
ஞானப் பொக்கிஷம்! - 6


'தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற கதை’ - கிராமங்களில் இப்படியரு பழமொழி சொல்வார்கள். மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறு நம் கையில் இருந்தால், பிரச்னையே இல்லை. நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் மாடு வரும். ஆனால் நாம், அந்தக் கயிற்றை விட்டுவிட்டு, மாட்டின் வாலைப் பிடித்தால்... நமக்குத்தான் பிரச்னை!
அதுபோலத்தான், குழந்தைகளிடம் இருக்க வேண்டிய ஆரோக்கியத்தையும் உடல் நலத்தையும் விரட்டியடித்துவிட்டு, அந்தக் குழந்தைகளைத் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் மாறிமாறித் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல; இறைவன் விஷயத்திலும் நாம் அப்படியே! நினைத்தது நடைபெறவில்லை என்றால், ''பாழாப்போன சாமி போட்டுப் படுத்துது, என்ன பாவம் செஞ்சேன்னு தெரியல'' என்று, அந்தத் தெய்வத்தையும் திட்டுகிறோம், நம்மை அறியாமல்!
ஆனால், இந்தப் புலம்பலில் ஓர் உண்மை உள்ளது. 'என்ன பாவம் செஞ்சேன்னு தெரியல’ என்றோமே... அதுதான் உண்மை!
தெரிந்துகொள்ள வேண்டியவற்றைத் தெரிந்து கொள்ளாமல், தெரிந்து வைத்திருந்தாலும் அவற்றை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வராமல் இந்தப் பாவத்தைச் செய்கிறோம். அது, நம் குழந்தைகளைப் பாதிக்கிறது!
அடுத்த தலைமுறையாவது நல்வாழ்வு வாழ, தெரிந்துகொள்ள வேண்டிய அந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்... நம்ப முடியாத விஞ்ஞான உண்மைகள் அவை!
குழந்தைகள் குள்ளமாகவோ, கை-கால்கள் பாதிக்கப்பட்டு அங்கஹீனமாகவோ பிறந்தால், அதற்குத் தந்தைதான் முழுப் பொறுப்பு. அதேநேரம், குழந்தைகள்- மந்தமாகவோ, ஊமையாகவோ, குருடாகவோ பிறந்தால், அதற்குத் தாயார்தான் பொறுப்பு. இது எப்படி?
சாதாரணமாக, 8 அங்குலம் காற்றை நாம் உள் இழுத்துக் கொண்டு, 12 அங்குலம் காற்றை வெளியே விடுவதாக ஒரு கணக்கு உண்டு. இதற்கு மாறாக, 12 அங்குலம் உள்வாங்கிக் கொண்டு, 8 அங்குலம் வெளியிடும் முறையையே பிராணாயாமம் முதலான பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கின்றன.
##~## |
மூச்சுக்காற்றின் அளவு, மூச்சுக்காற்றின் வேகம் முதலான இந்தத் தகவல்களை நெஞ்சில் பதிய வைத்துக் கொண்டு வாருங்கள்!
கணவன் - மனைவி சேரும்போது, மனைவியின் கருப்பையில் பாயும் வாயு நான்கு மாத்திரை (அங்குல) அளவு குறைந்தால், குழந்தை குள்ளமாகப் பிறக்கும். அதேநேரம், வாயு சீரான வேகத்துடன் இல்லாமல் சற்று இளைத்தால்- கை கால் முதலான உறுப்புகளில் குறையுடன் குழந்தை பிறக்கும். பாயும் வாயு தடைப்பட்டால் குழந்தை கூனாகப் பிறக்கும்.
இங்கு சொல்லப்பட்டவை, ஆண் மகனுடைய செயல்கள். ஆச்சரியகரமான இந்தத் தகவலைச் சொல்லும் பாடல் இதோ...
பாய்கின்ற வாயு குறையில் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே!
நல்ல குழந்தைகளைப் பெறுவதில் தந்தைக்கு உண்டான பொறுப்பை மட்டுமல்லாது, தாய்க்கு உண்டான பொறுப்பையும் நாம் உணர வேண்டும்.
என்னதான் தந்தை சரியாக இருந்தாலும், தாயார் சரியாக இல்லாவிட்டால் குழந்தை மந்தமாகவோ, ஊனமாகவோ, குருடாகவோ பிறக்க நேரிடலாம். தாயாரின் பொறுப்பு என்ன? அதையும் ஒரு பாடல் சொல்கிறது.
கணவன் - மனைவி சேரும்போது, மனைவியின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால், கருவுற்றுப் பிறக்கும் குழந்தை மந்தமாக இருக்கும். மனைவியின் வயிற்றில் சிறுநீர் அதிகமாக இருந்தால், பிறக்கின்ற குழந்தை ஊமையாகப் பிறக்கும். மனைவியின் வயிற்றில் மல-ஜலம் அதிகமாக இருந்தால், பிறக்கின்ற குழந்தை குருடாகப் பிறக்கும்.
இத்தகவலைச் சொல்லும் பாடல்...
மாதா உதரம் மலம் மிகின் மந்தனாம்
மாதா உதரம் சலம் மிகின் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டு ஒக்கில் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
எதிர்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்துக்கும் வழிகாட்டும் ஆச்சரியகரமான இப்படிப்பட்ட பாடல்கள் ஒரே நூலில் உள்ளன. ஆயிரக்கணக்கான எண்ணிக்கை கொண்ட அந்தப் பாடல்களில் ஆண், பெண், திருநங்கை எனக் குழந்தைகள் பிறக்கக் காரணம், குழந்தைகளின் ஆயுளை அறியும் வழி, வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா-பெண்ணா, குழந்தை பிறக்காததன் காரணம், நோய்களின் வகைகளும் அவை உண்டாகக் காரணங்களும், நாடிகளை அறியும் விதம், மூல நோயின் கொடுமைகளும் விளைவுகளும்... எனப் பல்வேறுவிதமான தகவல்கள் உள்ளன.
அபூர்வமான அந்தத் தகவல்கள் அடங்கிய நூலின் பெயர்- திருமந்திரம். இந்த நூலை எழுதியவர் திருமூலர். மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக உள்ளது. இதன் பாடல்களைத் தொகுத்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று தமிழ் மந்திரம்.
திருமந்திரத்தின் நூல் ஆசிரியரான திருமூலர், 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் பெற்றிருப்பதோடு, சித்தர்கள் வரிசையிலும் முக்கியமானவராக இருக்கிறார். இவரது விரிவான வரலாறு, 'விகடன் பிரசுர’ வெளியீடான 'சித்தர்கள் வாழ்க்கை’ என்னும் நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளது.
(இன்னும் அள்ளுவோம்...)