Published:Updated:

விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!

விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!

விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!

விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!

Published:Updated:
விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!
விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கே
ரள மாநிலம், திருச்சூர் மாவட்டம்-தலப்பிள்ளி வட்டத்தில் உள்ளது, திருவில்வமலை. இங்கே உள்ள ஸ்ரீவில்வாத்ரி நாதர் கோயில் மிகவும் பிரபலம். மகாவிஷ்ணுவின் அம்சமான ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீலட்சுமணர் சந்நிதிகள் எதிரெதிரே அமைந்துள்ளது இந்தத் திருத்தலத்தின் தனிச்சிறப்பு.

இங்கு, ஸ்ரீராமரை 'ஸ்ரீவில்வாத்ரி நாதர்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். பீஜ க்ஷேத்திரங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த க்ஷேத்திரம் என்று திருவில்வமலையைப் போற்றுகின்றன புராணங்கள்.

கோவையில் இருந்து சுமார் 88 கி.மீ. தொலைவிலும், பாலக்காட்டில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும், திருச்சூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலும் திருவில்வமலை அமைந்துள்ளது.

21 முறை பல்வேறு க்ஷத்திரியர்களை எதிர்த்து, அவர்களை வதம் செய்த ஸ்ரீபரசுராமர், அந்த மகாப் பாவத்தில் இருந்து விமோசனம் பெற வழி தேடி, சிவனை நோக்கித் தவம் இருந்தார்.  அவருக்கு அருள்புரிந்த சிவபெருமான், தான் கயிலாயத்தில் நித்திய பூஜை செய்து வந்த ஸ்ரீவிஷ்ணுவின் சுயம்பு விக்கிரகத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார். அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யச் சிறந்த இடமாக ஸ்ரீபரசுராமர் தேர்வு செய்த இடமே இந்த திருவில்வமலை. அவர் அங்கு நிறுவியதுதான், கிழக்கில் கோயில் கொண்டுள்ள விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீலட்சுமணர் விக்கிரகம்.

பிறகு, தனது பித்ருக்களை வரவழைத்து, தான் பிரதிஷ்டை செய்த மகாவிஷ்ணுவைத் தரிசிக்கச் செய்தார் பரசுராமர். அதன் மூலம் அவர்கள் பாவங்கள் நீங்கி முக்தி பெற, ஸ்ரீபரசுராமரின் பாவங்களும் நீங்கின.

விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!

இங்கே உள்ள விக்கிரகம் சிவபெருமானே வழிபட்ட சிறப்புக்கு உரியது என்பதால் சாந்நித்தியம் மிகுந்ததாகவும், பார்த்த மாத்திரத் தில் பாவங்களைப் போக்கக் கூடியதாகவும் திகழ்வது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பு. தற்போது, சுமார் 5 அடி உயரத்தில், நிரந்தர தங்கக் கவசத்துடன் அற்புத தரிசனம் தருகிறது சுயம்பு விக்கிரகம். இந்த மூர்த்தியின் மகிமை அறிந்த பாண்டவர்களும் இங்கு வந்து, இந்தப் பகுதியில் பாயும் 'பாரதப் புழை’ நதிக்கரையில், ஸ்ரீகிருஷ்ணரின் முன்னிலையில் பித்ரு தர்ப்பணம் செய்தார்கள். பிறகு, ஸ்ரீவில்வாத்ரிநாதர் ஆலயம் வந்து அவரை வணங்கிச் சென்றனர் என்கிறது தலபுராணம்.

ஒருமுறை காஷ்யப மகரிஷியின் மகனான ஆமலகன் (நெல்லிக்கனியை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தவன்.) மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும் தவம் இருந்தான். அவனால் தங்களுக்கு அழிவு நேரும் என்று அஞ்சிய அசுரர்கள், அவனது தவத்துக்குத் தொல்லை தர ஆரம்பித்தனர். தவத்தில் இருந்த ஆமலகன் கண் திறந்தான். அவன் விழிகளில் இருந்து புறப்பட்ட தீப்பொறி, அசுரர்களை சாம்பலாக்கியது. அந்தச் சாம்பல் ஒரு

பாறையாக இறுகியது. அது, 'ராட்சஸப் பாறை’ என்ற பெயரில் இன்றும் அங்கே அமைந்துள்ளது. அசுரர்களின் அழிவுக்குப் பிறகு ஆமலகனின் தவம் தொடர்ந்தது. மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து அவன் முன் தோன்றி 'என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு ஆமலகன், 'எனக்குத் தனியாக வரம் ஏதும் வேண்டியதில்லை. இந்த உலகில் துயரப்படுபவர்களின் கஷ்டங்கள் நீங்க, நீங்கள் எப்போதும் இங்கே இருக்க வேண்டும். இந்த வரத்தை அருளினால் போதும்!'' என்று கேட்டான். அதை மகாவிஷ்ணு ஏற்றார்; திருவில்வமலையில் இறைத் திருவுருவாகக் கோயில் கொண்டார். அந்த மகாவிஷ்ணு, இன்று... அனந்த நாகத்தின் கீழே ஸ்ரீலட்சுமி தேவி, ஸ்ரீபூமா தேவி சமேதராக கிழக்குத் திசையை நோக்கியபடி எழுந்தருளி இருக்கிறார்.

விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!

கிழக்கு நோக்கி ஒரு மகாவிஷ்ணுவும் (ஸ்ரீராமர்), மேற்குப் பார்த்தபடி பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மகாவிஷ்ணுவும் (ஸ்ரீலட்சு மணர்) இந்த வில்வமலையில் இருப்பதால், இரண்டு மகா விஷ்ணுக்களின் சக்தியும் பக்தர்களுக்குக் கிடைப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மேலும், அசுரர்களின் தொல்லை ஏற்படாத வகையில், சிவபெருமானின் சக்தியும் இந்த விக்கிரகங்களில் சேர்ந்திருப்பதால், சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி முதலான விரதங்கள் மேற்கொண்டு, ஸ்ரீவில்வாத்ரிநாதரை நேரில் தரிசித்து அருள் பெற்றுச் செல்லும் பக்தர்கள் ஏராளம்! கோயிலில் சிவபெருமானுக்காக பிரத்யேக தீபம் ஏற்றுவதும், வில்வ மலரால் அர்ச்சனை நடத்துவதும் இங்கு வழக்கமாக உள்ளது.

விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!

அசுர சக்திகள் ஆலயத்தின் அருகே வர முடியாவிட்டாலும், தொலைவில் இருந்தே இக்கோயிலை இரண்டு முறை தீக்கிரையாக்கியதைத் தொடர்ந்து, ராட்சத சத்ருவாகிய ஸ்ரீஅனுமனை இந்த ஆலயக் காவல் பொறுப்பை ஏற்குமாறு பிரதிஷ்டை செய்தனர். இந்த ஸ்ரீவீரஅனுமர், ஆலயத்தின் தென்கிழக்கு திசையில் கோயில் கொண்டபிறகு, எந்த பிரச்னைகளும் ஆலயத்துக்கு உண்டாகவில்லை! இந்த வீர ஆஞ்சநேயருக்குப் பக்தர்கள் வடை மாலை, வெற்றிலை மாலை மற்றும் அவல் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.

திருவில்வமலையில் உள்ள மூலவருக்குக் காலடியில் ஒரு துவாரம் இருந்தது. அதில் தீர்த்தம் நிரம்பி வழியுமாம். ஒருமுறை வாழைப்பழம் ஒன்று அந்தத் துவாரத்தில் விழுந்து, அதை எடுக்க ஒரு நீண்ட கம்பியால் முயன்றபோது, அந்தக் கம்பியும் உள்ளே போய்விட்டது. ஸ்வாமியின் காலடிக்குக் கீழே ஒரு சுரங்கம் இருப்பது அப்போதுதான் தெரியவந்தது. பின்னர் ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்ட தருணம், சுரங்கத் துவாரத்தில் இறங்கி, படிக்கட்டுகளில் சென்று பார்த்திருக்கிறார்கள். ரொம்ப தூரம் செல்ல முடியாதபடி இருட்டாக இருந்ததால், அதை அப்படியே கற்களால் மூடி வைத்து விட்டார்

களாம். அந்தக் குகையில், தங்கத்தினால் ஆன வில்வ மரம் ஒன்று இருப்பதாக ஒரு நம்பிக்கை பக்தர்களிடையே ரொம்ப காலமாக நிலவி வருகிறது. இதனால்தான் இந்தக் கோயில் உள்ள குன்றுக்கு 'திருவில்வமலை’ என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.

விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்!

அகலமான பிராகாரங்களும் நீண்ட நடைகளுமாக அற்புதமாகக் காட்சியளிக்கிறது திருக்கோயில். கோயிலுக்குள் நுழைந்ததுமே உயரமான ஆலயத்துக்குச் செல்ல, படிக்கட்டுகள் உள்ளன. அதன் துவக்கத்தில், வலப்புறம் ஒரு மரத்தின் அடியில் ஆண்களும் பெண்களுமாக மரத்தைச் சுற்றியுள்ள மேடையில் கற்களை சிரத்தையுடன் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவதைக் காண முடிகிறது.

'மனதில் ஏதாவது வேண்டுதலை நினைத்துக் கொண்டு ஐந்து, ஏழு, ஒன்பது... என்று, கற்களை இந்த மேடையில் அடுக்க வேண்டும். கூடவே ஸ்ரீவில்வாத்ரிநாதரையும் மனத்தில் நினைத்து வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்’ என்றார்கள், நம்மிடம் பேசிய பக்தர்கள்!

கோயில் பிராகாரத்தில் நாம் சந்தித்த ராதாகிருஷ்ண வாரியரிடம் பேசினோம். அவர் சொன்னார்: 'மகாவிஷ்ணுவின் அம்சமான ஸ்ரீராமச்சந்திர ஸ்வாமியும், ஸ்ரீலட்சுமண ஸ்வாமியும் இங்கு மூலவர்கள். உப ஸ்வாமிகளாக, ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீவீர ஹனுமான், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீபார்வதி ஆகியோர் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு அரை கி.மீ. தொலைவில் உள்ளது, பாரதப் புழை என்கிற நதி. இதைக் 'கேரள கங்கை’ன்னும் சொல்லுவாங்க. வெகு தொலைவில் இருந்தெல்லாம் பக்தர்கள் இந்த நதியின் கரைக்கு வர்றாங்க. தங்கள் முன்னோருக்காக தர்ப்பணம் முதலான சடங்குகளைச் செஞ்சு, அவங்களின் ஆசிக்கும் அருளுக்கும் பாத்திரமாகிறாங்க.. சடங்குகள் முடிஞ்சதும் திருவில்வமலை ஆலயத்துக்கு வந்து இரண்டு மகாவிஷ்ணுக்களையும் தரிசித்தால், அவர்களின் பாவங்கள் அகலுவதோடு, எல்லா வளமும் அவர்களை வந்து சேரும்ங்கறது நெடுங்கால நம்பிக்கை!

அதோடு, ராமநவமி, நிறமாலை என்ற திருவிழாக்கள் இங்கு ரொம்ப விசேஷம்! ஏகாதசி அன்னிக்கு, புகழ்பெற்ற ஸ்வாமியான ஸ்ரீகுருவாயூரப்பன், குருவாயூரில் இருந்து புறப்பட்டு திருவில்வமலை வந்து, ஸ்ரீவில்வாத்ரிநாதரைத் தரிசிச்சு திரும்பிச் செல்வதாக ஐதீகம். அன்று பக்தர்கள் லட்சக்கணக்கில் இங்கு கூடி ஏகாதசித் திருவிழாவில் பங்கு பெற்று, இறையருளை அள்ளிச் செல்கிறார்கள்!'' என்றார், ராதாகிருஷ்ண வாரியர்.

இவ்வளவு சக்தி வாய்ந்த, மிகவும் பழமையான, புராணச் சிறப்புகள் கொண்ட திருவில்வமலைக்கு நீங்களும் சென்று ஸ்ரீவில்வாத்ரி நாதரைத் தரிசித்து, பாவங்கள் தொலைத்து, பேரருள் பெற்று வாருங்களேன்!

படங்கள்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism