Published:Updated:

ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!

ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!

ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!

ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!

Published:Updated:
ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!
ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் எனும் உலக இயக்கத்துக்கு மூலமான ஐந்து தொழில்களும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தால் நிகழ்கின்றன. இந்த ஐந்தெழுத்தும் பரம சிவனாரின் திருமேனியாகவே விளங்குகிறது. அவரோ, அண்ட பகிரண்டமும் அனைத்து நலன்களையும் பெற்றுச் சிறக்கும் விதம், ஐந்தொழில்களை தமது ஆடலால் நிகழ்த்துகிறார் எனச் சிலாகிக்கின்றன ஞான நூல்கள்!

சேர்க்கும் துடி சிகரம் சிககென வா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம்- பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரம் அதுதான்...

என்ற பாடலில் (உண்மை விளக்கம் - 33) விளக்கப்படுவது போன்று... இறையனாரின் வலது கை - துடியை முழக்கி உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறது. அபயம் காட்டும் வலது முன் கை- காத்தல் செய்கிறது. இடது கரத்தில் உள்ள தீ - ஓயாது அழித்தல் தொழிலை நடத்துகிறது. ஊன்றிய பாதத்தால் மறைப்பும், தூக்கிய திருவடியால் அருளலும் நடைபெறுகின்றன.

இவ்வாறு உலகமும் உயிர்களும் உய்வடைய இறைவன் ஆடும் எல்லையில்லாத கூத்துக்களை, பலவாறு நுட்பமாக ஆய்ந்து இறையருளை எண்ணி அவற்றுக்கு பெயரும் சூட்டியுள்ளனர் ஆடற்கலை வல்லுனர்கள். ஆதியில் ஒரு லட்சம் கூத்துக்கள் வகைப்படுத்தப்பட்டனவாம். அதிலிருந்து 1008 கூத்துக்களைத் தேர்ந்தெடுத்து ஆடினர். பின்னர் அதிலிருந்தும் 108 கூத்துக்களைத் தெரிந்தெடுத்துப் போற்றினர்.

அவர்கள் தொகுத்த 108 கூத்துக்களில், இறைவன் தானே தனித்து உவந்து ஆடியது 48; உமையவளுடன் சேர்ந்தாடியது 36; திருமாலுடன் ஆடியது 9; முருகனுக்காக ஆடியது 3; தேவர்களுக்காக ஆடியது 12. இதுகுறித்து அகத்தியம், பரதம், கூத்தநூல் முதலான ஞானநூல்களில் விரிவாக அறியலாம்.

ஆடற்கலையை விவரிக்கும் கூத்தநூலில் பரமேஸ்வரனின் 12 கூத்துக்கள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. அந்த நூலில் காணப்படும் 'படிமவியல்’ எனும் பகுதி சிவபெருமானின் ஆடற் கோலங்களை விளக்குகிறது. ஒவ்வொரு ஆடலுக்கும் இரண்டு மூன்று திருக்கோலங்களின் வர்ணனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் படிமவியலில் 96 கோலங்கள் காட்டப்பட்டுள்ளன. இந்த நூல் குறிப்பிடும் 12 கூத்துக்கள் குறித்த விளக்கங்களை நாமும் அறிவோம்.

ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!

அதிகாலைப் பொழுதில் அல்லியம்!

அல்லியம் என்பது காலை தொடங்கும் அதிகாலைப் பொழுது. அல்லியம் என்பதை இருள் விலகும் நேரம் என்பர் (அல்-இருள்). இந்த வேளையில் பெருமான் கொட்டம் எனும் கூத்தினை ஆடுகிறான். இது, உலக உற்பத்தியையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் நடனம் ஆதலால், ஆனந்தத் தாண்டவம் என அழைக்கப்படுகிறது. தில்லையில் பெருமான் ஆனந்தத் தாண்டவத்தை ஆடிக் கொண்டிருக்கின்றார்.

சந்தியா நேரத்தில் எல்லியம்

இது பகல் மறைந்து இரவு தோன்றும் சந்தியா நேரத்தைக் குறிப்பதாகும். இது சந்திதாண்டவம் எனப்படுகிறது. சந்தியா தாண்டவம் எனவும் அழைப்பர். மதுரையில் பெருமான் சந்தியா தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றார்.

முரசொலிக்க ஆடும் பல்லியம்

பல்லியம் என்பது முரசு. முரசொலிக்க ஆடும் நடனம். இதை ஒட்டரம் அல்லது சுத்த தாண்டவம் என்பர். இது, கயிலை மலையில் ஆடிக் கொண்டிருக்கும் தாண்டவம்.

பரதம் தோன்றிய உள்ளம்

இது உள்ளத்தின் அசைவைக் குறிக்கும். ஆசை எனப்படும் காமத்தால் உள்ளம் அசைந்து செயல் படுகிறது. ஆசை இல்லையேல் மனத்தில் சலனம் இல்லை. அதையட்டி, இதனைக் காமம் என்பர். காமத்தின் வெளிப்பாடே ஸ்ருங்காரம். இந்த நாட்டியத்தில் இருந்தே பரதநாட்டியம் பிறந்ததாகக் கூறுவர்.

திசைமுகன் காண நுதல்விழி

நுதல்விழி என்பது நெற்றிக்கண். நெற்றிக்கண் கொண்டு திரிபுரங்களை எரிந்தார் சிவபெருமான். அதனால் இது திரிபுரம் எனப்பட்டது. இந்தத் தாண்டவம் திருபுரதாண்டவமாகும். இதைப் பெருமான் திருவதிகையில் ஆடினார் என்பர். திசைமுகன் காண இந்த நடனத்தைப் பரமன் ஆடியதாகச் சொல்கிறது சிலப்பதிகாரம்.

திருவாலங்காட்டில் நுதல்கால்

வலது கால் விரலால் நெற்றிப்பொட்டு இட்டுக் கொள்வதாக இந்த நாட்டியம் அமைந்ததால், நுதல்கால் எனப்பட்டதாம். சுட்டி என்றும் கூறுவர். காலை இடுப்புக்கு மேல் உயர்த்துவதால் ஊர்த்துவ தாண்டவம் என்பர். இதிலிருந்தே சித்திரகலா நாட்டியங்கள் தோன்றியது என்பார்கள். இந்த நாட்டியத்தைப் பெருமான் திருவாலங்காட்டில் ஆடிக் கொண்டிருக்கின்றான்.

பரமனின் பார்வையால் விளையும் நோக்கம்

இது பார்வையைப் பல கோணங்களில் செலுத்தி, அந்தக் கோணங்களில் கைகளையும் கால்களையும் வளைத்து ஆடுவதாகும். அங்க அசைவுகளையட்டி இது வித்தாரம் எனப்பட்டது. இதனை முனிதாண்டவம் என்பர்.

மாற்றங்களைச் சொல்லும் நுணுக்கம்

இது தொடர்ந்து நிகழும் மாற்றங்களைக் குறிக்கும். சங்கார தாண்டவம் எனவும் அழைக்கப்படும். தரங்கிணி என்னும் நாட்டியம் இதிலிருந்து பிறந்ததாகும். இந்தத் தாண்டவம் திருநெல்வேலியில் ஆடப்படுவதாகும்.

ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!


வெற்றியின் வெளிப்பாடு கால்வரி

வெற்றி பெற்றபின் ஆடும் ஆட்டம் இது. கைகளைக் கொட்டி ஆடுவதால் கொட்டி எனவும், கொட்டிச் சேதம் எனவும் அழைக்கப்பட்டது. இது பிரளய தாண்டவம் என்றும் கூறப்படும். சாலியம், வீர வெறியாடல் என்றும் இதைக் குறிப்பிடுவர்.

சுடலையில் ஆடும் பேய்வரி

இது பேய்களுடன் பண்டரம் என்னும் சுடுகாட்டில் ஆடுவதாகும். தாருகாவனத்தில் ஆடியதென்பர். இது பூதத் தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைப் பெருமான் திருவெண்காட்டில் ஆடினான். திருவெண்காடு திருத்தலமானது சுவேதவனம் என்றும், பிரம்ம மாசானம் என்றும் ஆதி சிதம்பரம் எனவும் அழைக்கப்படுவது இங்கே சிந்திக்கத்தக்கதாகும்.

கஜம் உரித்தாடிய களிற்றுரி

இது எதிரிகளின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டு ஆடும் கூத்து. சிவபெருமான் தாருகாவனத்து ரிஷிகள் அனுப்பிய யானையையும், கயாசுரன் எனும் யானையையும் உரித்து தோலைப் போர்த்திக்கொண்டு ஆடினார். அப்படி ஆடும் ஆட்டம் குஞ்சரம் என்றும் அழைக்கப் பட்டது.

கண்களை விழித்துக் கைகளை விரித்துக் கொடுமை தோன்ற ஆடும் ஆட்ட மாதலின் உக்ரம் எனப்பட்டது. இதிலிருந்து ராஜ நாட்டியம் தோன்றியது என்பர்.

பாம்புகளை ஏந்தி ஆடும் நச்சம்

நச்சு என்பது நஞ்சினைக் கொண்டுள்ள பாம்புகளைக் குறித்தது. பாம்புகளை ஏந்தி அழகாக ஆடியதால், சுந்தர தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது.

புஜங்கம் என்றால் பாம்பு. பாம்புகளை அணிந்தாடுவதால் புஜங்க தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும் பாம்பாகிய வாசுகி அளித்த விஷத்தை உண்டு பித்தனைப் போல் ஆடியதால் பித்த நடனம் எனவும் அழைக்கப்படுகிறது. உன்மத்த நடனம் இதிலிருந்து தோன்றியதாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism