்ருதௌ என்று பெயர். முதல் பாதத்தின் தேவதை - இறந்த முன்னோர் (பிதரோதேவதா). 2 மற்றும் 3-ஆம் பாதங்களின் தேவதை- நிருருதி (ப்ராச்யேது நிருருதி:பராசா). 4-வது பாதத்துக்கு பிரஜாபதி தேவதை என்கிறது வேதம் 'பிரஜாபதியுடன் இணைந்த மூலம், வீரம் மிகுந்த மழலைகளை அளிக்க வேண்டும். தாய்க்கும் சேய்க்கும் உடல் ஆரோக்கியம் தந்து மகிழ்ச்சியளிக்க வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (மூலம் ப்ரஜாம்வீரவதீம்விதேய). 'மூல நட்சத்திர தேவதை ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும்’ என்று வேதம் சொல்லும் (அஹர்பூயாத் யஜமானாய மஹ்யம்).

ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம், பெண் மூலம் மாமனாருக்கு ஆகாது... எனும் சொல்வழக்குகள் உண்டு. ஆதாரம் இல்லாத சொல்வழக்குகள் மக்களி டம் ஆழமாகப் பதிந்துவிட்டது. இன்றும், மூலத்தில் பிறந்த பெண்ணை மணக்க தயங்குவோர் உண்டு. பிற்காலத்தில் வந்த ஜோதிட நூல்களில், மூலத்துப் பெண் தன் மாமனாரை அலைக்கழிப்பாள் எனும் தகவல் உண்டு (மூலஜாச் வசுரம்ஹநிதி). முன்னதாகத் தோன்றி, தமது ஆயுளும் நிர்ணயிக்கப் பட்டுவிட்ட மாமனாரின் ஜாதகப் பலனை, பின்னர் வந்த பெண்ணின் ஜாதக பலன்... அதுவும் ரத்தபந்தம் நேரடியாக இல்லாத நிலையில், தனக்கு நெருக்க மான கணவனையும் மீறி, அவன் தந்தையை பாதிக்கும் என்ற தகவல் ஏற்புடையது அல்ல. 'தன் ஜாதக பலனையும் மீறி பிறரது ஜாதகபலன் தன்னைத் தாக்கும் அல்லது நடைமுறைக்கு வரும்’ என்பது ஜோதிடம் ஏற்காத ஒன்று.

##~##
ஒருவேளை... மருமகள் வரும் தருணமும் மாமனாரின் ஆயுள் முடியும் தருணமும் ஒன்றுபோல் வந்தால் மாமனாரின் இழப்பு நிகழுமே தவிர, நீண்ட ஆயுளைப் பெற்ற மாமனாரை தனது வரவால் இடையிலேயே துண்டிக்கும் திறமை, பின்னால் வந்த மருமகளின் ஜாதகத்துக்கு இருக்காது. குழந்தை கருவறையில் இருக்கும்போது ஆயுள் நிர்ணயிக்கப்பட்டுவிடும் என்ற தகவல் ஜோதிடத்தில் உண்டு. ஆயுள், செயல்பாடு, பொருளாதாரம், அறிவு, மறைவு ஆகிய ஐந்தும் கருவறையில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுவிடும் என்கிறது ஜோதிடம் (ஆயு:கர்மசவித்தம் சவித்யாநிதன மேவச...). ஆக, மாமனாரானவர் அவரின் தாயார் கருவறையில் இருக்கும் போதே அவருடைய ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, பல வருடங்கள் கழித்து வந்து சேரும் மருமகளின் ஜாதக பலன், மாமனாரின் ஆயுளை நிர்ணயிக்காது என்பது கண்கூடு.

போரில் அசுரர்களின் தலைவன் தேவர்களால் அழிக்கப் பட்டான். அந்த வெற்றி விழாவைச் சிறப்பிக்கும் பொருட்டு, அசுரத் தலைவனை அழித்த நட்சத்திரம் என்று மூலத்துக்கு சிறப்பு பெயர் தந்தனர். அதாவது, 'மூல பர்ஹணீ’ என்று கொண்டாடினர் எனும் தகவல் வேதத்தில் உண்டு (மூலமே ஷாமவிருஷாமேதி தன் மூலபர்ஹணீ). இங்கு, தலைவன் அழிந்த பிறகு மூலத்துக்கு சிறப்பை ஏற்படுத்தினர்; மூலத்தின் காரணமாக தலைவன் அழியவில்லை. போரில் நிகழ வேண் டிய மறைவை எடுத்துரைத்தது தேவாஸுர யுத்தம். எனவே, 'தாம்பத்தியத்தில் இணைந்த மருமகளின் வரவு, தலைவனை அழிக்கும்’ என்ற தகவல் சிந்தனைக்குப் பொருந்தாது.

