மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

நாங்கள் வசிக்கும் வீடு தெருக்குத்து- அடுக்குமாடி கட்டடத்தில் உள்ளது. முகப்பில் ஒரு விநாயகரை ஸ்தாபித்து தினமும் பூஜித்து வருகிறோம். வீடு கட்டி 12 வருடங்கள் ஆகிவிட்டபடியால், பிள்ளையாருக்கு கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்கின்றனர் சிலர். தெருக்குத்து விநாயகருக்கு கும்பாபிஷேகம் பண்ண வேண்டுமா?

- எஸ்.லட்சுமி சுப்ரமண்யம், சென்னை-88

##~##
புராணங்களில் தென்படாத 'தெருக்குத்து விநாயகர்’ என்ற சிறப்புப் பெயரை விநாயகருக்கு சூட்டி இருக்கிறீர்கள். ஈசனை மகிழ்வித்தான் பாணாசுரன். 'என்ன வேண்டும்?’ எனக் கேட்டார் ஈஸ்வரன். என் வீட்டுக் காவலாளியாக இருக்க வேண்டும் என்று வேண்டினான். அவரும் பக்தனுக்காக காவல் காத்தார் என்கிறது புராணம். அடுக்குமாடியில் வசிப்பவர்களுக்கு காவலாளியாக தெருக்குத்து விநாயகர் செயல்படுகிறார். தெருக்குத்தை அகற்ற விநாயகர் சந்நிதி பரிகாரம் ஆகாது. பரிகாரப் பொருளாக விநாயகரைப் பார்க்கும் மனோபாவம் பக்தனுக்கு வராது.

தெருக்குத்து நெருடலை அகற்ற விநாயகர் சிலை நிறுவப்பட்டது. வைதிக ப்ரதிஷ்டையிலோ ஆகம ப்ரதிஷ்டையிலோ தென்படாத நடைமுறையில் விநாயகர் வீற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் ப்ரதிஷ்டையைச் சந்திக்காமலேயே பல இடங்களில் விநாயகர் தென்படுவார். அதுபோல் தெருக்குத்திலும் அவரை வைத்து வழிபடுவோம். அங்கு, முதலில் சிலை வைக்கும்போது மருந்து வைத்து கும்பாபிஷேகம் நடந்ததா? அல்லது சுவரில் அவரை குடியேற்றி உள்ளீர்களா? முறைப்படி கும்பாபிஷேகம் நடந்தேறியிருந்தால், 12 வருஷத்துக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் செய்யலாம். கும்பாபிஷேகத்தைச் சந்திக்காத ப்ரதிஷ்டை எனில், அதைத் தவிர்க்கலாம். அரசமரத்தடிப் பிள்ளையார் வெட்டவெளியில் வெயிலில் காய்ந்து கிடப்பார். அவருக்குக் கோயிலோ கும்பாபிஷேகமோ இருக்காது. ஆகையால், முன் நடைமுறையைப் பின்பற்றுவது சிறப்பு. தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை. தெருக்குத்தை அகற்ற பிள்ளையாரை வைக்கக் கூடாது. அதன் மூலம் தெருக்குத்து அகலாது. தெருக்குத்து என்பது வீட்டுக்கு இல்லை; மனதுக்கு உண்டு. அப்படியான மன நெருடலை அகற்ற பிள்ளையாரை வைக்கிறோம். மற்ற இடங்களில் கடவுளுக்கு நாம் பக்தனாக இருப்போம். தெருக்குத்து விநாயகர் நமக்கு பக்தனாக இருந்து தெருக்குத்தை அகற்றி மகிழ்விக்கிறார் போலும்!

ஆன்மிக பத்திரிகை ஒன்றில், 'நதி தீரத்திலோ அல்லது ஓரிடத்தில் அமர்ந்துகொண்டோ விரல் ரேகை அல்லது ஜப மாலையைக் கொண்டு ஜபம் செய்ய வேண்டும். நடந்து கொண்டும், பிரயாணத்தின்போதும் ஜபம் செய்தால் பலன் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தனர். தற்போதைய அவசர யுகத்தில் பகவானை எப்படியாவது ஆராதிக்க வேண்டும், கிடைக்கும் சந்தர்ப்பத்திலாவது அவனை நினைக்கவேண்டும் எனும் சிந்தனை கொண்ட வர்களுக்கு மேற்சொன்ன விஷயங்கள் சாத்தியமா? அபிராமிப் பட்டரும் 'நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை’ என்று பாடியிருக்கிறாரே! இதுகுறித்து தங்களின் அறிவுரை தேவை.

- லலிதா ராமன், மும்பை

அவசர உலகம். வேலைப்பளு... சீக்கிரமாக எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிடவும் நேரம் இல்லை. அதற்காக, சாதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தெருவில் நடந்து கொண்டே சாப்பிடலாமா? குளிக்க நேரம் இல்லை... குளியலைத் தவிர்க்கலாமா? கோயிலுக்குப் போக நேரம் இல்லை. ஸ்கூட்டரில் இருந்தபடியே சந்நிதியைப் பார்த்து தலையாட்டிவிட்டு செல்லலாமா?!

ஆனால், சின்னத்திரை பார்க்க நேரம் உண்டு. அதுதான் விந்தை. பகவானை எப்படியாவது ஆராதனை செய்தால் போதாது; இப்படித்தான் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம். மாறி வரும் தங்களது சிந்தனைக்கு ஏற்ப ஆன்மிகத்தை மாற்றி அமைக்கலாம்; ஆனால் பலன் இருக்காது! பலனை தீர்மானிப்பதில் நமக்கு சுதந்திரம் இல்லை. நமது உழைப்புக்கு உகந்த ஊதியத்தை தீர்மானிப்பதில் நமக்கு சுதந்திரம் இல்லை. நாம் இழுத்த இழுப்புக்கு கடவுள் செவிசாய்க்க வேண்டும் எனும் புது சிந்தனை, சிறுபிள்ளைத்தனமானது.அபிராமி பட்டரை மேற்கோள்காட்டி தங்களது விருப்பத்தை வெளியிடுவதும், அதற்குப் பலன் இருப்பதாக நினைப்பதும் கடவுள் வழிபாட்டில் தங்களது சுணக்கத்தைக் காட்டுகிறது. நித்தமும் வேதம் ஓதவேண்டும் என்கிறது சாஸ்திரம் (வேதோநித்யம் அதீயதாம்).

ஆபரேஷன் நடந்திருப்பதால் உட்கார இயலாது; நிற்கத்தான் முடியும்; என்ன செய்வது என்று கேட்டால், 'நின்றபடியே வேதம் சொல்’ என்றது சாஸ்திரம். 'எனக்கு நிற்க இயலாது; உட்காரத்தான் முடியும். அதுவும் சப்பணம் இட்டு உட்கார இயலாது... என்ன செய்வது?’ என்றால், 'எப்படி முடியுமோ அப்படி உட்கார்ந்து சொல்’ என்றது வேதம். நிற்கவும் முடியாது, உட்காரவும் இயலாது; படுத்துக்கொண்டுதான் இருக்க

வேண்டும் எனில், படுத்துக்கொண்டே வேதம் சொல் என்கிறது வேதம் (உததிஷ்டன், உதாஸீன, உதசயான). இந்தச் சலுகை எல்லோருக்கும் பொருந்தாது. 'வேதம் ஓதே வேண்டுமே... ஆனால் முடியவில்லையே’ என ஏங்கும் மனதுக்கு அளித்த வெகுமதி அது. உலகவியல் சுவையை அனுபவிக்க உடல் வலிமையோடு ஓடிக் கொண்டிருக்கும் வாட்டசாட்டமான உடல்வாகு பெற்றவருக்கு இந்த சலுகை கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுளையே ஏமாற்றி அவரிடமிருந்து அருளைப் பெற்று விடலாம் என்கிற சிந்தனை பலன் தராது. ஒருவன், பாத்திரம் நிறைய வறுத்த வேர்க்கடலை வைத்திருந்தான். அதைப் பார்த்த மற்றொருவன், ''இதோ பார், இப்போது கடலையைச் சாப்பிட ஆரம்பிக்காதே. இரு, நான் வீட்டில் இருந்து உமி கொண்டு வருகிறேன். அதையும் கலந்து இருவரும் பங்கு போட்டு ஊதி ஊதி சாப்பிடுவோம்'' என்றானாம். அந்தச் சிந்தனை நமக்கு வரக்கூடாது. என்ன அவசரமானாலும் ஒரு நொடிப் பொழுதாவது மற்ற அலுவல்களை அகற்றிவிட்டு, ஈடுபாட்டுடன் கடவுளை நினைக்க வேண்டும். நேரம் இல்லை என்கிற காரணத்தைக் காட்டி கடவுளைப் பணிய வைப்பது தவறு.

கடவுள் வழிபாட்டில் நுனிப்புல் மேய இடம் இல்லை. சிரமத்தைப் பாராமல் இருக்கையில் அமர்ந்து, முறையாக ஜபம் செய்யுங்கள். தங்களுக்கு துணை செய்ய கடவுள் காத்திருக்கிறார். வெற்றி பெறுவீர்கள்.

கேள்வி-பதில்

ஆண்-பெண் இருவரும் மனம் ஒருமித்து திருமணம் செய்ய இருக்கிறார்கள். ஆனால் ஜாதகம் பொருந்தாது என்கின்றனர் சிலர். மனப் பொருத்தத்தை ஏற்று திருமணம் செய்யலாமா?

- கே.கிருஷ்ணமூர்த்தி, மணிமங்கலம்

இந்தப் பொருத்தத்தை மனப் பொருத்தமாக சாஸ்திரம் ஏற்காது. ஆசையின் ஈர்ப்பில் இணைந்ததை மனப் பொருத்தமாக சித்திரிக்கிறோம். திருமணத்தில் வரும் பாணி க்ரஹணம் மனப் பொருத்தத்துக்குச் சான்று. கன்யகாதானத்துக்கு பிறகு, இருவரும் ஒருவருக்கொருவர் மந்திரம் சொல்லிப்பார்த்துக் கொள்ளும்போது மனம் மகிழ்ந்தால், அது மனப் பொருத்தத்தை ஊக்குவிக்கும் என்கிறது சாஸ்திரம் (யஸ்யாம்மனச்சக்ஷ§ஷோர்நிபந்த: தஸ்யாம் ரித்தி:).

பிராம்ம விவாகத்தில் மனப்பொருத்தம் பாணி க்ரஹணம் மூலம் ஏற்பட வேண்டும். ஒப்பந்த முறையில் இணையும் காந்தர்வ விவாகத்தில் தாங்கள் சொன்ன மனப்பொருத்தம் போதுமானது.  எல்லோருக்கும் காந்தர்வ விவாகம் ஏற்புடையது அல்ல. ஆசை முறிந்த பிறகு அல்லது அடங்கிய பிறகு தென்படும் இன்னல்களை, அதாவது கசப்பான விளைவுகளை ஏற்கும் பக்குவம் மனதுக்கு இருந்தால் இருவரும் இணையலாம். பண்பாடு, சகிப்புத்தன்மை, வளைந்து கொடுத்தல் போன்ற எண்ணங்கள் இருவர் மனதிலும் இருந் தால் திருமணம் சிறக்கும். அதை, காலம்தான் சொல்லும்.

காலை எழுந்ததும் உள்ளங்கையை பார்த்துச் சொல்லும் ஸ்லோகத்தில், 2-வது வரியில் 'கோவிந்தா’ என்பதற்கு பதில், 'பார்வதி’ என்ற பதத்தை பயன்படுத்தியிருந்தனர் ஒரு ஆன்மிக இதழில். நானும் அதையே பல வருடமாக சொல்லி வருகிறேன். சரிதானா?

- பி.வி.குப்புஸ்வாமி, திருச்சி-102

'கராத்ரே வஸதெலக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி கரமூலேதுகோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம் - என்று செய்யுள் இருக்க வேண்டும். இன்றைய ஆன்மிக வாதிகள் தங்களது விருப்பத்தை வெளியிடுவர். பழைய  கோட்பாட்டின் தரத்தை அறியாத புது ஆன்மிகவாதிகள் நிறைய இருக்கிறார்கள். அனந்தசயன கோலத்தில் இருப்பவரை எழுப்ப சுப்ரபாதம் வந்தது. எப்போதும் விழித்துக் கொண்டிருக்கும் இறையுருவங்களுக்கும் இப்போது சுப்ரபாதம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. மனித வடிவில் தோன்றிய மகானுக்கும் சுப்ரபாதம் வந்துவிட்டது.

மனிதனாகத் தோன்றிய கடவுளுக்கு மனித தர்மத்தை நினைவுபடுத்த... விஸ்வாமித்திரர், ஸ்ரீராமனை எழுப்பி காலைக் கடனை செய்ய அறிவுறுத்தினார். மனித தர்மத்தை சிறக்க வைக்க ஏற்பட்ட அவதாரம் ராமாவதாரம் (மர்த்யாவதார: கில மரித்யசிஷணம்). ஆகையால், அங்கு சுப்ர பாதம் பொருள் படைத்தது. 'திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம் விஷ்ணு ரேவச: யோக: சகரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்ற செய்யுளை, 'ததி: சம்பு: ததாவார: நக்ஷத்திரம் சம்புரேவச யோக ச கரணம் சைவ ஸர்வம் சம்பு மயம் ஜகத்’ - என்று மாற்றிச் சொல்பவர்களும் உண்டு. வேதம், பல இறையுருவங்களின் காயத்ரீயைச் சொல்லும். அதைப் பார்த்து

'யந்த்ர ராஜாய வித்மஹே மஹாயந்த்ராய தீமஹி.
தன்னோ யந்திர: ப்ரசோதயாத்

மந்திரராஜாய வித்மஹே மஹாமந்திராய   தீமஹி,
தன்னோ மந்திர: ப்ரசோதயாத். 
 - இப்படி யந்த்ர காயத்ரீ, மந்த்ர காயத்ரீ உருவாகியிருக்கிறது. ஒரிஜினல் காயத்ரீயில் இருக்கும் வித்மஹே, தீமஹி, ப்ரசோதயாத் ஆகிய மூன்றையும் இணைத்து, புது சிந்தனையில் பல காயத்ரீகளை உருவாக்கியிருக்கிறார்கள். காயத்ரீயுடன் இணைந்த அந்த மூன்று பதங்களுக்கும் உட்கருத்தை அறியாத மனம், விஸ்வாமித்திர ஸ்ருஷ்டியில் இறங்கி எல்லா இறை உருவத்துக்கும் காயத்ரீயைப் படைத்துக் கொடுத்து... பூஜையும் புனஸ்காரமும் ஆன்மிக தத்துவமாக மாறிய பிறகு, எல்லோரும் ஆன்மிகவாதியாக மாறிவிட்டார்கள்.

இப்படியே சிந்தனை வளர்ந்தால் தலைவர்களுக்கும் காயத்ரீ உருவாகி விடும். சம்ஸ்கிருதம் படிப்பதை அறவே மறந்துவிட்ட நம் மக்களுக்கு, உயர்ந்த தத்துவங்களை உணர வைப்பது கடினம். அதை எளிதாக்க, தற்கால ஆன்மிகவாதிகள் தங்களுக்கு தெரிந்ததை தத்துவமாக மாற்றி பாமரர்களை ஈர்த்து பெருமை பெறுகிறார்கள். கலிகாலத்தில் இவை நிகழ்வது சகஜம் என்று புராணம் கூறும். பிடிப்பு இருந்தால் அர்த்தமுள்ள பழைய பண்பாட்டைக் கடைப்பிடியுங்கள். பலன் உண்டு.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்