Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Published:Updated:
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரது பெயர் மாறர். வேதங்களை நன்கு பயிலும் மறையவர் குலத்தைச் சேர்ந்த அவரது முன்னோர் சோம யாகம் செய்பவர்கள். ஆதலால் அவரை 'சோமயாஜி’ என்றும் அழைப்பர். அதுவே சோமாசி என மருவி, அவரது பெயரும் சோமாசி மாறர் என்றாயிற்று. இவர் வாழ்ந்த தலம் அம்பர் என்பதாகும்.

பயன், புகழ் போன்றவற்றைக் கருதாமல் உலக நன்மை ஒன்றையேக் கருதி, சிவ மந்திரங்களைக் கூறி சிவாக்கினி வளர்த்துச் செம்மையுடன் செய்யும் வேள்வியினால் மழைப் பொழியும்; பயிரும் உயிரும் தழைக்கும் என்பார்கள். அந்த நீதி நெறி தவறாது, புகழும் பயனும் கருதாது, சிவபெருமானுக்குரிய வேள்விகளை விதிமுறைப்படி நியதியாகப் புரிந்துவந்தார் சோமாசி மாறர்.

ஒருமுறை, தாம் செய்யும் யாகத்துக்கு சிவபெருமான் நேரில் எழுந்தருளி, அதில் அளிக்கப் பெறும் அவிர் பாகத்தைத் தமது திருக்கரத்தாலேயே பெற்றுக்கொண்டு தமக்கு அருள் புரியவேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று சோமாசி மாறருக்கு. இதனை எப்படிச் செய்யலாம் என்று யோசித்து வந்தார்.

அப்போது, சிவபெருமானின் நெருங்கிய தோழரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் வாழ்ந்து வந்தார். அவர் அவ்வப்போது பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடிப்பரவி பொன்னும் பொருளும் பெற்று வருவதை சோமாசியார் அறிந்தார். தகுந்தநேரம் வரும்போது தமது விருப்பத்தை சுந்தரரிடம் சொல்லலாம் என்று காத்திருந்தார்.

சுந்தரர் சிவயோக வித்தையைப் பயின்று வந்ததால், அதனால் உண்டாகும் பித்தமும் மயக்கமும் தீர தூதுவளைக் கீரையும், பாகற்காய் பொறியலும் உண்பது வழக்கம். இதையறிந்த சோமாசிமாறர் தூதுவளைக் கீரையையும் பாகற்காயையும் எடுத்துக்கொண்டு சுந்தரரின் மனைவி பரவையாரைப் பார்க்க அடிக்கடி வந்துவிடுவார். பரவையாரிடம் அவற்றைத் தந்து, சுந்தரர் உண்பதற்கு வழிவகை செய்தார்.

ஒருநாள், தனக்காக கீரையும் பாகற்காயும் கொண்டு தரும் புண்ணியவான் யார் என்று பரவையாரிடம் விசாரித்தார் சுந்தரர். சோமாசிமாறர்தான் இதனை அளித்து வருகிறார் என பரவையார் சொல்ல.... சோமாசிமாறருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய எண்ணினார் சுந்தரர்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இதனை எதிர்பார்த்திருந்த சோமாசிமாறர், தாம் செய்யும் சோம யாகத்தில் சிவபெருமானே நேரில் வந்து அவிர் பாகம் பெற்று அருள்புரிய வேண்டும் என்ற தமது வேட்கையைக் கூறினார்.

''பெருமானை தங்கள் யாகத்திற்கு வரச் செய்ய ஏற்பாடு செய்கிறேன்; ஆனால், அவர் எந்த வடிவில் எப்படி வருவார் என்பது எமக்குத் தெரியாது. அவரது திருவிளையாடலை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. சோதிக்கவும் செய்வார்; தவறினால் பழியும் பாவமும் வந்து சேரும். அதற்கெல்லாம் தயார் என்றால் கூறுங்கள். பெருமானிடம் உமக்காக வேண்டுகிறேன்'' என்றார் சுந்தரர்.

''சுவாமி! தியாகராஜப் பெருமான் எந்த வடிவில் எப்போது வந்தாலும் நான் அவரை வரவேற்று, அவருக்கு அவிர்பாகம் அளிப்பேன். இது உறுதி!'' என்றார் சோமாசியார்.

அவரது பக்தியையும் முயற்சியையும் கண்ட சுந்தரர் மிகவும் மகிழ்ந்து, தியாகராஜப் பெருமானிடம் சோமாசிமாறர் நடத்தும் யாகத்துக்குச் சென்று, அவரது கையால் அவிர்பாகம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று வேண்டி பிரார்த்தனை செய்தார். பெருமானும் இசைந்தார்.

இறைவன் உத்தரவுதான் வந்தாகிவிட்டதே! உடனே, யாகத்தைத் தொடங்கி நடத்தினார் சோமாசிமாறர். அவிர்பாகம் தரவேண்டிய நேரம் வந்தது. சிவபெருமான் (சுந்தரர் சொல்லியது போல்) அவரது இயல்பான கோலத்துடன் செல்லாமல், நீச வடிவம் தாங்கி, அரைக்கால் சட்டை போல உடையணிந்து, தோளில் இறந்துபோன கன்றுக்குட்டியின் உடலைப் போட்டுக் கொண்டு, மற்றொரு கையில் தோலால் செய்த கள் குடுவையைத் தொங்கவிட்டுக் கொண்டு, கழுத்தில் தொங்கிய பறையைக் கொட்டியவாறே நடந்து வந்தார். அவரைத் தொடர்ந்து நான்கு வேதங்களும் நாய்கள் உருவில் வந்தன. பார்வதிதேவி, கள் பானையை ஏந்திய நீசப் பெண்ணாக வடிவமேற்று, உடன் வந்தாள். கணபதியும் முருகனும் சிறுவர்களாக உருக் கொண்டு ஆடிப் பாடியவாறே வந்தனர்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இவர்களது ஒளி பொருந்திய முகங்கள் தெய்வீகக் களையைப் பொழிந்தன. ஆனால், அதற்கு நேர்மாறான நடை உடை பாவனையுடன் அவர்கள் வந்தது அனைவரையும் வியப்படையச் செய்தது.

இவர்களது வருகையைப் பார்த்து, யாக சாலையில் இருந்த அனைவரும் ஓடத் தொடங்கினர். அந்த நேரத்தில், சோமாசிமாறருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வந்திருப்பவர் சிவபெருமானே என்று குறிப்பால் உணர்த்தி, அவர்களது அச்சத்தைப் போக்கியருளினார் விநாயகப் பெருமான். அந்த விநாயகருக்கு 'அச்சம் தவிர்த்த விநாயகர்’ என்று பெயர் ஏற்பட்டது.

சோமாசிமாறர் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் அவிர் பாகத்தை நீச வடிவில் வந்த இறைவனுக்கு அளித்தார். பெருமானும் அதைப் பெற்றுக்கொண்டு அருள்பாலித்தார். பிறகு ரிஷபாரூடராகக் காட்சியளித்தார்.

இந்த அதிசயம் நடைபெற்ற இடம் அம்பர் மாகாளம் என்ற தலமாகும். இந்த ஊருக்கு கோயில்மகாளம், அகரத்திரு மாகாளம் என்ற பெயர்களும் உண்டு.

மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில், பூந்தோட்டத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் அம்பர் மாகாளம் அமைந்துள்ளது. அருகில் உள்ள தலம்... அம்பர். இந்த இரண்டு தலங்களுக்கும் இடையே உள்ள சாலையில் 'அச்சம் தவிர்த்த விநாயகர்’ கோயில் அமைந்துள்ளது. வடமொழியில் இவரை 'பயக்ஷய விநாயகர்’ என்று அழைப்பர். இவருக்கு 1008 மோதகத்தால் (கொழுக்கட்டையால்) சஹஸ்ரநாம அர்ச்சனை செய்வது உண்டாம். ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று இந்த யாகத் திருவிழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் 'திருத்தொண்டர் தொகை’ யில் சோமாசிமாற நாயனார் போற்றப் பெறுகிறார். ஆனால், மேற்கூறிய யாக வரலாறு பெரியபுராணத்தில் காணப் படவில்லை என்றாலும், ஆண்டுதோறும் இந்த ஐதீக விழா இங்கே நடைபெற்று வருகிறது.

- பிள்ளையார் வருவார்...
படங்கள் : இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism