Published:Updated:

சுதர்ஸனம் சுழன்ற வரும்... சுகபோக வாழ்வு தரும்!

ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஜயந்தி!

சுதர்ஸனம் சுழன்ற வரும்... சுகபோக வாழ்வு தரும்!

ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஜயந்தி!

Published:Updated:
சுதர்ஸனம் சுழன்ற வரும்... சுகபோக வாழ்வு தரும்!
சுதர்ஸனம் சுழன்ற வரும்... சுகபோக வாழ்வு தரும்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லகம் யாவையும் படைத்து, காத்து, ரட்சிக்கும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் அழகிய அலங்காரமாக விளங்கும் ஸ்ரீசுதர்ஸனம், எம்பெருமானின் பிரதான ஆயுதம். பக்தர்களைக் காக்கவும், அவர்களுக்குத் துன்பம் தரும் துஷ்டர்களை அழிக்கவும் பெருமாள் தமது வலக்கரத்தில் ஏந்தியிருக்கும் சுதர்ஸனத்தை, ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாகவே கருதுவர்.

அனந்தன் என்கிற நாகம், கருடன், ஸ்ரீசுதர்ஸனம் - இந்த மூவரும் பகவானின் நித்யசூரிகள் ஆவர். அதாவது, ஸ்ரீபகவானை ஒரு நொடியும் பிரியாது தொழுபவர்கள் என்று பொருள். ஸ்ரீவைகுண்டத்தில் பகவானின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும்... இன்னும் சொல்லப்போனால் பகவானுக்குக் குடையாகவும், அவர் நடக்கும்போது பாதுகையாகவும் திகழ்பவர் அனந்தன். ஸ்ரீபகவான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்துக்கு அவரைச் சுமந்து செல்லும் வாகனமாகத் திகழ்வதுடன், மற்ற நேரங்களில் குற்றேவல் புரியும் பரிசாரகராக... எப்போதும் இறைவனின் கட்டளையை எதிர்நோக்கி வணங்கியபடி காத்திருப்பவர் கருடன். அதே போன்று பகவான் நினைக்கும் காரியங்களைச் சடுதியில் முடிப்பவராக, துஷ்டர்களுக்குப் பயம் ஏற்படுத்துபவராக, சர்வ வல்லமை பொருந்தியவராகத் திகழ்பவர் கருடன்.

தேவதைகளில் இவர்கள் மூவர் மட்டுமே தங்களது பெயருடன் ஆழ்வார்கள்... அதாவது ஸ்ரீபகவானை ஆட்கொண்டவர்கள் எனும் சிறப்புப் பெற்றவர்கள் ஆவர்.

ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகியவற்றில் சக்கரத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. ஸ்ரீசுதர்சனமாகிய சக்கராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இவர் ஞானம், பலம், சக்தி, தேஜஸ், ஐஸ்வர்யம், வீர்யம் என ஆறு குணங்கள் நிரம்பியவராக, ஆறுகோணத்தின் மத்தியில் திகழ்கிறார். இந்திராதி தேவர்களாலும் பூஜிக்கப்பட்டு, பகைவர்களை அழித்தவர். திரிபுராசுரரை அம்பு வடிவில் சென்று அழித்தவர். ஸ்ரீமகாவிஷ்ணு தனது அநேக அவதாரங்களில், துஷ்டநிக்ரஹத்தை ஸ்ரீசுதர்சனம் மூலமாகவே நிகழ்த்தி அருளினார். உலக இயக்கத்துக்கு ஆதாரம் மகா சுதர்ஸனமே என்றும் போற்றுவர். 'புனரபி ஜனனம் - புனரபி மரணம்’ மீண்டும் மீண்டும் பிறந்து மரித்தல் என்கிற உலக இயற்கை, ஸ்ரீமகா சுதர்ஸனத்தை ஆதாரமாகக் கொண்டே நடக்கிறது.

ஸ்ரீசுதர்ஸனர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து, ஸ்ரீராமனுக்கு சேவை செய்தார். எனவேதான், பரதனுக்கும் பரதாழ்வான் எனும் சிறப்பு ஏற்பட்டது. கிருஷ்ணாவதாரத்தில் சிசுபாலனை பகவான் வதைத்ததும், குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனின் சபதம் நிறைவேறிட, சிறிது நேரம் சூரியனையே மறைத்து நின்றதும் ஸ்ரீசுதர்ஸனத்தைக் கொண்டுதான்! இதுபோன்று பல தருணங்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தர்மத்தைத் தழைக்கச் செய்வதில் பெரும் பங்காற்றியவர் சக்கரத்தாழ்வார். எனவேதான், பெரும்பாலான பெருமாள் ஆலயங்களில் மற்ற ஆயுதங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக ஸ்ரீசுதர்ஸனருக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

சுதர்ஸனம் சுழன்ற வரும்... சுகபோக வாழ்வு தரும்!

ஆலயங்களில் பிரம்மோத்ஸவம் என்பது பிரம்மதேவனே நடத்தும் திருவிழாவாகக் கருதப்படும். வைணவ ஆலயங்களில் நிகழும் இந்தப் பிரம்மோத்ஸவ விழாவின் போது தினமும் காலை- மாலை இரண்டு வேளைகளும் ஆலயத்தின் மாடவீதிகளிலும் ரத வீதிகளிலும் ஸ்ரீசுதர்ஸனர் எழுந்தருளிய பிறகே பெருமாளின்  புறப்பாடு (வீதியுலா) நடைபெறும்.

ஸ்ரீசுதர்ஸனராகிய சக்கரத்தாழ்வார் ஜ்வாலா கேசத்துடன் (இவருடைய திருமுடி அக்னிப் பிழம்பாக எரிந்துகொண்டிருக்கும்), த்ரிநேத்ரத்துடன் (நெற்றிக்கண்ணுடன் சேர்த்து மூன்று கண்கள் கொண்டவர்), 16 கரங்களும் அவற்றில் 16 விதமான ஆயுதங்களும் கொண்டு திகழ்பவர். இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், பில்லி- சூனியம் முதலான தீவினைகள், தோஷங்கள், மந்திர- தந்திரங்களால் உண்டாகும் கெடுதிகள் யாவும் நீங்கும்; அமைதியும் ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு கிடைக்கும்.

தற்போது ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு அநேக இடங்களில் தனிச் சந்நிதிகள் அமைக்கப் பட்டுள்ளன என்றாலும், புராணப் பெருமைகள் மிகுந்த புராதனமான சில திருத்தலங்களில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சாந்நித்தியம் மிகுந்து திகழ்கிறார். அவற்றுள் அழகர்கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி கோயில் ஆகியன விசேஷம் வாய்ந்தவை.

'தென்கொள் திசைக்கு திலகமாய் நின்ற திருமாலிருஞ்சோலை’ என்று ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப் பட்ட, உலகப் புகழ் வாய்ந்த திவ்விய தேசம்- திருமாலிருஞ்சோலை எனும் அழகர் மலை. இங்கே மூலவர், 'ஸ்ரீபரமஸ்வாதி ஸ்ரீஸுதர்ஸனம்’ எனும் சக்கரத்துடனும், பாஞ்சசன்யம் எனும் சங்கத்துடனும், 'கௌமோதகீ’ எனும் கதாயுதத்துடனும், நந்தகம் என்ற வாளுடனும், 'சார்ங்கம்’ எனும் வில்லுடனும் காட்சியளிக்கிறார்.

இதை சேவித்த பீஷ்மாச்சார்யர், 'சங்க சக்ர கதா கட்சீ சார்ங்கதந்வா கதாதர’ எனக் கள்ளழகரை மங்களாசாசனம் செய்கிறார். மேலும், இந்தத் தலத்தில் மாலவனின் திருக்கரத்தில் உள்ள சக்கரம் ப்ரயோகச் சக்கரமாக... அதாவது, தன்னுடைய பக்தர்களுக்குக் கேடு விளைவிக்கும் துஷ்டர்களை அழிக்கவேண்டும் எனப் பெருமாள் திருவுளம் கொண்டதும், சற்றும் தாமதிக்காமல் துஷ்ட நிக்ரஹத்துக்குப் புறப்பட ஆயத்தமான நிலையில் திகழ்வது தனிச்சிறப்பு. இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரும் பிரயோக நிலையிலேயே தரிசனம் தருகிறார்.

'பலபல நாழஞ்சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை
அலவலமை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை
குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ்சோலையதே’

- எனும் பாடல் வரிகளுக்கேற்ப, ஏழுமலைகளின் அதிபதியான கள்ளழகரின் மலைகளில் ஒன்றான திருமாலிருஞ்சோலை மலையில்... 'ஆயிரமாறுகளும் சுனைகள் பல்லாயிரமும்’ என்கிறபடி, பல புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த இந்த மலையில்... 'தெய்வ மகளிர் சிலம்பார்க்க வந்த’ என்று ஆழ்வர்கள் பாடியபடி வானுலக தேவ- தேவதைகள், கின்னரர்கள், சப்தகன்னியர் ஆகியோர் வந்து இங்குள்ள நூபுர கங்கை (சிலம்பாறு) மற்றும் பல புனித தீர்த்தங்களில் நீராடி, கள்ளழகரை வழிபட்டுத் திரும்பியுள்ளனர்.

அவ்வாறு வரும்போது, சப்த கன்னியர் நூபுர கங்கைக்கு அருகில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் தரிசித்ததாக வருஷபாத்ரி மகாத்மியத்தின் மூலம் அறிகிறோம்.

ஆயினும், எவரால் எப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்று அறிய முடியாதவண்ணம், மிகப் பழைமையானவராகத் திகழ்கிறார் இந்தச் சக்கரத்தாழ்வார். 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பாதுகாப்பு கருதி, மலையிலிருந்த ஸ்ரீசக்கரத்தாழ்வாரை அழகர்கோயிலின் உட்புறம் 3-ஆம் பிராகாரத்தில் தாயார் சந்நிதிக்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

ஜ்வாலா கேசம், த்ரிநேத்திரத்துடன் திகழும் இவரின் 16 கரங்களி லும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சதமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள். இவரைச் சுற்றி ஷட்கோணம். இந்த அறுகோணத்தைச் சுற்றிலும் பீஜாக்ஷர தேவதையர்; வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனமாக பிம்ப ரூபத்தில் காட்சி தருகின்றனர். அத்துடன், ஸ்ரீசுதர்சனத்தின் மேற்புறம் ஹிரண்ய சம்ஹார நரசிம்மர்; கீழ்ப்புறத்தில் ஸ்ரீவராஹ ஸ்வாமி எழுந்தருள்வது மற்றொரு சிறப்பம்சம்! இவ்வளவு சிறப்புகளுடனும் திகழும் இந்த சுதர்ஸன மூர்த்தி,

தம்ஷ்டா காந்த்யா கடாரே கபடகிடிதநோ கைடபாரோதஸ்தாத்
ஊர்த்வம் ஹாஸேந வித்தே நரஹரிவபுஷோ மண்டலே வாஸவீயே
ப்ராக்ப்ரத்யக் ஸாந்த்ய ஸாந்த்எச்ச விபரபரிதே வ்யோம்நி வித்யோத மாஹ:
தைதேயோத் பாத ஸ்மஸு ரவிரிவ ரஹயத் வஸ்த்ர ராஜோ ருஜம்வ:

- என்று ஸ்ரீசுதர்ஸன சதகத்தில் சிறப்பிக்கப்படுகிறார். பக்த வாத்ஸல்யனான இந்தச் சக்கரத்தாழ்வாரை அழகர் மலைக்கு வந்து அடிக்கடி தரிசனம் செய்ய இயலாதவர்கள், வீட்டுக்கு அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை மனமுருகி வழிபடலாம்.

மனம், வாக்கு, காயம் என்று திரிகரண சுத்தியுடன் ஸ்ரீசுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், நினைத்தது யாவும் கைகூடும்.

வருகின்ற ஆனி மாதம் 14-ஆம் நாள் (28.6.12) ஸ்ரீசுதர்ஸன ஜயந்தி. இந்தத் திருநாளில் ஸ்ரீசுதர்ஸனரை வழிபட்டு சகல சுகங்களும் பெற்றுச் சிறக்கலாம். மேலும் புதன், சனிக்கிழமை ஆகிய விசேஷ நாட்களிலும், இயன்றால் தினமுமேகூட ஸ்ரீசுதர்ஸன மூர்த்தியை ஸேவித்து, பழ வகைகள், பானகம், தயிர்சாதம், உளுந்து வடை முதலானவற்றை நிவேதனம் செய்து, பக்தர்களுக்கும் விநியோகித்து வழிபட்டு வரலாம்.  அபிஷேகம்- திருமஞ்சனம் செய்து புஷ்ப மாலை சாற்றி வழிபடுவது இன்னும் விசேஷம்! இல்லத்திலும் பரிசுத்தமான ஓரிடத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் படம் வைத்து பூஜிக்கலாம்.

தினமும் 'ஸுதர்ஸனாய ஹும்பட்’ என்ற மந்திரத்தையும், 'ஓம் ஸுதர்சனாய வித்மஹே மஹாஜ்பாலாய தீமஹி தந்நச்சக்ர ப்ரசோதயாத்’ எனும் ஸ்ரீசுதர்ஸன காயத்ரீயையும் ஜபிக்கலாம். கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வழிபட்டு வரம் பெறலாம்.

புவநநேந்ர த்ரயீமய ஸவந தேஜஸ்த்ரயீமய
நிரவதிஸ்வாது சிந்மய நிகில சக்தே ஜகன்மய
அமித விச்வக்ரியாமய சமித விஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜயஜய ஸுதர்சன

பொருள்: உலகங்களுக்கு கண் போன்றவரே, மூன்று வேதங்களின் வடிவம் கொண்டவரே, மூன்று முக்கியமான யாக அக்னியாக திகழ்பவரே, பக்தர்களிடம் இனிமையும் ஞான வடிவுமாய் உள்ளவரே, எல்லாம் செய்யும் சர்வ வல்லமை பொருந்தியவரே, உலக உருவம் கொண்டவரே, அளவற்ற உலகத்தின்

கர்மங்களால் ஆராதிக்கப்படுபவரே, எங்களது அச்சத்தையும், நோயையும், நான்கு புறங்களில் வரும் துன்பங்களையும், விரோதிகளையும் அழிப்பவரே, ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு அலங்காரமாக திகழும் திருவாழியாழ்வானே..! உமக்கு மேன்மேலும் வெற்றி உண்டாகட்டும்.

படங்கள்: எம்.என்.ஸ்ரீநிவாஸன்