Published:Updated:

நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே..!

அடியார் தரிசனம்...

நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே..!

அடியார் தரிசனம்...

Published:Updated:
நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே..!

நாதமுனிகள், சோழ தேசத்தில் காட்டுமன்னார் கோயில் எனப்படும் வரநாராயணபுரத்தில், சோபக்ருத் வருஷம்- ஆனி மாதம், அனுஷ நட்சத்திரத்தில் (9-ஆம் நூற்றாண்டு என்பர்) அவதரித்தார். ஆழ்வார்களின் அருளிச்செயல் மற்றும் அரையர் இசை ஆகியவை வித்திடப்பட்டது இவரது காலத்தில்தான்!

ஆராஅமுதே! அடியேன் உடலம் அன்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்றன நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தால் கண்டேன் எம்மானே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
- தல யாத்திரை செய்துகொண்டிருந்த ஒருவர்... கும்பகோணம் ஆராவமுதப் பெருமாள் சந்நிதியில் இந்தப் பாசுரத்தை மெய்யுருகப் பாடிக் கொண்டிருந்தார். அங்கே, பெருமாளின் தரிசனத்துக்கு வந்த மகாயோகி நாதமுனிகளின் காதுகளில் இந்தப் பாசுரம் விழுந்தது. அந்த நொடியில், நாதமுனிகளின் மெய்யுணர்வு எதையோ உணர்த்தியது. இந்த உணர்வே, தமிழ் அமுதமாம் நாலாயிர திவ்ய பிரபந்தம் கிடைப்பதற்குக் காரணமானது.

பன்னீராயிரம் முறை கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரத்தைப் பாடி, நம்மாழ்வார் தரிசனத்துடன் அவரிடம் இருந்து நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும் பெற்று, தன் மருமகன்களான மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் மூலம், இயல்-இசை எனும் வடிவில், பாசுரங்கள் மக்களிடையே பிரபலம் அடையக் காரணமானார் ஸ்ரீமந் நாதமுனிகள். இவருக்கு ஈஸ்வரமுனி என்று ஒரு புத்திரர். நாத முனிகள், தமது யோக நிஷ்டையால், தமக்கு தலைசிறந்த வைணவர் ஒருவர் பேரனாகப் பிறக்கப் போவதை அறிந்தார். தன் புத்திரனை அழைத்து, அவனுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் என்று பெயர் வைக்கும்படி சொன்னார். தன் சீடர்களான குருகைக்காவலப்பனையும், உய்யக் கொண்டாரையும் அழைத்து, தனக்குப் பிறக்கப்போகும் பேரன் யமுனைத்துறைவனுக்கு குருவாக இருந்து, தாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அனைத்தையும் அவனுக்கு கற்பிக்கும்படி சொல்லிவிட்டு, யோகத்தில் ஆழ்ந்தாராம் நாதமுனிகள்!

நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே..!

ஆமாம்... நாதமுனிகளின் பேரனான யமுனைத்துறைவனே, வைணவம் போற்றிய ஆளவந்தார் ஆவார். அதுமட்டுமா? ஸ்ரீரங்கத்தில் நாதமுனிகள் தலைமையேற்க... கம்பர் தன்னுடைய ராமாயணத்தை அரங்கேற்றினார் என்பர்.

இப்படி, தெய்வத் திருவருளால் நிரம்பிய நாதமுனிகளின் வாழ்வில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது!

நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே..!

ஒருநாள், வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த நாத முனிகளிடம், ''நம் அகத்திலே ஒரு குரங்கு, இரண்டு வில்லிகள் (வில்லாளிகள்), பெண்ணொருத்தி ஆகியோர் வந்து, 'நீங்கள் எங்கே?’ என்று கேட்டுச் சென்றனர்'' எனத் தெரிவித்தனர். உடனே நாதமுனிகள், 'அக்ரத: ப்ரயயௌ ராமஸ் ஸீதா மத்யே ஸ¨மத்யமா ப்ருஷ்டதஸ்து தநுஷ்பாணிர் லக்ஷ்மணோநுஜகாம ஹ’ என்றார். இதற்கு, 'அகாரார்த்தமான பெருமாள் முதலில் சென்றார்; உகாரார்த்தமான சிற்றிடையாள் சீதாதேவி நடுவில் சென்றார்; மகாரார்த்தமான இளைய பெருமாள் வில்லேந்திச் சென்றார். இவை பிரணவமே நடந்து சென்றது போல் இருந்தது’ என்று பொருள்! அதாவது ஸ்ரீராமன்- 'அ’காரம்; சீதாதேவி- 'உ’காரம்; லட்சுமணன்- 'ம’காரமாகத் திகழ... இவர்கள் நடந்து சென்றது, 'ஓம்’ எனும் பிரணவமே நடந்து சென்றது போல் இருந்ததாம்!

ஆக... வந்தது சாட்ஷாத் ஸ்ரீராமரே என அறிந்து சிலிர்த்தார் நாதமுனிகள். பரவசத்துடன் வாசலுக்கு ஓடி வந்தவர், அவர்கள் போன திசை குறித்து வழிநெடுக விசாரித்தபடி சென்றார். இப்படியாக... திருவரங்கத்தில் இருந்து கிளம்பி, கங்கைகொண்ட சோழபுரத்துக்கே வந்து விட்டாராம்! இங்கே... எவரை விசாரித்தாலும், 'கண்டோம்’ என்று சொல்லவே இல்லை; 'கண்டிலோம்’ என்றே கூறினர். நாதமுனிகள் கதறினார்; முகத்தில் அடித்துக் கொண்டு அழுதார். மூர்ச்சையாகிப் போனார். அதுவே அவரது ஆத்மா, வைகுந்தம் செல்ல ஏதுவானது.

வரும் ஆனி மாதம் 17-ஆம் தேதி (ஜூலை -1) ஸ்ரீமந் நாதமுனி களின் திரு நட்சத்திர திருநாள். அன்று இவரின் திருவடி தொழுது, இறைவனின் திருவருள் பெறுவோம்.

- தி. ராஜு,
படங்கள்: எம்.என்.ஸ்ரீநிவாஸன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism