Published:Updated:

நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!

நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!

நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!

நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!

Published:Updated:
நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!
நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!
நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீவடக்குநாதன் கோயில்... கேரளாவின் திருச்சூர் நடுவில், மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரால் உருவாக்கப்பட்ட மிக அற்புதக் கோயில். கேரளாவின் தோற்றமும் இந்தக் கோயிலின் தோற்றமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டதாகவும் புராணத் தகவல் கூறும். இதை 'தென் கைலாயம்’ என்றும் அழைக்கிறார்கள்!

ஆலயத்தின் மூலவர் சிவபெருமான். தவிர, ஸ்ரீபார்வதி, ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீசங்கர நாராயணன், ஸ்ரீகணபதி, ஸ்ரீராமன்... என்று அநேக விக்கிரகங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோயில் வெளிப் பிராகாரத்தில் ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீரிஷபர், ஸ்ரீசிம்ஹோத்திரர் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

ஒருமுறை கார்த்தவீர்யார்ச்சுனன் என்ற அரசன், ஜமதக்னி முனிவரிடம் இருந்த காமதேனு பசுவை அபகரித்துச் செல்ல, அதனால் கோபம் கொண்ட முனிவரின் மகனான பரசுராமர் அவனுடன் போரிட்டு, அவனைக் கொன்றார். தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்க எண்ணிய கார்த்தவீர்யார்ச்சுனனின் மகன்கள், பரசுராமர் இல்லாத நேரம் பார்த்து ஜமதக்னி முனிவரைக் கொன்றனர். தந்தை இறந்ததை அறிந்த பரசுராமர் கடும் கோபம் கொண்டு க்ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழித்தார். பின்னர், ஸமந்தக பச தீர்த்தம் என்னும் குளக்கரையில் தந்தைக்குத் தர்ப்பணம் செய்துவிட்டு, மகேந்திரகிரிக்குச் சென்று தவத்தில் ஈடுபட்டார்.

அங்கே, கோபத்தை தணித்துக் கொள்ளுமாறு பல முனிவர்கள் பரசுராமரிடம் வேண்டினர். அதை ஏற்ற பரசுராமர், தன் ஆயுதமான மழுவை சமுத்திரத்தில் வீசி எறிந்தார். அது கடலில் விழுந்த இடம் வரை நிலப்பரப்பு ஆனது. அதன்படி, கோகர்ணத்தில் இருந்து தென் கேரளம் வரை அவரால் உருவாக்கப்பட்ட நிலப் பகுதியே 'பரசுராம க்ஷேத்திரம்’ எனப்படுகிற இன்றைய கேரளம்!

நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!
நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!

பிறகு, இமயமலை சென்ற பரசுராமர், அங்கே சிவனாரை நோக்கித் தவமிருந்து, தான் உருவாக்கிய கேரள பூமிக்கு வந்து கோயில் கொள்ளுமாறு வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்ற ஈசன், நந்திகேஸ்வரரையும் சிம்மோதரனையும் அங்கே அனுப்பி வைத்து, தாம் கோயில் கொள்ள தகுந்த இடத்தைத் தேர்வு செய்யப் பணித்தார். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுத்த இடமே, கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர். ஆதியில் திருசிவபுரம் என்றும், பின்னர் 'சிவ பேரூர்’ என்றும் அழைக்கப்பட்ட இப்பகுதி, ஆங்கிலேயர் வருகைக்குப் பின் 'திருச்சூர்’ என மருவி வழங்கலாயிற்று.

சிவபெருமான், பார்வதி, கணபதி, சுப்ரமணியர் மற்றும் தன் பரிவாரங்களுடன் வந்தார். திருச்சூரில் குடியேற திருவுளம் கொண்ட இறைவன், குறிப்பிட்ட இடம் வந்ததும்... புடைசூழ மறைந்துவிட, அங்கு ஜோதி சொரூபமான லிங்கம், ஆலமரத்தடியில் தோன்றியதைக் கண்டு களிப்புற்றார் பரசுராமர். அந்த இடமே இன்று ஸ்ரீமூலஸ்தானம் எனப்படுகிறது. இங்கு, சிவபெருமானையும் பார்வதிதேவியையும், கூடவே  ஸ்ரீராமரையும் பிரதிஷ்டை செய்தார் பரசுராமர்.

கொச்சியை ஆண்ட மன்னன் ஒருவன், சில காலம் கழித்து, இந்த லிங்கத்தையும் ஏனைய விக்கிரகங்களையும் அங்கிருந்து எடுத்துச் சென்று, தற்போது உள்ள இடத்துக்குக் கொண்டு வந்து மறு பிரதிஷ்டை செய்தான். ஒன்பது ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கோயிலை எழுப்பினான். நாலாபுறமும் கோபுரங்கள் உள்ளன. கிழக்கு, மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் செல்லலாம். தெற்கு மற்றும் வடக்கு கோபுர வாசல்கள் பொதுமக்களுக்கானது அல்ல.

இங்கேயுள்ள ஸ்ரீசங்கர நாராயணர் ஸ்வாமி, ஸ்ரீஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீவடக்குநாதன் ஆலய கூத்து (கதகளி) அம்பலம், புகழ்பெற்ற பெருந்தச்சன் என்ற மரவேலைக் கலைஞரால் உருவாக்கப்பட்டது.

நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!
##~##
கோயிலின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் அநேக சந்நிதிகள் இருப்பதால், ஒவ்வொரு சந்நிதியாகச் சென்று வரிசைக்கிரமமாக வழிபடுவதற்கு என்று ஒரு முறை வகுத்துள்ளார்கள். ஆலயத்தினுள் நுழைந்ததும் புதிதாக வரும் பக்தர்களின் வசதிக்காக பெரிய போர்டில் ஆங்கிலம், மலையாளம், தமிழ் மொழிகளில் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

வருடந்தோறும் ஏப்ரல் பிற்பகுதியில் துவங்கி, மே பிற்பகுதியில் முடிவுறும் பூரம் திருவிழா இங்கு பிரசித்தம். இதை வடிவமைத்தவன், அப்போது கொச்சியை ஆட்சி செய்த சாக்தன் தம்பிரான் என்ற மன்னன். இந்தத் திருவிழாவுக்கு லட்சோப லட்சம் மக்கள் வருவார்கள்.  

விழாவின்போது, பத்து கோயில்களில் இருந்து 65 யானைகள் வந்து அழகான அணிகலன்கள், ஆபரணங்கள் அணிந்து வரிசையாகக் காட்சி தரும் அழகே அழகு! பல மணி நேரங்களுக்கு வாண வேடிக்கைகள், கேரளத்துக்கே உரிய செண்டை முதலான பஞ்ச வாத்தியங்கள், பாண்டி மேள முழக்கங்கள் நம் விழிகளுக்கும் செவிகளுக்கும் சுகானுபவம் தருபவை! இங்கு மகா சிவராத்திரி விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!

அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 10.30 மணிவரை கோயில் திறந்திருக்கும். பிறகு, மாலை 4 மணிக்குத் திறந்து இரவு 8.30 மணிக்கு சாத்தப்படுகிறது. பெரியதொரு லிங்க வடிவில் இருக்கும் சிவனாருக்கு, மலை போல நெய்யை லிங்கத்தின் மீது அதிக அளவில் கொட்டி அபிஷேகம் செய்து, அப்படியே விட்டு விடுகிறார்கள். அதனால், 16 அடி உயர நெய் மலையைத்தான் கருவறையில் பக்தர்களால் காண முடியும். பனி படர்ந்த கைலாய மலையில் சிவன் இருக்கும் ஐதீகத்தில் நெய் மலைக்குள் இங்கே ஸ்ரீவடக்குநாதன் பக்தர்களால் தரிசிக்கப்படுகிறார்.

இந்த நெய் மலை எந்த வெயில் காலமாக இருந்தாலும், அருகில் தீபங்கள் எரிந்தாலும் உருகுவதில்லை; நெய்யும் எக்காலத்திலும் கெடுவதில்லை என்பது அதிசயம்.

கோயில் வெளிப் பிராகாரத்தில் மரத்தடி ஒன்றில் அமர்ந்து திவ்வியப் பாசுரங்களைப் பாடிக்கொண்டிருந்தார் ஒரு பக்தர். அவரை அணுகி விசாரித்தோம். பெயர் எம்.கே.சுகுமாரன் மேனன். வெளியூர்களுக்குச் சென்று இறைவன் புகழைப் பாடியும் பேசியும் வருகிறாராம்.

அவர் நம்மிடம் சொன்னார்... 'வெளியூர் நிகழ்ச்சிகள் இல்லாதபோது தவறாமல் இங்கு வந்து ஸ்ரீவடக்குநாதன்மீது பாடல்கள் பாடி மகிழ்வது என் வழக்கம். இவர் மிகவும் சக்தி வாய்ந்த சிவபெருமான். ஸ்வாமிக்கு ஏராளமாக நெய்யைக் கொட்டி அபிஷேகம் செய்து, அந்த நெய்யையே பக்தர்களுக்குப் பிரசாதமாக தருவது இங்கே தனிச்சிறப்பு! இந்தப் பிரசாதத்துக்குத் தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி இருப்பதாக ஐதீகம்! பரசுராமர் க்ஷத்திரியர்களைக் கொன்ற பாவத்துக்கு விமோசனம் அளித்து, அவர் கோரியபடி இங்கு வந்து கோயில் கொண்டவர் ஸ்ரீவடக்குநாதப் பெருமான் என்பதால், அவரை வணங்கினால், நம் பாவங்கள் அனைத்தும் அகலும்; அவன் அருளும் அளவின்றிக் கிடைக்கும்!'' என்றார்.

அந்த பக்தரின் வார்த்தைகள் சாதாரண மானவை அல்ல; மிகவும் சத்தியமானவை!

படங்கள்: வி.ராஜேஷ்

பக்திப் பெருக்கில் உதித்த 'சௌந்தர்யலஹரி’!

நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!

கேரளாவில் உள்ள காலடி என்னும் இடத்தில் வசித்த சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஸ்ரீஆதிசங்கரர். இவரது பெற்றோர், திருச்சூருக்கு அடிக்கடி வந்து ஸ்ரீவடக்குநாதனை வழிபட்டு, குழந்தை வரம் வேண்டினார்கள். இந்தத் தம்பதியரின் கனவில் வந்த இறைவன், 'உங்களுக்கு நீண்ட காலம் உயிர் வாழும் சாதாரண குழந்தை வேண்டுமா? அல்லது, குறைந்த காலமே உயிர் வாழும் அபூர்வ குழந்தை வேண்டுமா?'' என்று கேட்க, பின்னதைக் கோரினார்கள் அவர்கள். அதன்படி அவதரித்தவர்தான் ஸ்ரீஆதிசங்கரர்.

இந்த ஆலயத்துக்கு ஸ்ரீஆதிசங்கரர் அடிக்கடி வந்து இறைவனைத் தரிசிப்பது உண்டு. ஒருமுறை ஸ்ரீவடக்குநாதப் பெருமானைத் தரிசித்துவிட்டு, அம்பாளைத் தரிசிக்கச் சென்றார் ஸ்ரீஆதிசங்கரர். வழியில் நடக்க முடியாமல் ஒரு இடத்தில் கீழே உட்கார்ந்து அம்பாளை மனமுருகித் தொழுதாராம். அங்குதான் அவர் தேவி மீது கொண்ட பக்திப் பெருக்கில் 'சௌந்தர்யலஹரி’யை இயற்றியதாக வரலாறு கூறுகிறது.

நெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி!

'சிவபெருமான் தனியே இருக்கும்போது 'சிவனே’ என்று அசைவற்று இருக்கிறார். அம்பாளின் குளிர் பார்வை பட்டதும் அவர் இயங்க ஆரம்பிக்கிறார்; இயக்கங்களை உருவாக்குகிறார். தேவியின் கண்கள் காலத்தை நிர்ணயிக்கும் சூரிய, சந்திரர்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் தேவியின் பார்வையே செய்கிறது’ என்பதை அழகாக சௌந்தர்யலஹரியில் விவரிக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

ஸ்ரீவடக்குநாதன் ஆலயத்தில் இருக்கும்போதுதான் ஸ்ரீஆதிசங்கரர் விதேக முக்தி அடைந்தார் என்று  கூறப்படுகிறது. அவருடைய பிறப்புக்கும் மறைவுக்கும் இந்த ஆலயத்துடன் தொடர்பு இருப்பதால், நாடெங்கும் உள்ள சங்கர மட பக்தர்கள் அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.