ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
யோத்தி- தரும சொரூபனாம் ஸ்ரீராமன் பிறந்த இந்த திருநகரம் அறப்பெருங்கோயில் எனில், ஜனகன் அரசாண்ட மிதிலை நகரமோ தருமமாகிய ஸ்ரீராமனும் மாதர்குலத் திலகமான ஸ்ரீசீதாப் பிராட்டியும் ஒன்றிணைந்து காதல் பொழிய ஏற்றதொரு சிங்காரப் பூஞ்சோலையாக சித்திரிக்கப்படுகிறது ஞானநூல்களில்!

விஸ்வாமித்திரரின் தவ வேள்வியை முடித்து வைத்து, மண வேள்வி காண வரும் ஸ்ரீராமனை, இந்த மிதிலை மாநகரம் எப்படி வரவேற்கிறது பாருங்கள்...

'கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல’ ஆனந்தமாக நடனம் புரியும் மாதர்கள் நிறைந்த மிதிலை மாநகரத்தின் மணிக் கொடிகள்... நடைபெறப் போகும் தெய்வத் திருக்கல்யாணத்தை-  காதல் மணத்தை எண்ணி வியந்து செயல் மறந்து ஆடுவது போல காற்றில் அசைந்தாடுவதைக் காணுங்கள். ஸ்ரீராமனை வருக வருக என வரவேற்பது போல் அல்லவா தோணுகிறது!

மணிக்கொடிகள் மட்டுமா? பன்னீர் மழைப் பொழிந்து மேகங்களும், அதன் தூறலால் மலர்ந்து சிரிக்கும் சோலைப் பூக்களும், கணீர் கணீரென நாதமெழுப்பும் கோயில் மணிகளும், அதன் கோபுரத்தில் இருந்து விண்ணில் தாவி, படபடவென சிறகடித்து காற்றில் இசையெழுப்பும் மாடப்புறாக்களும் சேர்ந்தே அல்லவா நம் நாயகனை வரவேற்கின்றன.

இவ்வாறு ஒட்டுமொத்த இயற்கையும் தன்னை ரசிக்க, தான் இயற்கையை ரசித்தபடி விஸ்வாமித்திரரைப் பின்தொடர்ந்த ஸ்ரீராமன், இளவல் லட்சுமணனுடன் மிதிலை அரண்மனை வாயிலை நெருங்கினான். மதில் சூழ்ந்த அகன்ற அகழியையும் கோட்டை வாயிலையும் கடந்து உட்புகுந்தால், பூத்துக்குலுங்கும் நந்தவனம்; அதன் அழகை அமர்ந்து ரசிக்கும் விதம் அரண்மனையின் கன்னிமாடம்.

அங்கே... அதென்ன? பால் நிலவையே பறித்து வந்து மாளிகையின் விளக்காய் பொருத்திவிட்டார்களோ? இல்லையில்லை... நிலவொளியையும் பழிக்கும் பேரொளி முகத்தில் விளங்க, கன்னிப் பெண் ஒருத்தி அல்லவா நிற்கிறாள்! அது யாராக இருக்கும்?

வேறு யார்... சாட்சாத் சீதா பிராட்டிதான். கன்னிமாடத்தில் நின்று, நந்தவனக் குளத்தில் பெண் அன்னத்துடன் ஆண் அன்னம் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் ஒளி முகத்தை நம் அண்ணல் நோக்கிட, அவளும் நோக்கினாள்.

கண்ணோடு கண்ணினை கவ்வி ஒன்றையன்(று)
உண்ணவும் நிலைபெறா(து) உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்...

அங்கே பார்வை பரிமாற்றம் மட்டுமா நிகழ்ந்தது? பார்வை வழியே தங்களின் உயிரையும் உணர்வையும் சேர்த்தே பரிமாறிக்கொண்டார்கள் அவ்விருவரும்!

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். 'ஸ்ரீராமன் வந்தான்; வில்லை முறித்தான்; சீதையைக் கண்டு திருமணம் செய்துகொண்டான்’ என்பது வால்மீகியின் விளக்கம். 'ஸ்ரீராமன் வந்தான்; சீதையைக் கண்டு காதல் கொண்டான்; வில்லை முறித்து வெற்றி பெற்றான்’ என்பது கம்பரின் வாக்கு.

அன்றைய மாலைப் பொழுது மிகக் கடினமாகக் கழிந்தது ஜானகிக்கு. பகலில்... ஸ்ரீராமனின் கண் சந்தித்ததும் சிரித்ததும் கணப்பொழுதுதான் என்றாலும், அவன் கண்மறையச் சென்ற பின்

நெருப்பில் இட்ட தங்கப்பதுமையாக அல்லவா உள்ளம் உருகினாள். அப்போதைய அவளின் நிலையை...

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணிவரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே

- எனப் பாடுகிறார் கம்பத்தாழ்வார். அதாவது 'ஸ்ரீராமனின் கேசம், பூரண சந்திரன் போன்ற திருமுகம், தாழ்ந்த கைகள், அழகிய மலை போன்ற தோள்கள் ஆகிய ஒவ்வொன்றும் என் உயிரை உண்ணத் தக்கவைதான். ஆனாலும் அவனின் அந்த இளஞ்சிரிப்பு, என் உயிரைக் கவர்ந்து உண்பதில் இவை எல்லாவற்றையும்விட முந்திவிட்டது’ என ஜானகியின் வாய்மொழியாகவே அவள் நிலையை நமக்குச் சொல்கிறார்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

எனில், இப்போது அவள் நிலைமையைக் கேட்கவா வேண்டும்?!

அந்த மாலைப்பொழுதில் கீழ்வானத்து நீலநிறமும் ஸ்ரீராமனையே நினைவுறுத்தியது அவளுக்கு. தன்னைப் போன்றே எல்லோரும் ஸ்ரீராமனின் நீலநிற மேனியை மோகித்து அதையே நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அந்த நினைப்பின் சக்தியால் அந்த நிறம் எங்கும் வியாபித்திருப்பதாகவும் நம்பினாள்; 'அவர்தம் நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ?’ என மருகினாள். அதுமட்டுமா? சந்திரன் தங்கமயமான ஓர் அமுதக்கலசம் போன்று சமுத்திர பரப்பில் உதயமானது. வழக்க மாக அவள் ரசிக்கும் காட்சிதான் அது என்றாலும், இன்று ரசிக்கத்

தோன்றவில்லை. இருளை உண்டு எழுகின்ற சந்திரன் ஆறுதலையோ ஆனந்தத்தையோ ஒருசிறிதும் தரவில்லை. அவளை இருளும் வாட்டுகிறது; சந்திரனும் வாட்டுகிறான்!

இங்கு இவள் இப்படியென்றால், அங்கே ஸ்ரீராமன்?!

அரண்மனை மண்டபத்தில் வில்லின் வரலாற்றையும், உழுகின்ற கொழுவின் முனையிலிருந்து சூரியன் போல் ஒளிவீசும் திருமுகத்தோடு நிலத்தில் தோன்றிய சீதையின் கதையையும் கேட்டவுடன், விஸ்வாமித்திர முனிவர் ஸ்ரீராமனைப் பார்க்கிறார். ஸ்ரீராமனோ நெய் பொழிந்த நெருப்பைப்போல பொங்கியெழுந்து, சிவதனுசை நோக்கிச் செல்கின்றான்.

கூடியிருந்த சபையினர் அவன் நாணேற்றியதைக் காணவில்லை; அவன் வில்லை எடுத்ததைக் கண்டார்கள்; உடனே அது முறிந்த சத்ததைக் கேட்டார்கள்!

இந்தச் செய்தியை ஓடிவந்து சீதையிடம் ஒப்பித்தாள், அவளின் தோழி நீலமாலை. அகமகிழ்ந்தாள் சீதாதேவி!

தசாவதாரம் திருத்தலங்கள்!

ரவு விடிய சூரியன் தோன்றுகிறான். தேவர்களும், ரிஷிகளும், மன்னாதி மன்னர்களும் குழுமியிருக்கும் திருக்கல்யாண மண்டபம் நோக்கி மிதிலை மக்களும் நகர்ந்தார்கள்.

வீதியெங்கும் தண்ணீர் தெளித்து, மாக்கோலமிட்டு, வீட்டுத் திண்ணைகள் தோறும் காவி பூசி, மஞ்சள் திலகமிட்டு, வாழை- கமுகு- பாக்கு மரங்களுடன் மாவிலைத் தோரணம் கொண்டு சீதா- ஸ்ரீராமன் திருக்கல்யாணத்துக்காக மிதிலா நகரமே தன்னை அலங்கரித்துக் கொண்டது.

சீதாவும் அலங்கரிக்கப்பட்டாள். என்ன பேதமை? தேவாமிர்தத்துக்கு அதிக சுவை சேர்க்கவேண்டும் என்று வெல்லம் சேர்ப்பார்களா? சீதையை அலங்கரிப்பதும் அப்படித்தானே? அழகுக்கு அழகு சேர்க்க வேண்டுமா என்ன?! எனினும் அலங்கரித்து அழைத்து வந்தார்கள்.

அங்கே மாப்பிள்ளை ஸ்ரீராமனும் அரங்கத்தில் இருக்கும் ரிஷிகளையும், குருதேவர் வசிஷ்டரையும், தந்தை தசரதரையும், மற்றுமுள பெரியோர்களையும் வணங்கித் தொழுது அங்கிருந்த ஆசனத்தில் கிழக்குமுகமாக அமர்ந்திருக்கிறான்.

'அலைகடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள

மலையிடை உதிக்கின்றாள் போல மண்டபம் அதனில் வந்தாள் சீதாதேவி.

வசிஷ்டர் திருமணச் சடங்குக்கு ஆயத்தம் செய்தார். சீதையும் ஸ்ரீராமனும் நெருங்கி நிற்க... சீதையின் தந்தை ஜனகன் மாப்பிள்ளையாம் ஸ்ரீராமனுக்கு எதிரே சென்று, ''நீரும் என் மகளும் திருமாலும் திருமகளும்போல வாழ்வீர்களாக'' என்று தாரை வார்த்துக் கொடுக்க, மங்கல வாத்தியங்கள் முழங்கின. பெரியோர்கள் வாழ்த்துரைக்க, பெண்கள் பல்லாண்டு பாட, தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர். மன்னர்களோ பொன்மாரிப் பொழிந்தார்கள்!

இந்த நிலையில் ஸ்ரீராமன், தையல் தளிர்க்கை தடக்கைப் பிடித்தான்; மங்கலத் தீயை வலம் வந்தான். உயிரைத் தொடரும் உடம்பு போல சீதையும் அவனைத் தொடர்ந்தாள். வலம் முடிந்த பின் அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் கிரியைகளும் நிறைவடைய, புதுமணத் தம்பதிகள் அரணமனைக்குள் சென்றனர்.

அன்னையர் மூவரையும் தரிசித்து வணங்கினான் ஸ்ரீராமன். அவனுக்கு ஆசியளித்ததுடன், சீதையை அணைத்து உச்சிமுகர்ந்த  மூவரும் களிப்புடன் வாழ்த்தினர்:

'நன் மகனுக்கு இவள் நல்லணி!’

ஆஹா... மங்கலம் ததும்பும் ஸ்ரீராமனின் இந்தக் கல்யாணத் திருக்கோலத்தை நாமும் நேரில் தரிசிக்க வேண்டாமா?

- அவதாரம் தொடரும்...