நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

காக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி!

ஓம் ஸ்ரீ மஹா கணபதி பதயே நம:

காக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி!
காக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி!
##~##
தி
ருவனந்தபுரத்தில் உள்ள புகழ்மிக்க தலங்களில் கணபதி க்ஷேத்திரமும் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில், கிழக்கு சிட்டி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீமகா கணபதி திருக்கோயில்.

அற்புதமான ஆலயம்; உள்ளே நுழைந்ததும் அழகிய சிற்பங்கள்; அங்கே, 32 விதமான தோற்றங்களில், ஸ்ரீகணபதியின் அழகு கொஞ்சும் ஓவியங்கள். ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜன் மற்றும் ஸ்ரீபிரம்மராட்சஸ் ஆகியோரும் இங்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர்.

உள்ளே கருவறையில், காண்பதற்கு அரிதான தோற்றத்துடன், வலது காலை மடித்தபடி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமகா கணபதி. கேரளாவின் திரையுலகப் பிரபலங்கள் பலரும், தங்கள் வாழ்வில் எந்த நல்லது நடந்தாலும், 'எல்லாம் மகா கணபதியின் பேரருள்’ எனச் சிலாகித்தபடி, இங்கு வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமா?! படப்பெட்டியை இங்கு எடுத்து வந்து பூஜை போட்ட பிறகுதான், தியேட்டர்களுக்கு அனுப்பி ரிலீஸ் செய்கின்றனர், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும்!

கேரள மக்களின் இஷ்டதெய்வமாக மட்டுமின்றி, காவல் தெய்வமாகவும் திகழ்கிறார் ஸ்ரீமகா கணபதி. காரணம்... இந்தக் கோயில், இந்திய ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளது!

இந்திய ராணுவத்தில் பலம் வாய்ந்ததும், 1750-ஆம் வருடம் உருவாக்கப் பட்டதுமான படைப்பிரிவு, 'மெட்ராஸ் ரெஜிமென்ட்’. போர்கள் பலவற்றைச் சந்தித்து வெற்றி பெற்ற பெருமை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்ட், 32 பட்டாலியன்களைக் கொண்டதாக, தமிழகத்தின் உதகை மாவட்டத்தில், வெலிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பே,  திருவாங்கூர் மகாராஜாவின் மெய்க்காப்பாளர்களாக பத்மநாபபுரத்தில் இருந்தவர்களைக் கொண்டு, 1704-ஆம் வருடமே உருவாக்கப்பட்ட படைப் பிரிவு 'நாயர் பிரிகேட்’. 1940-ஆம் வருடத்துக்குப் பிறகுதான், ஏனைய பிரிவினரும் நாயர் பிரிகேட்டில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பிறகு, நாயர் பிரிகேட் பிரிவு, 51-ஆம் வருடத்தில் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது.

திருவனந்தபுரம் பழவங்காடி ஸ்ரீமகா கணபதி கோயில், பத்மநாபபுரம் சரித்திரத்துடன் இணைந்த ஒன்று எனப் போற்றுகின்றனர் கேரள மக்கள்.

பத்மநாபபுரம் கோட்டையின் நாலாதிசைகளிலும் படைவீரர்கள் காவல் காப்பது வழக்கம். இவற்றில் ஒரு திசையில், கள்ளியங்காட்டு நீலி எனும் யக்ஷி தேவதை குடிகொண்டிருந்தாளாம். ஆகவே, அந்தத் திசையில் இரவுக் காவலுக்கு இருப்பவர்கள், மறுநாள் விடிந்ததும் மயங்கிச் சரிந்து கிடப்பார்களாம்!

காக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி!

இப்படித்தான் ஒருநாள், படைவீரர் ஒருவர் அருகில் உள்ள வள்ளியூர் ஆற்றில் நீராடிவிட்டு, காவலுக்குச் செல்லலாம் என முடிவு செய்தார். அதன்படி ஆற்றில் இறங்கியபோது, அவரது காலில் ஏதோ இடற... திடுக்கிட்டுப் போனவர் சுதாரித்துக்கொண்டு, நீரில் இருந்து அதை வெளியே எடுத்துப் பார்க்க... அது, அழகிய விநாயகரின் திருமேனி! நெக்குருகிப்போன வீரர், விநாயகரின் திருவிக்கிரகத்தை எடுத்து வந்து, தான் வேலை பார்க்கும் இடத்தில் வைத்து வணங்கினார். பிறகு இரவுக் காவலில் ஈடுபட்டார். விடிந்தது. என்ன ஆச்சரியம்... வீரர்கள் யாரும் முன்போல் மயங்கி விழாமல் இருப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர். 'இதற்கு இந்த விநாயகர்தான் காரணம்’ என்று அந்த வீரர் சொல்ல, அனைவரும் விநாயகரை வணங்கி வழிபட்டனர். அதையடுத்து அங்கேயே விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய... அதன்பிறகு, யக்ஷி தேவதையால் காவல் வீரர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லையாம்!

இதையடுத்து, வீரர்கள் போருக்குக் கிளம்பிய போது, இந்த விநாயகரையும் தங்களுடன் கொண்டு சென்று வழிபட்டனர். விளைவு... அந்தப் போரில் அவர்கள் பெரும்வெற்றி பெற்றனர்!

கால ஓட்டத்தில், கி.பி. 1795-ஆம் வருடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக திருவனந்தபுரம் ஆனது.

அப்போது ராணுவத்தின் பெரும்பகுதியும் இடம்பெயர்ந்தது. அதன்பின், படைவீரர்களுக்கு காவல்தெய்வமாக அருளிய ஸ்ரீவிநாயகரை, பழைய ஸ்ரீகண்டேஸ்வரம் ஆலயத்தின் அரச மரத்தின் கீழ் வைத்து வழிபடத் துவங்கினார்கள்.

