Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ர் ஆலயத்தின் சாந்நித்தியம் குறையாமல் இருப்பதற்குத்தான் பூஜைகளும் மந்திரங்களும்! இறைச் சக்தியை விக்கிரகத் திருமேனிக்குள் கொண்டு வந்து சந்நிதிக்குள் இறக்கி, அந்தப் பேரருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் யாகங்களும் கும்பாபிஷேக வைபவங்களும் நடைபெறுகின்றன.

மனிதனின் மனம்கூட கோயிலுக்கு நிகரானதுதான். சொல்லப் போனால், மனக் கோயிலில் இறைவன் குடியிருந்துவிட்டால், மனிதன் அப்பழுக்கற்றவனாகத் திகழ்வான். இன்னும் சொல்வதென்றால், மனிதனே தெய்வமாகிப் போவான். அதற்காகத்தான், பக்தியை ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் விதைத்தனர் நம் முன்னோர்!

'நீறில்லா நெற்றி பாழ்’ என்று, நெற்றியில் திருச்சின்னங்கள் இட்டுக் கொள்வதன் அவசியத்தை உணர்த்தினார்கள். 'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்’ என்று மனத்தை நல்வழிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை போதித்தார்கள். 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என அறிவுறுத்தினார்கள். அப்படி இருந்துவிட்டால் போதுமா? ஆகவே, 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று குறிப்பிட்டார்கள்.

ஒரு தலத்தில் வேத கோஷங்கள் முழங்குவதும், அடிக்கடி யாக பூஜைகள் நடப்பதும் சிறப்புக்கு உரியவை. திருப்பங்கள் தருகிற திருப்பட்டூர் திருத்தலமும் வேத கோஷங்கள் முழங்குகிற திருவிடமாக அமைந்திருக்கிறது. இங்கேயுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில், ஸ்ரீமாசாத்தனார் கோயில் என மூன்று பிரமாண்ட ஆலயங்களும் தங்களின் மொத்த சாந்நித்தியத்தையும் பரப்பி, இந்தத் தலத்தையும் தலத்துக்கு வருவோரையும் செழிக்கச் செய்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா நடைபெற்றது. பத்து நாள் விழாவும் விமரிசையாக நடந்தேறியது. இதையடுத்து சாஸ்தா, சாத்தனார், அய்யனார் என்றெல்லாம் சொல்லப்படுகிற ஸ்ரீமாசாத்தனார் கோயிலில் பல வருடங்கள் கழித்து கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. பிரம்மோத்ஸவத்தின் போது யாகங்களும் ஹோமங்களும் வேத கோஷங்களும் பூஜைகளுமாகத் திகழ்ந்த திருப்பட்டூரில் அதையடுத்து... யாகசாலை பூஜைகள் என்ன, கும்பாபிஷேக கோலாகலம் என்ன, மண்டலாபிஷேகம் என்ன... என மங்கல கரமாகவும் விமரிசையாகவும் நடந்து வருகின்றன விழாக்கள்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''எனக்குத் தெரிஞ்சு, திருப்பட்டூர் பிரம்மா கோயில்ல பெருசா வழிபாடுகள் நடந்ததில்லை. பெருமளவு கூட்டமா பக்தர்களும் வந்ததில்லை. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடிகூட, பிரதோஷ பூஜைக்கு இந்தக் கோயிலுக்கு வந்திருக்கேன். ஆனா, கூட்டமே இருக்காது; பக்தர்களே வரமாட்டாங்க. ஒரேயரு குருக்கள் மட்டும் இங்கேயும் அங்கேயுமா ஓடிப்போய், எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து அபிஷேகம் செஞ்சு, அலங்காரம் பண்ணி, தீபாராதனை காட்டுவார். அந்த பிரதோஷ பூஜைக்கு ரொம்ப வயசான நாலஞ்சு பெரியவர்கள் மட்டும் வருவாங்க. இன்னிக்கி கார்லயும் வேன்லயுமா எங்கிருந் தெல்லாமோ ஜனங்க திரள் திரளா வராங்க. அன்னிக்கு அபிஷேகப் பொருளுக்கு ஆளுக்கு ரெண்டு ரூபா, அஞ்சு ரூபான்னு போடணும். ஆனா இப்ப, பை கொள்ளாத அளவுக்கு அபிஷேகப் பொருட்களோட வராங்க நிறையப் பேர். அது மட்டுமா? நந்திதேவர்ல ஆரம்பிச்சு பிரம்மா வரைக்கும் எல்லாருக்குமே வஸ்திரம் வாங்கிட்டு வர ஆரம்பிச்சிட்டாங்க. தன் சாந்நித்தியத்தையும் சக்தியையும் கொஞ்சம் கொஞ்சமா வெளிப்படுத்துகிற தலமாக திருப்பட்டூர் மெள்ள மெள்ள விஸ்வரூபம் எடுத்துக்கிட்டிருக்கு!'' என நெக்குருகுகிறார் சீனிவாசன் எனும் அன்பர்.

திருப்பதிக்கு நிகரானதாகப் போற்றப் படுகிற தலமாக திருப்பட்டூர் திகழப்போகிறது என ஓலைச்சுவடிகளில் எப்போதோ, எவராலோ எழுதி வைக்கப்பட்டிருக் கிறது. இன்று எங்கிருந்தெல்லாமோ இந்தக் கோயிலுக்கு வந்து குவியும் ஜனங்களைப் பார்க்க, இப்போதே இந்தத் தலம் புகழ் பெறத் துவங்கிவிட்டது என்றே தோன்றுகிறது.

