Published:Updated:

பூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை!

ஆதி அருணாசலம்...

பூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை!

ஆதி அருணாசலம்...

Published:Updated:
பூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை!
பூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை!

தென் கயிலாயம் என போற்றப்படும் தலம், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், அத்தனை மகான்களும் தங்களின் திருவடி பதித்த அற்புதமான இடம்... என்று திருவண்ணாமலைக்குத்தான் எத்தனைப் பெருமைகள்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் இருந்து சுமார் 6-வது கி.மீ. தொலைவில் வருண லிங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில்.

இந்தத் தலத்தில் அம்பாளின் திருநாமம் - ஸ்ரீஅபிதகுஜாம்பாள். அணி அண்ணாமலை என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட தலமாம் இது. மலையுடன் சேர்ந்த, அழகு பொருந்திய தலம் எனும் அர்த்தத்துடன் கொண்ட ஊர்... இன்றைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்லும் அற்புதத் தலமாகப் போற்றப்படுகிறது!

பிறகு, அணி அண்ணாமலை என்பது அடி அண்ணாமலை என மருவியதாகச் சொல்வர்.

ஆதி அண்ணாமலை எனப் போற்றப்படும் ஸ்ரீஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில்தான், மாணிக்கவாசகர் பல காலம் தங்கி சிவ பெருமையைச் சொல்லும் திருவெம்பாவைப் பாடல்களை இயற்றினார் என்கிறது ஸ்தல புராணம்!

ஒருமுறை, ஸ்ரீபிரம்மாவுக்கும் ஸ்ரீதிருமாலுக்கும் இடையே தம்முள் உயர்ந்தவர் யார் எனும் போட்டி நிலவியது. இரண்டு பேரும் சிவனாரிடம் சென்று முறையிட்டனர். 'என் அடியையும் முடியையும் யார் முதலில் கண்டு வருகிறீர்களோ... அவரே உயர்ந்தவர்’ என்று அறிவித்தார் சிவனார்.

##~##
இதையடுத்து, ஸ்ரீபிரம்மா அன்னமாக (அன்னப்பறவை) உருவெடுத்து திருமுடியைக் காணப் புறப்பட... ஸ்ரீமகாவிஷ்ணுவோ வராகமாக (பன்றி) மாறி, திருவடியைத் தேடிச் சென்றார். மிகப்பிரமாண்டமான உருவெடுத்து நின்ற சிவப்பரம்பொருளின் திருமுடியையும் திருவடியையும் இருவராலும் தொட முடியவில்லை. இருவருமே சோர்ந்து போனார்கள். அந்த வேளையில், சிவனாரின் திருமுடியில் இருந்து தாழம்பூ ஒன்று கீழே விழ... அந்தத் தாழம்பூவிடம் 'நான் சிவனாரின் திருமுடியைக் கண்டதாக, எனக்காகப் பொய் சொல்’ என்று பிரம்மா வேண்டுகோள் விடுத்தார். தாழம்பூவும் பொய் சொல்லச் சம்மதித்தது!

'அடடா... நம்மால் திருவடியைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த பிரம்மா, திருமுடியைப் பார்த்துவிட்டாரே...’ என வருத்தப்பட்டார் திருமால். ஆனால், சிவப்பரம்பொருளுக்கு தாழம்பூ சொன்னது பொய் என்பது தெரியாமல் இருக்குமா, என்ன?

இதில் கோபமாகிப் போன சிவனார் அவர்களுக்கு முன்னே தோன்றி, 'பொய் சொன்ன தாழம்பூவே... இனி எந்த பூஜைக்கும் நீ உதவ மாட்டாய்’ என சாபமிட்டார். அதேபோல், ஸ்ரீபிரம்மாவுக்கென கோயில் இருக்காது எனச் சபித்ததாகவும் சொல்வர் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீபிரம்மா, பிறகு தன் அகந்தையைத் துறந்து எட்டு திக்கிலும் அஷ்ட லிங்கத்தையும் பிரம்ம தீர்த்தத்தையும் ஸ்தாபித்து, பாபத்தில் இருந்து விடுபட்டார் என்கிறது ஆதி அண்ணாமலை தல புராணம்!

இந்தத் தலத்துப் பெருமையை அறிந்து உணர்ந்து, 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே...’ எனப் பாடிப் பரவியுள்ளார் மாணிக்க வாசகர்.  

கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீஆதி அண்ணாமலையார் (ஸ்ரீஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம் என்றும் சொல்வர்) கோயிலுக்கு அருகிலேயே மாணிக்கவாசகருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கிழக்குப் பார்த்த முகமாக, சிவனாரை வணங்குகிற விதமாக, மாணிக்கவாசகர் திருக் காட்சி தருகிறார்.

பூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை!

இந்தக் கோயிலில் இறைவனின் திருநாமம் - ஸ்ரீஆத்மநாதர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீயோகாம்பாள். கோயி லுக்கு அருகில் தீர்த்தக் குளம் ஒன்று உள்ளது. இதற்கு மாணிக்கவாசகர் தீர்த்தக் குளம் என்று பெயர்.

இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடி விட்டு, இயற்கை மற்றும் சைவ உணவுகளையே சாப்பிட்டு, 'பாவை நோன்பு’ இருக்கிற பெண்களுக்கு சிவனாரின் சிறப்புகளை எடுத்துரைத்துப் பாடல்கள் பாடினார் மாணிக்கவாசகர். அதைக் கேட்டு அனைவரும் சிலிர்த்துப் போனார்கள். அந்தப் பாடல்கள், 'திருவெம்பாவை’ என இன்றைக்கும் போற்றப்படுகின்றன.

திருவெம்பாவைப் பாடல்களை மாணிக்கவாசகர் இயற்றி அருளிய திருத்தலம் இது எனப் போற்றப் படுகிறது.

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
றோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்  

என மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி சிவ - பார்வதியை மனதாரத் தொழு தால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கப் பெறுவர். நல்ல கணவன் கிடைத்து, நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழ்வர் என்பது ஐதீகம்!  

திருவெம்பாவைப் பாடல்களை, மாணிக்கவாசகர் பாடப் பாட... உருகி மகிழ்ந்த சிவபெருமான், மார்கழி மாதத்தில் திருக்காட்சி தந்தருளினார். மாணிக்கவாசகருக்கு திருக்காட்சி தந்த அந்த அற்புத விழாவும், இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அதுமட்டுமா? ஆனி மாதம் மகம் நட்சத்திர நாள்... மாணிக்கவாசகரின் திருநட்சத்திரத் திருநாள். அந்த நாளில், இந்தக் கோயிலில், குரு பூஜை, சிறப்பு வழிபாடுகள் ஆகியவை பிரமாண்டமாக நடைபெறும். அன்றைய நாளில், திருவெம்பாவைப் பாடல்கள் பாடுவர். ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் மாணிக்கவாசகருக்கு தீபாராதனை செய்யப்படும்.

இதோ... வருகிற ஆனி மாதம் 10-ஆம் நாள் (ஜூன் 24-ஆம் தேதி) மாணிக்கவாசகரின் திருநட்சத்திர நன்னாள். இந்த நாளில் கிரிவலப்பாதையில் எழுந்தருளியுள்ள இந்தத் தலத்துக்கு வந்து, குரு பூஜையில் கலந்து கொள்ளுங்கள். இதில் கலந்து கொண்டு தரிசித்தால், பூர்வ ஜன்ம பாபங்கள் விலகும்; மனதுள் நிம்மதி பிறக்கும் எனச் சொல்கின்றனர் சிவனடியார்கள்!

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

- அ.அச்சனந்தி
படங்கள்: ஆ.நந்தகுமார்

பூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை!

கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருவெள்ளியங்குடி. வைணவ தலமான இந்த ஆலயத்தை, அசுர சிற்பி மயன் அமைத்ததாகச் சொல்கிறார்கள்.

திருமால் தமது வாமன அவதாரத்தில், மகாபலியிடம் 3 அடி தானம் கேட்டார் அல்லவா? அப்போது மகாபலியின் குருவான சுக்கிரர், தானம் கேட்பது திருமால் என்பதையும் அவரது நோக்கம் என்ன என்பதையும் அறிந்து கொண்டார். எனவே, தானம் கொடுக்க வேண்டாம் என்று மகாபலியை எச்சரித்தார். ஆனால், மகாபலி அவர் பேச்சைக் கேட்கவில்லை. நீர் வார்த்து தானம் செய்ய முற்பட்டார். உடனே, சுக்கிராச்சாரியார் வண்டாக உருவம் கொண்டு பலியின் கமண்டலத்துக்குள் புகுந்து நீர் வரும் பாதையை அடைத்துக் கொண்டார். வாமனன் சும்மா விடுவாரா? ஒரு தர்ப்பையை எடுத்து கமண்டலத்தின் நீர் வரும் பாதையைக் குத்தினார்; சுக்கிரருக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனது.

அந்தக் கண்ணில் பார்வை திரும்ப, திருமாலையே வேண்டித் தொழுதார் சுக்கிரன். பிறகு, ஸ்வாமியின் கட்டளைப்படி அவர் வழிபட்டு கண்பார்வை பெற்ற திருத்தலம்தான் திருவெள்ளியங்குடி. சுக்கிரன் 'வெள்ளி’ எனவும் அழைக்கப்படுவதால், இந்தத் தலத்துக்கு இப்படியரு திருப்பெயர் வந்ததாம்.

இந்தக் கோயிலின் கருவறையில், சுக்கிர பகவானுக்கு கொடுக்கப்பட்ட ஒளி, அணையா நேத்ர தீபமாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பிரம்மா, இந்திரன், பூதேவி, சுக்கிரன், மயன், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு திருமால் இந்தத் திருத்தலத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தந்தருளினாராம். எனவே, திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட, இனிய இல்வாழ்க்கை கிடைக்கும் என்கிறார்கள். சுக்கிர தோஷம், பார்வை குறைபாடு நீக்கும் தலமாகவும் திகழ்கிறது திருவெள்ளியங்குடி.

- எல்.கண்ணன், சென்னை-28.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism