ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

மண வாழ்க்கைக்கு மனப் பொருத்தம் போதுமா?

கேள்வி-பதில்

எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைக்கு முன்பு வரை, கிராமத்தில் இருக்கும் ஓர் அம்மனை வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு, எங்கள் முன்னோர் பெருமாள் கோயில் ஒன்றைக் கட்டிவைத்தனர். மூன்று தலைமுறையாக பெருமாளையே வழிபட்டு வருகிறோம். அவரையே குலதெய்வமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளலாமா?

- எஸ் திருமலை, மதுரை-7

கேள்வி-பதில்

மூன்று தலைமுறைக்குப் பிறகு குலதெய்வத்தை மாற்றும் எண்ணம் தங்களுக்கு வந்துவிட்டது. அடுத்த தலைமுறையினர் வேறொரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்பார்கள். அதற்குத் தாங்களே சான்று அளித்துவிட்டீர்கள். மனம் போனபடி நமது விருப்பத்துக்கு ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்பது, குலதெய்வத்தின் தரத்தைக் கொச்சைப் படுத்துகிறது. முன்னோர் ஏற்று வழிபட்ட குலதெய்வத்தை நமது விருப்பப்படி அகற்றி விட்டு, மற்றொரு தெய்வத்தை ஏற்பது குலதெய்வ ஆராதனையில் பிடிப்பில்லாத மனப்போக்கையே காட்டும்.

எந்தவொரு இறையுருவத்துக்கும் ஏற்றத்தாழ்வு இருக்க முடியாது. மனம்தான் குலதெய்வத்தின் தரத்தை உயர்த்துகிறது. காவல் தெய்வத்தைக் குலதெய்வமாகக் கொண்டாடிய கிராமத்து மக்களின் மனம், அதைவிடச் சிறப்புப் பெற்றதாக வேறோர் இறையுருவத்தை எண்ணாது. மனமானது இறையுருவின் சாந்நித்தியத்தை உணரும். குலதெய்வ சாந்நித்தியம் ஓர் இறையுருவில் இருப்பதாக எண்ணும் மனம், தன்னை மாற்றிக்கொண்டு மற்றொரு உருவத்தைத் தேர்ந்தெடுக்கும் எனில், குலதெய்வ ஆராதனையின் அடிப்படை தகர்ந்துவிட்டது என்றே பொருள். மனமானது பல இறையுருவங்களில் தாவித்தாவி குல தெய்வத்தை மாற்றிக்கொண்டே போவது என்பது குலதெய்வ வழிபாடு ஆகாது; பல தெய்வ வழிபாடாக மாறிவிடும்.

மனம் ஒருநிலைப்பட்டு ஆராதனையில் ஈடுபடாத வரையிலும் குலதெய்வத்தை நிர்ணயம் செய்வது கடினம். விருப்பப்படி செயல்படுவது சிறப்பல்ல. தங்களது சிந்தனைக்கு ஒரு வார்த்தை - மனம் அலைபாயாமல் ஏதாவதொரு இறையுருவத்தைக் குலதெய்வமாக ஏற்று ஈடுபாட்டுடன் பணிவிடையில் இறங்கினால், தங்களின் வாழ்க்கை செம்மையாக மாறிவிடும். குலதெய்வத்தில் பரம்பொருள் ஊடுருவியிருக்கிறார். பரம்பொருளையே குலதெய்வ வடிவில் வழிபடுகிறீர்கள். அது ஒன்றே வீடுபேறு வரை எட்டவைத்துவிடும்.

என் மகள் ஒருவனை விரும்புகிறாள். ஜாதகம் பொருந்தாது என்கிறார் ஜோதிடர். அவள் விருப்பத்துக்கு மாறாகச் செயல்பட மனம் இடம் தரவில்லை. பொருந்தாத ஜாதகம் வாழ்க்கையைப் பாதிக்குமோ என்று பயமாகவும் இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை; வழி சொல்லுங்கள்?

- கீர்த்தனா, கோவில்பட்டி

கேள்வி-பதில்

சிந்தனையுடன் எடுத்த முடிவல்ல; ஆசையில் எடுத்த முடிவு அது. தற்கால சமுதாயச் சூழல் அவளுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது. மரபு, சம்பிரதாயம், பண்பாடு ஆகிய அத்தனையும் அவளது விருப்பத்துக்குத் தலைகுனிந்துவிடும்.