''மண்ணச்சநல்லூர் பக்கத்துல இருக்கிற பாச்சூர்தான் எனக்குச் சொந்த ஊர். ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கோயிலுக்கு வந்து, வியாக்ர பாதர் சமாதிக்கு முன்னாடி உட்கார்ந்து தியானம் செய்றது என் வழக்கம். தொடர்ந்து 11 வியாழக்கிழமைகள் தவறாம இங்கே வந்து வியாக்ரபாதர் சமாதிலயும் பதஞ்சலி முனிவர் சமாதிலயும் தியானம் செஞ்சதுல, மனசுல ஒரு தெளிவு கிடைச்சுது. எதுக்கும் பதற்றம் ஆகாத தன்மை வந்துது. உள்ளுக்குள்ளே ஒரு அமைதி உருவாச்சு. இந்த நிதானமும் தெளிவும்தான் என்னை அடுத்தகட்ட வெற்றிக்குக் கூட்டிட்டுப் போச்சு. தொடர்ந்து 11 வியாழக்கிழமைகள் இங்கு வந்து தியானம் செஞ்சு பாருங்க; நீங்களும் நல்லதொரு மாற்றத்தை உணருவீங்க'' என்கிறார் காத்தபெருமாள் எனும் வாசகர்.

''இன்னிக்கி நான் நல்லாருக்கேன்னா, அதுக்கு இந்தத் தலம்தான் காரணம். என்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட மனைவி கிடைச்சதும், வாழ்க்கை ரொம்ப இனிமையா மாறியிருக்கிறதும் இந்தத் தலத்துக்கு வந்து தரிசிச்ச புண்ணியம்தான்! இப்பவும் மனசுல ஏதாவது குழப்பம்னா, ஓடி வந்துடுவேன் திருப்பட்டூருக்கு...'' என்கிறார் காத்தபெருமாள்.

எங்கே இருக்கிறது?

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு; ஆனாலும் குறைவுதான்!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பட்டூருக்கு, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவிலும் செல்லலாம்.

'விதி இருப்பின் விதி கூட்டி அருளுக’ என்று ஸ்ரீபிரம்மாவிடம் வலியுறுத்திச் சொன்னார் அல்லவா, சிவபெருமான்! அதன்படி, திருப் பட்டூருக்கு வந்து, சிவனாரை வணங்கிவிட்டு, தன்னை வணங்குகிற பக்தர்களுக்கு, அவர்களது விதியைத் திருத்தி நல்லவிதமாக எழுதுகிறார் ஸ்ரீபிரம்மதேவன். அதனால்தான், இன்றைக்குத் தினமும் நூற்றுக்கணக் கான பக்தர்கள் இந்தத் தலத்தைத் தேடி வருகிறார்கள்!

''தஞ்சாவூர்தான் என் சொந்த ஊர். ஆனா, இதுவரைக்கும் திருப்பட்டூருக்கு வந்ததே இல்லை. எங்க தாத்தா, 'திருப்பட்டூருக்குப் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணுடா...

உனக்கு நல்லது நடக்குதா இல்லையானு பாரு’ன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருந்தார்.

சமயபுரம் வரை போய் தரிசனம் பண்ணிட்டுத் திரும்பியிருக்கேன். அதேபோல, சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோயிலுக்குப் போயிருக்கேன். ஆனா, திருப்பட்டூரைக் கடந்து போனேனே தவிர, அங்கே போய் தரிசனம் பண்ணவே இல்லை. யதார்த்தமா டெல்லிலேருந்து வந்திருந்த நண்பர் திருப்பட்டூர் போகணும்னு சொன்னப்ப... ஆச்சரியமா இருந்துது. சரின்னு போனோம்.

தாமரைப்பூன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அதனால ஸ்வாமி, அம்பாள், பிரம்மா எல்லாருக்குமே வெள்ளைத் தாமரை மலர் களை வாங்கிச் சார்த்தினேன். அன்னிக்குக் கோயில்ல இருந்த சிவாச்சார்யர், 'வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டா, உடனடி பலன் கிடைக்கும். அதேபோல, நீங்க பிறந்த நட்சத்திர நாள்ல இங்கே வந்து வணங்கறது ரொம்பவே புண்ணியம். இன்னிக்கு சதய நட்சத்திரம். சதய நட்சத்திரக் காரங்க யாராவது இருந்தீங்கன்னா அமோகமா இருப்பீங்க. எழுதி வைச்சுக்கங்க!'' என்றார். என்ன ஆச்சரியம்... நான் சதய நட்சத்திரம்! அதுக்குப் பிறகு, பிசினஸ் சூடுபிடிக்க ஆரம்பிச்சுது. இப்ப எனக்குக் குலதெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாமே ஸ்ரீபிரம்மாதான்!'' எனச் சொல்லிச் சொல்லி உருகுகிறார் தஞ்சை வாசகர், சிவகுருநாதன்.

இப்படித்தான்... ஒவ்வொருவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்ட திருப்பட்டூர், மெள்ள மெள்ள புகழ் பெற்று வருகிறது. அதன் சாந்நித்தியத்தை அறிந்தவர்களும், அறிந்து உணர்ந்து திருப்பட்டூரை அடைந்தவர்களும் பாக்கியசாலிகள்!

- பரவசம் தொடரும்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism