Published:Updated:

ஞானப் பொக்கிஷம்! - 7

ஞானப் பொக்கிஷம்! - 7

ஞானப் பொக்கிஷம்! - 7

ஞானப் பொக்கிஷம்! - 7

Published:Updated:
ஞானப் பொக்கிஷம்! - 7
ஞானப் பொக்கிஷம்! - 7
ஞானப் பொக்கிஷம்! - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினமும் செய்தித்தாள்களைப் பிரித்தாலே 'பகீர்’ என்கிறது. சரி... தொலைக்காட்சியிலாவது ஏதாவது செய்திகளைப் பார்க்கலாம் என்றால், குடல் கலங்குகிறது. நேர்முகக் காட்சிகளாக, ரத்தமும் சதையுமாக ஒளிபரப்புகிறார்கள். சில நேரம், தொலைக்காட்சித் திரையில் ஓர் ஓரமாக 'சித்திரிக்கப்பட்ட காட்சிகள்’ என்று அறிவிப்பு வாசகம் வேறு! இதையெல்லாம் பார்க்கும்போது, பத்திரிகைகளே பரவாயில்லை என்று ஆகிவிடுகிறது.

அப்படி என்னதான் செய்திகள் சொல்கிறார்கள், என்னதான் காட்சிகள் காட்டுகிறார்கள் என்று கேட்கிறீர்களா?

'புதையல் எடுப்பதற்காக நரபலி!’ 'கட்டடம் சரியாக வரவில்லை; அதற்காக நரபலி!’ - இப்படிப் பலவிதமான செய்திகள்! ஆசையும் வெறியும் ஆட்டிப்படைக்க, அரங்கேறிய அவலங்கள் அவை.

நரபலியை நமது ஞான நூல்கள் சிலாகிக்கவில்லை; அங்கீகரிக்கவும் இல்லை. ஆனாலும், ஆ(அ)பிசார வேள்வி என்று சில மாந்திரீகத் தகவல்களைச் சொல்லும் ஒருசில நூல்கள் உண்டு. அந்த நூல்கள் இருக்கும் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கக்கூடாது.

என்ன செய்வது? எதைச் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ, அதைத்தான் முதலில் செய்து பார்க்க வேண்டும் என்ற துடிப்பு நம் அனைவரிடமும் பரவிக்கிடக்கிறதே!

கோயில்களில் மிருகங்களைப் பலியிடக்கூடாது என்று அரசாங்கமே தடுத்திருக்கிறது. பெரியபுராணத்திலும் கண்ணப்ப நாயனாருடைய பெற்றோர், மிருகங்களை உயிரோடுதான் இறைவனுடைய திருக்கோவிலில் காணிக்கையாக விட்டதாகக் கூறப்பட்டு இருக்கிறதே தவிர, பலி கொடுத்ததாக இல்லை.

இப்படி நாம் பேசிக்கொண்டு இருக்கும்போதோ, அதோ... ஒரு பெரியவர் பலி கொடுக்கப் புறப்பட்டுவிட்டார். அவரைத் தடுக்க முடியாது. ஏனென்றால், அவர் ரொம்பப் பெரியவர். அவர் பின்னாலேயே போய் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், வாருங்கள்!

பெரியவர், தெய்வத்தோடு பேசத் தொடங்குகிறார். ''சிதம்பரத்தில் ஆனந்தக் கூத்தாடும் நடராஜப் பெருமானே! கருணைக்குப் பிறப்பிடமாக இருக்கும் கடவுளே! வேதங்களால் தெளிவாக வெளியிடப்பட்ட அமிர்தமே! தெளிவான தேனே! சர்க்கரையே! திகட்டாத ஆனந்தமே! தெய்விகமான சுவைகள் எல்லாம் ஒன்றாகக் கூடி, ஒழுகும் பாகே! கள்ளனாகிய என் அறிவிடத்திலும் மெள்ள மெள்ள வெளிப்படக் கலக்க வருகின்ற, நன்மையைத் தரும் சுற்றமே!'' என்றெல்லாம் இறைவனை அழைக்கின்றார்.

ஞானப் பொக்கிஷம்! - 7

அந்த அழைப்பில் நடராஜப் பெருமானைச் சொல்லி, இறைவனை கருணையின் வடிவம் எனச் சொல்லி, தேன்- சர்க்கரை- பாகு என நமக்குத் தெரிந்த இனிப்பான பொருள்களைச் சொல்லி, நன்மையைத் தருவதுதான் சுற்றம்- அது இறைவன்தான் எனவும் சொல்லி, வகைவகையாக அழைக்கிறார். இவ்வாறெல்லாம் இறைவனை அழைத்த அந்தப் பெரியவர், இறைவனுக்கு தான் செய்த பூஜைகளையும் அடுத்ததாகச் சொல்கிறார். அதில்தான் ஆரம்பத்திலேயே நாம் பார்க்கும் தகவல் வருகிறது. அதாவது, பலி கொடுக்கும் தகவல்! அவர் என்ன பலி கொடுத்தார் என்பதை அவரே சொல்கிறார்.

''தெய்வமே! துள்ளிக் குதிக்கின்ற (என்) மனம் என்னும் ஆட்டைப் பலி கொடுத்தேன். ஆகையால், தீய செயல்கள் என்னும் துஷ்ட தேவதைகள், இனிமேல் என்னை வருத்தாது. சாந்த தேவதையான உனக்கு, அன்பையே நீராகக் கொண்டு அபிஷேகம் செய்தேன். என் உயிரையே நைவேத்தியமாகப் படைத்தேன். மூச்சுக் காற்றையே உனக்குத் தூபமாகச் செய்தேன். அறிவையே உனக்குத் தீபமாக ஒளி வீசச் செய்தேன்'' என்கிறார்.

என்ன வழிபாடு பாருங்கள்! ஆடு போலக் கண்ட கண்ட இடங்களிலும் பாய்ந்து, துள்ளிக் குதித்து ஓடி மேயும் மனத்தை இறைவனுக்குப் பலியாகக் கொடுக்க வேண்டும் (அதாவது, இறைவனிடம் நம் மனத்தை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்). அப்படிச் செய்தால், துஷ்ட தேவதைகளான தீய சிந்தனைகள் இருக்காது. அன்பையே அபிஷேக

நீராக வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்; நமது ஆவியையே (உயிரையே) நைவேத்தியமாகப் படைக்க வேண்டும் என்பது அவரது கருத்து. அப்படியென்றால் சாம்பிராணி- குங்கிலியம் மாதிரி, வாசம் கமழத் தூபம் போட வேண்டாமா? வேண்டியதில்லை. நாம் விடும் மூச்சுக்காற்றையே அந்த இறைவனுக்குத் தூபமாகப் போட்டு, அறிவு என்னும் தீபத்தை ஏற்றி வைத்து, சாந்தம் என்னும் இறைவனை வழிபட வேண்டும்.

இப்படி அறிவு என்ற தீபத்தை ஏற்றி வைத்து, அன்பாலேயே வழிபட்டோமானால்... பலி, அதுவும் நரபலி கொடுப்போமா?

இந்தத் தகவல்களைப் பாடலாகவே எழுதியவர், அத்தனை பேருக்கும் நன்றாக அறிமுகம் ஆனவர்தான்.

துள்ளு மறியா மனது பலி கொடுத்தேன் கர்ம
துஷ்ட தேவதைகள் இல்லை
துரியநிறை சாந்த தேவதையாம் உனக்கே
தொழும்பன் அன்பு அபிஷேக நீர்
உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம்
ப்ராணன் ஓங்குமதி தூப தீபம்
ஒருகாலம் அன்று இது சதாகால பூஜையாய்
ஒப்புவித்தேன் கருணைகூர்
தெள்ளிமறை வடியிட்ட அமுதப்பிழம்பே
தெளிந்த தேனே சீனியே
திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே
தெவிட்டாத ஆனந்தமே
கள்ளன் அறிவூடுமே மெள்ளமௌ வெளியாய்க்
கலக்க வரும் நல்ல உறவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
கருணாகரக் கடவுளே!

இந்தப் பாடலை எழுதியது யார்? திருச்சியில் இருந்த ஒரு சின்னக் குழந்தை அது! விட்டகுறை- தொட்டகுறை, மீதி என்ன இருந்ததோ தெரியவில்லை; அந்தக் குழந்தை அவ்வப்போது திருச்சி மலைக்கோட்டையில் ஏறி, தாயுமான ஸ்வாமியான சிவபெருமானை வழிபட்டுவிட்டு, அங்கேயே ஒரு பக்கமாகத் தவம் செய்ய உட்கார்ந்துவிடும்.

##~##
ஒருநாள்... வழக்கம்போல் குழந்தை தியானம் செய்ய உட்கார்ந்தது. அதன் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது. இரவு நீண்ட நேரமாயிற்று. அப்போதும் அந்தக் குழந்தை வீடு திரும்பவில்லை. தந்தை குழந்தையைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். தெய்வ நினைப்பில் தன்னை மறந்திருந்த பிள்ளையின் கையைப் பிடித்து, ''எவ்வளவு நேரம்தான் இப்படிக் கோயிலிலேயே இருப்பாய்? வா வீட்டுக்கு!'' என்று சொல்லி அழைத்துப் போனார். அந்தத் தந்தையின் பெயர் கேடிலியப்பப்பிள்ளை; அவர் மனைவியின் பெயர் கஜவல்லி. அவர்களின் பிள்ளை தாயுமானவர்.

தாயுமானவரின் தந்தையான கேடிலியப்பப்பிள்ளை, அப்போது அரசாண்டு வந்த விஜயரங்க சொக்கநாதன் என்ற அரசரிடம் பெருங்கணக்கராக வேலை செய்து வந்தார். அவருக்குப் பிறகு தாயுமானவ ஸ்வாமிகள் சில காலம் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார். அவருடைய ஞானத் தெளிவு, பொறுப்பு, நேர்மை ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர், விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைத் தாயுமானவருக்குப் பரிசாக வழங்கினார். அப்போது குளிர்காலம். மன்னரிடம் இருந்து சால்வையைப் பெற்ற தாயுமானவர், அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வழியில் வயதான பாட்டி ஒருத்தி குளிரில் நடுங்கியபடி எதிரில் வந்தாள். அவளைப் பார்த்ததும் தாயுமானவர், ''அம்மா! இந்தக் காஷ்மீர் சால்வை, இப்போது உங்களுக்குத்தான் அவசரத் தேவை. இந்தாருங்கள்!'' என்று சால்வையைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

தாயுமானவர் அவ்வாறு செய்ததை அறிந்த மன்னர், ''இந்தத் தாயுமானவர் நம்மை அவமானப்படுத்திவிட்டார்'' என்று நினைத்தார். அடுத்த முறை தாயுமானவரைப் பார்த்ததும், ''நான் உங்களுக்குத் தந்த விலை உயர்ந்த சால்வையை ஒரு பிச்சைக்காரக் கிழவிக்குக் கொடுத்துவிட்டீர்களே... அது ஏன்?'' எனக் கேட்டார். அதற்குத் தாயுமானவர், ''மன்னா! என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு வந்த அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு இந்தச் சால்வை அவசியம் தேவைப்பட்டது. அதனால்தான் அதை அவளுக்குத் தந்தேன்'' என்றார். துயரத்தில் துடிக்கும் ஒரு ஜீவனை அம்பிகையாகவே கருதி, அந்தத் துயரத்தைத் துடைத்த தாயுமானவரின் மனப்பக்குவத்தை எண்ணி வியந்தார் மன்னர்.

தாயுமானவரின் அனுபவங்கள் அப்படியே பாடல்களாக வெளிப்பட்டன. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே!’ என்கிற, ஆனந்த விகடனின் முத்திரை வாக்கியத்தைத் தந்தவர் இவர்தான். 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் இவர். 56 தலைப்புகளில் 1,452 பாடல்கள் பாடியுள்ளார். மக்கள் மத்தியில் பரவவேண்டிய பாடல்கள் அவை!

இவரின் வாழ்க்கை - பாடல்கள் குறித்த தகவல்களை அழகாக பதிவு செய்திருக்கிறது 'தாயுமான சுவாமிகள் வாழ்வும் வாக்கும்’ நூல்; படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்!

(இன்னும் அள்ளுவோம்...)