தாய்- தந்தை கவனத்துடன் கையாள வேண்டிய முடிவை முறியடித்து, தனது விருப்பத்துக்கு ஏற்ப முடிவெடுத்துவிட்டாள். பண்பிலும் மரபிலும் பற்று இல்லை. திருமணம் வாழ்க்கையின் அடித்தளம் என்று எண்ணவில்லை. அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டுமே எண்ணுகிறது மனம். உபதேசம் காதில் ஏறாது. முடிவைத் தடுக்கவும் இயலாது. உங்களுக்கும் மகளிடம் இருக்கும் பாசம், அவளிடம் கண்டிப்பாக நடந்துகொள்ள விரும்பாது. புதுச் சிந்தனையில் வளர்ந்த பெண், பழைமைக்கு மதிப்பளிக்க மாட்டாள். ஆகையால், அவளது விருப்பத்துக்கு விட்டுவிடுங்கள். இருவரையும் அழைத்து சாதக- பாதகங்களை விளக்கி எச்சரிக்கையுடன் செயல்பட பரிந்துரைக்கலாம்.

'நீங்கள் ஒருவருக்கொருவர் இணைய விரும்புகிறீர்கள்; நல்லது. ஆனால், உங்களின் ஜாதகம் தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது. இருவரின் ஆசையில் எழுந்த வருங்கால வரைபடம் நம்பிக்கைக்கு உகந்ததல்ல. எந்தவொரு கசப்பான அனுபவத்தையும் பொறுத்துக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலிலும் பிரிந்து வாழும் எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும். கிடைத்ததை வைத்து மகிழும் எண்ணத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று அவர்கள் எதிர்நோக்க இருக்கும் இடையூறான தருணங்களை ஏற்கும் மனோதிடத்தை உறுதிப்படுத்தி விடுங்கள். அது, அவர்களின் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கிவிடும்.

உயிர் பிரிந்த பூத உடலுக்கு இறுதிச்சடங்கு தேவையா?

- கே.சாம்பசிவம், ஆடுதுறை

நிச்சயம் தேவை. தகப்பன் உடலிலிருந்து தனயன் தோன்றுகிறான். தகப்பன் குடியிருந்த வீட்டை மற்றவர்கள் தீண்டாதவாறு அக்னி தேவனிடம் இணைப்பது சிறப்பு. புதைத்தால்கூட பூமியில் இருக்கும் பல உயிரினங்களின் வயிற்றில் இருக்கும் அக்னியில் ஜீரணமாக நேரிடும். புதைக்காமலும் எரிக்காமலும் இருந்தால், பல பிராணிகளின் ஜாடராக்னிக்கு இரையாகிவிடும்.

உடலுடன் இணைந்த ஜீவாத்மா மற்றுமொரு ஜீவனைத் தோற்றுவிக்க உடல் எடுத்தது. அந்த உடலை கௌரவிப்பது தனயனின் கடமை (அங்காதங்காத் ஸம்பவஸி..). உலகத் துக்கு அவனை அறிமுகம் செய்தவன் தகப்பன். உலகத்தில் அங்கீகாரம் பெற்று வாழ, தகப்பனின் பெயர் அவர் இறந்த பிறகும் பயன்படுகிறது. தோன்றிய இடத்தின் தூய்மையை நிறைவு செய்ய இறுதிச்சடங்கு தேவை.

கேள்வி-பதில்

நம்மை ஈன்றெடுத்து வளர்த்து, பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப நமது தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யும் திறனையும் அளித்த அந்த ஜீவாத்மா குடியிருந்த இடத்தை கௌரவமான முறையில் அடக்கம் செய்வது பண்பான நடைமுறை.

நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு ஆசி பெறுவதற்கு, அதற்காக வழிபடுவதற்கு, ஆராதனை நிகழ்த்துவதற்கு... மறைந்தவரை பித்ருக்களாக உருவெடுக்கச் செய்து, நமது வம்ச பரம்பரையை பெருமை அடையச் செய்ய வேண்டும். தினம் தினம் வணங்க வேண்டியவர்களின் பட்டியலில் அவர்களைச் சேர்க்க வேண்டும். மனிதனாகப் பிறந்தவனின் கடமை அது.

பித்ருக்களை (தென்புலத்தார்) முதலில் படைத்து, பிறகு தேவர்களை யும் மனிதர்களையும் உருவாக்கினான் இறைவன் என்கிறது ஸனாதனம். அவர்களுக்கு 'திவ்ய பித்ருக்கள்’ என்று பெயர். இறந்த நம் முன்னோரை அவர்களுடன் இணைத்து பித்ருக்களாக்கி வழிபடுகிறோம். அவர்களுடன் நேரடி யாக இணைக்கும் வல்லமை நமக்கு இல்லை; இணைக்கவும் இயலாது. நாம் இறைவனாக செயல்பட முடியாது.

வசு, ருத்ரன், ஆதித்யன் என்கிற தேவதைகள் குழாமோடு இணைத்துவிடுவோம். நாம் அளிக்கும் உணவை அந்த தேவதைகள் ஏற்று, இணைந்த நமது பித்ருக்களை மகிழ்விப்பார்கள் (வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்பித்ரு பிதாமஹப்ரபிதாமஹானாம்). அழிவைச் சந்திக்கும் இயல்பு உடையவர்களை அழியாத வரோடு இணைக்கும்போது, அவர்களும் நிலை பெற்று இருப்பார்கள்.

எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும், பன்னிரண்டு ஆதித்யர்களும், இந்திரனும், ப்ரஜாபதியும் ஆக 33 பேர் (முப்பத்துமுக்கோடி தேவர்கள்) மனித இனத்தின் செழிப்புக்கு ஆதாரமானவர்கள் என்கிறது சாஸ்திரம். பிரளயம் முடிந்து மீண்டும் படைப்பு துவங்க, மனித இனத்தின் விதைகள் காப்பாற்றப்பட வேண்டும். அது முற்றிலும் அழியாமல் பாதுகாக்க அவர்கள் வேண்டும். பிறந்தவன் மூன்று கடமைகளை நிச்சயம் ஆற்ற வேண்டும் என்கிறது ஸனாதனம் (த்ரிபி: ரிணவாஜாயதெ). ரிஷிகள், தேவர்கள், பித்ருக்கள்... அதாவது, கல்வி அளித்து கண் திறந்த ரிஷிகள், ஆன்ம பலம் அளித்து அரவணைக்கும் தேவர்கள், வம்ச பரம்பரையைக் காத்து வாழ்வளிக்கும் பித்ருக்கள் ஆகியோருக்கான ஆராதனை மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஆதாரம்.

இறுதிச்சடங்கை நிறைவேற்றப் பரிந்துரைக்கிறது வேதம் (நிஷேகாதி ச்மசானாந்தம் கர்மா). தேங்கிப்போன குப்பைகளை தீயிலிட்டு எரிப்பது போன்றதல்ல இறுதிச்சடங்கு. பூத உடலை எரிக்காமல் விட்டுவிட்டால், அழுகிப்போய் சுற்றுச் சூழலைப் பாதித்து சுகாதாரத்தைக் கெடுக்கும் என்கிற புது சிந்தனையில் எழுந்ததல்ல அது. பொதுவான சிந்தனைக்கு எட்டாத, உயர்ந்த தத்துவத்தில் நிலைபெற்றிருக்கிறது இறுதிச்சடங்கு.

மயானத்தை அறிமுகம் செய்தது வேதம் (ச்மசானம் வாஎதத்க்ரியதெ யன்ம்ருதானாம்). 'பூதவுடலின் எல்லை- எரிந்து பஸ்மமாக மாறுவது’ என்கிறது உபநிடதம் (பஸ்மாந்தம் சரீரம்). ஆறறிவு பெற்ற இனம் அறவழியில் செயல்பட வேண்டும். இல்லையென்றால், ஆறாவது அறிவு ஆட்டின் கழுத்தில் தொங்கும் மாம்ச அங்குரம் போல வீணாகிவிடும் (அஜாகளஸ்தனம்).

வேதம் வகுத்த வழி வேண்டுமா என்று கேள்வி கேட்பது சிறுபிள்ளைத்தனம். ஊண், உறக்கம், உடலுறவு இந்த மூன்றோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது. அறத்தைப் பின்பற்றுவது ஆறாவது அறிவுக்கு அழகு. மாற்றுச் சிந்தனையில் மனம் கலங்கி வழிதடுமாறாமல் இருக்க விழித்துக் கொள்ளுங்கள்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்