பிறகு, தர்மராஜா என அனைவராலும் போற்றப்பட்ட ராமவர்ம மகாராஜாவின் பேருதவியால், திருவனந்தபுரம் கோட்டை பகுதியில் சிறியதொரு ஆலயம் அமைத்து ஸ்ரீவிநாயகரின் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, வழிபடத் துவங்கினர். அன்றுமுதல், கேரளம் முழுவதும் ஸ்ரீமகா கணபதியின் பேரருள் பரவத் துவங்கியது.  

துவக்கத்தில் சிறிய ஆலயமாக இருந்த நிலை மாறி, 83-ஆம் வருடம் பஜனை மண்டபம் போன்றவை கட்டப் பட்டு விரிவுபடுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்லும் ஆலயத்தில், தினமும் பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பூஜைகள் செய்யப்படுகின்றன.

கோயிலில் விழாக்களை நடத்துவதற்காகவே, ராணு வத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் தலைமையில், 'திருவாதிரைக் கமிட்டி’ 35-ஆம் வருடம் முதல் இயங்கி வந்தது. பிறகு, மெட்ராஸ் ரெஜிமெண்டின் உயர் அதிகாரி ஆலயத்தை நிர்வகிப்பார் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, 56-ஆம் வருடத்தில், தென் பிராந்திய ராணுவத் தலைமையின் வேண்டுகோளின் பேரில் கேரள அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அதாவது, முன்னாள் திருவாங்கூர் படைவீரர்களும் தற்போது மெட்ராஸ் ரெஜிமெண்டில் பணிபுரிபவர்களும் கொண்டுள்ள உறுதியான உணர்வுகளின் அடிப்படையில் அரசாங்கம், பழவங்காடி மகா கணபதி ஆலயத்தை ராணுவத்தின் சொத்து என்பதாக அறிவித்தது. இந்தக் கோயில், ராணுவத்தால் பராமரிக்கப்படும் வரை, இந்த அரசின் ஆணை செல்லுபடியாகும் என்றும் தெரிவித்தது. இதன்படி, மெட்ராஸ் ரெஜிமெண்டின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்ரீமகா கணபதி ஆலயம் இயங்கி வருகிறது.

காக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி!

அதிகாலை 5:30 முதல் 10:45 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8:30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், கோயில் நிர்வாக அலுவகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். இந்த மகா கணபதியின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் அறிந்த வெளியூர்களில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

''சக்தி வாய்ந்தவர் ஸ்ரீமகா கணபதி. நம்பிக்கை யுடன் வணங்கினால், நமக்கு வெற்றியைத் தந்தருள்வார்; துர்தேவதைகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்தருள்வார்!

இங்கே, கோயில் நடை திறந்திருக்கும் வேளைகளில், சிதறு தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பக்தர்கள், விநாயகரை வணங்கிவிட்டு, சிதறுகாய் உடைக்காமல் செல்ல மாட்டார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கணபதி ஹோமம், அப்பம் மற்றும் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள். சங்கடஹர சதுர்த்தி திதியில், விநாயகரை புஷ்ப அபிஷேகத்தில் காணக் கண்கோடி வேண்டும். அன்றைக்கு, கூடுதல் விளக்கொளியில் ஜொலிப்பார், கணபதி'' என்கிறார் கோயிலின் மேல்சாந்தி மாதவன் போத்தி.

''விநாயக சதுர்த்தி விழாவில், ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் மூன்று யானைகளுடன் வீதியுலா வருவார் ஸ்ரீமகா கணபதி. அப்போது, ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் ராணுவச் சீருடை உடுத்தியபடி வரிசையாக வருவதைக் காண்பதே பிரமிப்பாக இருக்கும்!'' என்கிறார் மாதவன் போத்தி. இந்த ஆலயம் மெட்ராஸ் ரெஜிமெண்டின் உயர் அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.காமத் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

திருவனந்தபுரம் வரும்போது, மிலிட்டரி கணபதியைத் தரிசிக்க மறக்காதீர்கள்; அவ்வளவு ஏன்... இவரைத் தரிசித்து அருளைப் பெறுவதற்காகவே திருவனந்தபுரத்துக்கு வாருங்களேன்!

படங்கள்: கே.கார்த்திகேயன்

கை கொடுப்பார்; கரையேத்துவார்!

காக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி!

'இஸ்ரோ’வில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணனை, பழவங்காடி விநாயகர் கோயிலில் சந்தித்தோம்.

''திருவனந்தபுரத்தில் வேலை பார்த்த காலத்திலிருந்தே ஸ்ரீமகா கணபதியைத் தரிசனம் பண்ணிட்டிருக்கேன். தினமும் காலைல அஞ்சு மணிக்கெல்லாம் கோயிலுக்கு வந்துடுவேன். வாழ்க்கைல பல கஷ்டங்கள்... அப்பெல்லாம் எனக்குத் துணையா நின்னு, கை கொடுத்து என்னைக் கரை சேர்த்தது இந்த விநாயகர்தான்!  

வாழ்க்கையில என்ன பிரச்னை வந்தாலும், இவரோட சந்நிதிக்கு வந்து, மனசார பிரார்த்தனை பண்ணினாப் போதும்; அந்தப் பிரச்னைகளையெல்லாம் உடனே தீர்த்து வெச்சுடுவார் ஸ்ரீமகா கணபதி'' எனச் சிலிர்ப்புடன் தெரிவித்தார் விஞ்ஞானி நம்பி நாராயணன்.