Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூம்புகாரில் இந்திர விழாவைச் சிறப்புற நடத்துவது, சோழர்களின் வழக்கமாக இருந்தது. இதற்காக, தலைநகர் தஞ்சையில் இருந்து பத்துநாட்களுக்கு முன்பே பூம்புகாருக்கு வந்து, விழாவை பிரமாண்டமாக நடத்திவந்தனர், சோழ மன்னர்கள்!

அந்தக் காலத்தில், பூம்புகார் கடல் வாணிபத்துக்கு ஏற்ற இடமாக இருந்தது. எனவே, காவிரியின் வடகரையான காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், திருவையாறு, கல்லணை, திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் வரை செல்லும் அந்தப் பாதையை, வணிகப் பெருவழிப்பாதை என்பார்கள்.

தஞ்சாவூரில் இருந்து மன்னர்கள், அமைச்சர்கள், வேளாளர்கள் மற்றும் பலர்  இந்தப் பாதை வழியே, காவிப்பூம்பட்டினத்துக்கு வந்து இந்திர விழாவைச் சிறப்புற நடத்துவார்கள். வழியில், குறிப்பிட்ட இடங்களில் தங்குவதற்கும் வழிபாடுகள் செய்வதற்கும் அவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயில்களும் திருக்குளங்களும் அருகில் சத்திரங்களும் கட்டப்பட்டிருந்தன. தங்குவதற்காக, சில ஊர்களில் அரண்மனைகள் கட்டிவைத்திருந்தார்கள் மன்னர்கள். அந்த அரண்மனைக்கு அருகிலேயே அழகிய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அங்கே அமைச்சர்களும் மற்ற அதிகாரிகளும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆலயம் தேடுவோம்!

தஞ்சையில் ஸ்ரீபிரகதீஸ்வரரும் குடந்தையில் ஸ்ரீகும்பேஸ்வரரும் மாயூரத்தில் ஸ்ரீமயூரநாதரும் இருந்தாலும், சிதம்பரத்தில் உள்ள தில்லையம்பலத்தான் மீது அதீத பற்று வைத்திருந்தனர் சோழ மன்னர்கள். பூம்புகாரின் இந்திர விழாவுக்கு வரும் வேளையில், ஒவ்வொரு ஊரிலும் ஆடல்வல்லானின் அருமைபெருமைகள் பாட்டாகப் பாடப்பட்டன; கூத்தாக ஆடப்பட்டு, ஸ்ரீநடராஜரின் பெருமைகள் சொல்லப்பட்டன.

##~##
மன்னர் எங்கு தங்குகிறாரோ அங்கே, அன்றிரவு பாட்டும் கூத்தும் இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்ட மக்கள், நடையை வேகவேகமாகப் போட்டபடி, மன்னர் எந்த ஊரில் தங்குகிறார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அங்கே வந்துவிடுவார்கள்.

'மன்னர், எந்த ஊரில் தங்குகிறாரோ இல்லையோ அந்த ஊரில் மட்டும் தங்காமல், தங்கி வழிபடாமல் போகமாட்டார்’ என்று  ஊர்மக்களும் தஞ்சை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்களும் சரியாக யூகித்து, அந்த ஊருக்கு முன் கூட்டியே சென்று, தங்கினார்கள். அந்த ஊர்.... ஆனந்தக்குடி எனும் அழகிய கிராமம்!

12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அழகான கோயில். அந்தக் கோயிலை அமைத்து, அங்கே ஊரையும் நிர்மாணித்தது எந்த மன்னனோ, தெரியவில்லை. ஆனால், பூம்புகாரின் இந்திர விழாவுக்கும் ஆனந்தக்குடி கிராமத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக மன்னன் நம்பினான். எனவே அந்தப் பகுதியில் அரண்மனையையும் சத்திரத்தையும் கட்டினான். மிக அழகானக் கோயிலை எழுப்பினான். கோயிலுக்கு எதிரில் அழகான திருக்குளத்தை வெட்டினான். அந்தக் குளத்துக்கு பால் குளம் என்று பெயர். சிவனருளால், குளத்து நீரானது பாலைப் போலவே பளீர் வெள்ளை நிறத்தில் இருந்தது. பாலின் சுவை போலவே தித்திப்புடன் இருந்தது.

ஆலயம் தேடுவோம்!

எத்தனை துயரங்கள் இருந்தாலும் இந்த இடத்துக்கு வந்தால் அத்தனையும் வடிந்து காணாமல் போவதாக உணர்ந்தான் மன்னன். எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் அத்தனை துன்பங்களையும் தடைகளையும் தகர்க்கிற துணிச்சலும் நிதானமும் இங்கு வந்து தங்கினால், கிடைத்துவிடுவதாகச் சொல்லிப் பூரித்தான். எத்தனை சூழ்ச்சிகள் வந்து, ராஜ்ஜியத்தையே அசைத்துப் பார்க்கிற பயங்கரம் சூழ்ந்திருந்தாலும், இந்த இடத்தில் தங்கி, ஸ்ரீநடராஜரின் சரிதத்தைக் கேட்டு அவரின் நடனங்களை கலைஞர்கள் ஆடுவதைப் பார்க்கப் பார்க்க... சூழ்ச்சிகளையெல்லாம் தவிடுபொடியாக்கி விடுகிற சாமர்த்தியமும் சாதுர்யமும் வந்துவிடுவதாக உணர்ந்து பூரித்தான்.

அதனால், மனதுள் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருகிற அந்த ஊருக்கு ஆனந்தக்குடி எனப்பெயரிட்டான். அம்பாளுக்கு ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் என்றும், ஸ்வாமிக்கு ஸ்ரீஆனந்த நடனபுரீஸ்வரர் என்றும் திருநாமம் சூட்டினான். பெயருக்கேற்றாற் போல், அந்த ஊர்மக்கள் செழிப்புடனும் சிறப்புடனும் வாழ்ந்தனர்.

வேளாளர்கள் பெருங்கூட்டமாக வாழும் பகுதியை 'தாயக்குடி’ என்பார்கள். இந்த ஊரிலும் பெருங்கூட்டத்தினராக அவர்கள் வாழ்ந்ததால், இந்த ஊருக்கு 'ஆனந்தாயக்குடி’ எனப் பெயர் அமைந்ததாகவும் பிறகு அதுவே மருவி, 'ஆனந்தக் குடி’ என்றானதாகவும் சொல்வர்.

திருக்குளம். எதிரில் அழகிய ஆலயம். அந்தக் கோயிலைச் சுற்றி பிரமாண்ட மதில். இதையடுத்து, தேரோட்டம் நடைபெறும் அளவிலான அகலமான தெருக்கள் என அமைந்திருந்ததாம், ஸ்ரீஆனந்த நடனபுரீஸ்வரர் திருக்கோயில்.

ஆலயம் தேடுவோம்!

இதையடுத்த காலகட்டங்களில், இங்கே வீர சைவ மடம் ஒன்று அமைந்ததாகவும் ஏராளமான வீரசைவர்கள், இங்கு தங்கி சிவ வழிபாட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கின்றன கல்வெட்டுகள்.

சோழர்களால் கட்டப்பட்டு பல்லவ மன்னர்களால் ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்ட மிக அற்புதமான ஆலயம். காலப்போக்கில் மிகவும் சுருங்கி, மதில் இடிந்து சந்நிதி சந்நிதிகளாக தனித்துக் காட்சி அளிக்கிற அவல நிலைக்கு வந்தது.

தற்போது, சிவலிங்க மூர்த்தம் மற்றும் அம்பாள் ஆகியோரைத் தவிர, வேறு எவருக்கும் சந்நிதிகளும் இல்லை; மூர்த்தங்களும் திருடப்பட்டு, பிறகு சென்னையில் கைப்பற்றப்பட்டு, பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறதாம்!

இந்திர விழாவைக் கொண்டாடுகிற வேளையில், சீரும் சிறப்புமாக வழிபாடுகள் நடத்தப்பட்ட ஸ்ரீஆனந்த நடனபுரீஸ்வரர் ஆலயம், இன்றைக்கு தன் ஆனந்தம், மகிழ்ச்சி என சகலத்தையும் இழந்துவிட்டு நிற்கிறது. பல வருடங்களாக ஸ்ரீஆனந்தவல்லி அம்பாளையும் ஸ்ரீஆனந்த நடனபுரீஸ்வரரையும் தரிசிப்பதற்குக் கூட எவரும் வரவில்லை. கடந்த சில வருடங்களாக, பிரதோஷம், கார்த்திகை முதலான விழாக்களும் பூஜைகளும் மெள்ள மெள்ள நடைபெற்று வருகின்றன.

ஒரு காலத்தில் இந்திர விழாவுக்கு இணையாக, ஒட்டுமொத்த சோழ மக்களும் கூடி நின்ற தலம் இது! தேசத்தின் தலைவனான மன்னனின் மனதுள் இருந்த அத்தனைத் துக்கங்களையும் தூர எறிந்து, அவருக்கு நிம்மதியையும் ஆனந்தத்தையும் அள்ளி வழங்கிய இந்த பூமிக்கும் இங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீஆனந்த நடனபுரீஸ்வரருக்கும் சிறு ஆனந்தமும் இன்றி, களையிழந்து இருக்கலாமா? ஊரே திரண்டு ஒன்று கூடி, ஆட்டமும் பாட்டமுமாக நடந்த இந்தத் திருவிடத்தில் பழையபடி, விழாக்களும் விசேஷங்களும் அமர்க்களப்பட வேண்டாமா?

ஸ்ரீஆனந்தவல்லி அம்பாளுக்கு வஸ்திரம் வாங்கி, ஆளுக்கொரு பத்து செங்கல் வாங்கித் தந்தால், இந்த ஆலயம் சீரமைந்துவிடுமே! ஸ்ரீஆனந்த நடனபுரீஸ்வரருக்கு, நைவேத்தியம் செய்து, ஒரு சந்நிதி அமைப்பதற்கு சிமென்டோ கருங்கல்லோ வழங்கினால், சிவனாரின் இந்த ஆலயம் சீக்கிரமே பொலிவுக்கு வந்துவிடுமே!

ஆனந்தக்குடியில் உள்ள ஆலயத்தில், ஆனந்தம் தவழச் செய்வது சிவனடியார்களின் பொறுப்பு. அடியவர்கள் அனைவருக்கும் ஆனந்தத்தை வழங்கி, அவர்களின் குடும்பத்துள் ஆனந்தத்தை நிலைக்கச் செய்வது அந்த ஸ்ரீஆனந்த நடனபுரீஸ்வரரின் பொறுப்பு!

ஆனந்தக்குடி ஆலயத்துக்கு அள்ளிக் கொடுங்கள்; இயலாதவர்கள் கொஞ்சம் கிள்ளியாவது தாருங்கள்! உங்கள் வீட்டில் உங்களுடனே ஆனந்தம் குடியேறும் என்பது உறுதி!

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism