நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

64-வது பீடாதிபதியின் அவதார ஸ்தலம்

ஹர ஹர சங்கர!

64-வது பீடாதிபதியின் அவதார ஸ்தலம்

திசங்கர பகவத் பாதாள் எனப்படும் ஸ்ரீஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சங்கர மடம்... எத்தனையோ மகான்களை நம் தேசத்துக்குத் தந்தருளிய அற்புதமான மடம்! காஞ்சி மகான், நடமாடும் தெய்வம், காஞ்சி மாமுனி, மகா பெரியவா எனப் பல திருநாமங் களுடன் நம்மால் அழைக்கப்பட்ட 68-வது பீடாதிபதியாம் காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர மகா சுவாமி களின் பேரருளைப் பெற்றவர்கள் இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்.

மகா பெரியவாளின் மிக நெருங்கிய பக்தர்களில், யூகோ பேங்க் குருமூர்த்தியும் ஒருவர். கும்பகோணத்துக்குப் பெரியவா வரும்போதெல்லாம், அங்கே தவறாமல் அருகில் நிற்பார் குருமூர்த்தி. அதேபோல், பெரியவாளைத் தரிசிக்கவேண்டும்  என நினைத்துவிட்டால், மறுநாளே காஞ்சி புரத்துக்கு ஓடோடி வந்துவிடுவார். அப்படி ஒருமுறை குருமூர்த்தி காஞ்சி மடத்துக்கு வந்திருந்தபோது, ''கும்பகோணத்துல இருக்கிற 64-வது பெரியவாளோட கிரஹத்தை வாங்கி, அங்கே ஏதாவது நல்ல காரியம் பண்ணு'' என உத்தரவிட்டாராம், காஞ்சி மகான். அதன்படி செம்மங்குடி சீனிவாசய்யர், கும்பகோணத்தின் பிரபல டாக்டர் ஆர்.வெங்கட்ராமன், மடத்தின் பழைய முத்திராதிகாரி சேஷய்யா சாஸ்திரிகள் முதலான பத்துப் பேரும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் அளிக்க... சங்கர மடத்தின் 64-வது பீடாதிபதி அவதரித்த இல்லம் வாங்கப்பட்டது.

64-வது பீடாதிபதியின் அவதார ஸ்தலம்

கும்பகோணம்- பாலக்கரைப் பகுதியில், காவிரிக் கரையில் அமைந்துள்ளது சங்கர மடம். இதனால், அந்தத் தெருவுக்கு 'மடத்துத்தெரு’ என்றே பெயர். சங்கர மடத்தின் பின்னே 64-வது பீடாதிபதியின் அதிஷ்டானம் உள்ளது. அதுமட்டுமா? சங்கர மடத்தின் 62-வது மற்றும் 63-வது பீடாதிபதிகளின் அதிஷ்டானங்களும் இங்கே அமைந்துள்ளன. இந்த அதிஷ்டானத்துக்கு அடுத்தாற்போலவே இருக்கிறது, 64-வது பீடாதிபதியின் அவதார இல்லம். இதனை, 'சங்கர பக்த ஜன சபா’ எனும் பெயரில் வாங்கி, அங்கே சுவாமிகளுக்கு ஆராதனை விழா நடத்த வேண்டும் என்றும், முதல் வருட ஆராதனைக்கு இரண்டு அந்தணர்கள், அடுத்த வருடம் நான்கு என அந்தணர்களின் எண்ணிக்கை அதிகரிக்கட்டும் என அருளினாராம் காஞ்சி மகான். அந்தணர்கள் கிடைக்கவில்லையெனில், கும்பகோணம் பாடசாலை மாணவர்களைக்கொண்டே ஆராதனை செய்யுங்கள் என்றும் பணித்தாராம் சுவாமிகள்.

இன்றைக்கு 'வடகோடி பிருந்தாவனம்’ என அழைக்கப்படுகிற அதிஷ்டானத்தில், வருடந்தோறும் தீபாவளித் திருநாள் முடிந்ததும், அமாவாசைக்கு இரண்டாம் நாள் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது ஆராதனை விழா!

சதாசர்வகாலமும் இறைவனையே நினைத்தபடி, அந்த நினைப்பும் கடும் தவமுமே, உலக மக்களை உய்விக்கும் என்பதை அறிந்துணர்ந்த மகான்கள், இன்றைக்கும் சூட்சும ரூபமாக, அதிஷ்டானத்தில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.

64-வது பீடாதிபதியின் அவதார ஸ்தலம்

எத்தனையோ பக்தர்கள், இங்கு வந்து மனம் தெளிவுற்றுத் திரும்பியுள்ளனர். வெளிநாடு வாழ் அன்பர்கள் பலரும், இந்தியாவுக்கு வரும்போது, வடகோடி பிருந்தாவனத்தைத் தரிசிக்கத் தவறுவதே இல்லை.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த, அன்பும் பெருங்கருணையும் கொண்ட, மகாசுவாமிகள் மூவரின் அதிஷ்டானங்களுக்கு அருகில், அரைமணி நேரம் கண்மூடிப் பிரார்த்தித்தால் போதும்... நம் கர்வமெல்லாம் அழியும்; கோபமெல்லாம் தொலையும்; மனதுள் அமைதியும் சாந்தமும் குடிகொண்டு, மனசையும் முகத்தையும் மலரச் செய்யும் என்கின்றனர், அன்பர்கள்.

'அது மட்டுமின்றி, நம் பேரைப் பறைசாற்றுகிற அடுத்தடுத்த தலைமுறையினர், நற்குணங்களும் பண்புகளும் கொண்டு, சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்’ என வியாழக்கிழமைகளில் இங்கு வந்து தியானித்துச் செல்லும் அன்பர்கள் பலர், பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

16-ஆம் நூற்றாண்டில், சோழ தேசத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் அரசவையில் அமைச்சராக இருந்தவர் ஸ்ரீகோவிந்த தீட்சிதர். அந்தக் காலத்தில் இவரை, ஸ்ரீகோவிந்த ஐயன் என்று அழைத்தார்களாம். இதனால், கும்ப கோணத்தில் இவரை நினைவுகூறும்விதமாக 'அய்யன் தெரு’ என இன்றைக்கும் உள்ளது. கும்பகோணத்தில் பாடசாலையைத் துவக்கி, ஏராளமான சிறுவர்களை வேதங்களின் பக்கம் திருப்பி, அவர்களின் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்த பெருமைக்குரியவர், கோவிந்த தீட்சிதர்.

64-வது பீடாதிபதியின் அவதார ஸ்தலம்

இவரின் பரம்பரையில் இருந்து வந்தவர்தான் 64-வது பீடாதிபதி (62, 63 மற்றும் 64-வது என மூன்று பீடாதிபதிகளுமே ஒரே குடும்பத்தில் இருந்து, சந்நியாச தீ¬க்ஷ பெற்று வந்தவர்கள்தான் என்று சொல்வாரும் உண்டு!).

64-வது பீடாதிபதியின் திருநாமம்- ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (காஞ்சி மகான் என நாம் அழைக்கிற, நாம் தரிசித்த மகா பெரியவாளின் திருநாமமும் இதுவே!). பல மகோன்னதமான காரியங்களைச் செய்தருளியுள்ளார், இந்த மகான். திருவானைக்கா ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயத்தில், 1848-ஆம் வருடம், தாடங்கப் பிரதிஷ்டை செய்து, ஆலயத்துக்குக் கூடுதல் சக்தியையும் பேரருளையும் வழங்கியவர், இவரே!

64-வது பீடாதிபதியின் அவதார ஸ்தலத்தில் வேத பாராயணங்கள், சத்சங்கங்கள், ஏழைகளுக்கான உதவிகள், ஆராதனைப் பெருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் தியான வகுப்புகள் ஆகியவற்றை நடத்து வதற்கும் அந்தப் பழங்காலத்துக் கட்டடத்தைப் புதுப்பித்துப் பொலிவுறச் செய்வதற்கும் டிரஸ்ட் நிர்வாகிகள் திட்டமிட்டு, அந்த நற்காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யூகோ பேங்க் குருமூர்த்தியின் மாப்பிள்ளைகளும் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து, காஞ்சி மகானின் உத்தரவை நிறைவேற்றுகிற பணியில் செயல்பட்டு வருகின்றனர். மகா பெரியவாளின் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கைங்கர்யத்துக்கு உதவினால், வெகு சீக்கிரமே பணிகள் நிறைவுறும்; வேத கோஷங்கள் இங்கே இடையறாது ஒலிக்கத் துவங்கிவிடும் என்கின்றனர், டிரஸ்ட் நிர்வாகிகள்!

மகா பெரியவா எனப் போற்றப்படும் காஞ்சி மகான், தன் பக்தர்களின் மனங்களில் புகுந்து, இந்த சத்காரியத்தை செவ்வனே நிறைவேற்றித் தருவார்; 64-வது பீடாதிபதியின் இல்லத்தில் வேதகோஷங்களும் தியான வகுப்புகளும் நடந்தேற வேண்டும் என்கிற தனது விருப்பத்தைத் தன் பக்தர்களின் மூலமாகவே நிறைவேற்றிக்கொள்வார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அன்பர்கள்!

ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர!

- வி.ராம்ஜி
படங்கள்: ந.வசந்தகுமார்