மாமனார் - மாமியார் இல்லாத இடமாகப் பார்த்து மூலத்து பெண்ணுக்கு வரன் தேடி, திருமணத்தை முடிப்பார்கள்; புகுந்த வீட்டில் நுழையும்போதே மாமனார்- மாமியார் பிடுங்கல் இல்லாத சூழல் அமைந்து சுவையான வாழ்க்கை மலர்ந்துவிடும். ஆக, மூலத்து பெண்ணுக்கு உதவியாக செயல்பாடு அமைந்துவிடும். மூலம் தவிர்த்த நட்சத்திரங்களிலும் கல்யாணம் ஆகாத பெண்கள் நிறைய தென்படுவர். கல்யாணம் ஆகாத மூல நட்சத்திரப் பெண் மிக மிக அரிது. ஆகவே, சொல்வழக்குகள் அத்தனையும் செயற்கையாக சித்திரிக்கப்பட்டவையே.

நட்சத்திரங்களில் அஸ்வினிக்கும் மகத்துக்கும் உள்ள தகுதி மூலத்துக்கும் உண்டு. அந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களின் சிறப்பு மூலத்துக்கும் உண்டு. விதவைக்கோலம் பூண்டு விட்ட பெண், சமுதாய அங்கீகாரத்தை இழந்து தவிப்பாள், அன்றைய சூழலில். ஆகையால், விதவை ஆவதை தவிர்க்க எண்ணும் மனம். விதவை என்கிற வேஷம் இன்று இல்லை. மருமகள் வரவால் மாமனார் போனாலும் மாமியாருக்கு அங்கீகாரம் உண்டு. விருப்பம் இருந்தால் மறுமணமும் ஆகலாம். சமுதாயம் அதை ஏற்கும். எல்லா விஷயங்களிலும் சரிசமமாக முன்னேறி வரும் பெண்ணினத்துக்கு சமுதாய அங்கீகாரம் கிடைத்துவிடும்.

தான் குடிபுகுந்த வீட்டின் இன்னல்களை எல்லாம் நிர்மூலமாக்கி விடுவாள் மூலத்தில் பிறந்த பெண். அதையே, 'பெண் மூலம் நிர்மூலம்’ என்றார்கள். உள்ளதை உள்ளபடி வாங்காமல் குளறுபடியில் சிக்கித் தவிப்பது அறியாமை. மூலத்துப் பெண்ணை ஓரக்கண்ணால் பார்க்காமல், முழுப் பார்வை யுடன் வரவேற்கும் பக்குவம் வரவேண்டும். பிறப்பும் இறப்பும் கடவுள் சித்தம்; நமது அதிகார வரம்புக்கு உட்படாத விஷயம். அதை மூலத்துப் பெண் நிகழ்த்திக் காட்டுவாள் என்று சொல்வது அறியாமையே.

தனுசு ராசியில் பரவியிருக்கும் நட்சத்திரம் மூலம். நான்கு பாதங்களில்  செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவற்றின் இணைப்பு, சிறப்பான தாம்பத்தியத்துக்கு உத்தரவாதம் அளிக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவனுக்கு பகுத்தறிவு, பொருளாதாரம், மனோதிடம், ஊக்கம் அத்தனையும் நிறைவை எட்டிவிடும் என்கிறது ஜோதிடம். வலுப் பெற்ற இந்த (மேற்சொன்ன) நால்வரும் வளமான வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பார்கள்; பலம் குன்றிய நிலையில், சறுக்கி விழுந்து சங்கடத்தை ஏற்பார்கள். ராசிநாதன்  குருவாக இருப்பது நீண்ட ஆயுளை யும், கீர்த்தியையும் பெற்று மகிழவைக்கும். முதல் பாதத்துக்கு கண்டாந்த தோஷம் இருப்ப தால், சிறு வயதில் பாலாரிஷ்டம்  இருந்தாலும் இளமையும் முதுமையும் சிறப்புற்று விளங்கும். குடும்ப உறுப்பினர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு முன்னேறும் பாங்கு அவனிடம்  இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவன் முதலில் கேது தசையை சந்திப்பான். ஏழு வருடங்கள் நீண்டு இருக்கும். அஸ்வினிக்கும் மகத்துக்கும் இது பொருந்தும். 2-வதாக வரும் சுக்கிர தசை வாழ்வை வளமாக்க ஒத்துழைக்கும். கால புருஷனின் 5-க்கு உடைய சூரியனும், 4-க்கு உடைய சந்திரனும் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே அமைந்திருப்பது சிறப்பு, செவ்வாயின் துடிப்பும் புதனின் சிந்தனை வளமும் சேர்ந்து இருப்பது, கிடைத்த வாழ்வை பயனுள்ளதாக மாற்றிவிடும்.

நட்சத்திர பலனை ஜாதக பலனாகச் சொல்பவர் களும் உண்டு. இரண்டையும் இணைத்து பலன் சொல்லும் முறை வளர வேண்டும். ஜோதிடம் நல்ல முறையில் மக்களுக்குப் பயன்பட வேண்டும்.. அலுவல்களில் முழுகியிருக்கும் அத்தனைபேருக் கும், 'அது ஓர் ஊன்றுகோல்’ என்று விளங்க வேண்டும். வாழ்வை செம்மைப்படுத்துவதற்கு முயற்சித்த சாஸ்திரங்களில் ஜோதிடமும் ஒன்று. மாறுபட்ட விளக்கங்களால் அதற்கு ஏற்பட்ட மாசு அகல வேண்டும். முன்னோரின் படைப்புகள் அத்தனையும் நம் முன்னேற்றத்துக்காகவே என்பதை உணர வேண்டும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

காலபுருஷனின் இரண்டு தொடைகள் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டும் தனுர் ராசி. உடல் உறுப்புகளில், சதைப்பற்று மிகுதியாக- வலுவுள்ள உருப்படியாகத் திகழ்வது தொடைகள். அவை, உடலைத் தாங்கி நிற்கும் தூண்கள். அதன் செழிப்பை தனுர் ராசியில் இணைந்த கிரகம் வரையறுக்கும்.

'சுயமரியாதையைக் காப்பாற்றுவான், செல்வச் சீமான், இரக்கம் மேலிட்டு உதவி செய்வதில் அக்கறைக் காட்டுவான், உலக சுகங்களைப் பெற்று மகிழ்வான், ஸ்திரப் புத்தியுடன் மிளிர்வான்’ என்று இந்த நட்சத்திரத்தில் பிறந்தவனின் தகுதியை வரையறுத்துக் கூறுவார் வராஹமிஹிரர்.

'செல்வச்செழிப்புடன் கொடை வள்ளலாகவும் திகழ்வான். சண்டை-சச்சரவில் ஈடுபட்டு பிறரது சொத்தை தனதாக்கிக் கொள்வான். குரூரமான செயல்பாடுகளுடன் பிறரைத் துன்புறுத்த வைப்பான்’ என்று மாறுபட்ட விளக்கம் தருகிறார் பராசரர்.

முதல் பாதத்தில் பிறந்தவன் இன்பத்தைச் சுவைப்பான். 2-ல் சேமிப்பை பலருக்கு வழங்குவான். 3-ல் நல்ல நண்பர்களைப் பெறுவான். 4-ல் அரசனாகவோ, அமைச்ச னாகவோ, தலைவனாகவோ திகழ்வான் என்று பிரஹத் ஸம்ஹிதை எடைபோடும். முதல் பாதத்தில் தகப்பனுக்கு கெடுதல்; 2-ல் தாய்க்கும்; 3-ல் செல்வத்துக்கும் கெடுதல்; 4-ல் மகிழ்ச்சியில் திளைப்பான் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

மூல நட்சத்திரத்தை 15 பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் பலன் சொல்லும் ஜாதக பாரிஜாதம். முதல் நான்கு நாழிகைக்குள் பிறந்தால் தகப்ப னுக்கு; 2-வதில் சித்தப்பாவுக்கு; 3-ல் தங்கை அல்லது அக்காளின் கணவனுக்கு; 4-ல் தகப்பனின் தகப்பனுக்கு (பாட்டனா ருக்கு); 5-ல் தாயாருக்கு; 6-ல் சிறிய தாயாருக்கு; 7-ல் மாமனுக்கு; 8-ல் சித்தப்பா வின் மனைவிக்கு; 9-ல் என்றும் நம்முடன் தொடர்புடையவர்களுக்கு; 10-ல் வீட்டுச் செல்லப் பிராணிகளுக்கு; 11-ல் வேலையாட்களுக்கு; 12-ல் சிறுவர்களுக்கு; 13-ல் சிறுவர்களின் உடன்பிறப்புக்கு; 14-ல் சிறுவர்களின் சகோதரிகளுக்கு; 15-ல் தாயாரின் தகப்பனுக்கு கெடுதல் என்று சொல்லும். வாழ்க்கையில் சந்திக்கும் - குடும்பத்துடன் இணைந்தவர்களது தொடர்பு, நமது நடைமுறையால் மகிழ்ச்சி யையும் இகழ்ச்சியையும் சந்திப்பது உண்டு. நமது அணுகுமுறையானது நெருக்கத்தை ஒட்டி மாறுபடுவதும் உண்டு. அதன் வெளிப்பாடுதான், 15 பகுதிகளாகப் பிரிந்து பலன் கூறப்பட்டதன் நோக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சிறு வயதிலும், இளமையிலும், முதுமை யிலும் பலருடன் தொடர்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. நமது இயல்புக்கு உகந்தவாறு... உறவுமுறை மாறுதலையட்டி சங்கடமும் சந்தோஷ மும் ஏற்படுவது உண்டு. மூக்குநுனியில் கோபம் இருக்கும், மூலரோகம் தாக்கலாம், தவறு செய்வதில் வெட்கம் இருக்காது, மெதப்புடன் செயல்படுவான் என்று முதல் பாதத்துக்கு பலன் சொல்கிறது பலசார சமுச்சயம்.

'அறிஞனாகத் திகழ்வான், மெலிந்த உடல், சிறந்த அணுகுமுறை, புத்திசாலி, உண்மை பேசுபவன், இதயத்தில் பிணிதோன்றுவதற்கு இடமுள்ளவன், எல்லோருக்கும் நல்லவன் என்று 2-வது பாதத்துக்கு பலன் சொல்லும். ஆசையை அடக்க இயலாதவன், பிறரைத் தீண்டி துன்புறுத்துபவன், பிறர் துன்பத்தில் மகிழ்பவன், தானும் துயரத்தை வரவழைத்து சங்கடப்படுபவன் என்று 3-வது பாதத்துக்கு பலன் சொல்கிறது. உடல் வலிமை, உள்ளத் தெளிவு, கெட்டிக்காரத்தனம், எதிரிகளை முறியடித்தல் கோபம் இல்லாதவன் என 4-வது பாதத்துக்கு பலன் சொல்லும் பலசாரசமுச்சயம்.

இது கடினமான நட்சத்திரம். பேய், பிசாசு, பூதம், வேதாளம் போன்ற தவறான சக்திகளை வசமாக்கி, சேப்படி வித்தைகளில் கவனம் செலுத்த இதன் இணைப்பு பயன்படும். கண்கட்டு வித்தை, கொலை பாதகம், பலி பூஜைகள் போன்றவற்றின் வெற்றிக்கும் துணை நிற்கும். அரசை வீழ்த்த, வசமாக்க, மூளைச் சலவையின் மூலம் அடக்குவதற்கு இதன் இணைப்பு உதவும் என்கிறது பிரஹத் சம்ஹிதை. படையெடுத்தல், எதிரியை வீழ்த்துதல், எதிரிகளையும் நண்பர்களையும் பிரித்தாளுவது, வெற்றிக்கு உகந்தவாறு அவர்களை சேர்த்தல் ஆகியவற்றில் பெருமை பெற இந்த நட்சத்திரம் உதவும் என்கிறார் பராசரர்.

'ப்ரம் ப்ரஜாபதயெ நம:’ என்ற மந்திரம் மூலமாக வழிபட வேண்டும். 16 உபசாரங்களை முறைப்படி செய்ய வேண்டும். 'மூலம் ப்ரஜாம்’ என்ற மந்திரத்தை ஓதியும் வழிபடலாம். மந்திரம் தெரியாதவர்கள், 'ஜயம் தேஹி சுகம் தேஹி ச்ரியம் தேஹி ப்ரஜாபதே. சிந்திதம் ஸகலம் தேஹி நமஸ்தெ பக்தவத்ஸல’ எனும் செய்யுளைச் சொல்லி, உபசாரம் செய்யலாம். அல்லது 'ப்ரஜாபதயெ ஸ்வாஹா மூலாய ஸ்வாஹா’ என்று சொல்லி 12 முறை தண்டனிட்டு வணங்கலாம். 'மும் மூலாய நம:’ என்று சொல்லி, கைகள் நிறைய புஷ்பத்தை அள்ளி அளிக்கலாம். மனதில் ப்ரஜாபதியை அசைபோடலாம்.

இவரது வழிபாடு, அன்றாடம் அலுவல்களில் தென்படும் இடையூறுகளை அகற்றி மகிழ்ச்சியைத் தரும். தன்னால் இயலாதவற்றை, தகுதிபெற்ற இறையுருவின் ஒத்துழைப்புடன் பெற்றுவிடலாம். சாதாரண மனிதன் அமைச்சரின் துணையுடன் பெரிய காரியத்தை சாதித்துவிடுவான். 'முடியவில்லையே’ என்று ஏங்காமல் பணிவிடையில் இறங்கினால், இறைவனின் அருளால் எளிதில் சாதிக்கலாம்.

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism