Published:Updated:

தனம் தருவான் ஸ்ரீகனகாசல குமரன்!

முருகா சரணம்...

பிரீமியம் ஸ்டோரி
தனம் தருவான் ஸ்ரீகனகாசல குமரன்!
##~##
'எ
ழுமாத்தூர் குமரனை வணங்கினால், வாழ்க்கைக்கு நல்ல துணையைத் தருவான்; பொன்னும் பொருளும் அள்ளித் தருவான்!’ எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஈரோடு மாவட்டத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எழுமாத்தூர். இந்த ஊரின் மலைப் பகுதியில் இருந்தபடி, அனைவருக்கும் அருளையும் பொருளையும் வாரி வழங்குகிறான் மால்மருகன். இந்தத் தலத்தில் முருகக் கடவுளின் திருநாமம் - ஸ்ரீகனகாசலக் குமரன்.

ஒருமுறை, பத்தரை மாற்றுத் தங்கத்துக்காக, அகத்திய முனிவரின் அறிவுரைப்படி புலிப்பாணிச் சித்தர் இந்த மலையைக் குடைந்த போது, முருகக் கடவுளின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், ஏழரை மாற்றுத் தங்கம் மட்டுமே அவருக்குக் கிடைத்ததாம். எனவே இந்த ஊர் 'ஏழரைமாற்றூர்’ என அழைக்கப்பட்டு, பிறகு ஏழரைமாத்தூர் என மருவி, தற்போது எழுமாத்தூர் என மாறிவிட்டதாகச் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள்.

மலையின் பெருமையை அறிந்த ஊர்மக்கள், மலை உச்சியில் ஸ்ரீமுருகப்பெருமானுக்குக் கோயில் எழுப்பினர். தங்கத்தைத் தந்த மலை என்பதை உணர்த்துவதற்காக, ஸ்ரீகனகாசலக் குமரன் எனும் திருநாமம் சூட்டி, கந்தக் கடவுளை வழிபடத் துவங்கினர்.

தனம் தருவான் ஸ்ரீகனகாசல குமரன்!

பிறகு, காடு-கரைகளை நிறைக்கச் செய்யவும், மாடு-கன்றுகளை பெருக்கச் செய்யவும் மலையில் ஸ்ரீகிருஷ்ணருக்குக் கோயில் எழுப்பினார்கள். ஸ்ரீபாமா- ருக்மிணி சமேதராக அழகு ததும்ப அருள்பாலிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய நாட்கள் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. மாதந்தோறும் பௌர்ணமியில், எண்ணற்ற பிரார்த்தனைகளுடன் பக்தர்கள் பலர் இங்கு கிரிவலம் வந்து முருகப்பெருமானைத் தரிசித்துச் செல்கின்றனர்.

ஏழு கன்னிமார்களுடன் இலந்தை மரத்தடியில் வீற்றிருக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானும் அற்புதத் தரிசனம் தருகிறார். இங்கு வந்து அண்ணன் விநாயகரை வணங்கித் தொழுதுவிட்டு, ஸ்ரீகனகாசலக் குமரனைக் கண்ணாரத் தரிசனம் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்; வீட்டில் பொன்னும் பொருளும் சேரும் என்பது ஐதீகம்!

தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது கோயிலைச் சேர்ந்த கன்றுக்குட்டி தானாகவே மலையேறிச் சென்று, பூஜை செய்யும் காட்சியைக் கண்டு சிலிர்த்துப் போகிறார்கள், பக்தர்கள்.  

எழுமாத்தூர் ஸ்ரீகனகாசலக் குமரனை தரிசியுங்கள்; எல்லா நலனும் வளமும் பெறுவீர்கள்!

கட்டுரை, படங்கள்: மு.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு